வரலாறும், எமக்குத் தவறாது பாடங்களை இடித்துரைத்தபடியே இருக்கிறது. நாமோ அவற்றைக் கேட்காது, புறந்தள்ளிய படியே, புதிய திசையில் பயணிப்பதானது, சொல்லியபடி புதைகுழியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதற்கு ஒப்பானதாகும். குழியில் விழுவதும், சகதியில் சிக்கி உடலெங்கும் ஒட்டிய சகதியையும் தூக்கி அள்ளிக் கொண்டு நடந்து, திரும்பவும் படுகுழியில் விழுகிறோம். நமது பழக்கங்களில் இருந்து, நாம் மாற வேண்டும்; இல்லாவிடில், இந்தக் கொடும் சுழலில் சிக்கித் தவிப்பது, என்றென்றைக்கும் நிரந்தரமானதாகி விடும்.
உலகப் பொருளாதாரம், இன்னொரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அதற்கான அத்தனை அறிகுறிகளும் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால், எதுவுமே நடக்காதது போல, பொருளியல் அறிஞர்களும் அரசியல்வாதிகளும் பாவனை செய்கிறார்கள். “உலகப் பொருளாதாரம், நல்ல நிலையில் இருக்கிறது” என்ற பொய்யை, எல்லோரும் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். ஆனால், தரவுகளும் குறிகாட்டிகளும் பொருளாதார நெருக்கடியை எதிர்வு கூறுகின்றன.
இந்தப் பொருளாதார நெருக்கடி, திடீரெனத் தோற்றம் பெற்ற ஒன்றல்ல; ‘ஒருவரை ஒருவர் சுரண்டிக் கொழுத்தல்’ என்ற, கேவலமான பொருளாதார முறையின் விளைவின் தொடர்ச்சியே இதுவாகும்.
ஒவ்வொரு முறையும் பொருளாதார நெருக்கடிகளை நாடுகளும் பிராந்தியங்களும் காணும்போதெல்லாம், அவை குறித்த ஆழமான சிந்தனையும் விமர்சனமும் இன்றி, அதே கொடுஞ்செயலைச் சுற்றிச் சுற்றிப் பயணித்து, விழாத படுகுழியில் உலகப் பொருளாதாரம் விழுந்திருக்கிறது.
இது தொடர்ந்து ஏன் நிகழ்கிறது என்பதைப் பார்க்கிறபோது, இதற்கான காரணிகளை, இலகுவில் அடையாளம் காண இயலும்.
செல்வம் தொடர்ச்சியாக, ஒருசிலரின் கைகளில் மிகப்பெரிய அளவில் சென்றடைவதோடு, அவர்களின் செல்வம், ஆண்டுதோறும் பல மடங்காக அதிகரிக்கிறது.
மறுபுறம், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி, அதிகரித்துக்கொண்டே போகிறது. பொருளாதார சமத்துவமின்மை சர்வ வியாபகம் ஆகிறது.
இச்சமத்துவமின்மை, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த உலகின் தலையாய நாடுகளிலும் பரவியுள்ளது.
காலநிலை மாற்றம், நம் கண்முன்னே அதன் கோர தாண்டவத்தை ஆடிக் கொண்டிருக்கையில், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை, ‘இலாபவெறி’ தடுத்து நிறுத்தியபடியே இருக்கிறது.
உணவுப் பொருள்களின் அதிகரிக்கின்ற விலைகள், அன்றாட உணவைப் பெற்றுக்கொள்வதற்கு இயலாத தாக்குகின்றன. நுகர்வுக் கலாசாரம் உருவாக்கிய கெட்ட பழக்கங்கள், மக்களை மனித நேயப் பொருளாதார முறைகளிலிருந்து அப்பால் நகர்த்தி விட்டன. இந்தச் சிக்கல்களில் இருந்து நாம் எவ்வாறு மீள்வது?
பில்லியனர்களின் உலகம்
அண்மையில் ‘ஒக்ஸ்பாம்’ நிறுவனம், ‘அக்கறை செலுத்துவதற்குரிய காலம்’ (Time to Care) என்று தலைப்பிட்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, உலகில் 2,153 பில்லியனர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மொத்தச் சொத்து மதிப்பானது, உலகில் உள்ள 4.6 பில்லியன் மக்களின் சொத்தை விட அதிகமானது என்ற உண்மையைக் காட்டியது.
இப்போது நடைமுறையில் உள்ள பொருளாதார முறையானது, பாலியல் ரீதியாகப் பெண்களை மோசமாகச் சுரண்டுவதாகவும் பெண்களாலும் பெண் குழந்தைகளாலும் மேற்கொள்ளப்படும் சம்பளமில்லாத, குறைந்த சம்பளமுடைய பணிகள், தொடர்ந்தும் குறைத்து மதிப்பிடப்பட்டு வருகின்றன என்றும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 22 பில்லியனர்களின் மொத்தச் சொத்து மதிப்பானது, ஆபிரிக்கா எங்கும் வாழும் மொத்தப் பெண்களின் சொத்து மதிப்பை விட அதிகமானது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒரு சதவீதமானது, உலகின் மொத்தச் சனத்தொகையின் சொத்தை விட, இரண்டு மடங்கு அதிகமான சொத்தைக் கொண்டிருக்கிறது. இந்தத் தரவு, உலகமானது எவ்வளவு சமத்துவமில்லாத ஒன்றாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டப் போதுமானது.
இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்ற இன்னொரு தரவு, மிகவும் சுவாரஸ்யமானது. எகிப்திய பிரமிட்டுகள் கட்டப்பட்ட நாள் தொடக்கம், நாளொன்றுக்கு 10,000 அமெரிக்க டொலர்களை நீங்கள் சேமித்திருந்தீர்களாயினும் இன்று உங்களின் சொத்து மதிப்பு, பில்லியனர் ஒருவரின் சொத்து மதிப்பின் ஐந்தில் ஒன்றுக்கே சமமானதாகும். இது, பில்லியனர்கள் எவ்வளவு வேகமாகவும் அதிகமாகவும் சொத்துச் சேர்க்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
செல்வம், இருக்கின்ற இடத்தில் மேலும் மேலும் குவிகிறது. செல்வந்தர்கள் செல்வங்களைக் குவித்த வண்ணமே இருக்கிறார்கள்.
இன்று உலகளாவிய ரீதியில் பெண்களால் (15 வயதுக்கு மேற்பட்ட) சம்பளமின்றிச் செய்யப்படுகின்ற சேவைகளுக்கு, மதிப்பு வழங்குவோமாயின் அதன் பணப் பெறுமதி, குறைந்தது 10.8 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இது உலகளாவிய தகவல்தொழில்நுட்பத் துறையை விட, மூன்று மடங்கு பெரிது.
இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்ற விடயங்கள், உலகளாவிய கவனத்தை வேண்டுவன. இந்த உலகமானது, செல்வந்தர்களின் உலகமாக, செல்வந்தர்களுக்கான உலகமாக மாறியிருக்கின்றது.
உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தொய்வும் சரிவும், இந்தச் செல்வந்தர்களைப் பாதிக்கப் போவதில்லை. மாறாக, அனைத்து நட்டங்களும் பொருளாதாரச் சங்கிலியின் கீழடுக்கில் இருந்து உழலும் மக்களின் தலையில்தான் கட்டப்படும்.
அதற்குப் பல்வேறு பெயர்கள் சுட்டப்படும். தேசியவாதமும் மதவாதமும் இதை எமது தலையில் ஆபத்தின்றிக் கட்டுவதற்கு வழி செய்து கொடுக்கும்.
சீரழிந்த பொருளாதார முறையின் குணங்குறிகள்
பொருளாதார நெருக்கடி பற்றி, அடிக்கடி பேசுகிறோம். 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, பொருளாதார நெருக்கடி பற்றிய பேச்சுகள், தொடர்ந்தும் பேசுபொருளாய் உள்ளன.
நெருக்கடி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன; சேவைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. சாதாரண மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இதை ஒவ்வொருவரும் அறிவோம்.
ஆனால், இந்தச் சீரழிந்த முதலாளித்துவப் பொருளாதார முறையை, எம்மால் தூக்கியெறிய இயலாதபடி, அதிகார வர்க்கமும் உலகமயமாக்கலும் பார்த்துக் கொள்கின்றன.
ஒருபுறம், நுகர்வுப் பண்பாடு எம்மை ஆட்கொண்டுள்ளது. பெட்டிக் கடைகளில் பொருள்கள் வாங்குவதைத் தவிர்த்து, இன்று பல்பொருள் அங்காடிகளுக்குப் பழகி விட்டோம்.
தேவையான பொருள்களைப் பெட்டிக் கடைகளில், மலிவு விலையில் கேட்டு வாங்கிய காலம் மலையேறிவிட்டது. இன்று, பல்பொருள் அங்காடிகளில் தேவையானதையும் தேவையற்றதையும் சேர்த்து, அதிக விலைக்கு வாங்கப் பழக்கப்பட்டு விட்டோம்.
விளம்பரங்களும் கவர்ச்சிகரமான சலுகைகளும் எமது நுகர்வை அதிகரித்துள்ளன. வங்கிகளின் கடன் முறைகள், கடன் அட்டைகள் ஒருபுறம் எம்மிடம் இல்லாத பணத்தைச் செலவழிக்க வழி செய்கின்றன. மறுபுறம், எம்மை என்றென்றைக்கும் கடனாளியாக்கி வைத்திருக்கின்றன.
மூலதனத்தின் பிரதான அம்சம் எதுவென்றால், அது வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்பதுதான். ஆனால், அந்த வளர்ச்சியின் தன்மையை, அதனால் தீர்மானிக்க இயலாது. மூலதனம் வளர்ந்து வந்த விதமும் பங்குச் சந்தை முதலீட்டு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் பங்குச் சந்தையில் கட்டுப்பாடற்ற வணிக நடவடிக்கைகளுக்கு வழிசெய்தது.
முதலாளித்துவப் பொருளாதாரத்தில் இரண்டு முகாம்கள் உண்டு. “சந்தையை அரசாங்கம் கண்காணித்து, மூலதனத்தின் பாய்ச்சலை அரசாங்கம் நெறிப்படுத்த வேண்டும்” என்று, ஒரு முகாம் கூறுகிறது.
மற்றொரு முகாம், “சந்தைக்குப் புத்தியுண்டு; அது மூலதனம் எங்கு போகவேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானித்துவிடும். அரசாங்கம் தலையிடக் கூடாது” என்கிறது.
முதலாவது முகாம், பிரித்தானியாவால் முன்தள்ளப்பட்டது. இரண்டாவது முகாம், அமெரிக்கா முன்தள்ளுவது.
இரண்டுமே, முதலாளிகளின் இலாப வேட்டையால், வேட்கையால் உருவாகும், மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் தந்திரோபாயங்களை உருவாக்குவதை, நோக்கமாகக் கொண்டனவே தவிர, சமூக உழைப்பு சக்தியால், சரக்குகள் வடிவில் உருவாகும் செல்வத்தை, நியாய அடிப்படையில் மக்களிடையே விநியோகிப்பது என்பதல்ல.
சரக்குகளாக இருக்கும் செல்வத்தை, பணவடிவில் மாற்றி, சிலர் சுருட்டிக் கொள்வதற்குப் பாதுகாப்பு கொடுப்பதே, அரசாங்கத்தின் கடமை என்பதில், இந்த இரண்டு வழிமுறைகளுக்கும் ஒற்றுமை உண்டு. இந்த முறைமை, சுரண்டலுக்கான முறைமையே அன்றி, நியாயமான உழைப்புக்கு, ஊதியம் வழங்கும் முறைமை அல்ல.
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள்
காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கடந்தாண்டு உலகம் மிகத் தெளிவாக உணர்ந்தது.
பிரேஸில் முதல் அவுஸ்திரேலியா வரை, உலகெங்கும் காலநிலை மாற்றம் தனது, கோரத் தாண்டவத்தை ஆடிக் கொண்டிருக்கின்றது.
இது, உலகப் பொருளாதாரத்துக்குப் புதிய சவாலை உருவாக்கியுள்ளது. ஆனால், உலகின் தலைவர்கள் டாவோஸில் கூடி, செல்வத்தைப் பெருக்குவது பற்றிப் பேசுகின்றார்கள்.
2020ஆம் ஆண்டில், பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை, உலகெங்கும் மக்கள் உணர்வர்; வீதியில் இறங்கிப் போராடுவார்கள். ஆனால், இந்தப் பொருளாதார முறைமையை மாற்றாமல், தீர்வுக்கு வழியில்லை.