உலகளாவிய கோப்பி நெருக்கடி: எனது குருதியே, உனது கோப்பி

ஊரில் உள்ள பெட்டிக் கடைக்காரரிடம், ஒரு பொருளை வாங்கும் போது, அவருடனான உரையாடல், எமக்கு அந்தப் பொருள் பற்றியும் அந்தப் பொருளை அவர் எங்கிருந்து பெற்றுக் கொள்கிறார் என்பது பற்றியுமான தௌிவை அளிப்பதுடன், அந்தக் கடைச் சூழல், கடைக்காரருடனான உரையாடல் ஒன்றை நிகழ்த்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

இது பல வழிகளில், நாம் உண்ணும் அல்லது நுகரும் பொருள்கள் பற்றிய குறைந்தபட்ச அடிப்படை அறிவை, எமக்கு வழங்குவதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்தன.

இன்று, தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பொருள்களை, விரும்பியபடி எடுத்து விட்டு, அதற்கான பணத்தைக் காசாளரிடம் கொடுத்து, அப்பால் நகர்வது வழமையாகிவிட்டது. சில நாடுகளில், பொருள்களின் பின்னால் அச்சிடப்பட்டுள்ள விலைக் கோடுகளை பதிந்து, அட்டைகளினூடாகப் பணத்தைச் செலுத்தி, மனித ஊடாட்டமே இல்லாமல், பொருள்களை வாங்குவது நடைபெறுகிறது.

இந்த மாற்றம், அடிப்படையில் பொருள்களை உற்பத்தி செய்பவனுக்கும் பொருள்களைக் கொள்வனவு செய்பவனுக்கும் இடையில், எந்தவிதமான தொடர்போ, அக்கறையோ, உணர்வு ரீதியான பிணைப்போ ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

இன்று உலகம், கோப்பி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இந்த நெருக்கடி, எவ்வாறு சாத்தியமானது என்பதை யோசிக்க வேண்டும். இங்கு கேட்கப்பட வேண்டிய முக்கியமான வினா, இன்று பிரபல்யமான சர்வதேச ஊடகங்களில் வௌிப்படுத்தப்படுகின்ற, ‘உலகளாவிய கோப்பி நெருக்கடி’ என்ற பதமும் அது குறிக்கிற பொருளும் ஓர் அடிப்படையான கேள்வியை வேண்டி நிற்கின்றன.

அந்தக் கேள்வி யாதெனில், ‘இந்த நெருக்கடி என்பது யாருக்கானது’ என்பதேயாகும். இது, கோப்பியை உற்பத்தி செய்யும் விவசாயி, விவசாயியிடம் வாங்கும் முதலாளி, முதலாளியிடம் வாங்கி, சர்வதேசச் சந்தையில் விற்கும் பல்தேசிய நிறுவனம், கோப்பியை விற்பனை செய்யும் கடை, கோப்பியை அருந்தும் கோப்பிப் பிரியர்கள் எனப் பலதரப்பட்டோருடன் தொடர்புபட்டுள்ளது.

இந்த நெருக்கடி யாருடையது, எவ்வாறானது? ஆகிய கேள்விகள் குறித்தும் நோக்கப்பட வேண்டும். இந்த நெருக்கடி குறித்துப் பேசுவதாயின், இந்தக் கேள்விளுக்கான பதில்களைத் தேடாமல், அப்பால் நகர முடியாது. இந்த நெருக்கடியின் மய்யமும் ஆணிவேரும் இந்தப் பதில்களிலேயே அடங்கியுள்ளன.

ஏறும் விலையும் இறங்கும் விலையும்

சர்வதேசச் சந்தையில் கோப்பி, நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது. இது ஒருபுறம், கோப்பிப் பிரியர்களுக்கு கோப்பியை வழங்குவது தொடர்பானது. உலகளாவிய ரீதியில், சந்தையில் கோப்பியின் கேள்விக்குத் தேவையான கோப்பியை, வழங்க முடியாமல் இருப்பதே இன்றைய நெருக்கடி.

இதன் பின்புலத்திலேயே, கோப்பி நெருக்கடி பற்றிப் பேசப்படுகிறது. ஆனால், இந்தக் கோப்பி நெருக்கடியின் பரிமாணங்கள் பலவகைப்பட்டவை. இவை, வெறுமனே கோப்பியை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது என்ற, ஒற்றைப் பரிமாணத்துடன் மட்டும் முடிவடைந்து விடுவதில்லை.

இன்று கோப்பித் தட்டுப்பாடு பற்றிப் பேசப்படுகிறது. இந்தத் தட்டுப்பாடு, ஒருபுறம் கடைகளில் நாம் வாங்கும் கோப்பியின் விலையை, அதிகரிப்பதற்கான நியாயத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், சர்வதேச சந்தையில் கோப்பியின் விலைகள், தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றன.

கடந்த மாதம், சர்வதேச சந்தையில் கோப்பியின் விலை குறைவடைந்து, 2004ஆம் ஆண்டு விற்கப்பட்ட கோப்பியின் விலையை எட்டியது. இது, சர்வதேச சந்தையில், கோப்பியின் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு ஆகும்.

உலகில் முக்கியமான விற்பனைப் பொருள்களில் ஒன்றாகக் கோப்பி திகழ்கிறது. உலகளாவிய ரீதியில், ஆண்டுதோறும் 200 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட பெறுமதியிலான கோப்பி விற்பனை நடக்கிறது. இவ்வாறு முக்கியமான வர்த்தகச் சரக்காக உள்ள பொருள், நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை சாதாரண விடயமல்ல.

மேற்குலக நாடுகளில், ஒரு கோப்பை கோப்பிக்குக் குறைந்தபட்சம் மூன்று அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றன. அதேவேளை, சில பெயர்போன கோப்பியகங்களில் ஒரு கோப்பை, 20 அமெரிக்க டொலர்களுக்கும் விற்கப்படுகிறது. ஆனால், சர்வதேசச் சந்தையில், கோப்பி கிலோ ஒன்று 1.5 அமெரிக்க டொலர்கள் என்ற குறைந்த விலையிலேயே விற்கப்படுகின்றது.

இது, கோப்பி உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கும் விலை அல்ல. கோப்பி உற்பத்தியாளர்களிடமிருந்து கோப்பியைக் கொள்வனவு செய்து, பல கைகள் மாறி, இடைத்தரகர்கள் ஊடாக, சர்வதேசச் சந்தையில் விற்கப்படும் போது, அது பெறும் விலையே 1.5 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

ஒருபுறம், ஒரு கோப்பை கோப்பியை மூன்று டொலர்களுக்கு ஒருவர் கொள்வனவு செய்யும் போது, அந்தக் கோப்பியை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு கிடைப்பதோ, கிலோ ஒன்றுக்கு அரை டொலருக்கும் குறைவான தொகையேயாகும்.

இது மிகவும் முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. தொடர்ச்சியாகச் சர்வதேசச் சந்தையில் கோப்பி விலைகளில் ஏற்பட்டுவரும் சரிவு, கோப்பி விவசாயிகளை மோசமாகப் பாதிக்கிறது. இந்த விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யச் செலவிடும் தொகையிலும் பார்க்கக் குறைவான தொகைக்கே, கோப்பியை விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் பலர், கோப்பிப் பயிர்ச் செய்கையில் இருந்து விலகி, வேறு பயிர்ச் செய்கையை நோக்கி நகர்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, வானிலை மாற்றத்தின் விளைவுகளால் கோப்பிப் பயிர்ச்செய்கை, பாரிய சவால்களை எதிர் நோக்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில், உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட 124 கோப்பி வகைகளில், 60 சதவீதமானவை அழிவின் விளிம்பில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றைப் பாதுகாப்பதற்கான எதுவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

அதிகரித்த வெப்பம், தொடர்ச்சியான மழை, கணிக்க முடியாத எதிர்பாராத வானிலை மாற்றங்கள், வெள்ளப் பெருக்கு, மண்சரிவு என ஏராளமான இயற்கை விளைவுகள், கோப்பிப் பயிர்ச் செய்கைக்குப் பாரிய சவாலை ஏற்படுத்தி உள்ளன.

இவை அனைத்தும் உற்பத்தி சார்ந்த கோப்பியின் பிரச்சினையை எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு நெருக்கடிகள் இருக்கிற போதும், சர்வதேசச் சந்தையில், கோப்பியின் விலை திட்டமிட்டு மிகக் குறைவாகப் பேணப்படுகிறது.

அதேவேளை, கோப்பி நெருக்கடியைக் காரணம் காட்டி, கோப்பிப் பானம் மிக அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது. கோப்பிப் பானத்தை வாங்கும் நுகர்வோன், அதை அதிக விலை கொடுத்து வாங்குகிறான்; உற்பத்தி செய்யும் விவசாயியோ மிகக் குறைவான தொகையை பெறுகிறான். இந்த அசமத்துவத்தை விளங்கிக் கொள்வது, உலகில் மிக முக்கியமான சந்தைப் பொருள்களில் ஒன்றான, கோப்பியைச் சுற்றி நடக்கும் கொள்ளையையும் சுரண்டலையும் இலாப வெறியையும் விளக்கிக் கொள்ளப் போதுமானதாகும்.

நியாய வர்த்தகத்தின் கதை

1990ஆம் ஆண்டுவரை, மேற்குலக நாடுகளில் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் பற்றிய அக்கறை மிகக்குறைவாகவே இருந்தது. குறிப்பாக, பொருள்கள் எந்த நாட்டில் இருந்து வருகின்றன, அவை இயற்கை முறைப்படி உற்பத்தி செய்யப்பட்டவையா, அவற்றுக்குப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா, குறித்த பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு நியாயமான விலை வழங்கப்படுகிறதா, அந்த விவசாயிகளின் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்கிறார்களா, அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்கிறார்களா போன்ற கேள்விகள் எதுவும் கேட்கப்படாமலேயே, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருகின்ற பொருள்கள், மேற்குலக நாடுகளில் விற்கவும் வாங்கவும் பட்டன.

கொலனியாதிக்க மனோநிலையின் தொடர்ச்சியாக, மூன்றாம் உலக நாடுகள் பொருள்களை உற்பத்தி செய்து, வழங்குவது கடமை போலவும் அதைக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்வது, மேற்குலக நாடுகளின் உரிமை போன்றதுமான மனநிலை நிலவியது. இது, விவசாயிகளை ஏழைகளாகவும் பொருள்களை வாங்கி விற்கும் கம்பனிகள் வளர்ச்சியடைந்து, பல்தேசிய கம்பனிகளாக மாற்றமடையவும் வழிவகுத்தன. 1980களின் நடுப்பகுதியில், மூன்றாம் உலக நாடுகளின் விவசாயிகளின் சோகக் கதைகள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் வாயிலாக, மேற்குலக நாடுகளின் நுகர்வோரைச் சென்றடைந்தன.

இவை மனிதாபிமானம், சுற்றுச்சூழல் பற்றிய கேள்விகளை எழுப்பின. இதன் பின்புலத்தில், சிறுசிறு குழுக்கள் நியாயமான வர்த்தகத்தின் அவசியத்தை வலியுறுத்திப் போராட தொடங்கின. 1990களின் தொடக்கத்தில் விவசாயிகள், செயற்பாட்டாளர்கள், பாவனையாளர்கள் ஆகியோரை ஒன்றுபடுத்திய, நியாயமான வர்த்தகத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நியாயமான வர்த்தகத்தைக் கவனிக்கத்தவறிய கொள்வனவாளர்களின் பொருள்களைப் புறக்கணிக்கும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு, அவை குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் கண்டன.

1997ஆம் ஆண்டு, நியாயத்தை முன்னிறுத்திய அமைப்புகள் ஒன்று சேர்ந்து, Fairtrade International என்ற அமைப்பை நிறுவி, நியாயமான வர்த்தகத்தை அங்கிகரித்து, ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொண்டனர்.

இதன் ஊடாக, நியாய வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்ட பொருள்கள் சந்தைக்கு வந்தன. நியாய வர்த்தகச் சான்றிதழ் இலட்சினைக்கு ஒரு மரியாதை உருவானது. இச்சான்றிதழ் பெறப்பட்ட பொருள்கள், சாதாரண பொருள்களை விடச் சற்று விலை கூடியதாக இருந்த போதும், அவை நியாயமான அடிப்படையில் பெறப்பட்டன என்பதை உறுதி செய்தன.

இதனால், இந்த இயக்கம் வெற்றிகரமாக இயங்க தொடங்கியது. இதன் மிகப் பெரிய வெற்றி யாதெனில், உற்பத்தியாளர்களுக்கு நியாயமான ஒரு விலையைப் பெற்றுக் கொடுத்ததே ஆகும்.
இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மூன்றாம் உலக நாடுகளில் இருந்து, பொருள்களை உற்பத்தி செய்து பெற்றுக்கொள்ளும் பல்தேசியக் கம்பனிகள், தவிர்க்கவியலாமல் தங்கள் பொருள்களுக்கு, நியாய வர்த்தக சின்னத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டிய தேவைக்கு உட்பட்டன. இது உற்பத்திப் பொருள்கள் சார் வர்த்தகத்தில் ஏற்பட்ட முக்கியமான மாற்றமாகும்.

ஆனால், கடந்த ஒன்றரை தசாப்த காலத்தில், சில ‘பராசுர’ பல்தேசியக் கம்பனிகள், பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. அவை, சிறுசிறு இறக்குமதியாளர்களை வாங்கிச் செரித்து, பெரிதாக வளர்ந்துள்ளன. இன்று அவை, அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல், எல்லைகள் கடந்து தன்னிச்சையாக இயங்குகின்றன.

மாறுகின்ற காலத்தில், அவை அதிக இலாபத்தின் மேல் கவனம் குவிக்கின்றன. இதனால், அவர்கள் மெதுமெதுவாக நியாய விலை அடிப்படையிலிருந்து வெளியேறுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில், நியாய விலைச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வது குறைவடைந்து வருகிறது. சில பல்தேசியக் கம்பனிகள் வெளிப்படையாகவே, தாங்கள் நியாய விலைச் சான்றிதழைப் பெறுவதில்லை என்றும் அதற்கு மாற்றாக, புதிய வழிகளைக் கண்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இவை, இன்னொரு வகையில் இலாபத்தைப் பெருக்கி, விவசாயிகளைச் சுரண்டுவதற்கு வழி செய்துள்ளது. இந்த நிலைமைகள், நியாயவிலைச் சான்றிதழ் முத்திரையின் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்துகின்றன.

நீண்ட போராட்டங்களின் விளைவால் சாத்தியமான நியாய விலைச் சான்றிதழ் குறியீடு என்பது, மெதுமெதுவாக மறைந்து வருகிறது. நியாய வர்த்தகத்தின் முடிவை, நாம் எதிர்நோக்கி உள்ளோம் என்றால், அது பொய்யல்ல.

உலகளாவிய கோப்பி நெருக்கடியும் நியாய வர்த்தகச் சான்றிதழ் இலட்சினையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து நிறுவனங்கள் பின்வாங்குவதும் விவசாயிகளுக்கும் உழைப்புக்கும் மதிப்பில்லாத ஒரு காலத்தை நோக்கி, நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைக் குறிகாட்டுகிறது.

1980ஆம் ஆண்டு 4.4 பில்லியனாக இருந்த உலக சனத்தொகை, இப்போது 7.7 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது அதேவேளை, விவசாயத்தில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை 12 சதவீதத்தால் குறைந்துள்ளது. விவசாயிகளின் வறுமை, கடந்த நான்கு தசாப்தங்களில் அதிகரித்து வந்துள்ளது. இளந்தலைமுறையினர் விவசாயத்தை விட்டு விலகி, வேறு தொழில்களைத் தேடுகிறார்கள். காலநிலை மாற்றத்தின் விளைவுகள், விவசாயத்தை நெருக்கடிக்குள்ளாக்கிச் சோதிக்கின்றன.

ஒரு கோப்பி விவசாயியின் சராசரி ஆயுள்காலம், வெறும் 55 ஆண்டுகள் ஆகும். உலகளாவிய ரீதியில் கோப்பி உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளில் 60 சதவீதமானவர்கள், வறுமையில் வாடுகிறார்கள். அவர்களது இரத்தமும் வியர்வையும் வறுமையும் கலந்த கலவையே, நாமருந்தும் கோப்பியின் சுவையாகும்.