உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்களின் பதில்

(அதிரன்)

நீதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டு, முதல் தடவையாக ஒரே நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலொன்று நடந்து முடிந்திருக்கிறது. இதில், பிரதான கட்சிகள் பலப்பரீட்சையொன்றை நடத்தி முடித்திருக்கின்றன என்றுதான் சொல்லிக்கொள்ள முடியும். இதற்கென்றே உருவாக்கப்பட்டது போன்று, மொட்டு எல்லாவற்றையும் மேவியிருக்கிறது. நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்று, ஜனாதிபதியின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தலால் குழப்பமடைந்தே இருக்கிறார்கள்.

உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில், 43 அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 222 சுயேட்சைக் குழுக்களுமாக, நாடெங்கிலும் 57,252 வேட்பாளர்கள், 8,356 உறுப்புரிமைகளுக்காகப் போட்டியிட்டார்கள். 13 ஆயிரத்து 374 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் நடைபெற்றன.

ஏறத்தாழ 1 இலட்சத்து 75 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்களும் அரசாங்கப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களும், வாக்கெடுப்பு மற்றும் வாக்கெண்ணும் பணிகளில் ஈடுபட்டார்கள். நாடெங்கிலுமுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்குமான பாதுகாப்புகளை, பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வழங்கியிருந்தனர்.

இவற்றுக்கிடையில் தான், தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு, பார்வையைச் செலுத்துகிறார்கள். தமிழர் பிரதேசங்களில் அனேகமாக, சிறப்பான வாக்களிப்பு நடைபெற்றிருக்கிறது. இந்த வாக்களிப்பானது, மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பான மேம்பாடொன்று ஏற்பட்டிருக்கிறது எதன்பதையே சொல்லிக்காட்டி இருக்கிறது எனலாம்.

பெப்ரவரி 10ஆம் திகதி, இலங்கையில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலை, மிகப்பெரிய அரசியல் பூகம்பம் என்றுதான் எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி, ஒரு சாதாரண உள்ளூராட்சி சபைத் தேர்தல் தானே என்று எண்ணியவர்களுக்கு பதிலைக் கொடுத்திருக்கிறது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நாம், தமிழ் மக்கள் சார்ந்து ஒரு சில விடயங்களைப்பற்றி ஆராயலாம். உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தமிழர் தரப்பில் ஏற்பட்ட குழப்பம், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் விலகிச் சென்று தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியை உருவாக்க வைத்தது.

அதேபோன்று, டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளும் பிரிந்துவிடுமோ என்ற அச்சம் உருவாகியிருந்தது. இந்த அச்சத்துக்கிடையில், ஏதோவோர் உடன்பாடுகளுடன், ஒன்றாக இருப்பதென்ற முடிவுக்கு வந்தனர். ஏற்பட்ட பிரச்சினை, சபைப்பங்கீடால் வந்தது. அத்துடன், சபைகளுக்குப் பிரதிநிதிகளை நியமிப்பது பற்றியும் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன.

இந்தப் பங்கீட்டு முறை, குறிப்பிட்ட சபைகளில், குறிப்பிட்ட 3 கட்சிகளுக்கும் பகிர்ந்து பொறுப்புக் கொடுக்கப்பட்டன. இந்தப் பொறுப்புக் கொடுத்தல் என்பது, வெறுமனே சபைகளுக்கானது என்றாலும், அதனை முழுமையானது என்று அந்தந்தக் கட்சிகள் எண்ணிக்கொண்டதும், பொறுப்புக் கொடுத்தால் முடிஞ்சு போச்சு என்று தலைமைஎண்ணிக் கொண்டமையும், முதலில் பிரச்சினையைத் தோற்றுவித்துவிட்டது.

அதற்கிடையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் தொடங்கிய பிரச்சினை முடிவுக்கு வராமலேயே தொடர்ந்து கொண்டிருந்தது. இந்தப் பிரச்சினை முடிவுக்கு வராத காரணத்தால், அனேக இடங்களில், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும், அரசியலுக்குள் நுழைய வேண்டுமென்று முயன்றுகொண்டிருந்த பலரையும், வேறு கட்சிகளின் வலைகளுக்குள் விழச்செய்துவிட்டது.

நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்யவேண்டும் என்ற நிலையில், இன்று முடிவை எடுத்துவிட்டு பட்டியலைத் தயாரித்து, ஆட்களைத் தேடிப்பிடித்து ஒரு வேட்பு மனுத் தாக்கல் செய்கின்ற நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த விதமான அவசரங்கள் காரணமாகவே, அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு, சம்மாந்துறை சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டும் இருந்தன.

உள்ளூராட்சிசபை என்பது, அரசியலின் அரிவரி என்பது எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். கிராமங்களிலும் நகரங்களிலும் கட்டுமானங்களுக்கும் சுத்தப்படுத்தலுக்கும் தான் உள்ளூராட்சி அலகுகள் என்ற சிந்தனை எல்லோரிடமும் இருக்கிறது. இருந்தாலும், இது அரசியலின் தொடக்கம்தான்.

அதனைவிடவும், விடுதலைப் போராட்டத்தின் முடிவுக்குப் பிறகான செயற்பாட்டைக் கையிலெடுத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, ஒரு பெரியதொரு பிரச்சினை இருக்கிறது. இந்த இடத்தில் தான், மக்களுக்கிருந்த குழப்பம் இந்தத் தேர்தலில் தெளிந்திருக்கிறது.

ஆரம்பத்தில் வட்டாரமும் விகிதாசாரமும் இணைந்த கலப்பு முறையென்று சொன்ன பொழுது, எல்லோரும் தலையை ஆட்டினர். ஆனால், வட்டாரங்கள் அனைத்தையும் வென்றாலும், ஆட்சியமைக்க முடியாது என்கிற நிலை அநேகமான சபைகளில் ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக, மட்டக்களப்பு மாநகர சபையில் 17 வட்டாரங்களை வென்ற இலங்கை தமிழரசுக்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) ஆட்சியமைக்க, இன்னுமொரு கட்சியின் துணையை நாடவேண்டியிருக்கிறது.

இந்தத் தேர்தல் முறையின் சிக்கல், இப்போது யாரையும் ஆட்சியமைக்க விடாத வேலையைச் செய்திருக்கிறது. ஒருவரைச் சேர்ப்பதாக இருந்தாலும், பிரதி முதல்வர் பதவியைக் கொடுத்தாக வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது. இந்தக் கோரிக்கைகள் யாரிடமிருந்து வரப்போகின்றன என்பதே, இப்போதைய முக்கியப் பிரச்சினையாகவுள்ளது.

இந்தப் பிரச்சினைகளைச் சமாளித்துக் கொண்டு ஆட்சியை அமைத்துக் கொண்டாலும், அங்கு இருக்கும் அனைத்துக் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்குள் உடன்பாடு ஏற்படாது போனால், எந்த ஒரு நடவடிக்கையைனயும் மேற்கொள்ள முடியாத நிலைமை தான் இருக்குமென்பதே உண்மை.

இலங்கையின் உள்ளூராட்சி அலகுகளில் 44 சதவீதத்துக்கும் அதிகமானவற்றைக் கைப்பற்றிக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன, 31 சதவீதமான வாக்கைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, 10 சதவீதம் பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இவைகளுக்கு மத்தியில், வடக்கு – கிழக்கில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

அது தவிர இலங்கையிலுள்ள பிரதான கட்சிகளுடன் வேறு வேறு இடங்களில் வேறு வேறு பிரதான கட்சிகளுடன் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றின் கொள்கைகள், இன்னமும் மக்களின் சிந்தனையில் மாற்றம் வந்துவிடவில்லை என்பதையே பறைசாற்றுகின்றன.

இருந்தாலும், சர்வதேசப் பொறிமுறைக்கான முயற்சிகள், இடைக்காலத் தீர்வு போன்ற விடயங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான பிரசாரங்களாக இருந்தாலும், அவை போதாதவையாகத் தான் இருந்திருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

மும்முரமான உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் காலங்களில், அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களை மிகவும் இறுக்கமான விதிகளின் ஊடாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தேர்தல் ஆணைக்குழுவை, பாராட்டாமல் இருக்க முடியாது. இதனை விடவும், புதிய முறைமையின் கீழ், மேலதிகமாக் உறுப்பினர்கள் வழங்கப்பட்டமையானது, மேலும் ஒரு குழப்பத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

சபைகளின் ஆட்சியமைப்பு எவ்வளவுக்கு முக்கியமோ, அவ்வளவுக்கு முக்கியம் அதற்கென ஆட்களைக் கண்டுபிடித்துக் கொள்வதுதான். அநேகமான சபைகள் ஆட்சியமைப்பதற்கான வழிகளே இல்லாதவைகளாக, வடக்கு – கிழக்கைப் பொறுத்தவரையில் தான் இருக்கின்றன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், பெரும்பான்மை வாக்குகளையும் ஆசனங்களையும் ஒரு கட்சி பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டாலும், ஆட்சியமைக்க முடியாதென்பது கூட, ஆரம்பத்தில் பலருக்குத் தெரியாது. இப்போது முடிவுகள் யாவும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைப் பற்றிப் பேச்சு ஆரம்பித்திருக்கிறது.

தமிழர்த் தரப்பு தேர்தலை சர்வதேச அரசியலுடன் சேர்த்துக் கொண்டு முன்னெடுத்த பிரசார முயற்சி, முழுமையாக வெற்றியளிக்கவில்லை. ஆனால், அவர்கள் எங்களுக்கு வெற்றி என்றே சொல்லிக் கொள்வார்கள்.

தனியாகப் பிரிந்து, ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டாலும், ஒரு குறிப்பிட்டளவு ஆசனங்களை, சில சபைகளில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணி பெற்றிருக்கிறது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஒரு தொகையைப் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், உண்மையா? கற்பனையா என்ற கேள்விகளுக்கப்பால், தமிழர்கள் தங்களை ஒருமித்த குரலாக்குவதும் ஒருமித்துச் செயற்படத் துணிவதும் முக்கியம். சிலவேளை இது, ஒன்றுமில்லை என்று விட்டுவிடுவதென்றாலும் சிறியதொரு பயம் நெஞ்சுக்குள் இருக்கத்தான் செய்யும். ஏனென்றால், அரசியல் என்பது கண்கட்டு சித்து விளையாட்டல்ல.

நாட்டில் நடந்து கொண்டே இருக்கும் தமிழர்களின் ஒற்றுமைப்படாத பிரச்சினையின் வெளிப்பாடு. இந்தத் தேர்தலிலும் மீண்டும் ஒருமுறை மக்களால் காண்பிக்கப்பட்டிருக்கிறது. பிரிந்தோ மாறியோ போய்க்கொண்டிருக்கிற தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான செயற்பாட்டில் ஈடுபடுவதற்கிடையில், பெரும்பான்மைக் கட்சிகளின் மாய வலை மூலம் நடைபெற்றக் கொண்டிருக்கும் தொடர் நடவடிக்கை, தமிழ் மக்களின் அரசியலையே இல்லாமல் செய்துவிடும்.

இலங்கையில் நடைபெற்று வருகின்ற அரசியல் நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றே, எல்லோரும் விருப்பம்கொண்டிருந்தாலும், அதற்கான கனிவுகளை எடுத்துக் கொள்வதில் தான் பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழர்த் தரப்பைப் பொறுத்தவரையில், ஒரு பக்கம் தங்களுக்கான சுயநிர்ணய உரிமைப் பேராட்டத்தின் முடிவுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அன்றாடப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பது, இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கிற பதிலாகும்.

நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு 3 வருடங்களாகின்ற நேரத்திலும் கூட, மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு முடியாமலிருக்கின்ற நிலைமையானது, தமிழர் தரப்பின் அரசியல் இயலாமையைக் காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது. மக்களிடம் இருந்த எதிர்பார்ப்புக்கு எதிராக உருவாகிக்கொண்டிருக்கும் வெறுப்புணர்வு, மேலும் மேலும் பிரச்சினைகளையும் கோபத்தையும், கட்சிகள் மீதான வெறுப்பையுமே கொண்டுவரும். அதே நேரத்தில், ஏனைய கட்சிகளால் கொடுக்கப்படும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயற்பாடுகளும், மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தும்.

நாட்டில் உருவான பிணைமுறி விவகாரம், இன்னொரு வகையில் மக்களிடம் கேள்விகள் பலவற்றை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்தின் மூலம், நிறைந்த தகவல்களைக் கொண்டு சேர்த்தது. இந்தக் கொண்டு சேர்த்தலானது, இன்னொரு பக்கமாக, மக்களின் மன மாற்றத்தை விரைவு படுத்தியது. எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு விரும்பம் கொண்டிருக்கும் மக்கள், வாழ்க்கைச் செலவைச் சிந்தித்துக் கொண்டே வாழும் வாழ்க்கையை விரும்புவதாக இல்லை.

வைஃபைவைக் கொடுத்தால், தேங்காய்ப் பிரச்சினை மற்றும் பெற்றோல் பிரச்சினை என்பன சரியாகிவிடும் என்று நினைக்கின்ற அரசியல், இனிமேல் சாத்தியப்படாது என்பது வெளிப்படுத்தப்பட்ட சந்தர்ப்பமாகக் கூட, நாம் இந்த உள்ளூராட்சித் தேர்தலை பார்க்க வேண்டும்.

நாட்டில் பிரச்சினைகள் இல்லையென்றால், எதற்காக அரசியல்வாதிகள்? எதற்காக அரசியல்? என்றும் கேட்டுக்கொள்ள முடியும். அந்த வகையில், தேர்தலும் அரசியலும், அரசியல் கட்சிகளும், மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாது, அது சார்ந்து சரியான வகையில் சிந்திக்காதிருக்கிற அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தேவையில்லை என்றே முடிவுகளை எடுப்பார்கள். இது யதார்த்தமே.

சில வேளைகளில், ஏன் இவைகளெல்லாம் என்று கேட்டுக்கொள்ள வேண்டியும் ஏற்படுகிறது. அரசியலை விரும்பாத உலகம் இருப்பது நல்லதே என்றாலும், அதனால்தானோ என்னவோ, அரசியலில்லாமல் இருக்கமுடியாது என்கிற நிலைமை உருவாக்கப்பட்டதன் காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

யாரையும் குற்றஞ்சொல்லி எதுவும் நடந்துவிடப் போவதில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. இருந்தாலும், முயற்சிக்காமலில்லை என்பது போல, இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளுக்கமைய யாருடனேனும் கூட்டுச்சேர்ந்து, ஆட்சிகளை உருவாக்கிக் கொள்வது சிறப்பானதே.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு, வரவு -செலவுத்திட்ட விவாத இரண்டு கோடி ரூபாய், பிணைமுறி, காணாமற் போனோரின் விவகாரம், காணி விடுவிப்பு என்பவையெல்லாம் இன்னமும் தொடரத்தான் போகின்றன. நாமும் இருந்து கொண்டு பார்க்கத்தான் போகிறோம்.

எது எப்படியோ, தமிழரது இரத்தத்தில் ஊறிப்போன தமிழ் உணர்விலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையினர் விடுபட்டபாடில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், தாம் போட்டியிடுகின்ற உள்ளூராட்சி சபைகள் அனைத்தையும் வென்று விடுவோம் என்று மார்தட்டிக் கொண்டிருந்தாலும், பெரும்பான்மை என்று சொல்லிக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைந்து கொள்ளலாம்.

இனி, தேர்தல் முடிந்து விட்டது. பழைய குருடி கதவைத்திறடி என்பது போல், ஒன்றுமில்லாத செயற்பாடுகள் தொடரப்போகின்றன. இறுதியில் ஒன்றைத் தூக்கிப் போட்டு முடிவை அறிவிக்கப் போகிறார்கள். இருந்தாலும், இப்போது வந்திருக்கும் மொட்டுப் பிரச்சினை மேலும் பெரும் பிரச்சினையாக இருக்கப் போகிறது என்பதுமட்டும் நிச்சயம்.