(மொஹமட் பாதுஷா)
இந்த மழைக்காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆரம்பத்தில் அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு பின்வாங்கிய நிலையில், மாகாண சபைத் தேர்தலோ அன்றேல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலோ இப்போதைக்கு நடைபெறாது என்று மக்கள் கருதியிருந்தனர்.
இந்நிலையில், நாட்டிலுள்ள எல்லா உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், உள்ளூராட்சி மன்ற எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டமையாலும் எழுத்துப் பிழையாலும் 200 இற்கு மேற்பட்ட சபைகளுக்கு இப்போதைக்கு தேர்தலை நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே, 93 சபைகளுக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கான பணிகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்திருந்த நிலையில், வர்த்தமானிக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தோர் நேற்றைய தினம், சமரசத்துக்கு வர முன்வந்துள்ளமையால், இவ்விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களே, நாட்டினுடைய ஆட்சிக் கட்டமைப்பின் அடிமட்ட அதிகார மையங்கள் என்ற அடிப்படையில், தேர்தல் ஒன்றை எதிர்கொள்வதற்கு, இரு பிரதான கட்சிகள் மட்டுமல்ல, பல முஸ்லிம் கட்சிகளும் ஆரம்பத்திலிருந்தே அச்சம் கொண்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான நிழல் அதிகார யுத்தம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சு.கவுக்கு எதிராகவா, ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.கவுக்கு எதிராகவா ஒன்றிணைந்த எதிரணி களமாடும் என்ற நிச்சமயமற்ற தன்மைகள், பிணைமுறி விசாரணைகள் போன்றவை ஆட்சியதிகாரத்தின் உயர்மட்ட நாற்காலிகளையே அதிர வைத்துக்கொண்டிருந்தன.
இதைவிடச் சிறுபான்மைக் கட்சிகளின் முடிவுகள், பல களநிலைவரங்களில் பெருந்தேசியக் கட்சிகளின் வெற்றி தோல்வியில் தாக்கம் செலுத்தப் போகின்றன. ஆனாலும், இப்போது வெற்றியோ தோல்வியோ, இந்தப் பலப்பரீட்சையை நடத்தியேயாக வேண்டிய நிலைக்கு, அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கின்றது எனலாம்.
அந்தவகையில், நியமிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை, பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு, விடயத்துக்குப் பொறுப்பான உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குக் கையளிக்கப்பட்டது.
அதன்பிற்பாடு, அவர் உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள், அதற்குள் வரும் வட்டாரங்களின் எல்லைக்கோடுகள், அதற்கான வரைபடம் உள்ளிட்ட விவரங்களடங்கிய 2006/44ஆம் இலக்க 649 பக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, இவ்வருடம் பெப்ரவரி 17ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.
அதன்பிறகு, நகரபைகள் கட்டளைச் சட்டம், மாநகர சபைகள் கட்டளைச்சட்டம் மற்றும் பிரதேச சபை கட்டளைச்சட்டம் ஆகியவற்றுக்கு அமைவாக, நாட்டிலுள்ள நகர மற்றும் மாநகர சபைகள், அவற்றின் உறுப்பினர்களது எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய ஒரு வர்த்தமானி அறிவித்தலையும், புதிய உள்ளூராட்சி சபைகளின் விவரங்களை உள்ளடக்கிய இன்னுமொரு வர்த்தமானி அறிவித்தலையும் இம்மாதம் இரண்டாம் திகதி அமைச்சர் வெளியிட்டிருந்தார்.
எனவே, நாட்டின் 336 சபைகளுக்கும் தேர்தல் நடைபெறப் போகின்றது என்று எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில், உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் தொடர்பாக பெப்ரவரியில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, ஆறு பேர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
எல்லை மீள்நிர்ணயக் குழுவின் யோசனைகள் மீறப்பட்டுள்ளதாக அவர்கள் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
அதன்பின், கடந்த 22ஆம் திகதி இம்மனுக்கள் மீதான விசாரணையைத் தொடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு, டிசெம்பர் நான்காம் திகதி வரை இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்திருந்ததது. அதாவது, இந்த வர்த்தமானிக்கு அமைவாகத் தேர்தலை நடத்தினால், மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டே நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்தது.
எனவே, மனுதாரர்களால் மனுவில் குறிப்பிடப்பட்ட 203 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தலை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்கமையவே, தேர்தலை இப்போது நடத்துவதா அல்லது பிழைகளைத் திருத்திவிட்டுப் பின்னர் நடாத்துவதா என்பது குறித்த முடிவைத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள முடியும்.
எவ்வாறிருப்பினும் சட்டரீதியான எவ்வித சிக்கலும் இல்லாத 133 சபைகளுக்குத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமிருக்கின்றது. இருப்பினும், அதில் 40 சபைகளுக்கான வர்த்தமானி உள்ளடக்கங்களில் எழுத்துப்பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அதைத் திருத்த வேண்டியுள்ளது.
தவறுகள் இடம்பெறுவது சகஜமானது; என்றாலும், ஒரு நாட்டின் தேர்தலை நடாத்துவதற்காக வெளியிடப்படும் மிக முக்கியமான, ஓர் அதிவிசேட வர்த்தமானியில் பிழைகள் இடம்பெறுவது என்பதும், அதுவும் 40 சபைகள் தொடர்பான உள்ளடக்கங்களில் எழுத்துப்பிழைகள் இருப்பதென்பதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விடயமல்ல.
இதனால், சிலவேளைகளில் அந்தச் சபைகளுக்கான தேர்தல்கள், மேலும் காலதமதமாகும் என்றால், அதனால் மக்களின் வாக்குரிமைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கு, யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு விடைகாண வேண்டியுள்ளது.
எது எப்படியிருப்பினும், தேர்தல் ஆணைக்குழுவைப் பொறுத்தமட்டில், இப்போது சட்டப்படி சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 203 சபைகளுக்கோ எழுத்துப்பிழைகள் திருத்தப்படாத 40 சபைகளுக்கோ தேர்தலை நடாத்த முடியாத சட்ட வரையறை (இதுவரை) காணப்பட்டது.
எனவேதான், எவ்விதப் பிரச்சினையும் இல்லாத 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடாத்துவதற்கான அறிவித்தலைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டிருந்தர்.
அந்தவகையில், நாட்டிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில், 21 தேர்தல் மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஓர் அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளூராட்சிச் சபைகளுக்குத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில், எந்தவொரு சபைக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சிச் சபைகளுக்கும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தலா இரண்டு சபைகளுக்கும், யாழ்ப்பாணம், மாத்தளை, குருணாகல், புத்தளம், அநுராதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு சபைகளுக்கும் தேர்தல் நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை முஸ்லிம்கள் செறிவாக வாழும், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் 12 சபைகளுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு சபைகளுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் ஏழு சபைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
வடக்கில் இப்போதைய நிலைவரப்படி, சாவகச்சேரி நகர சபைக்கு மட்டுமே தேர்தல் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
இதேவேளை, மேற்படி 40 உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பாகவும் காணப்படும் அச்சுப் பிழைகளைத் திருத்தி வெளியிடுவதற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தச் சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
இம்முறை முதன்முதலாக அரசியல்கட்சி வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்த வேண்டியுள்ளது. இதில் தடங்கல்கள் ஏற்படாதவிடத்து டிசெம்பர் 11ஆம் திகதிக்கும் 14ஆம் திகதி நண்பகலுக்கும் இடையில் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையிலேயே திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, ஏற்கெனவே திட்டமிட்டிருந்த திகதியான டிசெம்பர் நான்காம் திகதியில் அல்லாமல், அதற்கு முன்னதாக, நேற்று நவம்பர் 30ஆம் திகதி, அம்மனுக்கள் மீதான விசாரணையை நடாத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குச் சட்ட மா அதிபர் மனுவொன்றை நகர்த்தியிருந்தார்.
அதன்படி, நேற்று இவ்விடயம் மீது விசாரணைகள் இடம்பெற்றன. இங்கு மன்றில் ஆஜராகியிருந்த மனுதாரர்கள், மனுவை வாபஸ் பெற்று, சமரசம் செய்து கொள்ள இணக்கம் தெரிவித்ததாகப் பிந்திய செய்தியில் இருந்து அறியமுடிகின்றது.
எனவே, அவ்வாறு நடக்குமென்றால்… உயர்நீதிமன்றம் இந்தச் சமரசத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட வர்த்தமானி மீதான தடையை நீக்குமாயின், மேலும் 203 சபைகளுக்குத் தேர்தலை நடாத்த முடியும்.
அதேபோன்று 40 சபைகள் தொடர்பான விடயங்களில் காணப்படும் எழுத்துப் பிழைகளையும் நிவர்த்தி செய்து, திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியிடப்படுமாயின், தேர்தலை நடாத்துவதற்கு இருக்கின்ற எல்லா தடைகளும் நீங்கி, 336 சபைகளுக்கும் தேர்தலை நடத்த முடியுமாகவிருக்கும்.
ஆனால், இதிலிருக்கின்ற ஒரேயொரு பிரச்சினை, தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்ட காலச் சட்டகத்துக்குள் இதைச் செய்து முடிக்க முடியுமா என்பதாகும்.
நாட்டின் சிறுபான்மையினமாக இருக்கின்ற முஸ்லிம்கள், இரண்டாந்தரப் பிரஜைகளாகக் கையாளப்படுகின்றமோ என்று எண்ணுமளவுக்கு, மோசமான அனுபவங்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு காலப்பகுதியில், இந்தத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது.
நல்லாட்சியைக் கொண்டு வருவதற்கு, முஸ்லிம்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்த போதும், அதற்குப் பின்வந்த முக்கிய கொள்கைகள், சட்டவாக்கங்கள், திருத்தங்களின் போதும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்திலும் யதார்த்தம் என்பது முஸ்லிம்கள் திருப்திப்படும் விதத்தில் அமையவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதற்குப் பிரதான காரணம், முஸ்லிம் கட்சித்தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்பதை இந்தத் தேர்தல் காலத்தில் மறந்து விடவும் கூடாது.
அரசமைப்பு மறுசீரமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், முஸ்லிம்களின் அபிலாஷைகள் பிரதிபலிக்கவில்லை; உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், முஸ்லிம்கள் முழுமையாகத் திருப்திப்படும் வகையில் இருக்கவில்லை.
உள்ளூராட்சிச் சபைகளுக்கான எல்லை நிர்ணயமும் உறுப்பினர் நிர்ணயமும் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் நியாயமாக மேற்கொள்ளப்படவில்லை. மறுசீரமைப்பு வடக்கு, கிழக்குக்கு வெளியில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களைத் தக்கவைக்கும் விதத்தில், தேர்தல்முறை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை.
அளுத்கம தொடங்கி கிந்தோட்டை வரையான கலவரங்களுக்கு எதிராகவும் சட்டம், முஸ்லிம்கள் திருப்திப்படும் விதத்தில் நிலைநாட்டப்படவில்லை. இப்படி எத்தனையோ ‘இல்லை’களுக்கு மத்தியிலேயே முஸ்லிம்கள் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றனர். எனவே, மிகவும் விவேகமாகச் செயற்பட வேண்டியுள்ளது.
நாட்டிலுள்ள எல்லா உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடாத்தப்படுமாக இருந்தால், எல்லாப் பிரதேசங்களிலும் தேர்தல் களைகட்டியிருக்கும்.
ஆனால், அதற்கான சாத்தியங்கள் குறைவடைந்து செல்கின்றன. ஆனாலும், 93 (அல்லது 133) சபைகளில் யார் அதிக சபைகளை கைப்பற்றுவது என்ற போட்டி, பெரும்பான்மைக் கட்சிகளுக்கு இடையிலும் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்குள்ளும் இருக்கின்றது.
அதேபோல், இந்த முதற்கட்டத் தேர்தல் வெற்றியை வைத்து, அடுத்த கட்டத்தில் யார் அதிக சபைகளைக் கைப்பற்றுவார்கள் என்பதை ஓரளவுக்கு கணிப்பிடக் கூடியதாக இருக்கும்.
அத்துடன், அந்தத் தேர்தலில், முதற்கட்டத் தேர்தலின் முடிவுகள், செல்வாக்குச் செலுத்தும் என்றபடியால், கிட்டத்தட்ட 90 ஊர்களில் இப்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏனைய ஊர்களிலும் அதன் வெப்ப அனல் பரவுவதை உணர முடிகின்றது.
உள்ளூராட்சி தேர்தல் என்பது, யார் வெற்றிபெறுகின்றார்கள், ஆட்சியமைக்கின்றார்கள் என்பதற்கு அப்பால், ஓர் உள்ளூர் அரசியல் சண்டைக்களமாகவே மக்கள் மனங்களில் பதிந்திருக்கின்றது.
ஒரு கிராம சபை, பிரதேச சபைத் தேர்தலில் வாக்குக்கேட்கின்ற வேட்பாளர்கள், ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாக இருப்பதற்கு மேலதிகமாக, உறவுக்காரர்களாகவும் இருப்பார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், உறவுக்காரர்களுக்கிடையே முரண்பாடுகளும் அடிபிடிகளும் ஏற்பட்ட நிறைய கசப்பான அனுபவங்கள், முஸ்லிம்களுக்கு இருக்கின்றன. அதனால், வருடக் கணக்காகக் கதை பேச்சில்லாமல் பகைமை பாராட்டிவரும் எத்தனையோ குடும்பங்கள் ஒவ்வோர் ஊரிலும் இருக்கவே செய்கின்றன.
இப்போது வட்டார முறையிலேயே தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த வட்டாரத்தில் வெற்றி பெறும் கட்சியின் வேட்பாளர் அல்லது அதிக வட்டாரங்களைக் கைப்பற்றும் கட்சியினால் நியமிக்கப்படும் ஒருவரே புதிய தேர்தல் முறைப்படி, குறிப்பிட்ட சபைக்குத் தெரிவு செய்யப்பட முடியும்.
இந்த அடிப்படையில் நோக்கினால், ஒவ்வொரு பிரதேசத்தின் வட்டாரங்களிலும் கடுமையான உள்ளகச் சண்டைகளும் மனக்கசப்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, முஸ்லிம்கள் தம்முடைய அரசியலை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம் அரசியல் என்பது, முஸ்லிம்களுக்கான அரசியலாக அன்றி, முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான நீயா, நானாப் போட்டியாகவே உருவெடுத்திருக்கின்றது என்ற அடிப்படை அறிவின் அடிப்படையில் நிலைமைகளை நோக்க வேண்டியுள்ளது.
இப்போது ரவூப் ஹக்கீம் – ரிஷாட் பதியுதீன் – அதாவுல்லா அணிகள் தனித்துவ அடையாளத்தின் பெயரில் முக்கோணச் சண்டையை பிடிக்கும் களமாகவே, பொதுவாக நமது எல்லா தேர்தல் களங்களும் நோக்கப்படுகின்றன.
இதில், ஹசன் அலி, பஷீர் அணியோ, முஸ்லிம் கூட்டமைப்போ நாளை இணைந்து கொள்ளலாம் என்றாலும், இன்னும் முஸ்லிம் அரசியல் பண்பு ரீதியான மாற்றமொன்றை அடையவில்லை என்பதையும் அதற்கு இன்னும் காலமெடுக்கும் என்பதையும் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.
அந்த அடிப்படையில், உத்தேச தேர்தல் தொடர்பாக புத்திசாதூர்யமாகவும் ஆறாவது அறிவைப் பயன்படுத்தியும் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் முதலாவது விடயம் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பதல்ல.
மாறாகத் தமது வட்டாரத்தில் போட்டியிடுகின்ற எந்த வேட்பாளரும் சமூக அக்கறையுள்ள, பணத்துக்குப் பின்னால் போகாத, பதவி ஆசையற்ற ஒருவராக இருக்க வேண்டும். அவருக்கே வாக்களிக்க வேண்டும். இவ்வாறு சிறந்தவர்களுக்கு வாக்களித்து குறிப்பிட்ட பிரதேசத்தில் அதிக முஸ்லிம் உறுப்பினர்களைப் பெற வேண்டும்.
இந்த உள்ளூர் போர் என்பது, அதிகாரத்துக்கான சாத்வீக ரீதியான பக்குவமான போட்டியாக இருக்க வேண்டும்.
தவிர, உடலியல் ரீதியான வன்முறைகளுக்கு வித்திடக் கூடாது. அரசியல் தலைவர்களுக்காக ஊருக்குள், உறவுக்குள் முரண்பட வேண்டிய எந்த தேவையும் நமக்குக் கிடையாது.