(முகம்மது தம்பி மரைக்கார்)
சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது, இந்த அச்சம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.
‘‘இலங்கையில் முஸ்லிம்களின் வடிவம் தமிழ் மொழி சார்புள்ளதாக இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காகவே, தங்கள் வடிவம் – மதம் சார்ந்தது என, அவர்கள் கூறிக் கொள்கின்றனர்” என்று அண்மையில் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தும், அதற்கான எதிர்வினைகளும் அரசியல் அரங்கில் விவகாரமாக மாறியுள்ளன.
விக்னேஸ்வரன் தனது கருத்தினூடாக, முஸ்லிம்களின் தனித்துவமான அரசியல் மற்றும் இனத்துவ அடையாளங்களை மறுதலிக்க முயற்சிக்கின்றார் என்கிற குற்றச்சாட்டு, முஸ்லிம் சமூகத்திலிருந்து முன்வைக்கப்படுகிறது. இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை அடைந்து கொள்வதற்குரிய முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும், தற்போதைய காலகட்டத்தில், விக்னேஸ்வரன் இந்தக் கருத்தினை வெளியிட்டமையினூடாக, ‘முஸ்லிம்களுக்கென்று தனியான அரசியல் தீர்வுகள் எவையும் கிடைத்து விடக்கூடாதென விரும்புகிறாரோ’ என்று, முஸ்லிம்கள் சந்தேகிக்கும் நிலையொன்றும் உருவாகியுள்ளது.
ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தக் கருத்து, முஸ்லிம்களுக்குப் புதிதில்லை. 127 ஆண்டுகளுக்கு முன்பாகவே, பொன்னம்பலம் இராமநாதன் இப்படியொரு கருத்தைச் சொல்லி, அப்போதே முஸ்லிம்களின் பலமான எதிர்ப்புக்கு ஆளாகியிருந்தார்.
1889 இல் இலங்கையில் பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தின்போது, சுதேச மக்களுக்கு சட்ட மன்றத்தினூடாக அரசியல் பிரதிநிதித்துவத்தினை வழங்குவதற்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் முன்வந்தனர். அதற்கிணங்க, இலங்கை முஸ்லிம்களும் தமக்கான பிரதிநிதித்துவத்தினைப் பெறுவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பதை, பொன்னம்பலம் இராமநாதன் விரும்பவில்லை. அதற்கு எதிராகப் பேசினார். “இலங்கைச் சோனகர்கள், இன ரீதியாகத் தமிழர்கள்தான்” எனக் கூறினார். எனவே, ‘முஸ்லிம்களுக்கென்று தனியான பிரதிநிதித்துவம் வழங்கத் தேவையில்லை’ என்கிற வாதமொன்றினை பொன்னம்பலம் இராமநாதன் முன்வைத்தார்.
1885 ஆம் ஆண்டு இலங்கைச் சட்டவாக்க சபையிலும், 1888 ஆம் ஆண்டு அரச ஆசியக் கழகத்தின் இலங்கைக் கிளையிலும் முஸ்லிம்கள் தொடர்பான தன்னுடைய மேற்படி கருத்தினை, இராமநாதன் பகிரங்கமாக வெளியிட்டார்.
முஸ்லிம்களின் இனத்துவ அடையாளத்தினை மறுதலிக்கும் வகையில், பொன்னம்பலம் இராமநாதன் தெரிவித்த கருத்துக்கு, அப்போதைய முஸ்லிம் தலைவர்கள் கடுமையான எதிர்வினைகள் புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இராமநாதனின் அந்த வாதத்தை – அப்போதைய பிரித்தானிய ஆளுநர் ஆர்தர் ஹமில்டன் ஏற்றுக் கொள்ளவில்லை.
இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில், அடையாள ரீதியான வித்தியாசத்தினை முஸ்லிம்கள் கொண்டுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொண்ட ஆளுநர் ஹமில்டன், 1889 ஆம் ஆண்டு அப்போதைய சட்ட சபையில் முஸ்லிம்களுக்கென்று, பிரதிநிதித்துவம் ஒன்றினை வழங்கினார். அதற்கிணங்க, முதலாவது முஸ்லிம் பிரதிநிதியாக எம்.சி. அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டார்.
மேற்படி விவகாரம் நடைபெற்று 130 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், தற்போது பொன்னம்பலம் இராமநாதனை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வழி மொழிந்திருந்கின்றார்.
முஸ்லிம்கள் தொடர்பாக இவ்வாறானதொரு கருத்தினை தமிழர் தரப்பில் பொன்னம்பலம் இராமநாதன், சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் மட்டுமே முன்வைக்கவில்லை. முஸ்லிம்களையும் இணைந்துக்கொண்டு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இயக்கங்களுள் அதிகமானவையும் இவ்வாறானதொரு மனநிலைக்குள்தான் அமிழ்ந்து போய்க்கிடந்தன. இலங்கை முஸ்லிம்களை ‘இஸ்லாமியத் தமிழர்கள்’ என்றும், ‘தொப்பி அணிந்த தமிழர்கள்’ என்றும் ஆயுத இயக்கங்களின் தலைவர்களே அடையாளப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால், தமிழர்கள் எனும் அடையாளத்துக்குள் தம்மை உள்ளீர்ப்பதை முஸ்லிம்கள் அனுமதிக்கவில்லை. தாங்கள் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட, ஒரு தேசிய இனம் என்று முஸ்லிம்கள் வலியுறுத்தினார்கள்.
முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க முடியாது என்பதில், சிங்களவர்களை விடவும் தமிழர் தரப்பு, ஒரு காலகட்டத்தில் உறுதியாக இருந்தது. விடுதலைப் புலிகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் முஸ்லிம்களை ஒரு ‘குழு’ என்று, அவர்கள் குறிப்பிட்டமையும், சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, முஸ்லிம்களை தனித்தரப்பாக அங்கீகரிப்பதற்கு புலிகள் மறுத்தமையும், முஸ்லிம்களின் தேசிய இனத்துவத்தை தமிழர் தரப்பு அங்கீகரிக்க மறுத்தமையின் வெளிப்பாடுகளாகும்.
முஸ்லிம்களை ஏற்றுக்கொள்வதில், அவர்களுக்கு சமத்துவமான அந்தஸ்தினை வழங்குவதில், தமிழர்கள் தலைமையேற்ற ஆயுத இயக்கங்களைப் போலவே, மிதவாத தமிழ் அரசியல் கட்சிகளும் பின்னடித்தன என்கிற குற்றச்சாட்டுக்களும் உள்ளன. முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்தொன்றினை இங்கு பதிவுசெய்தல் பொருத்தமானகும். ‘முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் – ஒரு காலத்தில் தமிழரசுக் கட்சியில் இருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணிக்காக உழைத்தார். ஆனால், அந்தக் கட்சிகளுக்குள்ளும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள்ளும் முஸ்லிம்கள் உள்வாங்கப்படவில்லை. முஸ்லிம்கள் மீது சமத்துவமானதொரு பார்வை அங்கு இல்லாமல் போனது. அதனால், அந்தக் கட்சிகளை விட்டு அஷ்ரப் வெளியேறினார். மேற்படி விடயங்களை வெளியில் வந்து அஷ்ரப் பகிரங்கப்படுத்தினார்’ என்று, குறித்த நிகழ்ச்சியில் பஷீர் சேகுதாவூத் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், முஸ்லிம்களின் தனித்துவத்தை அங்கீகரிக்காமல், அவர்களின் தேசிய இனத்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல் முரண்பட்டுக் கொண்டு, தமது அரசியல் இலங்கினை அடைந்து கொள்வதிலுள்ள பாரிய சிக்கல்கள் குறித்து, தற்போதைய தமிழர் தலைமைகள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன. அதனால், முஸ்லிம்கள் தனித்துவமான அடையாளங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம் என்பதை இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் போன்ற அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இப்படியானதொரு தருணத்தில்தான் ‘சங்கினை ஊதிக் கெடுத்திருக்கின்றார்’ விக்னேஸ்வரன்.
அரசியலில் தற்போதைய காலகட்டம் மிகவும் முக்கியமானது. நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளுக்கான தீர்வினை வழங்கும் வகையில், அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாகப் பேசப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையில், வடக்கு – கிழக்கு இணைந்த பிராந்தியத்தில்தான் தமக்கான தீர்வு முன்வைக்கப்படுதல் வேண்டுமென, தமிழர் தரப்பு மீளவும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிரான மனநிலையில் கிழக்கிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ளனர். வடக்கும் கிழக்கும் இணைந்து விட்டால், தமிழர்களின் மேலாதிக்கத்தின் கீழ், தாம் அடக்கியாளப்படுவோம் என்கிற அச்சம், கிழக்கு முஸ்லிம்களிடம் உள்ளது. வடக்கும் – கிழக்கும் இணைந்திருந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட கசப்பான அரசியல் அனுபவங்கள், இந்த அச்சத்துக்குக் காரணமாகும்.
முஸ்லிம்களின் இந்த அச்சத்தைக் களைய வேண்டிய பொறுப்பு, தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது. அந்தப் பொறுப்பினை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்து தமிழர் தரப்பு யோசிக்க வேண்டிய காலகட்டத்தில்தான், முஸ்லிம்களின் அரசியல் அடையாளம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றினை முன்வைத்தமையின் வழியாக, நிலைமையினை மேலும் கடுமையாக்கியிருக்கின்றார் விக்னேஸ்வரன்.
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு முன்னாள் நீதியரசர்; படித்தவர்; நீண்ட ஆயுளும் அதனூடான அனுபவங்களையும் கொண்டவர். இவ்வாறான ஒருவர், முஸ்லிம்களின் இனத்துவ அடையாளம் தொடர்பில் தெரிவித்த கருத்தினை, தற்செயலாக அவரின் நாவிலிருந்து உதிர்ந்தவையாகவோ, பத்தோடு பதினொன்றாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. முஸ்லிம்களின் அரசியல் அடையாளம் தொடர்பில், விக்னேஸ்வரன் கொண்டுள்ள தீர்க்கமான கருத்தினைத்தான் ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்களின் வழியாக, அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, ‘முஸ்லிம்கள் இனரீதியாக தமிழர்களாவர்; அவர்களுக்கென்று தனித்துவமான அரசியல் அடையாளங்கள் எவையுமில்லை. எனவேதான், இல்லாத அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, முஸ்லிம்கள் தமது மதத்தினைத் தூக்கிப் பிடித்திருக்கின்றார்கள்’ என்பதை, தனது பாணியில் விக்னேஸ்வரன் விபரித்துள்ளார்.
எவ்வாறாயினும் விக்னேஸ்வரனின் கருத்து, முஸ்லிம்களளவில் மிகவும் ஆபத்தானதாகும். முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான அரசியல் அடையாளம் இல்லையென்கிற அர்த்தப்பட விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தின் ஊடாக, அவரின் தமிழ் மேலாதிக்கம் நிறைந்த முகத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்கிற விமர்சனம், முஸ்லிம்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலைவரமானது, வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிரான பிரசாரங்களைச் செய்துவரும் முஸ்லிம் தரப்புகளுக்கு, பழம் நழுவி – பாலில் விழுந்ததுபோல், இரட்டிப்பு மகிழ்சிகரமானதாகும்.
ஏற்கெனவே, இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டப் பிரேரணை ஒன்றினை, வடக்கு மாகாணசபை முன்வைத்து, அது தொடர்பில் முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்புக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது. தமிழர்களுக்கான இணைந்த வடக்கு – கிழக்கு பிராந்தியத்தினுள் முஸ்லிம்களுக்கு ஓர் அலகு வழங்கப்பட்டால் போதுமானது என, சி.வி. விக்னேஸ்வரனைத் தலைவராகக் கொண்ட வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்வுத் திட்டப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் வழங்கப்படும்போது, தமிழர்களாகிய தங்களுக்கு என்ன தேவை என்பதை மட்டும் பேசாமல், குறித்த பிரேரணையில் அடுத்த சமூகங்களான முஸ்லிம்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் எதையெல்லாம் கொடுக்க வேண்டும் என, விக்னேஸ்வரன் தலைமையிலானோர் ‘நாட்டாமை’த்தனத்துடன் தீர்ப்புச் சொல்லக் கிளம்பியமையானது, முஸ்லிம்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. தாங்கள் ஆள்வதற்கு ஓர் ஆள்புல நிலப்பரப்பினையும் தம்மால் ஆளப்படுவதற்கு ஒரு சமூகத்தினையும் சேர்த்துக் கேட்கின்றமைபோல், வடக்கு மாகாணசபையின் அந்தப் பிரேரணை இருப்பதாகக் கூறி, அதனைக் கிழக்கு முஸ்லிம்கள் கடுமையாக விமர்சித்தனர்.
முஸ்லிம்களின் இனத்துவம் தொடர்பில், தமிழ் அரசியல் தலைமைகளிடம் 127 வருடங்களுக்கு முன்னர் எவ்வகையான கருத்துநிலைகள் காணப்பட்டனவோ, அவ்வாறான கருத்துகள்தான் இப்போதும் உள்ளன என்கிறதொரு தோற்றப்பாட்டினை, வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்படுத்தியிருக்கின்றார். 127 வருடங்களுக்கு முன்னர், இலங்கை முஸ்லிம்களை ‘தமிழர்கள்’ எனக் கூறிய பொன்னம்பலம் இராமநாதனும் சட்டத்துறையில் ஒரு விற்பன்னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மக்களைச் சரியான திசை நோக்கி வழி நடத்த வேண்டியவர்களே, அதைச் செய்யத் தவறி விடுகின்றனர். இதன் விளைவு – சமூகங்களுக்கிடையில் சச்சரவுகளும், சண்டைகளும் ஏற்படத் தொடங்கி விடுகின்றன.
ஒரு தேசத்தில் ஒரே மொழியினைப் பேசிக்கொண்டே, தனித்த அடையாளங்களுடன் வாழ்கின்ற வெவ்வேறு தேசிய இனங்கள், உலகில் பல உள்ளன. ஒரு மக்கள் கூட்டம் பேசுகின்ற மொழியினூடாக மட்டும், அவர்களின் இனத்துவத்தினை அடையாளப்படுத்தி விட முடியாது என்கிற உண்மை வட மாகாண முதல்வருக்கு தெரியாத சங்கதியல்ல.
சிங்கள பேரினவாதிகள் தமிழர்களின் அடையாளங்களையும், அதனூடாக வழங்க வேண்டிய உரிமைகளையும் மறுக்கின்றபோது, தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற அதே கோபமும், மனக்குமுறலும்தான், முஸ்லிம்களின் இனத்துவ அடையாளம் தொடர்பில் கருத்து வெளியிடப்படும்போது முஸ்லிம் மக்களுக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்தல் அவசியமாகும்.
ஒரு சமூகம் தன்னுடன் இணைந்து வாழும் சக சமூகத்தைப் பகைத்துக் கொண்டு, அதன் அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது என்பதுதான் யதார்த்தமாகும். உலகில் மிகப்பெரும் போராட்ட இயக்கம் என்கிற அடையாளத்தைப் பெற்றிருந்த, விடுதலைப் புலிகள் தோற்றுப் போனமைக்கு, முஸ்லிம் சமூகத்துடனான உறவினைப் புறந்தள்ளியமை பிரதான காரணங்களில் ஒன்றென இப்போது உணரப்படுகிறது. இதேபோன்று, தமிழ் சமூகத்துடனான உறவினை அறுத்துக் கொண்டு, முஸ்லிம்களும் தமது அரசியல் இலக்கினை அடைந்து கொள்ள முடியாது.
இந்த உண்மைகள் யாருக்கும் தெரியாததல்ல; ஆனாலும், நூற்றாண்டுகளுக்கும் மேலாக, இது விடயத்தில் தொடர்ச்சியாகத் தவறிழைக்கப்பட்டு வருகிறது.