(சாகரன்)
பதுளை பாடசலை ஒன்றி அதிபர் பவானி ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கா முழந்தாளிட்டு மன்னிப்பு கோர வைத்த சம்பவம் எந்த வகையிலும் எற்புடையது அல்ல. செல்வாக்கின் அடிப்படையில் இரு மாணவர்களை பாடசாலையில் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்திய அதிகாரிகளை கல்வி அமைச்சின் சுற்றறிக்கையிற்கு அமையவே தன்னால் செயற்பட முடியும் என்ற அறம் சார்ந்த செயற்பாட்டிற்கு முதலில் அதிபர் பவானியை பாராட்டியே ஆக வேண்டும்.
கூடவே முதலமைச்சரின் அலுவலகத்தில் சலுகை முறையில் தமது பிள்ளைகளுக்கான அனுமதி பெற இருந்த பெற்றோர் முன்னிலையில் முழந்தாள் இட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்திற்கு முதலமைச்சர் அதுவும் பெருபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்ற இரு முனைத் தாக்குதலுக்கும் பயந்து செயற்பட்ட அதிபர் பவானியின் கையறு நிலையிற்கு உடனடியாக முதலமைச்சர் பதவியில் இருந்து அவரை ஜனாதிபதி தனது பொறுப்புகளின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மாறாக கல்வி அமைச்சுப் பொறுப்புக்களை அவரிடம் இருந்து இடம் மாற்றியது ஒரு வகை சமாளிப்பே.
தொடர்ந்து ஜனாதிபதி பாராபட்சம் அற்ற விசாரணைக்கு உத்தரவிட்டதும் இதிலிருந்து தப்புவதற்காக பண முறிவிவகாரத்திற்காக ரணில் பதவி விலகினால் தானும் விலகத் தயார் என்பது புரையோடி இருக்கும் அரசியல் மேல்மட்ட தவறுகளை தனக்கு சாதகமாக்க முயலும் சாமர சம்பத் தஸநாயக்கா போன்றவர்கள் பொதுவெளியில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்கள்.
மனநிலை பாதிகப்பட்டவர் என்று பொலிசாரை ஏவி தனது அலுவலகத்திற்கு அழைத்து வைத்தியர்கள் மூலம் அதிபரை பரிசோதிக்க முற்பட்ட செயற்பாட்டிற்காக முதலமைச்சர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். நீதிமன்றம் தேவைப்பட்டால் இதுபோன்ற வைத்திய பிரிசோதனைக்கு உத்தரவிடும் சட்டவாக்க அமைப்பை உடைய நாட்டில் சட்டத்தை கையில் எடுக்கும் சாமர சம்பத் தஸநாயக்கா போன்றவர்கள் வெளியில் நடமாட முடியாத வகையில் சிறைக்குள் அடைக்கப்பட வேண்டியவர்கள். தொடர்ந்தும் பயமுறுத்தல் விடயங்களில் இவர்களைப் போன்றவர்கள் ஈடபடவே செய்வர் என்பதையே இச் செயற்பாடுகள் கட்டியம் காட்டி நிற்கின்றன.