எங்களினுடைய பிழைகளை ஏன் கருணாநிதி மீது போடுகிறீர்கள்?

கருணாநிதி அவர்கள் தன்னுடைய கடைசிக் காலங்களில் மருத்துவமனையில் இருந்த போதும், மரணித்த போதும் “நாம் தமிழர்” அமைப்பினர் மற்றும் சில இலங்கைத் தமிழர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். ஈழத் துரோகி என்பது தொடங்கி தெலுங்கர் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்பது வரையான இனவெறி, சாதிவெறி கொண்ட இழிவான தாக்குதல்களை காணக் கூடியதாக இருந்தது. விமர்சனம், சுய விமர்சனம் என்பன இல்லாத எந்தவொரு போராட்டமும் முன்னோக்கிச் செல்ல முடியாது. தம்முடைய தவறுகளை மற்றவர்களின் தலை மீது சுமத்துவது என்பது மற்றுமொரு அழிவிற்கே நம்மை மறுபடியும் இட்டுச் செல்லும்.

சமுகநீதி, மாநில சுயாட்சி, தமிழ் மொழிக்கான அடையாளம், பகுத்தறிவு, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட மக்கள் பிரிவினருக்கான சீர்திருத்தங்கள் என்பன திராவிட முன்னேற்றக் கழகத்தினதும், கருணாநிதியினதும் சரியான பக்கங்கள் எனச் சொல்லலாம். ஊழல், வாரிசு அரசியல், ஆட்சி அதிகாரங்களிற்காக யாருடனும் கூட்டு வைத்துக் கொள்வது என்பன அவருடையதும் கட்சியினுடையதும் மிக மோசமான இருண்ட பக்கங்களாக இருக்கின்றன. தமிழ் நாட்டு மக்களிற்கே உண்மையாக இல்லாத ஒருவர் எப்படி இலங்கைத் தமிழ் மக்களிற்கு உண்மையாக, ஆதரவாக இருந்திருக்க முடியும்?

இந்திய அமைதிப் படை என்னும் பெயரில் வந்த ராஜீவ் காந்தியின் கொலைகார இராணுவம் இலங்கையில் தமிழ் மக்களின் மீது தாக்குதல்கள் தொடுத்து அக்கிரமங்கள் செய்து கொண்டிருந்த போது அதை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். பின்பு வி.பி சிங் பிரதம மந்திரியாக வந்து இந்திய இராணுவத்தை இலங்கையில் இருந்து திருப்பி அழைத்த போது கருணாநிதி தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தார். இந்திய இராணுவம் சென்னைக்கு திரும்பி வந்த விழாவின் போது அவர் அந்த விழாவிற்கு போகாமல் புறக்கணித்தார். இந்திய இராணுவம் இலங்கைத் தமிழ் மக்களிற்கு இழைத்த அநீதிகளிற்கு எதிர்ப்பைக் காட்டுவதாக அவருடைய அவமதிப்பு இருந்தது.

ஆனால் அதே கருணாநிதி 2009 ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கினது இந்திய அரசு மகிந்த ராஜபக்சவின் இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை கொன்று கொண்டு இருந்த போது அறிக்கைகள் மட்டுமே விட்டுக் கொண்டு இருந்தார். மெரினா கடற்கரையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து விட்டு தீர்வு வந்து விட்டதாக கதை வசனம் எழுதினார். இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளை மாநில அரசுகளால் மாற்ற முடியாது என்பதே யதார்த்தமாக இருந்தாலும் மன்மோகன் சிங்கின் அரசின் பிரதான கூட்டாளியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினால் சில அழுத்தங்களை கொடுத்திருக்க முடியும். இந்திய மத்திய அரசில் கிடைத்த ஒரு சில மந்திரிப் பதவிகளிற்காக இலங்கைத் தமிழ் மக்களின் கொலைகளை கருணாநிதி மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தமிழ், தமிழர்கள் என்று தமது வாழ்நாள் முழுவதும் பேசிய கருணாநிதி இலங்கைத் தமிழினம் அழிக்கப்பட்ட போது “ஒரு தெருவில் சாவு நடக்கும் போது இன்னொரு தெருவில் திருமண வீடு நடப்பது தவிர்க்க முடியாதது” என்று சர்வ சாதாரணமாக கொலைகளை நியாயப்படுத்தி பேசியது குறித்து எல்லோருக்கும் கோபம் இருக்கிறது. ஆனால் சமுக வலைத் தளங்களில் கருணாநிதி குறித்து வரும் விமர்சனங்கள் ஈழப் போட்டத்தின் தோல்விக்கும், ஈழ மக்களின் கொலைகளிற்கும் கருணாநிதியையே முழுப் பொறுப்பாளி என்று வசை பாடுகின்றன.

சுந்தரம், சந்ததியார், இறைகுமாரன், உமைகுமாரன், மனோ மாஸ்ரர், ராஜினி திரணகம, செல்வி கரவை கந்தசாமி, தாஸ், நெப்போலியன், தில்லை, ரமணி “புதியதோர் உலகம்” எழுதிய கோவிந்தன் என்னும் கேசவன் என்று எண்ணற்ற போராளிகளையும், பொது மக்களையும் கருணாநிதியா கொல்லச் சொன்னார்?

நாம் ஒரு சிறுபான்மை இனம். பெரும் எதிரியான இலங்கை அரசுடன் போராடுகிறோம். நமது எதிரியான இலங்கை அரசிற்கு எதிரான எல்லாப் பிரிவினரையும் இணைத்து நாம் போராடி இருக்க வேண்டும். ஆனால் நாம் முஸ்லீம் மக்களை காட்டிக் கொடுப்பவர்கள் என்று சொல்லி கொலை செய்தோம். அப்பாவிச் சிங்கள மக்களை அனுராதபுரத்தில் வைத்துக் கொலை செய்தோம். கருணாநிதியா இக்கொலைகளைச் செய்து எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கையை கூட்டச் சொன்னார்? இல்லை, சொன்னார்? . ரோ (RAW) சொல்லியதன் படியே இக்கொலைகளில் பல நடந்தன.

தமிழ் மக்களை சேர்ந்து கொன்ற இந்திய அரசுக் கொலைகார்களை நம்பச் சொல்லி தமிழ்க் கூட்டமைப்பு சொல்கிறது. “ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு” என்பது அமெரிக்காவை நம்பச் சொல்கிறது. “நாடு கடந்த தமிழீழம்”, “உலகத் தமிழர் பேரவை” போன்றவர்கள் ஐக்கிய நாடுகள் சபை நீதி பெற்றுத் தரும் என்கிறார்கள். உலக மகா கொடியவர்களை நம்பச் சொல்லும் துரோகத்தை கருணாநிதியா செய்தார்?

முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு பின்பும் கூட ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்னும் தமிழ் மக்களின் எதிரிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு வைத்து கூடிக் குலாவுகிறது. இப்படி நம் தலையில் நாமே மண் அள்ளிக் கொட்டிக் கொண்டு ஒரு சராசரி அரசியல்வாதியான கருணாநிதியின் மீது பழி சொல்வது இனி வரும் போராட்டங்களையும் திசை திருப்பி அழிவுப் பாதைக்கே இட்டுச் சொல்வதாக முடியும். சிலர் தெரியாமல் இப்படியான பிரச்சாரங்களை செய்கிறார்கள். ஆனால் இப்பிரச்சாரங்களின் மூலகர்த்தாக்கள் தெரிந்தே இந்த அழிவு வேலைகளைச் செய்கிறார்கள். மக்களின் விரோதிகளை இனம் கண்டு கொள்வோம். சுய விமர்சனங்களின் துணை கொண்டு தவறுகளை களைந்து முன் செல்வோம்.

(விஜயகுமாரன்)