எங்கே என் தந்தை?…

இன்னும் மூன்று நாட்களில் எனது பிறந்தநாள்(24.02.1990)ஆறு வயது முதலாந்தரம் பெரியபாடசாலைக்கு சேர்ந்தாச்சு புதுச்சட்டை போட்டு ரொபி கொடுக்க வேண்டும் ,நேற்றைய தினம் 20.02.1990 என் தந்தை தங்கத்துரை காங்கேசந்துறை யாழ்ப்பாணம் மினிபஸ் சாரதி வேலையை முடித்துக்கொண்டு வீடு வந்து இரவு நித்திரைக்குச் சென்ற வேளை நல்லிரவு 12 மணிக்குப் பின்னர் ஒரு வெள்ளை வானில் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் கல்லாக்கட்டுவன் கிராமத்து நபரான உமாவின் கணவர் நாதன் என்பவரும் வீட்டுக்கதவினை தட்டிக்கொண்டிருந்தனர்.

யாரது?என அம்மாவும் என் தந்தையும் எழுந்து சென்று கதவினைத் திறந்தார்கள் நானும் கூடவே எழுந்து சென்றேன் உங்களை புலி உறுப்பினர்கள் விசாரிக்க வேண்டுமாம் அது தான் உங்களை அழைத்துப் போகவந்திருக்கிறார்கள் என்றான் நாதன்.

இப்போது மனைவி ,பிள்ளைகளை தனியாக விட்டு வர முடியாது காலையில் வருகிறேன் என்ற என் தந்தையின் பதிலை நிராகரித்து அன்றிரவே பலாத்காரமாக கடத்திச் செல்லப்பட்டார்.

இன்று 21.02.1990 காலை கந்தரோடையில் உள்ள புலிகளின் ஐயா அண்ணை Camp இற்கு என் அம்மா எங்களையும் கூட்டிக்கொண்டு அப்பாவை பார்க்க சென்றோம்.அங்கே சலீம் என்பவரே பொறுப்பாளனாக செயற்பட்டுக்கொண்டிருந்தான் என் தந்தை சிறைக்கம்பிகளூடாக எம்மை பார்த்த வண்ணம் இருந்தார் அம்மாவுடன் பேசினார் எதற்காக தன்னைக் கைது செய்தார்கள் என்பது தெரியவில்லை எங்கள் ஊரில் வசிக்கும் புலிகளின் ஆதரவாளர்களாகிய புவிநாயகம், ஐயக்கோண் சந்திரன் அவர்களுடன் பேசும்படி அம்மாவிடம் கூறினார்.

அன்று தான் எனக்கு என் தந்தை சிறைக்கம்பிகளூடாக கொடுத்த கடைசி முத்தம்.!இன்னும் மூன்று நாளில் என் பிறந்தநாளுக்கு அப்பா வந்திடுவார்”!வீடு வந்து சேர்ந்தோம்.

22.02.1990 அடுத்த நாளும் சென்றோம் சிறைக்கம்பிகளுக்குள் வேறு நபர்கள்
கிடைத்ததோ அப்பாவினது சாரதி அனுமதிப்பத்திரமும் 36ரூபாய் 50 சதம் பணமுமே. 35 வருடங்கள் கடந்துவிட்டன!

எங்கே என் தந்தை?

நாம் நான்கு பிள்ளைகள் எங்களது,பொருளாதாரம், கல்வி,பாதுகாப்பு, என எதிர்காலமே சிதறடிக்கப்பட்டது. இருந்தும் சாதாரண மனிதர்களாக அம்மாவின் தன்னம்பிக்கை எங்களை வளர்த்து ஆளாக்கியது.புலிகளால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை மன்னித்து மறந்து இறுதி யுத்தத்தில் 2009 காலப்பகுதியில் ஷெல்களுக்கும் குண்டுகளுக்கும் மத்தியில் முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் பகுதிகளில் ஆயிரமாயிரம் போராளிகளை அங்கங்களை இழந்து குற்றுயிராக வவுனியா முகாம்களுக்குள் தடுத்து வைத்திருந்த வேளை MSF HOLLAND எனும் சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து இவர்களுக்கு சேவையாற்றினேன்.

எங்கே என் தந்தை?!

யுத்தம் முடிவடைந்த பின்னர் காணாமலாக்கப்பட்டோருக்கு என கறுப்புச்சேலை அணிந்த ஒரு பகுதியினரும்,மீள்குடியேற்றங்களுக்காக காணிகளுக்கு ஒரு பகுதியினரும் கொடிகளைக் கையிலேந்திக்கொண்டு போடும் கோஷங்களோ எண்ணிலடங்காதவை..

புலிகளால் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நான் உட்பட ஏராளம் குடும்பங்கள் இன்றுவரை யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றார்கள் வெளிநாட்டுப்பணத்திற்கு கோஷமிடும் கறுப்புச்சேலை அம்மாக்கள்,சுகாஷ்,அனந்தி போன்றோருக்கு தெரியுமா புலிகளால் எத்தனை ஆயிரம் குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டது, எத்தனை பெண்கள் விதவையாக்கப்பட்டது, மனநோயாளிகளாக்கப்பட்டது,பிள்ளைகளின் எதிர்காலம் நசுக்கப்பட்டதென்று?

எங்கே என் தந்தை?…

போயா தினம் வந்து விட்டால் திருவிழா மாதிரி
தையிட்டியில் போய் நின்று உங்கள் காணி என சத்தமிடும் நீங்கள் 90 களில் அத்துமீறி அடாத்தாக கூலி வேலை செய்து கட்டியெழுப்பிய எங்களின் வீடுகளை ஒன்றுமறியா சாதாரன கூலி வேலைகளை செய்து கொண்டிருந்தவர்களை துரோகிப்பட்டம் சூட்டி கலைத்துவிட்டு புலிப்பரதேசிகள் தம்வசப்படுத்தி அரசியல் காரியாலயங்களாகவும், பராமரிப்பு நிலையங்களாகவும் பயன் படுத்திய போது யார் ஒருவர் கை உயர்த்திப் போராடினீர்கள் அப்படிப் போராடிருந்தால் ரயர்களை போட்டுக் கொழுத்தியிருப்பார்கள்.

எனது தந்தையின் வீட்டினையும் சுன்னாகத்தில் தம் கையகப்படுத்தி கடந்த 2009 வரை புலிகளே ஆட்சி புரிந்து வந்தனர் இப்போது தான் அவ்வீட்டினை நாம் பெற்றுக்கொண்டோம் வெறும் கற்கள் மட்டுமே மிஞ்சியிருந்தது.

எங்கே என் தந்தை?

இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது எனக்கு பிறந்தநாள் எனக்கு சர்வதேச நீதி வேண்டாம் என் தந்தை வரமாட்டாரா?நான் என் தந்தையை தொட்டுப்பார்க்க ஆசைப்படுகிறேன்,என் தந்தையின் நிறத்தினை நான் பார்க்க வேண்டும் என் தந்தையை நான் அப்பா என்று கூப்பிட வேண்டும் என் தந்தைக்கு நான் என் கடந்த கால வலி நிறைந்த கதைகளை மனதார பகிர்ந்து கொள்ள வேண்டும், அவரை நான் ஒருமுறை ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் ,நான் அவரைப் பராமரிக்க வேண்டும்?

பதிவு

(தங்கத்துரை தயானி)

Leave a Reply