(கடந்த வருடம் தாயகம் சென்ற போது எனக்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. (பலரின் வேண்டுகோளுக்கு இணங்கள் இதனை இங்கு பதிவு செய்கின்றேன் – சமரன்)
பசி வயிற்றைக் கிண்ட மன்னார் நகரில் ஏதாவது சிற்றுண்டி உண்டால் நல்லா இருக்கும் என்று எமது பயணத்தின் திரும்பலில் முடிவு செய்தோம். எவ்வளவு வெயில் வெக்கை என்றாலும் குளிர் பானத்தை விட சூடான தேனீர் அருந்துதல் இதமாக இருக்கும் என்பது நாம் எம்வாழ்நிலையில் இருந்து இயவாக்கம் அடைந்து எமது உடம்பின் டிஎன்ஏ இல் ‘புரொக்கிராம்’ செய்யப்பட்ட விடயமாக அமைந்துவிட்டது. எமது பிள்ளைகளில் பாதி பேரும் பெற்றோராகிய நாமும் தேநீரும் சிற்றுண்டியும் எடுக்க ஏனையவர்கள் குளிப்பானத்துடன் தமது விருப்பை நிறைவேற்றிக் கொண்டனர்.உலகின் முதல் தர தேயிலையை உற்பத்தி செய்யும் எமது மலையக மக்களின் வாழ்வுநிலை இந்தத் தேனீர் அருந்தலிலும் என் மனத்தில் ஓடிச்சென்றது. இதற்கு இன்னொரு காரணமாக எமக்கு பரிமாறிய மலையகத்தை சேர்ந்த ஊழியரின் வறிய தோற்றம் என்னை மலையகத்திற்கு இழுத்துச் சென்றது. இவருடன் சேர்ந்து இன்னும் ஒருவரும் பரிமாறும் சேவையில் பங்கு கொண்டார். இவர் முஸ்லுpம் சமூகத்தைச் சேர்ந்தவர். இருதட்டில் வைத்த பலவகைப் பலகாரங்களில் சிலவற்றை எடுத்து நாம் உண்டோம் இறுதியில் நாம் சாப்பிட்ட பலகாரத்தின் தொகையை கணக்கிடுவதில் தன்னைத் தானே முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பரிமாறுனர் குழப்பிக் கொண்டார். நூம் உட்கொண்ட எண்ணிக்கை இரு தட்டிலும் மிகுதியாக இருப்பதை அடிப்படையாக கொண்டு கூட்டுகையில் அவர் திரும்ப திரும்ப செய்தாலும் ஒவ்வொரு தடவையும் தவறான எண்ணிக்கையை சொன்னார்.
பொறுமையாக இருந்த நான் சற்று உள் மனத்தில் நகைச்சுவையுடன் வெளியில் அதனைக் காட்டிக் கொள்ளாமல் ‘நீங்கள் முன்பு ஹமீதியா கடையிலா வேலை செய்தீர்கள் என்றேன்…’ அவரும் பதிலுக்கு ஆம் என்றார் நான் மனதிற்குள் 1975 இற்கு சென்று.. ‘மொக்கன் கடை’ என அழைக்கப்படும் யாழின் முஸ்லீம் பகுதியில் அமைந்த ஹமீதியா கடையை நினைவிற்குள் கொண்டுவந்து என்ன தற்செயல் நிகழ்வு பதில் என்று சிரித்துக் கொண்டேன். கூடவே 1978 களில் மன்னார் (பழைய)பஸ் நிலையத்தில் அமைந்த வாப்பா கடையும் இதன் ரூசியான கொத்து ரொட்டியையும் நினைவு கூர்ந்தேன்.
தான் அந்தக் கடையில் 1970 களின் பிற்பகுதியில் வேலை செய்தாகவும் தற்போது அந்தக் கடைதான் புதுப் பொலிவுடன் புது பெயர்பலகையுடன் செயற்படுவதாக அவர் கூறினார். குறிப்பாக தமிழ் சைவர்கள் கிறஸ்தவர்கள் முஸ்லீம்கள் என்று கடையில் வேலை செய்பவர்கள் ஒற்றுமையுடன் வேலை செய்யும் நிகழ்வை இவ் சாப்பாட்டுக் கடையில் நான் கண்டு கொண்டேன்.
ஆனால் இதற்கு மாறாக (பாராளுமன்றக் கதிரை) அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக தமது மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தி மக்களை குஷ்தி போடத் தூண்டிவிடும் மூன்றாம் தர அரசியலை அண்மைக்காலங்களில் மன்னார் பிரதேசத்தில் அதிகம் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இதில் ஆயர்கள் ஒருபுறம் அரச சார்பு முஸ்லீம் அமைச்சர் ஒரு புறம் கேதீஸ்வரம் பரிபாலன சபை என்று மறுபுறம் என்று மக்களைப் கூறுபோட்டு வாக்கு வங்கிகளை நிரப்பும் அவலம் எம்மை மேலும் பலவீனமான நிலமைக்குள் கொண்டு செல்கின்றது என்பது கடல் வளம் மிக்க சற்று வறட்சியான ஆனால் பல மதத்தவரும் இணைந்து வாழவேண்டிய மன்னாரின் நிலமைகள்.
கூடவே இந்தியா(குறிப்பாக கேரளா) இல் இருந்து போதைப் பொருட்களை கடத்தும் கைங்கரியங்களில் ஈடுபடும் மக்கள் விரோத செயற்பாடுகளில் அரசியல் செல்வாக்கு ஆதிகம் வகிப்பதையும் இந்த போதைப பொருட்களின் விநியோகம் அப்பாவி மக்களையும் அதிகம் பாதிப்பதையும் அங்கு சமூக நலனினல் அக்கறையுள்ளவர்களின் ஆத்திரக் குரலாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மேலும் ஒரு சிலர் செய்யும் இந்த மக்கள் விரோத செயற்பாட்டை பொதுமையாக மன்னார் ஊடாக கடத்தப்பட்டது என்பது முழு மன்னார்; மக்களின் உணர்வுகளையும் பாதிபடையச் செய்வதாகவும் அவர்கள் வருந்திக் கொண்டனர். சமூக விழிப்புக் குழுக்களின் இணைந்து செயற்பாடுகளே இந்த போதைவஸ்து கடத்தல் செயற்பாட்டை நிறுத்த முடியும் என்ற என் கருத்தை ஒரு சிறிய அளவில் பதிவு செய்துவிட்டு நான் எனது உறவுகளுடன் இணைந்து வவுனியா பயணமானேன்.
வவுனியாவை இரவு 11 மணியளவில் அடைந்தேன். கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் வெக்கை நுளம்பு இரண்டின் தாக்கமும் 20 மடங்கு வரை குறைவாக இருப்பதை உணர்ந்தேன். இது எவ்வாறு சாத்தியமானது என்று காலநிலை ஆய்வாளராகவும் சுற்றுச் சூழல் ஆய்வாளராகவும் என்னை மாற்றிக் கொண்டு ஒரு தேடலுக்குள் புகுந்து நித்திரைக்குள் மூழ்கிவிட்டேன்.
பறவைகளின் இதமான கீதங்களும் கோவில்களின் மணி ஓசையும் பிரித் ஓதும் சத்தமும். மசூதியின் வணக்க நேரத்திற்குரிய பிரார்த்தனை அறிவிப்பும் ‘பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே..’ என்ற கீதங்களும் பொழுது விடிய முன்பே நேர மாற்றத்தின் தாக்கத்தாலும் என்னை பொழுது புலர்வதற்கு முன்பே பாயைச் சுருட்டவைத்துவிட்டது.
(இன்னும் வரும்….)