யாழ்ப்பாணத்திற்கான பயணத்தின் முதல் நாள் வவுனியாவில் இருந்து ஆரம்பித்து வழமையான ஏ9 பாதையினூடு நடைபெற்றது. வவுனியா நகரை சுற்றி வளைத்து சிங்கள மயமாக்கும் நிகழ்வுகள் ஏற்கனவே வவுனியாவின் தெற்குப்பகுதியில் மிகத் தீவிரமாக 50 ஆண்டுகளாக நடைபெற்றாலும் தற்போது இது பெரியமடு போன்ற வடக்கு பிரதேசங்களில் மாகாணத்தின் நில அளவைத் திணைக்களத்தின் பெரும்பான்மை இன பொறுப்பாளரின கனகச்சிதமான செயற்பாடுகள் மூலம் நடைமுறைப்படுதப்படுவதாக தமிழ் நில அளவையாளர்கள் மூலும் அறியக் கிடந்தது.
வடக்கு மாகாண சபையின் நிர்வாகத் தலமையகத்தை மாங்குளத்தில் அமைத்து செயற்படுத்தும் செயற்பாட்டின் மூலம் டொலர் கென் பாம், மணலாறு, மடுகந்தை சுற்றாடல் பகுதியை முன்னோக்கி நகரவிடாமல் தடுத்து நிறுத்தும் செயற்பாட்டடை செய்திருக்க முடியும் என்ற துறைசார நிபுணர்களின் கருத்துக்கள் எனக்கு ஒவ்வுடமையாக இருந்தன. நாம் குண்டுச்சட்டிக்குள் குதிரையை ஓட்டும் கைதடி விவகாரத்தை தவிர்த்து மாங்குளத்திற்கு நகர்ந்திருக்க வேண்டும் என்ற பார்வைக்கு வலு சேர்பது போன்று வலிந்து செழிப்பாக்கப்பட்ட கிளிநொச்சி நகரைத் தவிர ஏ9 பாதையில் உள்ள சகல முக்கிய சந்திப்புக்களும் சோபை இழந்து காணப்பட்டன. குறிப்பாக வன்னியின் கிழக் மேற்கையும் இணைக்கும் மாங்குளம் இதற்கு சான்று பகிர்க்க பரந்தன் இதற்கு வலு சேர்த்தது. உப்பளம் பற்றக் கேட்கவே தேவையில்லை.
இயக்கச்சி சந்தி யாழின் செழிப்பையும் என்னதான் இருந்தாலும் யாழில் உள்ள எழுச்சியை வன்னி நிலப்பரப்பில் இருந்து பிரித்துக்காட்டியது என்னமோ உண்மைதான். புலிகள் இராணுவம் போட்டி போட்டுக்கொண்டு தென்னம் பிள்ளைகளை தமது காவல் அரணுக்காக வெட்டிச் சாய்தாலும் தென்மராட்சி யுத்தத்தின் பின்னரான இந்த எட்டு வருடத்தில் கண்டு நடுகையில்; தன்னை மீண்டும் செழுமையாக முன்னேறியுள்ளதை மறுப்பதற்கில்லை. மிருசுவில் போன்ற பகுதியின் உள் கிராமங்கள் இதனைப் பறைசாற்றி நின்றன.
தொண்டமானாறில் அமைந்த அக்கரைக் என்ற கடற்கரை கசோரனா கடற்கரைக்கு இணையாக உள்ளதையும், பாக்கு நீரிணையை முதல் நீந்தி கடந்த துரைச்சாமியின் சிலையும் தொண்டமான் ஆற்றை நன்றீராகக் டட்லி சேனநாயக்காவினால் உருவாக்கப்பட்ட பாக்கு நீரிணை தொண்டமானாறு தடைப் பாலமும் காட்சியளித்தன. 70 வருடங்கள் கடந்தும் ஏதும் நிறைவேற்றப்படாமல் இருத்தல் இரணைமடு நீரை யாழிற்கு கொண்டு வருதல் என்ற பிரதேசங்களை கூறுபோடும் அரசியல் சித்து விளையாட்டிற்குள் யாழ் இன் நன்நீர் தேவையை தள்ளி இருக்கின்றது. தொண்டமானாற்றின் பாலத்தை கடக்கும் போது இதுவே என்மனைநிலையில் ஓடி மறைந்தது. இவ் ஆற்றை நன்நீர் ஆக்கும் திட்டமே யாழ்ப்பாணத்திற்கான நன்னீர் தேவையை நீண்டகால அடிப்படையில் தீர்த்து வைக்கப்படக் கூடிய திட்டம் என்பது எனது வாதமாக இருப்பதை என்னை சந்தித்தவர்களிடம் துறைசார் நிபுணர் போல் எடுத்துரைத்தேன்.
வட்வெட்டித்துறையை அண்டிய பகுதிகள் கடலுக்கு மண்நிரப்பி வீடுகளை அமைத்து கடற்தொழிலில் சிறந்து விளங்கும் செயற்பாடுகளை கரையில் கட்டப்பட்டிருந்த மீன்படிப் படகுகளும் கரையில் காயும் கருவாடும் வலைகளும் பறைசாற்றி நின்றன. போர் நடந்து அடையாளங்கள் மெல்ல மெல்ல மறைவதை இங்கு அவதானிக்க முடிந்தது. வல்வெட்டி அம்மன் வல்வெட்டித்துறை சிவன் கோவில் வல்லிபுரத்தான் என்பன வெளிநாட்டுச் ‘செல்வந்தர்களால்’ ‘புதிய’ சிவப்பு வெள்ளை வண்ணங்களுடன் காட்சியளித்தன.
பருத்துறையின் ஓடக்கரை அப்பமும் இன்னமும் அதே பிரபல்யத்துடன் விளங்கியது ஆனால் பருத்துறை சந்தி(தை) வளர்ச்சியை நெல்லியடியின் சந்தி(தை) பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளதை நான் கண்கூடு கண்டேன். அல்வாய் பகுதி வெண்காயம் காய்கறிகள் விவசாயத்தின் மகிமையை பறைசாற்றி நின்றன.
நவக்கிரி கிணற்றின் அதிசயம் ஒருவருக்கு 10 ரூபாய கட்டணம் என்று விற்கப்படும் அதேவேளை ஆழமறிய முடியாத நவக்கிரிக் கிணறு சுமாராக 50 மீற்றர் வரை மட்டும் ஆழம் உள்ளது என்று இலங்கை கடற்படையின் ரோபோ இயந்திரத்தால் அறியப்பட்டிருப்பது அறிவித்தல் பலகையில் இடப்பட்டிருப்பதோடு இந்து மதம் என்ற வாசகத்துடன் பௌத்த மதத்தின் வாசகமும் நசூக்காக இணைக்கப்பட்டிருந்தது. எங்கும் எதிலும் பௌத்தம் இருந்ததை வரலாற்றின் வலிந்து இணைக்கும் தொல் பொருள் ஆராச்சியாளர்களின் வேலைகள் இங்கும் காணமுடிந்தது.
செம்மண் பிரதேசத்தின் விவசாயச் செழிப்புக்கள் வலிகாமம் கிழக்கின் செம்மண் பிரதேசங்கள் எங்கும் போட்டி போட்டுக் கொண்டு வெளிப்பட்டு நின்றாலும் ஈவினை என்ற கிராமம் இதில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதை என் மனதில் விதைத்துவிட்டு சென்றுள்ளது. வெண்காயம் மிளகாய் வாழை மரவள்ளி உருளைக் கிழங்கு என்று எந்த பயிரையும் விளைத்துக் கொடுப்பேன் என்று இந்த மண்வளம் பறைசாற்றியபடியே நிமிர்ந்து நின்றது எனக்கு நம்பிக்கை தரும் வளர்ச்சி இது படுகின்றது. (பல்கலைக் கழக)பட்டம் பெற்று விட்டு மண்வெட்டி பிடிக்க தயார் என்ற மனநிலை மாற்றம் ஏற்பட்டால் வேலை இல்லை என்ற போராட்டத்திற்கு இடம் இல்லை என்பது என் கருத்து. இதற்கு எமது சமூகமும் சிவப்பு மண்ணுக்குள் கால் வைப்பவனை மண்கிண்டிகள் என்று இரண்டாம் பட்சமாக பார்காமல் மனிதனின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றை உருவாக்குபவர் என்ற சமூக அங்கீகாரமும் உருவாக்கப்பட வேண்டும் என்பதுவும் என்னால் மக்களுடன் அளவளவிய போது அறியக் கிடந்தது.
(இன்னும் வரும்…..)