நான் இலங்கையில் பிறந்தவனாக இருந்தாலும் இதுவரை வாழ்ந்த எனது வாழ்வுக்காலத்தில் கொழும்பு ஐ கடந்து இலங்கையின் தென்பகுதியின் எந்த பகுதிக்கும் சென்றவன் அல்ல. இதற்கான விருப்பு என்னிடம் இருந்தாலும் இதற்கான வாய்ப்புக்கள் ஏற்படவில்லை. இந்த பிரதேச மக்கள் பற்றி தகவல்களை வாசிப்புக்கள் ஊடு மட்டும் அறிந்திருந்தேன். இலங்கையின் ஏனைய சிறுபான்மை மக்களுடன் இவர்களுக்கான தொடர்புகள் குறைவாக இருந்ததினால் பேரினவாதத்தின் செல்வாக்கு இவர்களிடத்து அதிகம் காணப்படுவதாக ஒரு பொதுப் பார்வை இருக்கின்றது. இதில் உண்மைகளும் உண்டு. அரசியல்வாதிகள் இதனை தமது பாராளுமன்ற வெற்றிகளுக்காக பாவித்துக் கொண்டனர். ஆனால் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமும் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்து அரசியல் செயற்பாடுகளும் ஜேவிபி இனரின் செயற்பாடுகளும் இந்தப்பகுதி மக்களிடம் இருந்து பேரினவாத சிந்தனைகளை குறைத்திருக்கின்றது என்ற எனது பார்வைக்கு வலுச் சேர்பது போல் எனது இலங்கையின் தென்பகுதிக்கான பயண அனுபவம் எனக்கு தந்திருக்கின்றது.
கொழும்பில் ஆரம்பித்து(A2 வீதியால்) கடற்கரையோரமாக தெற்க நோக்கி ஆரம்பித்த பயணம் களுத்துறையில் ஆரம்பித்து பேருவளை பலப்பட்டியஇ ஹிக்கடுவஇ காலிஇ மாத்தறைஇ தங்காலைஇ பத்திரமுல்லைஇ அம்பாந்தோட்டை ஊடாக திசமஹரகமா ஐ அடைந்துள்ளது. சிங்கள் மக்கள் மட்டும் வாழும் பிரதேசம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கும் பயண அனுபவத்தில் பௌத மதச் சின்னங்களை வலிந்து முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகளை இங்கு அவதானிக்க முடியவில்லை. மாறக சிங்களத் தலைவர்களின் சிலைகள் அங்காங்கே நிறுவப்பட்டிருந்தன.
சகல அரச திணைக்களங்கள் வீதிகள் பேருந்து எல்லாவற்றிலும் தமிழுக்கு எழுத்துப் பிழைகள் இன்றி உரிய இடம் அளிக்கப்பட்டிருந்தது. சிறிய வீதிகளும் தமிழில் எழுதப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. சிறிய தனியார் வர்த்தக நிலையங்களைத் தவிர பெரிய வர்த்தக நிலையங்களில் பெயர் பலகையில் தமிழ் இடம் பெற்றிருந்தது. உணவு விடுதிகளில் தமிழ் பேசும் ஊழியர்கள் வேலை செய்தனர். ஒரு காலத்தில் ‘தோசை வடை அப்பிட்ட எப்பா’ என்று கோஷம் போட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறிந்த நிகழ்வை மீறி இன்று வடை இல்லாத சிங்கள சாப்பாட்டுக் கடை இல்லை என்ற நிலமை காணப்படுகின்றது தோசையை விட அப்பம் அதிகம் ஆதிக்கம் வகிக்கின்றது.
யுத்தம் வடக்கு கிழக்கை சின்னாபடுத்த தெற்கில் வடக்கில் உள்ள அதே கடற்கரைகள் சீராக அமைக்கப்பட்ட வீதிப் போக்குவரத்துடன் தொடர்ச்சியான பிரதேசங்களாக சுற்றுலாப் பயணிகளை தன்னக்தே கொண்டிருப்பதற்குரிய சக ஏற்பாடுகளையும் கொண்டிருப்பதும் வீதியில் மிக்க கணிசமான அளவு வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளை காணக் கூடியதாக இருந்தது. எங்கும் தொடர்சியாக பசுமையாக காட்சியளித்தன. ஹம்மாந்தோட்டை இலங்கையின் வரண்ட பிரதேசம் என்பதையும் நம்ப முடியவில்லை சோறு கறியுடன் மேற்கத்தைய உணவுகளும் பரிமாறும் அளவிற்கு மிகச் சிறிய கடைகள் தம்மை தயார் நிலையில் வைத்திருந்தன. மிதிவண்டியில் சுற்றுலா பயணிக்கள் பயணிக்க வாடகைக்கு விடும் ஏற்பாடுகள் எங்கும் காணப்பட்டன உள்ளுர் மக்கள் இரு சக்கர வேக வாகனத்தில் பயணிக்க வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மிதிவண்டியில் சாவகசமாக பயணிப்பது ஒரு முரண் நகையை எனக்கு எடுத்துக்காட்டியது.
முதல் நாள் இரவு பணத்தை சேமிக்க ஒருவர் நிலத்தில் படுக்க நான் வேறு ஒரு குடும்ப நண்பருடன் இருவர் படுக்கக்கூடிய படுக்கையில் நித்திரை செய்ய வேண்டிய சூழல் ஆரம்பத்தில் இருவரும் சேர்ந்து போர்வையை இழுத்து போர்த்து ஆரம்பித்த தூக்கம் குளிரூட்டியின் அதிக குளிரால் நித்திரையில் தனித்தனியாக எங்கள் பங்கம் போர்வை இழுத்து உரிமை கொண்டாடி போர்த்துக் கொண்டு இந்திய பாகிஸ்தான் பகையளவிற்கு சென்றுவிட்டது. இந்த அனுபவம் இன்று சரியான தயார்படுத்தலின் அடிப்படையில் தனித்தனி படுக்கைகளை உடைய தங்கும் இடத்தை தேடிப்படித்தோம்.
மடு(மது கங்கை) (Balapitya) என்ற பகுதியில் பல சிறிய தீவுகளை உடைய (பெரும்பாலும் இத்தீவுகளில் யாரும் குடியிருக்கவில்லை) பகுதிகளை பார்வையிடும் படகு பயணத்தில் ஈடுபட்டோம். ஒரு வகையில் கேரளத்து ஆலப்புழா படகு பயணம் போன்றது ஆனால் அதனுடன் ஒப்பிடுகையில் இது 2 மணி நேரத்தில் சுற்று சுற்றி வரும் பயணம் மட்டுமே. இந்து சமுத்திரத்துடன் இணைக்கட்பட்டிருக்கும் இந்த கடல் நீரேரியின் பயணம் செய்த போது எனக்கு ஒரு வியப்பான அனுபவம் ஏற்பட்டது. எமது படகோட்டி ஒரு சிறிய தீவிற்கு (மண் புட்டி எனலாம் 50 சதுர அடி அளவு இருக்கும்) அருகில் படகை மெதுவாகச் செலுத்தி இதுதான் இந்த தீவுகளில் மிகச்சிறியது என்றார்.
ஒரு ஆள் புகமுடியாத சிறிய கட்டம்? இருந்தது. சற்ற உள்ளே பார்த்த போது…. தென்பகுதி பயணம் எங்கும் என்னால் காணமுடியாத ஒரு விடயத்தை இங்கு கண்டேன் இரு இந்து தெய்வங்களின் சிலை மட்டும் அழகு படுத்தி உள்ளே வைக்கப்பட்டிருந்தது. வேறு எந்த பௌத அடையாளங்களும் இதில் இல்லை. எனக்கு புரியாத புதிராகவே இது இருக்கின்றது. சிறுபான்மை மக்களும் கலந்து வாழும் பிரதேசங்களில் பௌத்த அடையாளங்களை வலிந்து முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகள் முழுவதுமாக பெருபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் காணப்படது அதே வேளை ஏனை மதங்களுக்கான அடையாளங்களையும் காண முடியவில்லை. மூவினங்களும் கலந்து வாழும் பிரதேசங்களில் பல மதங்களுக்குரிய அடையாளமான தொழுகை(கோவில்கள்) இடங்களை காணக்ககூடியதாக இருக்கும் இலங்கையில் இந்த சிறு தீவு அனுபவம் எனக்குள் பல கேள்விகளை எழுப்பி நிற்கின்றது.
(இன்னும் வரும்……)