யாழ்ப்பாணப் பயணத்திற்கான தயாரிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனது குடும்பத்துடன் எமது நட்புக் குடும்பம் ஒன்றின் பிரதான ‘புரோக்கிராமிற்குள்’ இணைக்கப்பட்டதே எனது பயண அனுபவங்கள். எனக்கான தனியான பயண விடயங்கள் இதில் உள்ளடக்கப்படக் கூடிய வாய்புகள் எனக்கு அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் மற்றயவர்களின் பயணச் செயற்பாட்டிற்குள் என்னை இணைத்துக் கொண்டு பல அனுபவங்களைப் பெற்றேன். அவற்றை பதிவு செய்ய விளைகின்றேன்.
பயணத்தின் பிரதான இடமாக நயினா தீவு இடம்பெற்றது. பண்ணைப் பாலத்தை தாண்டியதும் இலங்கையின் ஏனைய பகுதிகளை ஆனையிறவுப் பாலத்தினூடு இணைத்ததினால் யாழ் குடாநாடு தீவாக இல்லாமல் போன வரலாற்றை பலர் மறந்துவிட்டு யாழ்ப்பாணத்துடன் இணைக்கப்பட்டு அல்லது இணைக்கப்படாமல் இருக்கும் தீவகப் பகுதி மக்களை ‘தீவார்’ என்று எள்ளி நகையாடும் கதை போக்குவரத்துக்கள் என மனதில் ஒரு கணம் பண்ணைப் பாலத்தில் எமது வாகனம் தடம் பதித்ததும் ஓடிமறைந்தன.
யாழ் இந்துவில் விடுதியில் தங்கியிருந்த படித்த காலங்களில் விடுதி மாணவர்களில் கணிசமானோர் தீவகத்தை சேர்தவர்களாக இருந்தார்கள் கல்வியில் பலர் சிறந்து விளங்கினர். ஆனாலும் ‘தீவார்’ என்று அடைமொழியால் எள்ளி நகையாட்டம்…. சம்மந்தம் என்று கலக்கும் போது ஒரு குறைத்துப் பார்க்கும் யாழ் பெருநிலப்பரப்பு மக்களால் கையாளப்பட்ட சம்பவங்கள் கண்டிக்கப்படவேண்டிய விடயங்கள். இந்த தீவகத்து மக்களின திறமையான வியாபார நுணுக்கங்கள் பொருளாதார ரீதியில் இம்மக்களை உயர்த்தி வைத்திருந்தது. மண்வளம், நீர்வளம் சிறப்பாக இல்லாததுடன் பெரு நிலப்பரப்புடனான பிரயாணத் தொடர்புகள் குறைவாக இருந்ததும் இப்பகுதி மக்கள் தென்னிலங்கை வரை தம்மை இடம்பெயர்த்து தொழில் முயற்சிகளில் ஈடுபட்டிந்தார்கள் இந்தப் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தின் அடையாளங்கள் பண்ணைப்பாலத்தை கடந்த பிரதேசங்களில் வீடுகளாக கோவில்களாக போருக்கு முந்திய காலங்களில் காட்சியளித்திருந்தன.
போர் முடிவுற்று 8 வருடங்கள் ஆகிய நிலையில் வீடுகளைத் திருத்தியமைத்து மீள் குடியேறி அளவுகளில் தீவகப்பகுதி இன்னமும் பெரு நிலப்பரப்புடன ஒப்பிடுகையில் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் பண்ணைப் பாலத்திலிருந்து வங்களாவடிச் சந்தியூடாக ஊர்காவற்துறைவரைக்கும் கிலோ மீற்றர் ஒன்றிற்கு பிரதான வீதியில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் முழுமையாக புனருத்தாரணம் செய்யப்பட்ட கோவில்கள் காட்சியளித்தன. கூடவே ஏ9 பாதைக்கு எந்த வகையிலும் சளைக்காமல் காபர் வீதியும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குடிமனை அற்ற வெளியான வீதியில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இலங்கை இராணுவ சிப்பாய்கள் ஆயுதம் இன்றி தனித்தனியாக ஓடுதல் பயிற்சியில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.
ஆனையிறவுப் பாலம் அமைந்ததினால் யாழ்ப்பாணம் தீவு என்ற அடைமொழியில் இருந்து வெளியேறியது. பண்ணைப் பாலம் அமைந்ததினால் வேலணை, ஊர்வாகத்துறை, சுருவில் ஈடாக அல்லைப்பிட்டி போன்ற இடங்கள் தீவு என்ற அடைமொழியில் இருந்து விடுபட்டது. இறுதியாக புங்குடுதீவிற்கு அமைத்த பாலம் தீவு என்ற அடைமொழியில் இருந்து (புங்குடுதீவு) புங்கைநகர் விடுதலை பெற்றது. இந்த விடுதலையை மிக இலகுவில் பெறக் கூடிய நயினாதீவு இதுவரை பெற்றுக் கொள்ளாதது பெரும் ஆச்சரியத்தை எனக்கு கொடுத்தது. இத்தனைக்கும் இலங்கையின் பௌத்த சிங்களவர்களின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாகவும் விளங்கியும் இந்நிலை தொடர்வதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்குறிகள் எனக்குள் பல காலமாக இருந்து கொண்டே இருக்கின்றது.
தொழில் நுட்ப வளர்ச்சிகள் அதிகமாக உள்ள உலக ஒழுங்கில் யாழ்ப்பாணத்துடனான தீவுகளின் தரை இணைப்பு என்பது மிகவும் இலகுவான ஒன்றாகும் அதுவும் யுத்தத்தின் பின்னரான சீனாவுடனான இலங்கை அரசின் உறவு உலகின் அதி நீண்ட பாலங்களை தண்ணீரின் மேல் நிறுவிய சீனாவிற்கு இலங்கை அரசுக்கு நிறுவிக் கொடுப்பதில் சிரமங்கள் ஏதும் இருக்காது. தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியில் இலங்கை அரசிற்கு இருக்கும் அக்கறையீனத்தின் வெளிப்பாடு இது என்று என் ஆய்வுகளின் முடிவுகளாகவே இதனைப்பார்க்க முயல்கின்றேன்.
இவ்வாறான பல்வேறு சிந்தனை ஓட்டங்களுடன் குறிகட்டுவான் பகுதியை அடைந்த நான் படகுகளுக்கு காத்திராமல் உடன் பயணத்தை மேற்கொள்ளும் நிலமைகள் ஏற்பட்டிருப்பதை ஒருவகை வளர்ச்சியாக பார்க்க வைத்திருப்பில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதானே.
இக்கரையில் இருந்து கொண்டே அக்கரையில் உள்ள இரு தெய்வங்களையும் வணங்கும் அளவிற்கு குறிக்கட்டுவானும் நயினாதீவும் அதன் கடற்கரையில் அம்மனும் புத்தனும் வீற்றிருக்கின்றனர். ஒரே பாதையை ஒரே இறங்கு துறையை பாவித்து இரு மத நம்பிக்கையாளர்களும் வணங்கிநிற்கும் வாய்புக்கள் இருந்தும் அப்படி இல்லாமல் இருபகுதியினரையும் பிரித்து வைத்திருப்பதை இங்கு அவதானிக்க முடியும். இதிலும் பெரும்பான்மைக்கு அதிக சலுகையும் சிறுபான்மைக்கு ஏற்கனவே இருந்த அந்த பழைய பாலம் ஏன்ற ஏதும் வழங்கா நிலையையும் அவதானிக்க முடிந்தது. இந்நிலையில் எப்படி இனங்கள் மதங்களுக்கிடையில் உறவுப்பாலம் ஏற்படும் இந்த உறவுப்பாலத்தை அரசுகள் விரும்பவில்லை என்பதன் குறியீடாக இதனை என்னால் உணர முடிந்தது
(இன்னும் வரும்…)