எனது ‘எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த……’ தொடரின் இரண்டாவது பாகம் தேனீரை அடிப்படையாக கொண்டு எமது மலையக மக்களைப் பற்றி ஒரு விவாத அரங்கை திறந்து வைக்கும் என எதிர்பார்த்தேன் அப்படி ஒன்றும் பெரிதாக நடைபெறவில்லை சற்று ஏமாற்றம்தான். எனது எழுத்து இந்த முனையைத் திறக்கும் அளவிற்கு கூரியதாக இருக்கவில்லையோ? அல்லது எமது மலையக மக்கள் பற்றிய கரிசனை எம் மத்தியில் அவ்வளவாக இல்லையோ? என்று என்னை சிந்திக்க வைக்கின்றது.
ஆனாலும் இது போன்ற முக்கிய சமூகப் பிரச்சனையை திறப்பதற்காக முயற்சிகளை நான் தொடர்ந்தும் ஈடுபடலாம் என்றுள்ளேன். கூடவே மர்மத் தொடர் போன்று முடித்திருக்கின்றேன் என்று பலரும் என்னிடம் கேட்டிருந்தனர் அவ்வாறான எண்ணம் இல்லை. தற்செயலாக அவ்வாறு முடிக்க வேண்டியதாயிற்று வேறு ஒன்றும் இல்லை. இனி தொடருக்கு வருவோம்….
என்னை வரவேற்க எனது அக்காவும்; அவருக்கு உதவியாக வாகன ஓட்டுனரும், நிலம் அளக்கும் திணைக்கழகத்தில் வேலை செய்யும் அளவையாளர் ஒருவரும் வந்திருந்தனர். இரு ஆண்களும் எனக்கு எப்போதும் கண்டோ, காணமலோ அறிமுகமானவர்கள் அல்ல. அக்கா என்று நான் குறிப்பிட்டது எனக்கு உண்மையில் மைத்துனி உறவில் உள்ளவர். எனது வாழ்க்கைத் துணைவியாரின் கூடப் பிறந்த சகோதரி. இவர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர். இன்றுவரை எங்களை தனது குழந்தைகள் போல் பராமரிக்கும் எண்ணம் கொண்டவர்.
நாம் காதலிக்கும் காலத்தில் ‘கண்ணன்’ ஆகவும்; கல்யாணத்தின் பின்பு ‘கணவன்’ ஆவும் பிள்ளைகள் பிறந்த பின்பு பிள்ளைகள் அழைக்கும் மொழியில் ‘அப்பா’ ஆகவும் மாறி மாறி உறவுக் குறியீடுகளை நாம் எமது கலாச்சாரத்தில் கொண்டிருக்கின்றோம். இதே வழித் தோன்றலில் எனது மைத்துனி எனது வாழ்கைத் துணையின் அக்கா எனக்கும் அக்காவாகிவிட்டார்.
இது எம்மில் பலருக்கும் உள்ள கலாச்சார உறவு முறைகள். இதனால்தான் நாங்கள் இன்றும் இன்னமும் மேற்கத்திய நாட்டவர் போலல்லாது குடும்பமாக வாழ்கின்றோம். உறவுகளைப் பெயர் குறிப்பிட்டு அழைப்பதைவிட உறவுகளை உறவு முறை குறித்து விழித்து அழைக்கும் அழகான பிணைப்புக்களை கொண்டவர்களாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றோம்.
தற்போது எல்லாம் புலம் பெயர் தேசத்திலிருந்து தாயகம் ‘விசிட்’ செய்யும் நாங்கள் யாரும் ‘விஐபி’ அல்ல. முன்பு போல் தற்போது கவனிக்கப்படுவதில்லை. இந்த வரவேற்பை நான் 10 வருடங்களுக்கு முன்பே அவதானித்து இருந்தாலும் இம்முறை அதிகம் உணர்ந்தேன். இதனை நான் எதிர்பார்ப்பது இல்லை என்றாலும் யதார்த்தங்களை அவதானிக்கு ஒருவராக இதனைக் குறிப்பிடுகின்றேன். எனது பெட்டிகளை ஏற்றுவதற்கு இரு ஆண்களும் என்னை தவிர்த்து முயன்ற போதும் நானும் அவர்களுடன் இணைந்து பெட்டிகளை ஏற்றினேன். வழமையை சுகம் விவரிப்புக்களுடன் எமது இரவுப் பயணம் ஆரம்பமானது.
முன்பெல்லாம் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வடபகுதியை நோக்கிய பயணம் இலங்கையின் மேற்குக் கரையோரப் பாதை நீர்கொழும்பு புத்தளம் ஊடாக அனுராதபுரத்தை ஊடறுத்து மட்டும் நடைபெறும். தற்போது இலங்கையில் மத்திய மேற்குப்பகுதியான குருநாகலை ஊடறுத்தும் நடைபெறுகின்றன. இரு பாதைகளும் தரமாக உருவாக்கப்பட்டிருப்பதற்கு அப்பால் கரையோரப் பாதை கடும் சிங்களப் பகுதியைத் தவிர்த்து தமிழராக இருந்து சிங்களவராக மாறிய நீர்கொழும்பு சிலாபம் பகுதியூடாகவும் முஸ்லீம்கள் செறிந்து வாழும் புத்தளம் பகுதினூடாகப் பயணிப்பது பாதுகாப்பானது என்ற பய உணர்வு சம்மந்தப்பட்டதாக இருந்ததுவும் இங்கு கவனிக்கத்தக்கது.
இவ்விடத்தில் நாம் தள்ளிவைக்கும் ‘தொப்பி புரட்டி’(எனக்கு இச் சொற் பதத்தில் எவ்வகையிலும் உடன்பாடு எப்போதும் இருந்தது கிடையாது) என்ற உறவுகளுக்கு அப்பால் ஒரு வகையை சகோரத்துவம் தமிழருக்கும் முஸ்லீம் மக்களுக்கும் பல ஆண்டு காலமாக நிலவி வருவதும் ஒரு காரணம் ஆகும்.
ஆனால் நம் நாட்டில் ஏற்பட்ட எமது விடுதலைப் போராட்டம் விட்டுச் சென்ற அனுபவங்கள், சிங்கள மக்கள் மத்தியிலும் ஏற்பட்ட மன மாற்றம் குருநாகல் பகுதி ‘கடும்’ சிங்கள உணர்வாளர்கள் என்ற விடயத்தில் ஒரு பயம் தெளிந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பது தமிழ் மக்களாலும் உணரப்பட்டதே கடும் சிங்களவர் வாழும் குருநாகல் பயணத்தையும் விரும்பி ஏற்கும் மனநிலையை எற்படுத்தியிருக்கின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் மேற்குக் கரையோரப்பாதையில் பயணிக்கும் அதிவேக பார ஊர்த்திகளினால் எற்படும் விபத்துக்கள் எமக்கு ஏற்படுத்தி உறவுகளின் இழப்பு குருநாகல் பாதை போக்குவரத்திற்கு பாதுகாப்பானது என்ற உணர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
குருநாகல் இன்று நாட்டின் சகல பகுதிக்குமான செவ் இளநீரை உற்பத்தி செய்யும் வழமான இடமாக மாறியிருக்கின்றது இங்கு கவனிக்கத்தக்கது. குருநாகலை விட சிறந்த சுவையான செவ் இளநீரை உற்பத்தி செய்யும் தட்ப வெப்ப நிலை எமது பிரதேசங்களில் இருந்தாலும் போரின் காரணமாகவும், மனநிலை காரணமாகவும் நாம் தற்போது அவ்வளவு இளநீரை உற்பத்தி செய்வதில்லை. வெறும் பணப் பயிர் மனநிலையில் நாம் வாழப் பழகியதன் வெளிப்பாடுகள் இவை. கூடவே மத்திய அரசின் கவனிப்பில் உள்ள பாகுபாடுகளும் இன்னொரு காரணியாகவும் இருக்கின்றது.
டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சின் செ(சொ)ல்வாக்கில் சீவரத்தினம் பசுபதி என்பவர் பனம்பொருள் அபிவிருத்தி சபையின் தலைவராக செயற்பட்ட காலத்தில் எமது பிரதேசங்கள் எங்கும் தென்னை வளர்ப்பு ஊக்குவிப்புகள் தாரளமாக இருந்தும் ‘உவன் டக்ளஸ் இடம் தென்னம் பிள்ளை வாங்குவதா?’ என்ற மனநிலையில் பலர் இதனைப் பயன்படுத்தாமல் இருந்ததும் கவனிக்கத்தக்கது.
இதனை இங்கு குறிப்பிடும் போது எனக்கு இன்னொரு விடயமும் ஞாபகத்திற்கு வருகின்றகு நான் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த காலத்தில் (5 வது தொகுதி மாணவன் நான்) யாழ் பல்கலைக் கழகத்திற்கு என ஒரு ஜீப் வாகனம் மட்டுமே வாகனச் சொத்தாக இருந்து. இதில் ஓட்டுனருடன் சேர்த்து எட்டு பேர் மட்டும் பயணம் செய்யலாம். இந்த காலகட்டதிலேயே முன்னாள் வடக்கு கிழக்கு முதல் அமைச்சர் அ. வரதராஜப் பெருமாளும் யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவராக கல்விகற்றார். இவர் எனது நண்பரும் கூட. மாணவர்களின் தேவைக்கு அன்றைய தினத்தில் 75 ரூபாய் செலுத்தி இந்த வாகனத்தை பதிவு செய்து வெறும் 7 மாணவர்களை மட்டுமே பயணிக்கும் நிலையில் சமூகம் சார்ந்த பொது வேலைகளில் ஈடுபட பயணிப்பது மிகுந்த சிரமமாக இருந்த அனுபவங்கள் எமக்கு நிறையவே உண்டு. இதனை உணர்ந்ததினாலே (இதனை வரதராஜப்பெருமாள் ஒரு தடவை என்னிடம் நேரில் கூறியும் இருந்தார்) அமைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு முதன் முதலில் இந்தியா அன்பளிப்பாக கொடுத்த அசோக் லைடன் சொகுசு பேரூந்தை தான் கல்வி கற்ற யாழ் பல்கலைக் கழகத்திற்கு மாணவர்களின் தேவைக்கு ஒப்படைத்தார்.
‘வேண்டாப் பொண்டாட்டி கை தொட்டால் குற்றம் முத்தம் கொடுத்தால் தப்பு…’ என்ற மனநிலையில் இருந்த புலிகள் இதனை மறு தினமே தீக்கிரையாக்கியதே வரலாறு. இது ஒரு மனநிலைப் பிரச்சனை. இதுபற்றி கருத்துத் தெரிவித்த வரதராஜப் பெருமாள் ‘என்னில் கோவம் என்றால் என்னை கொழுத்தியிருக்கலாம் ஏனப்பா மாணவர்களுக்கு வழங்கிய வாகனத்தை கொழுத்தினீர்கள்’ என்று. இது போன்றதே டக்ளஸ் இன் பனம்பொருள் அபிவிருத்தி சபையின் சலுகைகளை நிராகரித்ததும் ஆகும்.
மேற்குலக நாடுகளில் நாம் வாகனங்களில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்கும் போது பாதுகாப்பாக சென்றடைத்தல் என்பதே எமது முதன்மை செயற்பாடாக இருக்கும். இங்கு வாழும் சராசரி மக்களுக்கு வாகனம் தம்மை அறிமுக்கப்படுத்தும், அடையாளப்படுத்தும் பொருளாக உருவகப்படுவதல்ல. எமது வாகனம் செலுத்தும் விதமும் எம்மை அடையாளப்படுத்தும் செயலாக பொதுவாக கையாளப்படுத்துவதில்லை என்ற மனநிலையில் நாம் வாழப் பழகிக் கொண்டு விட்டோம்.
ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் ஒரு வாகன ஓட்டனர் ‘கொழும்பு’ றைவர் என்பதற்கூடாக, தனது வேகமான வாகனதைச் செலுத்தல் ஊடாக தன்னை அடையாளப்படுத்தும் மனநிலையில் வாழப் பழக்கப்பட்ட மனநிலையில் உள்ள மக்களைக் கொண்ட நாடுகளாக இன்னமும் இருக்கும் நிலையே காணப்படுகின்றது. இதனால் சற்று அதி வேகமாக செலுத்துதல், வளைவுகளில் முந்துதல், போட்டி போட்டு ஓடுதல் இவற்றிற்கு மேலாக மது அருந்திய பின்பும் வாகனம் ஓட்டதல் போன்ற பாதுகாப்பற்ற வாகனத் செலுத்தலுக்குரிய மனநிலை வளர்க்கப்பட்டிருக்கும் சூழலே இந்த வாகன விபத்துக்களுக்கும் உறவுகளின் இழப்புக்களுக்கும் காரணமாக இங்கு அமைகின்றன.
வழி நெடுகிலும் இராணுவக் குறுக்கீடு, சோதனைக்கு நிறுத்துதல் என்பது யாதும் இல்லை. வாகனப் பத்திரங்களை சரிபார்த்தல் இதனைச் சரிக்கட்ட பணப் பட்டுவாடா என்ற ‘பண்பாட்டிற்காக’ வாகனத்தை மறித்தல் என்பதற்கு அப்பால் யார் யார் வாகனங்களில் பயணிக்கின்றார்கள் என்ற சோதனைகள் ஏதுமற்ற பயணம் அனுபவங்களே எனக்கு கிடைத்தன. 1986 மார்ச் மாதம் யாழில் இருந்து புலிகள், இலங்கை இராணுவம் என்ற இரு தரப்பினரினது மரணப் பொறியிலிருந்து நானும் தற்போதைய எனது வாழ்க்கைத் துணையும் அன்றைய எனது விடுதலைப் பயணத்தின் சக தோழியும், எனக்குள் ‘வாழும் சிறிது காலம் என்றாலும் வாழவேண்டும்’ என்ற துடிப்பை ஏற்படுத்தியவளும் மரணத்தின் வாழ்விலிருந்து மறைந்தே பயணித்தது சிறு கிலேசத்தை மீண்டும் மனதில் ஏற்படுத்தியது.
இந்தப் பழைய நினைவுகள் என்னை ஆட்கொள்ள நித்திரையை நான் தொலைத்துவிட்டு மீண்டும் கடும் இருட்டிலும், நடுநசியிலும் போகும் பாதைகளில் ஏதும் தகவல்கள் கிடைக்காதா? என்று என் கண்கள் மட்டும் தூங்கா விழிகளுடன் இருக்கச் செய்தது. நாம் பயணிக்கும் பாதையெங்கும் கிராமங்களும், நகரங்களும் குண்டுகளும், வெடிச்சத்தமும் இன்றி தூங்கும் பிரதேசங்களாக அமைதியாக் காட்சியழித்த நிலையில் என் பயணம் தொடர்ந்தது. இந்தப் பயணம் இன்னும் எத்தனை நாட்களுக்கோ என்ற எண்ணம் என் மனதில் மீண்டும் மீண்டும் கேள்விகளாக எழுந்த வண்ணம் இருந்தாலும் எனது பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
(பயணங்கள் தொடரும்……)