எனது நாட்டின் சுதந்திர தினத்தில் நான் அந்நியனாகவே உணரப்படுகின்றேன்

(சாகரன்)

எனக்கு அரிவரியில் இருந்து சர்வகலாசாலை வரை இலவசக் கல்வியைத் தந்தநாடு இலவசமருத்துவத்தை தந்தநாடு. ஏன் இலவச கூப்பன் அரிசியையும் தந்தநாடு. பிரிவினை வேண்டும் என்று போராடியவர்களில் நானும் ஒருவன். ஆனால் பிரிவினையில் உடன்பாடு அதிகம் எனக்கு ஏற்படவில்லை. தமிழ் சிங்களக் கலவரம் என்று யாரிடமும் அடிவாங்காதவன். உள்ளுரில் கலவரங்களால் அகதிகளாக இடம்பெயராதவன். சிங்கள சமூகத்துடன் அதிகம் பழகும் வாய்ப்புகள் கிடைக்காதவன் ஆனாலும் நான் நன்றாக பழகிய முஸ்லீம் சமூகம் அளவிற்கு எனக்கு சிங்கள சமூகத்தையும் பிடிக்கும். இது ஏனோ தெரியவில்லை.

எனது நாட்டில் இரு மொழிகள் இருந்தும் சிங்கள் மொழி எனக்கு பேச எழுதத் தெரியவில்லை என்று இன்றுவரை வருத்தப்படுபவன். இராணுவம் பிடித்தால் கொன்றுவிடும் என்ற அளவிற்கு எனக்கும் பயம் இருந்தது உண்மைதான் பலரைப் போல் என்னையும் இராணுவம் பிடித்தது துன்புறத்தியது கொல்லவில்லை.

எமது தாய் தந்தையர் பிரிட்டிஷ்காரனிடம் இருந்து நாம் போராடி விடுதலைப் பெற்றோம் இதற்காக நாமும் போராடினோம் என்று எனக்கு தமது வீர வரலாற்றை சொன்தைவிட போத்துக்கீசர் ஒல்லாந்தர் போன்றவர்கள் மதத்தை பரப்ப முயன்றவர்கள் இதனால் நாம் விரதம் இருந்து வாழை இலையில் சாப்பிட்டுவிட்டு இலையை ஒழிக்க வீட்டின் முகட்டினுள் சொருகி வைத்ததாக கதைகள் கூறுவர் இதனால் மதம் பரப்பும் இந்த வெளிநாட்டுக்காரர் மீது வெறுப்பு எனக்கு உண்டு.

நான் கேட்ட தமிழரசுக்கட்சி, கூட்டணிக் கட்சி கூட்டங்களின் பேச்சுக்களின் அடிப்படையில் சிங்களவன் அடிப்பான் என்ற சிறுபயம் எனக்குள் இருந்தது என்னமோ உண்மைதான். இதனால் சிங்களப் பகுதியிற்கு சென்ற காலங்களில் (மித மிஞ்சினால் கொழும்பில்) அவர்கள் எனக்கு புரியாத தமது பாஷையில் கதைக்கும் போது எம்மைப் பற்றி எதோ தவறாக அல்லது நக்கலாக கதைக்கின்றார்களோ என்ற சந்தேகம் வெள்ளந்தியாக எனக்குள் ஏற்பட்டதுண்டு இதற்கு நான் பதிலாக அனேக நேரம் மௌனம் காத்தும் அவர்களின் புன்னகையிற்கு பதில் சிரிப்பு காட்டாமல் வழிந்து இருந்ததுமே உண்மை.

ஆங்கிலத்தில் ஓரளவு பாண்டித்தியம் வந்த பின்பு யாருடனும் இணைப்பு மொழி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்பதினால் சிங்கள மொழி பேசும் இடங்களிலும் சரளமாக எனது அலுவல்களை பார்க்க முடிந்தது. இதனால் சிங்களவர்களிடம் இருந்த பயம் குறைந்ததாக உணர்ந்தேன். ஆனாலும் ஒரு அந்நியத்தை நான் உணர்கின்றேன் நான் இலங்கையன் என்று கூற விளைகின்றேன் வாழவிரும்புகின்றேன் ஆனாலும் எனக்கு ஒரு அந்நிய உணர்வு எனக்குள் இருந்துகொண்டே இருக்கின்றது.

எதனால் இது…? என் டிஎன்ஏ இல் பிரிஷ்காரர்களுக்கு எதிராக இணைந்து போராடிய துகள்கள் இல்லை என்பதிலா..? அல்லது தொட்டிலில் பழக்கம் போல் தமிழ்க் கூட்டங்களில் எனக்கு சிறுவயதில் ஊட்டப்பட்ட வெறுப்புணர்வா..? புரியவில்லை. நாம் ஏற்கும் கம்யூனிசமும் மக்களுக்காக போராடிய அனுபவங்களும் என்னில் ஏற்பட்ட ஒரு சமூக விஞ்ஞானவியலாளருக்கு உரிய பண்பு பரிணாமம் எற்பட முன்பு மேலே உள்ளவாறே நான் இருந்;தேன். ஆனாலும் இன்னமும் எனது நாட்டில் நான் ஒரு அன்னியத் தன்மையை உணர்கின்றேன். ஆனாலும் என் இனிவரும் காலங்கள் எனது தாய்நாடு இலங்கையிலேயே கழியப்போகின்றது. இதனை நான் விருப்புடனனேயே ஏற்றுக் கொண்டுள்ளேன்.