காலி முகத்திடலில் ஆரம்பமான தன்னெழுச்சி – மக்கள் எழுச்சி போராட்டம் குறித்த அதிகார வர்க்கத்தின் ஏகோபித்த எதிர்ப்பார்ப்பு, மதிப்பீடு, ஒப்பீடு இவ்வாறுதான் அமைந்திருந்தது எனலாம்.
ஆனாலும் அதிகார வர்க்கத்தின் ‘சிற்றின்ப’ மதிப்பீடுகளையெல்லாம் சின்னாபின்னமாக்கும் வகையில் , நாம் பொழுதை போக்க வந்தவர்கள் அல்லர், பொழுது சாய்ந்ததும் செல்பவர்களும் அல்லர், இலக்கை அடையும்வரை ‘இலங்கையர்களாக’ களமாடுவோம் என பொங்கியெழுந்து போராடிவருகின்றனர்.
அட! என்னவொரு திடமான சுய திட்டமிடல், உறுதியான – ஒழுக்கமான ஒழுங்கமைப்பு, இலக்கை நோக்கிய – நம்பிக்கைக்குரிய சுய வழிநடத்தல் என ஒட்டுமொத்த உலகினதும் கவனத்தை இப்போராட்டம் ஈர்த்துள்ளது.
அதனால்தான் தாமாகவே வலிந்துவந்து , இளைஞர்களை பேச்சுக்கு அழைக்கும்நிலைகூட பிரதம அமைச்சருக்கு ஏற்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்கள்வரை பல்வேறு வயது கட்டமைப்பினரை போராட்டக்களத்தில் காணமுடிகின்றது. தூர தேசத்தில் இருப்பவர்கள்கூட, தமது குடும்ப உறுப்பினர்களை போராட்டக்களம் அனுப்பிவருகின்றனர். பல பெற்றோர் தாமாகவே முன்வந்து – போர் களத்துக்கு அனுப்பிவைப்பதுபோல், ஆசிர்வசித்து, பிள்ளைகளை போராட்டக்களம் அனுப்பி வைக்கும் அளவுக்கு தன்னெழுச்சி போராட்டத்துக்கு எட்டு திக்கில் இருந்தும் பேராதரவு வலுத்துள்ளது.
இப்படியும் போராடலாம் என்ற புதிய போராட்ட அணுகுமுறையையும் இளைஞர்கள் கற்றுக்கொடுத்துள்ளனர்.
சிற்சில குறைபாடுகள் இருக்கலாம், ஒரு சிலருக்கு அரசியல் தேவைப்பாடுகள் இருக்கலாம், மேலும் சிலர் இதனை வைத்து வயிறு வளர்க்க முற்படலாம், அவற்றுக்கு எல்லாம் அப்பால் இனம், மத, மொழி, கட்சி பேதங்களுக்கு அப்பால் நாட்டு மக்கள் ‘இலங்கையர்’களாக – நாட்டின் எதிர்காலத்துக்காக அறவழியில் அணிதிரண்டிருப்பது வாழ்த்தி வரவேற்கக்கூடிய விடயமாகும்.
அந்தவகையில்தான் இந்த போராட்டத்தை நானும் ஆதரிக்கின்றேன்.
- போராட்ட களத்தில் இருக்கும் தோழர்களுக்கு எனது சில முன்மொழிவுகள் –
✍️’ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீடு செல்ல வேண்டும்’ – என்பது பிரதான இலக்கு. அவர் பதவி விலகாவிட்டால், பலந்தமாக வெளியேற்றவும் முடியாது. ‘நிறைவேற்று அதிகாரம்’ அவரைக் காக்கும். குற்றப் பிரேரணை ஊடாக அகற்றலாம். அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு . காலம் எடுக்கலாம்.
✍️ எனவே, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தி – நாடாளுமன்றத்துக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். ஜனநாயக ஆட்சி இதன்மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். அவசரமாக இது செய்யப்பட வேண்டும். அதற்காக தமது மாவட்டத்தில் உள்ள எம்.பிக்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
✍️ 225 பேரும் வீடு செல்ல வேண்டும் என்ற விடயத்துடன் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்த 225 பேரில் நாட்டுக்கு தேவையான – நாட்டின் நலன் – நமது நலன் பற்றி சிந்திப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். அடுத்த பொதுத்தேர்தலின்போது அவர்களை வீட்டுக்கு அனுப்புவதா, சபைக்கு அனுப்புவதா என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு தாமாக வந்துவிடும் .
✍️ பிரதான இரு கட்சிகளில் இருந்தும் தேசியப் பட்டியல் ஊடாக சபைக்கு வந்த சுமார் 15 பேர் பதவி விலக வேண்டும். நிபுணர்கள் 15 பேர் சபைக்கு வர வழிவகுக்க வேண்டும்
✍️ புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் அமையும் இடைக்கால அரசின் அமைச்சரவையில் அந்த 15 பேருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட வேண்டும். 30 பேர் வேண்டாம். அமைச்சரவை எண்ணிக்கை 25 ஆக இருந்தால் போதும். மிகுதியுள்ள 10 அமைச்சுகள், கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வழங்கலாம்.
✍️ வெளிநாடுகளில் பதுக்கவைக்கப்பட்டுள்ள பணங்களை கொண்டுவருவதற்கான விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும். அதிகாரத்தில் இருந்தவர்கள் வெளிநாடு செல்ல தடை உத்தரவு பெறப்பட வேண்டும்.
✍️ வெளிவிவகார பதவிகளில் உள்ள அரசியல் நியமனங்கள் இரத்து செய்யப்பட வேண்டும். இராஜதந்திர நிபுணத்துவம் உள்ளவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்போது சர்வதேச உதவிகளை இலகுவில் பெறலாம்.
✍️அரச நிர்வாகக் கட்டமைப்பிலும் மாற்றம் வேண்டும். அரசியல் தலையீட்டுடனான உயர் பதவிகளுக்கான நியமனம் இரத்து செய்யப்பட வேண்டும்.
✍️ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் போன்ற பணிகளையும் நிறைவேற்றலாம்.
✍️ புதிய அரசமைப்பு, அரசியல் தீர்வு உட்பட சில விடயங்கள் தற்போதைய நிலையில் சாத்தியம் இல்லை. அதற்கான உறுதிபாட்டை பெறலாம் .
✍️ அரசியல் ஸ்தீரமற்ற தன்மை – பஞ்சத்துக்கும் – பேராபத்துக்கும் வழிவகுக்கும். எனவே ,இடைக்கால தீர்வு பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். உங்களின் பெறுமதியான கருத்துகளையும் முன்வைக்கவும்.