அது ஜேர்மனியின் ஹிட்லரின் அரசாக இருக்கட்டும். பிலிபைன்சில் மார்கோஸ் இன் அரசாக இருக்கட்டும். ஈரானின் மன்னர் ஷாவின் அரசாக இருக்கட்டும் என்று எல்லாமுமாக எமக்கு முன் வரலாற்றுப் பாடங்களாக இருக்கின்றன.
மகிந்தா போய் ரணில் ஐ கொண்டு வந்த ‘சித்து’ விளையாட்டும் ஒருவகை திட்டமிட்ட கேம்(Game)தான்.
இலங்கை அரசியலில் ரணில் ஒன்றும் நல்லவராகவோ, வல்லவராகவோ இருந்தவர் அல்ல. மாறாக மாமா ஜே.ஆரின் அரிச்சுவடியை பின் பற்றி தமிழ் மக்களுக்கும் ஏன் முழு இலங்கை மக்களுக்கும் ஒரு சுபீட்சமான வாழ்வை தடுத்து நிறுத்துவதில் கோட்டு போட்ட ‘கனவானாக’ செயற்பட்டவர்…. செயற்படுபவர்தான்.
சட்ட விரோதமாக, மக்களால் நிராகரிக்கப்பட்ட நபராக தற்போது பிரதம மந்திரியானதாக இருக்கட்டும் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் மக்களால் தெரிவு செய்யபட்டு ‘நல்லாட்சி’ ஆட்சியை தமிழர் தரப்பின் எதிர்கட்சி தலமையை என்ற ஆதரவுடன் செயற்பட்ட போதாகட்டும், அவர் எல்போதும் சரியானவராக செயற்பட்டவர் அல்ல.
யுத்த காலத்தில் சிறப்பாக 1980 களின் நடுப்பகுதியில் அவர் எவ்வாறு செயற்பட்டார் என்பதை குரு நகர் கடற்கரையில் புதைக்கப்பட்ட நிலக் கண்ணிவெடிகளை இன்னும் உண்டா…? இல்லையா..? என்று பரீட்சிக்க ஓலைத் தொப்பியுடன் முகம் மறைத்து குருநகர் முகாம் அருகில் தமிழ்ப் போராளிக் கைதிகளை சங்கிலியில் பிணைத்து மிருகங்கள் போல் தரையெங்கும் நடத்தி… நகர்த்தி வெடிக்கின்றதா என்பதை பார்த்து மகிழ்ந்ததாகட்டும்…..
கருணாவை பிரிப்பதற்கு வலை பின்னல் போட்டவன் நான்தான் என்று பெருமை பேசியதாக இருக்கட்டும்.
சந்திரிகா கொண்டவந்த புதிய அரசியல் யாப்பை பாராளுமன்றத்தில் எரித்து ‘தமிழ் தேசியம்’ உடன் குத்தாட்டம் போட்டு கொழுத்தியதாகட்டும்…. அவரின் அரசியல் சிறப்பை நாம் அறிவோம்.
மகிந்த சகோதரர்களை தானே கழுவில் ஏற்றுவேன் என்று தான் கடந்த நல்லாட்சியை அமைக்க மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர். ஆனால் எதிர்கட்சியே ஆதரவு கொடுத்த ஆட்சியை அமைத்த பின்பு ராஜபக்ச சகோதர்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அவர் நகர்த்தவில்லை தற்போதைய தற்காலிக பிரதமர் காலத்திலும் அவர் ஒன்றும் புடுங்கமாட்டார் என்பது தெரியும்… அப்படிப்பட்ட ஒரே வர்க்க இணைப்பு இது.
மக்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு மேற்கு கண்டு பிடித்த காற்சட்டைதான் இவர்.
இதில் தமிழ் மேட்டுக்குடிகள் எப்போதும் போலவே கனவான் கட்சி ஐ.தே.கட்சி அரசையும் அதன் தலைவர்களையும் எம் நண்பேன்டா என்று நம்புவதும் அதனை மக்களிடம் பிரச்சாரப்படுத்துவதுமாக உறவுகள் இன்றுவரை தொடரவும் செய்கின்றன.
தற்போதைய மக்களின் போராட்டத்தை காலத்தை கடத்தி பேராட்டக்காரரை அதிகார மைய்ய கொழும்பில் இருந்து அகற்றி படிப்படியாக பரலோகத்திற்கு அனுப்புவதற்கான செயற்பாட்டு வேலைத் திட்டத்தை செயற்படுத்தவே முயன்றார் ரணில் என்பது அவரின் அண்மைய செயற்பாடுகளும் இருந்திருக்கின்றன.
சிவப்புச் சாயம் இந்த போராட்டத்தில் இருக்கின்றது என்பதே மேற்கிற்கும் அருகில் உள்ள பெரியண்ணைக்கும் அதிகம் கவலை ஏற்படுத்திய விடயம்.
இதில் இவர்கள் இரட்டைக் குழல் துப்பாக்கி போலவே செயற்படுவர் நேபாளத்தின் அனுபவங்களை எடுத்து நோக்கின் இது புரியும். மத்திய தென் அமெரிக்க வரலாறும் அப்படியானதே.
எனவே ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகும் வரை கைப்பற்றி அதிகார மைய இடங்களில் இருந்து விலத்த மாட்டோம் என்று போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுபவர்கள் காலக் கெடு விடுத்திருப்பதில் உள்ள பிடிவாதம் தேவையானதுதான். அது தொடரும்…. தொடர வேண்டும்….
அப்போ இனிவரும் நாட்களில் என்ன நடக்கும்….
இருவரும் அவர்களின் விருப்பின்றி பதவியை துறப்பர்…. அது காலத்தின் கட்டாயம் அதனை போராட்டக்காரர்கள் ஏற்படுத்தியும் விட்டார்கள்.
இதற்கு மேலேயும் போக விடாமல் இத்துடன் சமரசம் செய்வோம் என்ற அணுகு முறையாக இலங்கையில் தமது சதிராட்டத்தை ஆட நினைக்கும் வெளி சக்திகள் இதனைப் பாவிக்க முற்படுவர்.
அப்படியாயின் அடுத்தது என்ன…?
அரசியல் யாப்பிற்கு மாறாக செயற்படுதல் என்பது கஷ்டமானது சிக்கலானது என்பதினால் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி சபாநாயகர் ஜனாதிபதி ஆக இன்னொருவர் பிரதம மந்திரி ஆக்கப்படுவார். அது அனேகமாக மைதிரியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
அண்மைய மைத்திரியின் அறிக்கை இதனைக் கோடிட்டும் காட்டுகின்றது. மைத்திரியின் அறிக்கையும் சிலரின் கண்ணசைவுகளின் பின்புதான் நடைபெற்று இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
இதற்கிடையில் வேறு ஒருவரை கண்டுபிடித்தல் என்ற செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.
இதில் மேற்குலகும் ராஜபக்சகளும் ஒரு சமரசத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் இந்த எல்லா நகர்வுகளையும் போராட்டக்காரர்கள் சதாரணமாக கடந்தும் செல்ல மாட்டார்கள் செல்லவும் கூடாது.
இந்த இரு புதிய பதவிகளில் யார் ஆளுமைமிக்கவர்…. அனுசரித்து போகக்கூடியவர்…. என்பதற்கு ஏற்ப அரசியல் அமைப்புச் சட்டத்தை தள்ளி மெதுவாக வைத்துக் கொண்டு ஒருவர் சாரதியாக செயற்படுவர்.
கடந்த நல்லாட்சி காலத்தில் பிரதமர் ரணில், ஜனாதிபதி மைதிரி இதில் யார் அதிக அதிகார மையத்தை தனக்குள் கொண்டிருவர் என்பது போல்.
இதன் அடிப்படையிலான சர்வ கட்சிகளின் கூட்டமும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற தீர்மானங்களும் அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் பல்வேறு கட்சி உறுப்பினர்களுடன் சந்திப்பும் தொடரும் செய்திகள் என்று கட்டியம் காட்டி நிற்கின்றன.
சரி அமையட்டும் இடைக்கால அரசு…..? ஏதும் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாதுதானே….?
அப்போ என்ன செய்ய வேண்டும்….. ?
போராட்டக்காரர்களின் அரசியல் வரைபு பிரபல்யமாக பொதுவெளியில் பேசப்படாவிட்டாலும் ஒரு அரசியல் வரைபு இந்தப் போராட்ட தளத்தல் இருக்கின்றது என்பது உண்மையே.
ஆட்சியை…. பாராளுமன்றத்தை கலைக்க முன்பு போராட்டக்காரர்களின் முக்கிய செயற்பாடாக இருக்கின்ற நிலமையை சாதகமாக்கி இலங்கை பல் தேசிய இனங்கள் வாழும் மதச்சார்பற்ற நாடு என்ற வகையும்…
பாராளுமன்றத்திற்கே அதிக அதிகாரம் உள்ளதாகவும் நீலன் திருச்செல்வம், கேதீஸ்வரன் இணைந்து சந்திரிகா அம்மையார் கேட்டதற்கு இணங்க உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வைத் தூசு தட்டி புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற வேண்டும்.
தேர்தலின் பின்பு புதிய அரசியல் அமைப்பு என்பது எல்லாம் ஆறிய கஞ்சியாக்கப்பட்டு குப்பையில் போடப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்தும்.
இதற்கான சாத்தியப்பாடுகள், கால அவகாசம் இல்லை என்ற சூழல் ஏற்பட்டால் குறைந்த பட்சம் ஜனாபதியின் அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு உட்பட்டதாகவும்….
தற்போதைய அரசியல் அமைப்பிற்குள் இருக்கும் அதிகாரப் பரவலாக்கலான மகாணசபையை அதன் ஆரம்ப வரைபில்(காணி பாதுகாப்பு போன்ற அதிகாரங்களை உடைய) இருந்த நிலையிற்கு செழுமைப்படுத்தி அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்தை சட்டத்திற்குள்ளும் செயற்பாட்டிற்குள்ளும் கொண்டுவருவதற்கான பொறிமுறையை ஏற்படுத்திவிட்டு……
பாராளுமன்றத்தைக் கலைத்தல் மீண்டும் தேர்தல் என்று போக வேண்டும்.
ஒரு வருடத்துக்குள் புதிய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்படுவது உள்ளிட்ட ஆறம்சக் கோரிக்கையை போராட்டக் குழு ‘அரகலயவினர்’ இப்போது முன் வைத்து உள்ளனர். அதனை வெற்றிகொள்ளும் வரை காலிமுகத்திடல் போராட்டக் களமாக நீடித்து இருக்கும் என்ற தொனியும் வெளிப்படுகிறது!. போராட்டக் குழு கருத்துகளை சாதாரணமாக கடந்து செல்லவும் முடியாது.
புதிய தேர்தலில் தற்போது பாராளுமன்றத்தில் இருக்கும் இந்த இரு நூற்றுச் சொச்சதில் அனேகமாக முழுவதுமாக எல்லோரும் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிற்குள் வராவண்ணம் ‘கோவணம்’ உருவப்பட்டு நிராகரிக்கப்படுவதை மக்களும் புதிய அரசியல் தலமையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இது பௌத்த பெரும் தேசியம் என்று வெளிக்கிட்டாலும்….. தமிழ் தேசியம்(குறும்) என்று உசுப்பேத்தினாலும்…. மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தமிழ் நாட்டின் கோசத்தை குத்தைக்கு எடுத்து அமைச்சர் பதவிகளை மாறி மாறி எடுத்து ஆட்சியில் அமர்ந்த தமிழ், மலைய, முஸ்லீம் தரப்புகள் என்று யாவரும் அடித்து விரட்டப்பட வேண்டும்.
இவர்களில் மக்களின் வறுமையில் சொத்து சேர்க்காத ஒருவரை சுட்டிக் காட்டுங்கள் மக்கள் இவர்களின் ‘கோவணத்தை’ உருவாமல் விட்டுவிடுவார்கள்.
செய்வோமா…? செய்வார்களா…..? செய்ய வேண்டும் இதனைக் கட்டாயம்.
அன்றேல் நாம் அல்லது எமது பிள்ளைகள்; மீண்டும் இதே காலி முகத்திடலில் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘கோ கம’ நடத்தித்தான் ஆக வேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போய்விடும்.