பன்முகத்தன்மை கொண்ட ஒரு முதியவர் தன் மூச்சை நிறுத்திக்கொண்டார். தமிழ்நாட்டின் ஐம்பது வருடத்துக்கு மேலான ஆழுமை அமரராகிவிட்டார். ஒரு வரலாற்று நாயகன் தன் பயணத்தை முடித்துக்கொண்டார். பள்ளிபருவத்திலேயே கையெழுத்து பிரதியாக தன் எழுத்து பணியை தொடங்கி நாடக கலைஞனாக பரிணமித்து திரையுலக ஜாம்பவானாக உச்சம் தொட்ட மனிதர் மௌனித்து விட்டார்.
திராவிட பற்றாளனாக, பெரியார் பாசறையில் இணைந்து, அண்ணா வழிநடந்து எம் ஜி ஆர் உடன் கரம் கோர்த்து, போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி பெற்று அரசியலின் உயரம் தொட்டு, தமிழ் நாட்டின் முதல்வராக ஐந்து தடவைகள் பதவி வகித்தவர் இன்று அமைதி ஆகிவிட்டார்.
கலைஞர் என்றவுடன் நினைவில் வருவது கருணாநிதி அவர்களே. அவரை சந்தித்த நினைவுகளை இரைமீட்கிறேன். வடக்கு கிழக்கு மாகாண சபை பேரவை தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின்பு எனது முதலாவது தமிழ்நாடு பயணத்தின்போது தமிழ்நாடு சட்டப்பேரவை செயல்ப்பாட்டை அறிய சென்றேன்.
சபாநாயகர் தமிழ் குடிமகன் அவர்களின் உத்தியோக அறையில் அவரிடம் அளவளாவி கொண்டிருந்த வேளையில் கலைஞர் உள்ளே வந்தார். இவர்தான் ஈழத்து சபாநாயகர் என என்னை அவருக்கு அறிமுகம் செய்தார் தமிழ் குடிமகன். மரியாதை நிமித்தம் கலைஞருக்கு வணக்கம் சொன்னேன். சிறு புன்முறுவல் அவர் முகத்தில்.
நான் கொண்டு சென்றிருந்த கட்டிட கலைஞர் வி எஸ் துரைராஜா அவர்கள் வடிவமைத்து தந்த வடக்கு கிழக்கு மாகாண பேரவை கட்டிட மாதிரி வடிவத்தை கலைஞரிடம் கொடுத்தேன். சிறிது நேரம் அதனை உற்று நோக்கியவர் கட்டிடத்தின் மைய்யப் பகுதி உச்சியில் இவ்வாறு இருக்க வேண்டும் என தானே தனது கைப்பட வரைந்து தந்தார்.
தமிழ் குடிமகனிடம் சட்டப்பேரவை நிலையியல் கட்டளை புத்தகத்தை எனக்கு கொடுக்கும் படி கூறியவர் என்னிடம் இதனை தழுவியதாக உங்கள் சபை நடவடிக்கைகளை வடிவமையுங்கள் என கூறினார். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இரண்டு புத்தகங்களை பெற்று நன்றி கூறி விடைபெற்றேன்.
வடக்கு கிழக்கு மாகாண சபை அமர்வுகள் நடைபெற்ற காலங்களில் கலைஞர் அறிவுறுத்தலின் பெயரில் தமிழ்குடிமகன் தந்த அந்த புத்தகங்கள் சபை நடவடிக்கையை சீராக செயல்படுத்த எனக்கு பேருதவியாக இருந்ததை நன்றியுடன் நினைவுகூருகிறேன்
பாரதி பாடியதுபோல ‘’பாதி தின்கின்ற வேளையில் தட்டிப்பறிப்பான்’’ செயலை பிரேமதாசாவுடன் கரம் கோர்த்து பிரபாகரனும் செய்ய முற்படும் வேளையில் கலைஞரை சந்தித்து நிலைமைகளை தெரிவிக்கும் பணிக்காக மீண்டும் அவரை சந்திக்க தமிழ்நாடு விஜயம்.
போக்குவரத்து அமைச்சர் அபுயூசுப், மாகாணசபை உறுப்பினர்கள் அமரர் கந்தசாமி, மற்றும் திருமதி ஞானசக்தி சிறீதரன் உடன் சென்னை சென்றபோது முதலில் எம்மை சந்திக்க விரும்பவில்லை என்ற செய்தியை கலைஞரின் செயலாளர் குகன் என்பவர் தெரிவித்ததாக மத்திய குழு உறுப்பினர் தம்பையா கூறினார்.
நீண்ட காத்திருப்பிற்க்கு பின்னர் சந்திக்க வருமாறு செய்தி வந்தது. எமது குழு மற்றும் மத்தியகுழு உறுப்பினர் தம்பையா கலைஞரை சந்திக்க கோட்டைக்கு சென்றோம். சந்திப்பு நடந்த அறையில் கலைஞருடன் முரசொலி மாறன் மற்றும் செயலாளர் இருந்தனர். எமது வணக்கத்தை தெரிவித்து அமர்ந்தோம்.
கலைஞரிடம் கையளிக்க என்று தயாரித்திருந்த அறிக்கை அவரிடம் நான் கையளித்தேன். அதை அவர் பார்க்காமலே மாறனிடம் கொடுத்தார். மாறனும் அதை படிக்காமலே பக்கத்தில் வைத்துவிட்டார். நாம் எமது பக்க விளக்கத்தை கூறும் முன்பே மாறன் எழுந்தமானமாக எம்மை அவமரியாதை செய்து பேசினார்.
நாம் கொடுக்க விளைந்த விளக்கத்தை ஏற்கும் நிலையில் மாறன் இல்லை. புலிகளின் குரலாகவே அவர் குரல் ஒலித்தது. ஒருகட்டத்தில் உங்கள் முதல்வர் பனைமரத்து கீழ் நின்று பேட்டி கொடுக்கிறார் என எள்ளி நகையாடினார். அப்போது எங்கள் மண்ணின் அடையாளமே பனை தான் என நான் கூறினேன்.
எனக்கும் மாறனுக்கும் இடையில் சூடான வாதம் எழுந்தவேளையில் தம்பையா என்னை பார்த்து தன் வாயில் ஒரு விரலை வைத்து சூ சூ என்றார். நான் நேரடியா கலைஞரிடம் ஐயா நீங்கள் சமாதானம் என்கிறீர்கள் மாறனோ சண்டைக்கு நிற்கிறார். எமது முடிவு சபையை கலைக்காது புலிகளுக்கு விட்டுக்கொடுப்பது என்றேன்.
அன்று நாம் எடுத்த முடிவு சபையை கலைத்தால் அது தென்னிலங்கை கட்சிகளுக்கு சாதகமாகிவிடும் என்பதால் எமது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பதவிவிலகி அந்த வெற்றிடத்தை புலிகள் தமது ஆட்கள் மூலம் ஈடுசெய்து ஆட்சியை அவர்களே அமைக்கட்டும் என்பது. அப்போது மாறன் புலிகள் பின்கதவால் வரமாட்டார்கள் நீங்கள் சபையை கலையுங்கள் என கடும்தொனியில் கூறினார்.
பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. அன்று மாலை தொலைகாட்சியில் கலைஞர் தடங்கலுக்கு வருந்துகிறேன் என கூறிய செய்தியை பார்த்தேன். எமது சந்திப்பின் போது கலைஞர் முன்னிலையில் மாறன் முந்திரிகொட்டை போல செயல்பட்டதே சுமுகமான முடிவு எட்டப்படாமைக்கு காரணமாக அமைந்தது.
இந்த உண்மையை துக்ளக் ஆசிரியர் சோ அவர்களை சந்தித்த போது அறிந்த கொண்டேன். கலைஞரை பொறுத்தவரை மாறன் கூறும் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவரது பாணி என கூறிய சோ நீங்கள் முதல் முதல் மாகாண சபையை அமைத்தபோதே கலைஞரை சந்தித்திருக்க வேண்டும் என்றார்.
இதனையே பின்பு ஸ்டாலின் அண்ணாவும் என்னிடம் கூறினார். பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளின் எதிர்பார்க்கைகள் என்ன என்பதை கணிப்பதில் போராளிகளுக்குள் இருந்த வேறுபாடு இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும். எம் ஜி ஆர் இருந்தவரை கலைஞரை அணுகாத பிரபாகரன் எம் ஜி ஆர் மறைவிற்கு பின் அண்ணா என ஆதரவு கேட்டு எழுதிய கடிதம் கலைஞருக்கே!
அதன் பின் கலைஞர் இந்திய அமைதிப்படை மீண்டும் சென்னைக்கு திரும்பிய போது அவர்களை முதல்வர் என்ற அடிப்படையில் கூட வரவேற்க செல்லவில்லை. புலிகளில் அச்சுறுத்தலுக்கு பயந்து போராளிகள் ஆதரவாளர்கள் சென்ற மூன்று கப்பல்களை சென்னை துறைமுகத்தில் நுழையவிடாது விசாகப்பட்டினம் செல்லவைத்தார்.
பத்மநாபா மற்றும் தோழர்களின் படுகொலைக்கு பின்பு புலிகளை தப்பவிட்டுவிட்டு ஒரிசா முகாமில் பலவிதமான கஸ்டங்களை அனுபவித்து ஒருவாறு தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்த ஏனைய இயக்க போராளிகளை புழல் முகாமில் அடைத்தார். ராஜீவ் காந்தி படுகொலை வரை கலைஞர் புலி வாலாக இருந்தார்.
பன்முக திறமைகள் கொண்ட ஒரு மனிதரிடம் காணப்பட்ட பலவீனம் இன்று அவர் மரண செய்திகேட்டு கண்ணில் கண்ணீர் வரவில்லை என்ற மன சஞ்சலம் எனக்கு ஏற்ப்படுகிறது. அன்று முரசொலி மாறன் பேச்சை கேட்காது சுயமாக சிந்தித்து நாம் வைத்த கோரிக்கையுடன் தனது அனுபவ அறிவுக்கு ஏற்றவாறு செயல்ப்பட்டு இருந்தால்?…
இன்று இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் இருந்திருக்கும். மாகாண பொலிஸ் காணி அதிகாரம் முழுமையாக இருந்திருக்கும். அதிகார பரவலாக்கல் முழுமை பெற்றிருக்கும். ஜனநாயக வழிக்கு எவர் வந்தாலும் அவர்கள் தேர்தல் மூலமே தெரிவாகி இருப்பர். பிரபாகரனின் அராஜகம் கூட மக்கள் வாக்குகளால் தோற்கடிக்கபட்டிருக்கும்.
முன்னாள் போராளிகள் என கூறிக்கொண்டு தேர்தலில் களம் காணவந்த அனைத்து புலித்தலைவர்களும் தளபதிகளும் ஆதரவாளர்களும் அண்மைக்கால தேர்தல்களில் பெற்ற பெறுபேறுகள் நாம் அறிந்ததே. அந்த வகையில் தனக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பத்தை தனது மருமகன் முரசொலிமாறன் மீது கொண்ட பாச பலவீனத்தால் தவறவிட்ட பன்முக திறமை கொண்ட முதியவர் மரணம் ஈழத்தாயின் கண்ணில் நீர்க் கசிவை ஏற்படுத்தாது.
ஒரு மனிதனின் மறைவு எவருக்குமே மனநிறைவை தராது அதேவேளை அனுதாபத்தையும் தரவில்லை என்றால் அது யார் தவறு? இறப்புகளை கொண்டாடும் இதயம் எவருக்கும் இல்லை. ஆனால் என் கண்ணில் நீர்க்கசிவை ஏற்ப்படுத்தாத இறப்புகளை எண்ணி என்னை நானே நொந்துகொள்கிறேன்.
(ராம்)