அதற்காக எமக்கு மத்தியில் இருக்கும் வேறுபாடுகளை விரோதமாகக் காட்டி உண்மையான விரோதத்தை வேறுபாடாக நிலைநிறுத்த இந்த நவதாராளச் சமூகமுறை முயற்சிக்கிறது. நாம் சிங்கள மொழியைப் பேசுவதும், தமிழ் மொழியைப் பேசுவதும் வித்தியாசமே அன்றி விரோதமல்ல. நாம் பௌத்த தர்மத்தையோ, இந்து தர்மத்தையோ, இஸ்லாத்தையோ, கிறீஸ்துவத்தையோ வழிபடுவது எமது நம்பிக்கைகளின் வேறுபாடேயன்றி விரோத மனப்பான்மையாலல்ல. ஆனால் அதனை விரோத மனபான்மையாகக் காட்டவே அதிகாரத்தில் உள்ளவர்கள் முயல்கின்றனர். பேசும்மொழி, வழிபடும் சமயம் அல்லது காலாச்சாரத்தின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் சாகடித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளவே அதிகார சக்திகள் முயல்கின்றனர். அப்போதுதான், உண்மையான எதிரிகள் அல்லது மிதிப்பவர்களின் மீதான மிதிக்கப்படுபவர்களின் எதிர்மனப்பான்மை,- சுரண்டுபவர்கள் மீதான சுரண்டப்படுபவர்களின் எதிர்மனப்பான்மை,- ஒடுக்குபவர்கள் மீதானா ஒடுக்கப்படுபவர்களின் எதிர்மனப்பான்மை மறைக்கப்பட்டுவிடும். இலங்கை மக்களான நாம் பலசகாப்தங்களாக இந்த மாயையில் சிக்கிகுண்டு ஆயிரக்கணக்கானவர்களின் உதிரம் சிந்தப்பட்டுள்ளது. நாம் இந்த உண்மையை நாம் உணர்வோமானால், இந்த இழப்புகள் இனியும் தொடர முடியாது!
பாரிய அழிவைத் தந்த யுத்தத்தின் பின்னர், ஒற்றுமையைப் போதிக்கும் ஆட்சியாளார்களின் பூரண அனுக்கிரகத்துடன் இனவாத்ததினதும், மதவாதத்தினதும் கோரப்பற்கள் சமூகத்தின் பக்கம் நீண்டிருக்கும் அதேவேளை, முகமாற்றம் – நல்லாட்சி – தேசிய அரசு – தேசிய பிரச்சனைக்கு தேசிய அரசால் தீர்வு – அதற்கு ஒத்துழைப்பு என்று எல்லா இன ஆதிக்க அரசியல்வாதிகளையும் ஓரணியில் கொண்டு வந்து நவதாராள வாத மயமாக்கலை மேற்கு உலகம் முனைப்புடன் முன்னெடுக்கும் இச்சந்தர்பத்திலாவது அதனை உணராவிட்டால், எமது இந்தத் தவறுக்காக மேலும் பல தலைமுறைகள் நட்டஈடு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். சமவுரிமை இயக்கத்தின் நோக்கம் இவ்வாறான அழிவுகள் மீண்டும் ஏற்படாதவாறு தடுப்பதேயாகும். ஒற்றுமையைப் போதிப்பதால் மாத்திரம் மேற்படி இன – மதவாதம் சார்ந்த அழிவுகளை நிறுத்திவிட முடியாது. அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஒடுக்கப்பட்டவர்கள் அரசியல் ரீதியில் ஒன்று பட்டால் மாத்திரமே இது சாத்தியமாகும்.
(Thava Guru)