தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கோயம்புத்தூர் – வேலாண்டிபாளையம் அமைப்பின் பொறுப்பாளருமாக செயல்பட்டு வந்த தோழர் அன்பரசு மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் கொரனா பெரும் தொற்று அவரின் உயிரையும் காவு கொண்டுவிட்டது.
ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றை ஆழமாக பார்த்தோமாகின் 1970 களில் இருந்து இன்று வரை தெளிவான உறுதியான கொள்கை பார்வை செயற்பாடுகளைக் கொண்டிருப்பவர்கள் இடதுசாரிகள்தான்.
அவர்கள் பல்வேறு அணிகளாக பிரிந்து நின்றாலும் தமது வளங்கள் வசதிகளுக்கு ஏற்ப அன்று தொட்டு இன்றுவரை எந்த பிரதி பலனும் சிறப்பாக அரசியல் இலாபங்கள் கருதாது தமது ஆதரவை ஈழவிடுதலைக்கு இலங்கை வாழ் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி கொண்டிருக்கின்றனர்.
சிறப்பாக தமிழ் நாட்டில் உள்ள பல கட்சிகளும் தமது தேர்தல் வெற்றியை ஊக்கிவிக்கும் ஒரு முடிவை நோக்கியதான செயற்பாடுகளை காலத்திற்கு காலம் ஈழத் தமிழர் விடயத்தில் கொண்டிருந்தாலும் இடதுசாரிகள் அவ்வாறு செயற்படுபவர்கள் அல்ல.
தமிழ் நாட்டின் சென்னையைத் தாண்டி அதிகம் இடதுசாரிகள் பலமாக செயற்பாடுகளை உடைய பகுதியாக கோயம்புத்தூர் பல காலமாக இருந்து வருகின்றது.
அவர்களின் தொடர்ச்சியான ஈழத் தமிழர் மீதான கரிசனை செயற்பாடுகள் தமிழ் நாட்டு பிரபல்ய தலைவர்களின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகம் வெளிச்சத்திற்கு வராமலே இருந்து வருகின்றது அது த. பாண்டியனைத் தாண்டி ஏன் கல்யாணசுந்தரத்திற்கு அதிகம் வெளியே அதிகம் தெரியவில்லை. அது தமிழ் நாடு மாநில இடதுசாரிகளின் தலைவர்கள் என்ற உசச பொறுப்பில் இருக்கும் போது கூட.
இந்நிலையில் தோழர் அன்பரசு போன்றவர்கள் அதிகம் அறியப்படாதவராக இருப்பது இயல்பானது. ஆனால் அவரின் ஈழவிடுதலைக்கான பங்களிப்பு மகத்தானது சிறப்பாக பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எவ்எவ் தனது பாதங்iளை கோயம்புத்தூரில் 1980 களின் முற் கூற்றில் ஆழமாக வைப்பதற்கு அன்பரசு போன்றவர்களின் செயற்பாடுகள் காரணமாக இருந்தன.
அது இன்றுவரை ஈழவிடுதலையில் இடதுசாரிச் செயற்பாடுகளை உடைய யாரும் கோயம்புத்தூர் சென்றால் ‘வாருங்கள் தோழரே… ஒரு சந்திப்பை தோழர்களுடன் செய்வோம்….” என்று உடனடியாக ஒரு கலந்துரையாடல் சந்திப்பை தோழமையுடன் செய்வார்கள் இதில் முதன்மை பெற்றிருந்தார் தோழர் அன்பரசு.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல் அமைச்சர் 2009 பின்ரான தமிழ் நாட்டு விஜயங்களின் போது கோயம்புத்தூர் செல்வதை தவற விடுவதில் அப்போது எல்லாம் அவர்களின் தோழமையான வரவேற்பும் சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் நடைபெற்றே இருக்கின்றன. இதனை ஒழுங்குபடுத்தி குறுகிய கால இடைவெளியில் செயற்படுத்தியவர் தோழர் அன்பரசு.
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது சங்கமம் என்பதன் தொடர்ச்சியாக உறுதியாக செயற்பாட்டிற்குள் வந்தது என்பதை பலரும் அறிவோம் இந்த சங்கம் செயற்பாட்டை தோழர் அன்பரசை ஊக்கப்படுத்தி செயற்பாட்டிற்குள் கொண்டு வந்தவர் தோழர் பத்மநாபா என்பது பலருக்கும் தெரியாது.
இதன் பின்ரான தோழர் அன்பரசின் செயற்பாட்டை எம்முடன் தொடர்ந்தும் பயணிக்கும் ரதன் சந்திரசேகர் கூறுவதை கேளுங்கள் அப்போது புரியும் அன்பரசு எவ்வளவு மக்களோடு மக்களுடன் மக்களுக்காக செயற்பட்டிருக்கின்றார் என்பது…….
‘…. தேசிய ஜனநாயகப் புரட்சி வழியை லட்சியமாய் ஏற்ற பொதுவுடைமை இயக்கத்தின் தோழன் என்பதிலிருந்தே முதலாய் முதன்மையாய்த் தொடங்கியது அவர் பொதுவாழ்வு.
கோவையில் – இலங்கைத் தமிழர்க்கு ஆதரவான போராட்டத்தை அவர் நேரிய பக்கத்தில் நின்று முன்னெடுத்தார். அதில் அவர் பங்கு மிகவும் குறிக்கத்தக்கது.
பிற்பாடு…. அனைத்துத் தரப்பு தோழமை சக்திகளுடன் கரம் கோத்த சமூகத் தொண்டு – வாசிக்கவும் வாசிக்க வைப்பதுவுமான இலக்கியச் சிந்தனை – சூழலியல் ஆர்வம் – கல்விப் பணி – ஈகைப் பண்பு என்று விரிந்தார் அன்பரசு.
கோவையின் குறிப்பிடத்தக்க கலை இலக்கிய பண்பாட்டு அமைப்பான ‘சங்கமம்’ அவரின் – அவர்சார்ந்த தோழர்களின் கனவுகளின் நனவேற்றமானது. கருத்தியல் ரீதியாகவும், களப்பணி மூலமாகவும், தோழமை நிமித்தமும் அது பல்லோரின் இதயத்தை வென்றது.
அன்பரசை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வேன்….
“எங்கே இருக்கிறீர்கள் அன்பரசு?”
“இந்தப் பழங்குடி கிராமத்தில் சிறுமியர் சிலருக்கு வாழ்நாள் கல்வியுதவி வழங்க வந்திருக்கிறோம் தோழர் ! பிறகு கதைக்கிறேன்!”
“தோழர், இப்போது பேசமுடியுமா ?”
“ரதன், இங்கொரு வனப்பகுதியில் யானைகள் வழித்தடத்தை மறித்துவிட்டார்கள். போராடி மீட்டுவிட்டோம். இப்போது பாதையை சுத்தம் செய்து செப்பனிட்டுக்கொண்டிருக்கிறோம். நானே திரும்ப அழைக்கிறேனே?”
“ஹெல்லோ தோழர்….”
“தோழா…கொஞ்சம் பிஸி ! மதுக்கடைக்கெதிராக ஒரு ஆர்ப்பாட்டம். பழங்குடி மக்களை சீரழிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசிப் பெண்கள் சீற்றத்துடன் திரண்டிருக்கிறார்கள்! ஆட்சியர் வருகைக்காகக் காத்திருக்கிறோம்…”
இவை போதாதென்று – நான் அழைக்கிற நேரங்களிளெல்லாம் –
“சங்கமம் கூட்டத்திலிருக்கிறேன் தோழர்!”
“கலாமன்றத்தின் கருத்தரங்கத்திலிருக்கிறேன் தோழர்!”
“கலை இலக்கியப் பெருமன்ற ஜூம் மீட்டிங் தோழர்!”
இவ்வாறே பலபொழுதும் பதிலிறுப்பார்.
பேசத் தொடங்கிவிட்டாலோ, மணிக் கணக்குத்தான்!
எதையும் நகைச்சுவையினூடே கடப்பது அவரது வழக்கம்….’
என்றவாறு தனது அனுபவங்களை பகிர்கின்றார்.
அவருடன் நெருக்கமாக பழகிய தோழர் வளவன் இவ்வாறு நினைவு கூருகின்றார்…
‘கோயம்புத்துரை எனக்கு அறிமுகப்படுத்தியவன்…..
ஈபிஆர்எல்எப் இன் கோயமுத்தூர் மாவட்ட தலைமை அலுவலகமாக வேலாண்டி பாளையத்தை உருவாக்கிய பெருமை மிக்கவன்…..
கம்யூனிசம் திராவிடத்தை உள்வாங்கி இருக்க வேண்டும் என்ற தோழர் பத்மநாபாவின் ஆதங்கத்துக்கு இணங்க சங்கமம் அமைப்பை தோழர்கள், வில்வம், ஜான் ஆகியோருடன் இணைந்து நிறுவி அளப்பரிய காரியங்களை கோவையில் செய்த தலைமை பணியாளன்……
அன்பான பேச்சுக்கும் சிரிப்புக்கும் எப்போதும் சொந்தகாரன் …..’
இந்த பெரும் தொற்று பேரிடர் பறித்த ஏற்க முடியாத இழப்புகளில் தோழர் அன்பரசும் இணைந்துவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது’
இவ்வாறு தோழர் அன்பரசை நினைவு கூருகின்றார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சங்கத்தின் செயற்பாடுகள் உயிர்போடு பயணம் செய்யும் காலங்களில் எல்லாம் தோழர் அன்பரசு அதனுடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
மலைவாழ் மக்கள் பழங்குடியினர் என்று மிகவும் அடித்தட்டு விளம்பு நிலை மக்களின் தளங்கள்தான் தோழர் அன்பரசன் அதிகம் கவனம் பெற்ற இடங்களாக இருக்கின்றன.
தொழில் முனைவராக தன்னை உருவாக்கிக் கொண்டு தொழிசாலை நகரமாக அதிக தொழிலாளர்களை தொழிற் சங்கங்களை உள்ள கோயம்புத்துரில் தொழிலாளர் நலன்களுக்காக இடையறாது போராடிக் கொண்டிருந்து தோழர் அன்பரசின் செயற்பாடுகளை அவர் தோழர்கள் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கான அடித்தளங்களை அவர் அங்கு ஏற்படுத்திச் சென்றுள்ளார்.
ஈழவிடுதலை அமைப்புக்கள் ஒன்றிற்குள் உள் படுகொலை உச்சமாக இருந்து வேளை கவிஞரும் திரைப்பட நடிகருமான ஈழத்தவர் ஒருவரை நான் சார்ந்த ஈபிஆர்எல்எவ் இடம் பாதுகாக்க கோரிய போது அவரை மரணத்தின் வாயிலில் இருந்து காப்பாற்றி தலமறைவாக வைத்திருந்ததும் இதே கோயம்புத்தூர்தான்.
இதில் தோழர் அன்பரசனின் துணிச்லான உறுதியான செயற்பாடு அந்த கவிஞரை நடிகரை இன்று வரை வாழ்வதற்கு வழியும் வகுத்திருக்கின்றது.
நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படாவிட்டாலும் அடுத்த முறை தமிழ்நாடு செல்லும் போது கொங்கு மட்டலத்தில் அதிக நேரம் செலவிடுவோம் என்ற சென்னை தமிழ் நாட்டுத் தோழர்களின் திட்டம் கொரனா என்று பயணத் தடைகளை ஏற்படுத்தாவிட்டிருந்தால் தோழர் அன்பரசை நிச்சயம் நான் சந்தத்து இருப்பேன்.
அவரும் இந்த பேரிடரில் சிக்குண்டு மரணத்தை தழுவி இருக்க மாட்டார். காலம்தான் எவ்வளவு பாதைகளை வழமையிற்கு மாறாக மாற்றி அமைத்து விட்டது.
தோழரே நீங்கள் மனித குலத்திற்கு தமிழ் நாட்டு மக்களுக்கு கோயம்புத்தூர் வாழ் விளிம்பு நிலை மக்களுக்கு ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் உரிமையிற்காக நேர இடைவெளி இன்றி நகைச்சுவையை தங்களுடன் சுமந்த வண்ணம் பயணித்த அந்தக் காலம் வரலாற்றில் பதியப்படும் பயணிப்போம் தங்களின் பாதையில்.
மரியாதை கலந்த அஞ்சலி தோழருக்கு.