அதற்கு அவர்களுடைய பதில், “சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் கோட்டபாய ராஜபக்ஸவைத் தெரிவு செய்திருப்பதற்குக் காரணம், அடுத்த அரசாங்கம் ஒன்றுக்காகவே. அதாவது புதிய அரசாங்கமொன்றுக்காக. ஜனாதிபதியாகக் கோத்தபாயவைத் தெரிவு செய்தால், அதற்குப் பிறகு மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கலாம் என்ற நம்பிக்கையில். இதை நீங்கள் கடந்த ஆண்டில் நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் இருந்து பார்க்க வேண்டும். உள்ளுராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவைக் கொடுத்து, அதை வெற்றியடைய வைத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு இப்பொழுது ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளரை ஆதரித்து வெற்றியடையச் செய்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் சொல்கிறோம், அடுத்த அரசாங்கத்தை நோக்கித்தான் மக்கள் சிந்தித்திருக்கிறார்கள் என்று.
ரணில் அரசாங்கத்தில் பல எதிர்பார்ப்புகள் இருந்தது. பெரிய நம்பிக்கை கூட இருந்தது. ஐ.தே.கவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தமிழ், முஸ்லிம் மற்றும் மேல்நாட்டு (மலையக) கட்சிகளும் சேர்ந்த அரசாங்கம் பல நல்ல வேலைகளைச் செய்யும். யுத்தம் முடிந்த பிறகு ஒரு நல்ல அரசாங்கமாகவும் நல்ல ஆட்சியாகவும் இருக்கும் என்று ஏராளமாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த நம்பிக்கை சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் வெளியுலகத்துக்கும் இருந்தது. அந்த அரசாங்கம் அமைக்கப்பட்ட நாட்களை நினைத்துப் பாருங்கள். அது எவ்வளவு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று. நாட்டின் பெரிய கட்சிகள் இரண்டும் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்திருந்தன. யுத்தம் முடிந்த பிறகு எங்களுடைய இந்த நாட்டைச் சரியாக வழிப்படுத்துவதற்கு விசுவாசமான ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று நம்பினோம். அதை எல்லோரும் கூடிச் செய்யப்போகிறார்கள். இப்படித்தான் நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக இருக்கும் நிலை ஏற்படப்போகிறது என்று ஊருக்குள் ஆட்கள் எல்லாம் பேசிக் கொண்டார்கள். ஆனால், இதையெல்லாம் செய்வதற்குப் பதிலாக அவர்களுக்குள்ளேயே – அரசாங்கத்துக்குள்ளேயே – பிரச்சினைப்பட்டார்கள். கூட்டுக்கட்சிகள் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அதையெல்லாம் எப்படியோ விரைவில் சரிப்படுத்திக் கொள்வார்கள் என்றே சனங்கள் எதிர்பார்த்தார்கள். எங்களுக்கும் அப்படியான நம்பிக்கை இருந்தது. ஆனால், எதிர்பாராமல் ஒரு நாள் முன்னாள் ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில் பிரச்சினைகள் வெடித்தன. அதோடு எல்லாமே உடைந்து நொறுங்கி விட்டது. நல்ல விசுவாசத்தோடு நாட்டை நேசிக்கும் எவருக்கும் அது துக்கத்தையே தந்தது. அதற்குப்பிறகு அந்தப் பிரச்சினைகளின் இழுபறிதான் உங்களுக்கும் நன்றாகத் தெரியுமே. என்ன நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அதெல்லாம் நடந்தது. அதைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று யாரும் விசுவாசமாக முயற்சிக்கவில்லை. ஆளுக்கு ஆள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்கள். நாட்டில் ஒன்றுமே உருப்படியாக நடக்கவில்லை. இந்த ஏமாற்றம்தான் இப்போழுது ராஜபக்ஸ அரசாங்கத்தின் பக்கமாக மக்களைத் திருப்பியது. இதை உள்ளுராட்சித் தேர்தலிலேயே சனங்கள் வெளிப்படுத்திக் காட்டினார்கள். இதைக்கூட இந்த நல்லாட்சிக்கான கூட்டமைப்பின் ஆட்கள் கவனத்தில் கொள்ளவில்லை. உண்மையில் அது மக்களால் விடுக்கப்பட்ட ஒரு சிவப்பு எச்சரிக்கையே. அந்த எச்சரிக்கையை அவதானித்து மாற்றங்களைச் செய்திருந்தால் இந்த மாதிரியான பின்னடைவு நல்லாட்சித் தரப்புக்கு வந்திருக்காது. இப்பொழுது சிங்கள மக்கள் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். இதைப்பார்க்கும்போது சிங்கள – சிங்களம் அல்லாத மக்கள் என்ற மாதிரி ஒரு தோற்றப்பாடு உங்களுக்குத் தோன்றும். ஆனால், நாங்கள் இதை அப்படிப் பார்க்க முடியாது என்றுதான் எண்ணுகிறோம். அங்கே சஜித் பிரேமதாசவுக்கும் 36 லட்சம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அது சிங்கள மக்களுடைய வாக்குகள். அப்படியென்றால், அந்த மக்கள், தமிழ், முஸ்லிம் மேல்நாட்டு (மலையக) மக்களோடுதான் சேர்ந்து நிக்கிறார்கள் இல்லையா. இதைப்போல ஜே.வி.பியோட வாக்குகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படிப்பார்த்தால் இது இனப் பிரிவினைக்கு ஆதரவு – எதிர் எண்ட கணக்கில்லை.
“இருக்கலாம். ஆனால் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் மனதில் அப்படியொரு எண்ணம்தானே இருக்கிறது. இது சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கான நிலைப்பாடு என்ற மாதிரி? அப்படி உங்களுக்குத் தோன்றவில்லையா?”
“இல்லை. இது தப்பு. இந்தத் தேர்தலை ஒரு பக்கமாக வைத்துக் கொண்டு பழைய விசயங்களைப் பாருங்கள். முந்திய காலத்தில் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் இந்தப் பிரச்சினையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். தமிழாக்களுக்கு பிரச்சினை இருக்கு. அதுக்கு சொலிசன் (தீர்வு) காண வேணும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். 1994 இல் சந்திரிகா அவர்கள் என்ன சொன்னார்? தமிழாக்கள்ட பிரச்சினை நிச்சயமாகத் தீர்த்து வைக்கணும் என்று. அதுக்கு சிங்கள மக்கள் ஆதரவளித்தார்கள். 64 வீதம் வாக்குகள் அவருக்கு கிடைத்தது. அவர் நீலன் திருச்செல்வத்தோடு சேர்ந்து ஒரு தீர்வு திட்டம் உருவாக்கினார் அல்லவா. அதுக்கு சிங்கள மக்கள் மறுக்கேல்ல. ஆனால், ஐ.தே.க. மறுத்தது. புலிகள் மறுத்தார்கள். சம்மந்தன் நிராகரித்தார். பிறகு பெரிய யுத்தமே வெடித்தது. ஆனாலும் யுத்த நிறுத்தத்தைப்பற்றிய பேச்சுகள் எல்லாம் நடந்தன. இதற்குப் பிறகு மகிந்த ராஜபக்ஸ வந்தார். அவர் சொன்னார், 13 பிளஸ் கொடுக்க வேணும் என்று. சிங்கள ஆட்கள் இதுக்கு மறுப்புச் சொல்லேல்ல. ஆனால், எதிர்க்கட்சி ஆட்கள்தான் இதை வேற மாதிரிப் பேசி எல்லாத்தையும் குழப்பினது. யு.என்.பி. ஆட்கள் ஒன்றைச் சொன்னால் எஸ்.எல்.எவ்.பி ஆட்கள் இன்னொண்டை செய்வாங்கள். இவங்க ஒண்டைப் பேசினா அவங்கள் அதை மறுத்துப் பேசுவாங்க. இப்ப பாருங்கள், புதிய அரசாங்கம் ஒன்று வந்திருக்கு. இது எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் என்று சொல்லியிருக்கு. அதைக் கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம்.” என்றனர் விருந்தாளிகள்.
“நீங்கள் இன்னும் ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பெரும்பான்மையான வாக்குகளால் கோத்தபாய ராஜபக்ஸ வெற்றியடைந்திருக்கலாம். ஆனால் தமிழ் மொழிச் சமூகங்களினால் அவர் அங்கீகரிக்கப்படவில்லை என்பது அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் அவர் மீதான நம்பிக்கைச் சரிவை உண்டாக்குகிறது அல்லவா! அவரிடமுள்ள பன்மைத்துவத்துவப் பண்பாட்டு அடையாளத்தைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறதே? என்று கேட்டேன்.
ஒரு கணம் எல்லோரும் மௌனமாக இருந்தனர். பிறகு சொன்னார்கள் “தமிழ் மக்களிடமும் முஸ்லிம் மக்களிடமும் ஜனாதிபதியைக் குறித்த கேள்விகள் உள்ளனதான். அதை நாங்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஜனாதிபதியும் சிந்திக்க வேண்டும். எல்லாச் சமூகத்தினருடைய அங்கீகாரத்தை அவர் பெறுவதே அவருக்கு மதிப்பாகும். ஆட்சிக்கும் சிறப்பைத் தரும். இதை அவர் ஆழமாகச் சிந்தித்தால் இனிவரும் காலத்தில் அதற்கேற்றவாறு நடத்தைக்கோலங்களை மாற்றிக் கொள்ளுவார். அப்படி மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ், முஸ்லிம் மக்களுடைய அபிமானத்தையும் பெற முடியும். இதைக் குறித்துச் சிங்கள மக்களும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால்தான் நாட்டில் முரண்பாடுகள் குறையும். மற்றவர்களுடைய கழுத்தை நசுக்கிக் கொண்டு நாம் எப்படி நீதியுடன் நடக்க முடியும்” என்றனர்.
“ஆனால், புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதுக்குப் பிறகு இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினரைச் சந்தித்துப் பேச முற்படவில்லையே. மக்களுக்குக் கூட ஒரு நல்ல சேதியைச் சொல்லவில்லை. ஆறுதல் வார்த்தைகளாவது சொல்லியிருக்கலாம். நல்ல சேதியாக, ஒரு அடையாளமாக படைக்கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை விட்டிருக்கலாம். சில அரசியல் கைதிகளையாவது (சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலையாளர்களை) விட்டிருக்கலாமல்லவா! அப்படிச் செய்திருந்தால் தமிழ் மக்களின் மனதில் உள்ள யுத்த நினைவுகள் மெல்ல மறையலாமே”
“இதை நாங்கள் மறுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்றால் நிறைய யோசிப்பார்கள். நிறைய எதிர்பார்ப்பார்கள். அப்படித்தான் தமிழாக்களும் இருக்கிறார்கள். ஆனால், இது மாறும். நாங்கள் எல்லாருமாக மாற்றுவோம். இந்த ஜனாதிபதித் தேர்தலை மட்டும் வைத்துக் கொண்டு எந்த இறுதி முடிவுக்கு வரக்கூடாது. தேர்தல் என்பது அந்த நேரத்தில் வீசுகிற அலையைப்போன்றது. அந்த அலையை யார் உருவாக்குகிறார்களோ அவர்களின் பக்கமாக மக்கள் செல்வார்கள். இது மாறும். இன்னொரு நிலைக்குப் போகும். எல்லாம் நம்முடைய கையில்தான் இருக்கு.
சில வேலைகளை அரசாங்கம் செய்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யும் என்று நம்புகிறோம். அது ஒரு நம்பிக்கைதான். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்தால் நாங்கள் மாகாணசபைத் தேர்தலின்போது அதைக்காட்டுவோம். அதுக்குப் பிறகு வாற உள்ளுராட்சித் தேர்தலில் அதைச் செய்வோம். அரசாங்கத்துக்கு புத்தி சொல்லக்கூடிய ஆட்கள் வேணும். அதைச் செய்தால் பல பிரச்சினைகள் தீரும். முதலில் இந்த அரசாங்கம் சனங்களுடைய பொருளாதாரத்தைப் பற்றியே யோசிக்கிறது. பிறகு பாதுகாப்பை. இரண்டும்தான் நம்முடைய கண்கள் என்பது அரசாங்கத்தின் பார்வை. ஆனால், நாங்கள் கொஞ்சம் பொறுத்துப் பார்த்தால் என்ன?” என்று கேட்டனர்.
“பொறுத்துப் பார்க்கலாம்தான். ஆனால், இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் ஏதோ சாட்டுப்போக்குகளைச்சொல்லி காலத்தைக் கடத்தி வந்திருக்கிறார்கள். இப்பொழுதும் அப்படி நடக்காது என்பதற்கு யார் உத்தரவாதம்? இதனால்தான் தமிழ் பேசும் மக்கள் பதற்றப்படுகிறார்கள்”.
“ஒரு சிறிய அளவிலான முன்னேற்றத்தைக் காட்டினால் சிறப்பு என்பது உண்மையே. அதைப்பற்றி நாங்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம். சிங்கள மக்களிடத்தில், இனப்பிரச்னை வேண்டாம். அதை தீர்த்து வைச்சிடணும். அப்பத்தான் நிம்மதியாக இந்த நாட்டில் இருக்க முடியும் என்று நம்புறாங்கள். ஆக மொத்தத்தில் ஒன்றுமையாக நின்றால் நாங்கள் எல்லாரும் இணைந்து பல வேலைகளைச் செய்யக் கூடியதாக இருக்கும்” என்றனர்.
“அதற்கு முதல்ல எதையாவது நல்ல முறையில் செய்ய வேணும். அப்பதான் ஆட்கள் புதிய ஜனாதிபதியில் நம்பிக்கை வைப்பார்கள். இதைப்பற்றி நீங்கள் ஏன் ஜனாதிபதியோடு பேசிச் சொல்ல முடியாது?” என்று கேட்டேன்.
“நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆனால், தமிழாக்கள்ட சிந்தனை முறைக்கும் சிங்கள ஆக்கள்ட சிந்தனைக்கும் இடையில் வேறுபாடிருக்கு. அதைக் கவனித்துத் திருத்திக்கொள்ளுங்கள் என்று சொல்வோம். இதை விட ஏராளம் சிங்களச் சகோதரர்கள் மாற்றம் வேணும். பிரச்சினை எல்லாம் தீர்க்கப்பட வேணும். நியாயம் தெளிவாகச் சொல்ல வேணும் என்று சொல்கிறார்கள். இருந்து பாருங்கள், பல மாற்றங்கள் நிச்சயமாக வரும். நம்புங்கள்” எனறு விடைபெற்றுச் சென்றனர்.
அவர்கள் விடைபெறும்போது சிலருடைய கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. நிச்சயமாக நாங்கள் இந்த நாட்டில் ஒரு நல்ல அமைதியை உருவாக்குவோம் என்று சொல்லிக் கைகளைப் பற்றிப் பிடித்தார்கள். நல்ல சகுனம்தான்.
அவர்களுடைய கோணத்தில் அது சரியானது. ஆனால், பொது நிலைப்பட்டு ஒரு விடயத்தைப் பார்க்கும்போது பல விடயங்களில் அரசாங்கம் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டியுள்ளது. அப்படிச்செய்தால்தான் அரசியல் சமநிலை பேணப்படும். அது அனைத்து வளங்களுக்கும் உயிர்களுக்கும் அவசியமானது. அதைப்போல தமிழ், முஸ்லிம் தரப்பினருடைய அணுகுமுறைகளும் மாற்றம் காண வேண்டும். எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதா அல்லது தண்ணீரை ஊற்றி அதை அணைப்பதா என்று.