அடிப்படையிலேயே இதுவொரு நல்ல நகர்வாகப் பார்க்கப்படுகின்றது. இரண்டு சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அணிகளும் ஒருமேசையில் அமர்வது, நல்லதொரு முன்மாதிரி என்பதை மறுக்க முடியாது. ஆனால், தமிழ்த் தரப்பும் முஸ்லிம்களும் இதை இரு வெவ்வேறு கோணங்களில் நோக்குகின்றன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகளிடையே அண்மைக்காலமாக கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் இடம்பெற்ற போது, இந்த முரண்பாடுகள் துருத்திக் கொண்டு வெளியில் வந்தன.
அந்தவகையில், யாழ். ஒன்றுகூடல் என்பது, மீண்டும் தமிழ்க் கட்சிகள் அமர்ந்து பேசுவதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இருப்பினும், இந்தக் கூட்டத்தில் எல்லாத் தமிழ்க் கட்சிகளும் பங்குபற்றவில்லை. அதுவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான தமிழரசுக் கட்சி, இதில் பங்கேற்கவில்லை என்பது, மிகப் பெரும் வெற்றிடமாகத் தெரிகின்றது.
இதேவேளை, முஸ்லிம் அரசியல் அணிகளில் இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே, யாழ். சந்திப்பில் கலந்து கொண்டிருக்கின்றது. இது, முஸ்லிம் சமூகத்துக்குகள் இருவேறு கோணங்களில் நோக்கப்படுகின்றது.
முதலாவது, தமிழ்த் தரப்பினருடன் முஸ்லிம் கட்சியொன்று உரையாடலில் ஈடுபடுவது, நல்லதோர் ஆரம்பமாக அமையும் என்று, சொற்ப அளவான முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர்.
இரண்டாவது, முஸ்லிம் காங்கிரஸ் மட்டும், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என, ஏனைய முஸ்லிம்கள் கருதுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் பிரதான முஸ்லிம் கட்சிதான்! ஆனால், முஸ்லிம் அரசியல் தரப்பு என்பது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளை மட்டுமன்றி, இன்னும் பல அணிகளையும் அதேபோன்று பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாகவே அமையும். குறைந்தபட்சம், பிரதான முஸ்லிம் கட்சிகளாவது இவ்வாறான கலந்துரையாடல்களில் உள்வாங்கப்பட வேண்டும்.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் சற்று வித்தியாசமானது. கடந்த 10 வருட அரசியல், முஸ்லிம்களைப் பகடைக் காய்களாக்கியே, தேசிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளமை கண்கூடு. எனவே, முஸ்லிம்கள் மிகக் கவனமாக, அரசியல் நகர்வுகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது.
சிறுபான்மைச் சமூகங்கள் என்ற வகையிலும் எல்லா அடிப்படைகளிலும் பிணைக்கப்பட்ட இனக் குழுமங்கள் என்ற வகையிலும், தமிழ் – முஸ்லிம் உறவு தவிர்க்க இயலாதது. முஸ்லிம்கள் உறவாட வேண்டிய சமூகங்களின் வரிசையில், தமிழர்களுக்குத்தான் எப்போதும் முன்னுரிமை இருக்க வேண்டும்.
அத்துடன், தமிழர்களோடு கூட்டிணைந்து செயற்படுவது, முஸ்லிம்களின் அரசியல் பலத்தை அதிகரிக்க வழிகோலும் என்பதையும் மறுக்கவியலாது.
ஆனால், அதற்காக தமிழர்களுடன் அரசியல் ரீதியாக இறுக்கமாவதன் ஊடாக, பெரும்பான்மைச் சமூகம் சார்ந்த அரசியல் தரப்பில் இருந்து தூரமாவது, இன்றைய நிலைவரப்படி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க மாட்டாது. இதற்கான காரணங்களை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.
அடுத்த விடயம், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், சாணக்கியமான அரசியல் தலைவர் என்றாலும், முஸ்லிம்களின் குறிப்பாக தமிழரின் இனப்பிரச்சினை விவகாரத்தோடு பெரிதும் தொடர்புபட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களின் மனக்கிடக்கைகள், நிலைப்பாடுகள் போன்றவற்றைத் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடியவரா என்பதில் ஐயமுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், எப்போதும் தமிழர் அரசியலோடு தொடர்பில் இருப்பவர். இதற்கு முன்னரும், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நடந்த சந்திப்புகளில் அவர் பங்குபற்றி இருக்கின்றார்.
ஆனால், தமிழர்களின் அபிலாஷைகளைத் தமிழ் அரசியல்வாதிகள் முன்வைத்த அளவுக்கு, முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஹக்கீம் முன்னிறுத்தியதாக நினைவில்லை. இருப்பினும், தமிழ் அரசியல்வாதிகள் அண்மைக் காலமாக, முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்து வருகின்றார் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இதேவேளை, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. இதுதான் யதார்த்தமும் ஆகும். இதைத்தவிர, பொதுவாக சிறுபான்மையினரின் நலன்களை முன்னிறுத்திச் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை; அல்லது, அதற்காக அழைக்கப்படவில்லை என்பது பெரும் குறைபாடாகும். அதனால், இவ்விரு மாகாணங்களிலும் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடு, சரியாக முன்வைக்கப்பட்டதா என்பதில் நிறையவே சந்தேகம் இருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வரும்போது, இணைந்த வடகிழக்கை மையமாகக் கொண்ட ஒரு தீர்வுப் பொதியையே, தமிழ்த் தேசியம் வேண்டி நிற்கின்றது. இதை வெவ்வேறு பெயர்களில் அவர்கள் இன்றுவரை கோரி வருகின்றனர். குறைந்தது, ஒவ்வொரு நாளும் இதுபற்றிய ஓர் அறிக்கையாவது வெளியாகிக் கொண்டே இருக்கின்றது.
தமிழர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்ற ஒரு சமூகம் என்ற அடிப்படையில், அவர்கள், தமது அபிலாஷைகளை நிறைவேற்ற முனைவது, எந்த வகையிலும் தவறில்லை.
ஆனால், இந்த விடயத்தில் முஸ்லிம்களோடு கலந்துபேச முற்படுகின்ற போது, முஸ்லிம்களின் கருத்துகளும் சரியாக உள்வாங்கப்பட வேண்டும். அப்படியென்றால், ஒரேயொரு தலைவரை மட்டும் அழைத்து, முஸ்லிம்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியாது.
மறுபுறத்தில், ஏனைய முஸ்லிம் தலைமைகள், அணிகள் இவ்வாறான சந்திப்புகளுக்கு வருவார்களா என்பது இன்னுமொரு கேள்வியாக உள்ளது. எதுஎவ்வாறாயினும், தமிழ் மக்களது அபிலாஷைகளுக்கு முஸ்லிம்கள் குறுக்காக நிற்க மாட்டார்கள்; நிற்கவும் முடியாது. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது என்பது, இவ்விரு மாகாணங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் நிலைப்பாடாகும்.
இந்த நிலைப்பாட்டை, எந்த முஸ்லிம் தலைவராலும் மாற்றியமைக்க முடியாது என்பதை தமிழ்த் தரப்பு விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஏன், வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதற்கு, முஸ்லிம்கள் தரப்பில் ஏகப்பட்ட நியாயங்களும் காரணங்களும் உள்ளன. அதிலுள்ள நியாயங்களை யாரும் மறுதலிக்க முடியாது.
சுருங்கக் கூறின், இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் பட்ட அனுபவங்கள் மிகக் கசப்பானவை. தமிழர் விடயத்தில், ஆங்காங்கே முஸ்லிம்கள் தரப்பிலும் சில தவறுகள் நிகழ்ந்தன என்பதை இங்கு பொறுப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆயினும், அதைவிடப் பெரிய வலிகளை முஸ்லிம்கள் இக்காலத்தில் அனுபவித்தார்கள். வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், பள்ளிவாசல் படுகொலைகள், கடத்தல், கப்பம் பறிப்புகள் என ஏராளம் கதைகள் உள்ளன. தமிழர் விடுதலைப் போராட்டத்தில் கறைபடியச் செய்த சம்பவங்களாகவும் இதனைக் கொள்ளலாம்.
ஆதலால், தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் பிரிய வேண்டும் என்ற மனநிலை முஸ்லிம்களுக்கு எப்போதுமே இருந்தது. அவை பிரிந்த பிறகு, அதன் பலாபலன்களை முஸ்லிம் சமூகம் ஓரளவுக்கு அனுபவித்தது. கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களும், அபிவிருத்தி சார்ந்த பல அனுகூலங்களைப் பெற்றிருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி, மீண்டும் வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லை. அதில் தமிழர்களுக்கு இருப்பது போன்ற எந்த அனுகூலமும் முஸ்லிம் சமூகத்துக்கு இல்லை.
எனவே, இதுபோன்ற விடயங்களை முஸ்லிம்கள் தரப்பில் பேசுகின்றவர்கள் நேர்மையான முறையில், தமிழர்களின் மனங்கள் புண்படாத விதத்தில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், யாழ். கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அதைச் செய்ததாகத் தெரியவில்லை.
அப்படி அவர் தெளிவுறச் சொல்லியிருந்தால், தமிழ் அரசியல்வாதி ஒருவர், “அப்படியென்றால் ஹக்கீம் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு உடன்படுகின்றாரா” என்ற கேள்வியொன்றை, அதன் பிறகு கேட்டிருக்க மாட்டார்.
யதார்த்தமாகச் சிந்தித்தால், தமிழர்களோடும் சிங்கள சமூகத்தோடும் இறுக்கமான சமூக உறவையும் அளவான அரசியல் இணக்கப்பாட்டையும் கொண்டிருப்பதே முஸ்லிம்களுக்கு நல்லது.
இன்று, சிங்களத் தேசியம் முஸ்லிம்களை நெருக்குகின்றது என்பதற்காக, தமிழர்களுடன் உறவாடுவதோ, பெருந்தேசியத்தோடு இணைந்து கொண்டு தமிழர்களை விமர்சிப்பதோ காத்திரமான அரசியலும் இல்லை; நாகரிகமான போக்கும் இல்லை.
அதுபோல, ரவூப் ஹக்கீமைப் போல, ஏனைய முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை ஏனைய சமூகங்களுடன் பேசுவதற்கு முன்வர வேண்டும். அங்கு முன்வைக்கப்படும் கருத்துகள், அந்தத் தலைமைகளின் கருத்துகளாக இருக்காமல், சமூகத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துபவர்களாக மட்டும் அவர்கள் இருக்கவும் வேண்டும்.