மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லீம் பெரியவர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட விடயங்கள்: ‘நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனது வீட்டின் பின்புறம் வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளினால் இப்போது பாதுகாக்கப்பட்ட காடாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு மண்வெட்டி செய்ய பிடி தேவை என்றால் கூட என்னால் பின்னுக்கு இருக்கிற மரத்தினை வெட்ட முடியாது. முசலி தெற்குப் பகுதியில் புதிதாகப் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்களும் வடமாகாணத்தினைச் சேர்ந்தவர்களே. உங்களுடைய முதலமைச்சர் ஐயா ஏன் எங்களுடைய பிரச்சினைகள் பற்றி எதுவும் பேசுவதில்லை. ஒரு கை தட்டினால் சத்தம் கேட்குமா? எல்லாரும் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரலாமே?’
எழுக தமிழ் என்ற தமிழ் மையவாத நிகழ்வினைப் பற்றிக் கேள்விப்பட்ட போதும் அது தொடர்பான பதிவுகளைப் பார்த்த போதும் எனது கண் முன்னே அந்த முஸ்லீம் பெரியவர் தான் முதலிலே தோன்றினார். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது என்னை நோக்கிப் பலர் ரிசாத் பதியுதீன் தானே முஸ்லீம்களுக்கு இருக்கிறார் என்று சொல்வதும் எனக்குக் கேட்கிறது. ரிசாத் பதியுதீன் என்ன செய்கிறார், யாருக்காகச் செய்கிறார் என்பதனை நான் கவனத்தில் எடுக்கப் போவதில்லை. அவர் செய்வது பிழையாகவேயும் இருக்கட்டும். தமிழ் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற வகையிலும், வடமாகாணத்தில் வாழும் பெரும்பான்மை சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற வகையிலும் இந்த முஸ்லீம் பெரியவரின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியது எமது பொறுப்பு. எமது அரசியல் சிந்தனை எவ்வாறு குறுகிய தமிழ்த் தேசியவாதத்தினுள் சிக்கிப் போய் இருக்கிறது என்பதற்கு அந்த முஸ்லீம் பெரியவரின் கேள்வி ஒரு எடுத்துக்காட்டு.
வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டிலே வாழும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் ஏன் பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் சில தரப்புக்களுக்குக்கும் (காணாமற் போனோர் தொடர்பான விடயங்கள்) பொதுவான பிரச்சினைகள் சிலவற்றினைத் தமிழ்த் தேசியவாதம் என்ற வில்லையினூடாக சமூகத்துக்கும் மக்களுக்கும் முன்வைப்பது மிகவும் அபாயகரமான செயற்பாடு. இதனால் சமூகங்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொள்ளப் போவது இல்லை. சமூகங்கள் மேலும் துருவப்படும் நிலைமையினையே இது உருவாக்கும். இதனையே எழுக தமிழ் (பெயரிலேயே தெரிகிறது இந்த அரசியல்) என்ற நாளை நடைபெறப் போகும் நிகழ்வு செய்யப் போகிறது. இது அரசு எவ்வாறு தனது அடக்குமுறைகளைப் பல தரப்பட்ட வழிகளிலே மேற்கொள்கிறது என்பதனை மறைக்கும் ஒரு செயற்பாடு. இது எமது விடுதலைச் சிந்தனையின் போதாமைகளையே வெளிக்காட்டுகிறது.
எழுக தமிழ்ப் பேரணியிலே பல நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
காணாமற் போனோர் தொடர்பாக, பௌத்த மயமாக்கம் தொடர்பாக, இராணுவ மயமாக்கம், நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக, சமஸ்டித் தீர்வு தொடர்பாக –
ஆனால் இவை எல்லாவற்றினையும் ஒரு குறுகிய தமிழ்த் தேசியவாத நிகழ்ச்சிநிரலின் ஊடாக ஏற்பாட்டாளர்கள் முன்வைப்பதனை நாம் இங்கு நோக்க வேண்டும்.
இந்தியாவிலே தலித்துக்கள் முஸ்லீம்கள், கிறீஸ்தவர்கள், பழங்குடி மக்கள் போன்றோருக்கு எதிராகச் செயற்படும் விஸ்வஹிந்து பரிசத் போன்ற தீவிரமான இந்துத்துவ பாசிச சிந்தனையினைப் பிரதிபலிக்கும் அமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இந்துத்துவத்தினைத் தனது ஆசிரியர் தலையங்களிலே கக்கி எழுதும் வலம்புரிப் பத்திரிகை, 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஐ.நா. போர்க்குற்ற அறிக்கையிலே அரசினாலும் இராணுவத்தினராலும் மட்டும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களைப் பற்றிய பகுதிகளை மட்டும் (அதனுடைய அர்த்தம் விடுதலைப் புலிகள் பற்றியவற்றை அல்ல) தாம் வரவேற்பதாக அறிக்கை வெளியிட்ட, கடந்த காலம் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் சுயவிமர்ச்னம் எதனையும் முன்வைப்பதனை ஊக்குவிக்காத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், இலங்கையின் வரலாற்றினையும், இலங்கையிலே தமிழ் அடையாளம் தோன்றிய முறை பற்றியும் எந்த விதமான புரிதல் இல்லாமல் தமிழர்கள் வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு தேசமாகவும், வடகிழக்கினைத் தாயகமாகவும் கொண்டிருக்கிறார்கள் எனப் பிரசாரங்களில் ஈடுபடுவோரும், அறிக்கைகள் வெளியிடுவோரும், சர்வேதச சக்திகள் தமது நவதாராளவாத, நவ காலனித்துவ நலன்களை முன்னிறுத்தி எமது பிரச்சினைகளைக் கையாள்கிறார்கள் என்பதனைப் பற்றிப் புரிதல் அற்ற வகையில் சர்வதேசமே எமக்கு விடுதலையைத் தரும் என்று சொல்வோரும் இந்தப் பேரணியினை ஏற்பாடு செய்வதிலே முன்னணியில் இருக்கிறார்கள். இந்தப் பேரணி குறித்தும், இதனை ஏற்பாடு செய்வோரின் அபாயகரமான அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம்.
எழுக தமிழ்ப் பேரணியிலே முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகளின் நியாயப்பாடுகளை நாம் ஏற்றேயாக வேண்டும். இது தொடர்பான அரசியல் முன்னெடுப்புக்களையும், போராட்டங்களையும் சிறுபான்மையினர் மத்தியிலும், நாடு பூராவும் உள்ள இடதுசாரி முற்போக்கு சக்திகள் முன்னெடுக்க வேண்டும். இதனுடைய அர்த்தம் இடதுசாரிகள் எதுவும் செய்யவில்லை என்பது அல்ல. (உதாரணம் அண்மையில் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் அரசியற் கைதிகளின் விடுதலை பற்றி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்). மாறாக நாம் மேலும் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக எமது மௌனமும் செயற்றிறன் குறைவும் அபாயகரமான, குறுகிய தேசியவாதத்தினை முன்னெடுக்கும் சக்திகளும், இனங்களுக்கு இடையில் பிளவுகளைக் கூர்மைப்படுத்த முயலும் சக்திகளும் அரசியல் வலுப்பெறுவதனையே ஊக்குவிக்கும்.
மகேந்திரன் திருவரங்கன்