‘எழுக தமிழ்’ என்ன சாதித்தது என்ற வினாவுக்கு, நியாயமான பதிலை எந்தத் தமிழ்த் தேசியவாதியாலும் வழங்கவியலாது. வேலைத்திட்டங்கள் அற்ற மக்கள் தேவைகளை முன்னிலைப்படுத்தாத உணர்ச்சிகர கோச அரசியலின் தொடர்ச்சியே ‘எழுக தமிழ்’.
இன்று பிரதேச சபைகளாலும், மாநகராட்சியாலும், மாகாண சபையாலும் செய்திருக்கக் கூடிய, மிக அடிப்படையான வேலைகளைக் கூடச் செய்ய இயலாதவர்கள் தான், ‘எழுக தமிழை’ நடத்துகிறார்கள். அவர்கள், அலங்கரித்த ஆசனங்களின் வழி, தமிழ் மக்களுக்குச் செய்தது என்னவென்பதை முதலில் சொல்லட்டும்.
தமிழ் மக்கள், அரசாங்கத்தைப் பற்றி விரக்தியுடன் உள்ளனர். தமிழ்த் தேசிய வாதிகளில் ஒரு பகுதியினர், அரசாங்கத்துடன் ஒத்துழைத்து எதையாவது சாதிக்கலாம் என்ற கனவில் உள்ளனர்.
இன்னொரு புறம், விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிறகு, தமிழீழக் கனவுக்கு உயிரூட்டித் தமிழ் மக்களிடையே ஓர் ஆதரவுத் தளத்தை உருவாக்கி, நாடாளுமன்ற, மாகாண சபை ஆசனங்களுக்குக் சூடேற்றக் கனாக்காணும் ஒரு பகுதியினரும் உள்ளனர். இவர்களுடைய சங்கடம், தாங்கள் பிரிவினையை ஏற்கவில்லை என்று தென்னிலங்கைக்கு ஒரு முகமும், தமிழீழக் கனவை முற்றாகக் கைகழுவவில்லை என்று வடக்குக்கு இன்னொரு முகமும் காட்டும் தேவையாகும்.
அதேவேளை, இவர்களுடைய நிதி வளங்களும் அரசியல் நெறிப்படுத்தலும் புலம்பெயர்ந்த தமிழ்த் தேசியவாதக் குழுக்களிடம் உள்ளன. எனவே தமிழீழம் பற்றிப் பேசுவதைச் சற்று மாற்றித் தமிழ்த் தேசம் – சிங்களத் தேசம் என்றவாறு பிரச்சினையை முன்வைப்பதும் தொட்டதற்கெல்லாம் சர்வதேசக் குறுக்கீட்டை நாடுவதும் சர்வதேச விசாரணை என்னும் மயக்கத்தைத் தமிழரிடையே உயிரோடு பேணுவதும் இவர்களுடைய வழமை. இப்போது புதிதாக ‘தமிழீழத் தேசிய இனம்’ என்று தொடங்கியுள்ளார்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மய்யப்படுத்திய ‘பொங்கு தமிழ்’ நிகழ்ச்சி முதலில் 2001இல் தைப்பொங்கலையொட்டி அரசாங்கம் விதித்த தடையை மீறி நடந்தது. அதன் வெற்றியின் பின், 2003 முதல், அது விடுதலைப் புலிகளின் பிரசார நிகழ்ச்சியானது. 2008இல் அது புலம்பெயர் சமூகத்தினரிடையே நடந்தது. 2009இல் விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் தமிழ்த் தேசிய இன உணர்வைக் கிளறும் நோக்குடைய அந்நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
2001 இல் தைப்பொங்கலையொட்டி அதை நடத்தியதால், தமிழர் எனக் குறிப்பிடாமல் தமிழ் என்றும் குறிப்பிட்டதன் மூலம் அதைத் தமிழ் மொழியுடனும் தைப்பொங்கலுடனும் தொடர்புள்ள ஒரு பண்பாட்டு நிகழ்வு என்று நழுவ முடிந்தது.
ஆனால், உள்ளீடற்ற வெற்றுக் கோசங்கள் சில யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசியலானது. அதைமிஞ்சி, பொங்குதமிழ் எதையும் சாதிக்கவில்லை; எது எவ்வாறாயினும், பொங்கு தமிழ் என்பது மொத்தத்தில் தமிழ்த் தேசிய வாய்ப்பந்தலன்றி வேறல்ல என்பது தெளிவாயிற்று.
1957 ஸ்ரீ எதிர்ப்பு, 1961 சத்தியாக்கிரகம் போன்ற திட்டமற்ற தமிழ்த் தேசிய முன்னெடுப்பு வரிசையில் பொங்கு தமிழும் எழுக தமிழும் குறிப்பிடத்தக்கன. பல்கலைக்கழக மாணவர்கள் தொடக்கிய பொங்கு தமிழ் வேலைத்திட்டமற்ற உணர்ச்சிப் பொங்கலாகப் பொங்கித் தணிந்தது.
எழுக தமிழின் கதையும் அவ்வாறே அமைந்தது என்பதை, முன்னைய எழுக தமிழ் காட்டியுள்ளது. இருந்தும் இன்னமும் ‘எழுக தமிழ்’ குறித்து எழுதி எழுதி மக்களை ஏய்க்கிறார்கள்.
முன்னைய இராஜபக்ச ஆட்சியில் தமிழ்த் தலைவர்கள் வாயே திறக்கவில்லை; வீதிக்கு இறங்கும் துணிவு அவர்களுக்கு இருந்ததில்லை. தமிழ்த் தலைவர்களுக்கு மக்களை வீதிக்கு இறங்கும் துணிவை வழங்கியவை வடக்கின் சமூக நீதிக்கான வெகுஜன இயக்கம் போன்றவற்றின் போராட்டங்களே.
அவை, மக்களை வீதியில் இறக்கியதோடு ஓயவில்லை. தொடக்கிய போராட்டங்கள் இறுதிவரை தொடருவதால் பல்வேறு பிரச்சினைகள் பொதுக் கவனத்துக்கு வந்துள்ளன. அது மக்களைச் செயலூக்கப்படுத்தும் பணி. இதுதான் இன்றைய தேவை.
ஆனால், நாம் உடன்படும் விடயமொன்று உண்டு. தமிழ்த் தேசியவாதிகளும் மக்களைத் தெருவுக்குக் கொண்டு வருவார்கள். அது மக்களை நடுத்தெருவில் விட்டுச் செல்ல மட்டுமே!