எழுக தமிழ் பேரணி ஏற்படுத்தியுள்ள அரசியல் அதிர்வுகள்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையினால், யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட “எழுக தமிழ்” பேரணி, அரசாங்கத்துக்கு நெருக்குதல் ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டு இருந்தால் அந்த நோக்கம் எந்தளவுக்கு நிறைவேறியது என்பதை, எதிர்காலத்தில் தான் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

அதாவது, அந்தப் பேரணியினால் உண்மையிலேயே அரசாங்கம் நெருக்குதலுக்கு உள்ளாகியதா? அதனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் காணப்படுகிறதா என்பது, வரப் போகும் நாட்களில்தான் காணக் கூடியதாக இருக்கும். இப்போதைக்கு அரசாங்கம், அதனை அவ்வளவாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்குச் சவாலாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் பலத்தை, கூட்டமைப்பின் தலைமைக்கு உணர்த்துவதுதான் பேரணியின் நோக்கமாக இருந்ததாயின், அந்த நோக்கம் பெருமளவில் நிறைவேறியதாக கருத முடிகிறது. ஏனெனில், மக்கள் பெருமளவில் பேரணியில் கலந்து கொண்டார்கள். அது யாழ்ப்பாணத்தில் முழு அடைப்புப் போராட்டமாகவே நடைபெற்றது. ஆனால், கூட்டமைப்பை தமிழ் மக்கள் கைகழுவிவிட்டார்கள் என்ற முடிவுக்கு வர, அவசரப்படவும் முடியாது.

மக்கள் பேரணியொன்று என்ற அர்த்தத்தில் பார்த்தால், இந்தப் பேரணியை பெரும் வெற்றியாகவே கருத வேண்டும். ஆனால், பேரணியின் மூலம் தமிழ் மக்கள் பேரவை, அரசாங்கத்துக்கு வலியுறுத்த வந்ததை, அரசாங்கத் தலைவர்கள் உணர்ந்தார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், பேரணியின் பெயரே, தென் பகுதிக்குத் தவறானதொரு செய்தியை வழங்கிவிட்டதாகத் தெரிகிறது. பேரணியைப் பற்றி அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்த கருத்து, அதற்கு சிறந்த உதாரணமாகும்.

தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்துவது, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளாக இருந்த போதிலும் பேரவை, பேரணியின் பெயரின் மூலம், அதனை ஓர் இனத்துவ போராட்டமாக மட்டும் சித்தரித்துவிட்டது. வலியுறுத்தப்பட்ட விடயங்கள் நியாயமற்றவை என, ஜனநாயகத்தை மதிக்கும் எவரும் கூற மாட்டார்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதே, வலியுறுத்தப்பட்ட பிரதான விடயமாகும். அடுத்ததாக, வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்தர்களே இல்லாத பகுதிகளில், பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதை நிறுத்தல், வட மாகாணத்திலிருந்து இராணுவத்தை வாபஸ் பெறுதல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், போர்க் காலத்தில் இராணுத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

அவற்றில், இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறுமா என்பது சந்தேகமே. ஏனையவற்றை நிறைவேற்றுவதில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் வேகம் காணப்படாவிட்டாலும், அரசாங்கமும் அந்த விடயங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்தக் கோரிக்கைகளை “எழுக தமிழ்” என்ற சுலோகத்துடன் முன்வைக்கும் போது, அரசாங்கமும் படையினருடன் சிங்கள மக்களும் அதனை ஓர் இனவாத போராட்டமாக பார்ப்பதைத் தவிர்க்க முடியாது.

அதனைத் தான் மனோ கணேசன் கூறுகிறார். “அவர்கள் ‘எழுக தமிழ்’ என்று கூறும் போது நாம் ‘எழுக ஸ்ரீலங்கா’ என்று கூறுவோம்” என மனோ கணேசன் கூறியிருந்தார். அதேவேளை இனவாதத்துக்கு மக்களை தள்ளிவிடக் கூடாது எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்தப் பேரணியைப் பற்றிப் பேசும் போது, மக்களை இனவாதத்துக்குள் தள்ளிவிடக்கூடாது என ஏன் கனேசன் கூற வேண்டும்? அதாவது, அவர் இந்தப் போராட்டத்தை ஓர் இனவாத போராட்டமாகத் தான் உணர்ந்து இருக்கிறார். ஒரு தமிழரே, அந்தப் பேரணியின் பெயர் காரணமாக இவ்வாறு சிந்திப்பதாக இருந்தால், சிங்களவர்கள் இந்தப் பேரணியை எவ்வாறு விளங்கிக் கொண்டிருப்பார்கள் என்பது சொல்லாமலே விளங்கும்.

தாம் சிங்கள மக்களுக்கோ, பௌத்த மதத்துக்கோ, அரசாங்கத்துக்கோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ எதிராக இந்தப் பேரணியை நடத்தவில்லை எனப் பேரணியில் நிகழ்த்திய தமது உரையின் போது முதலமைச்சர் கூறினார். சிங்கள மக்களுக்கும் பௌத்த மதத்துக்கும் எதிராக இது நடத்தப்படவில்லை என அவர் வாதிடலாம். ஆனால், இது உண்மையிலேயே அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிரான பேரணியல்ல என்று வாதிடுவது சரியா என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில், பேரணியின் போது அதன் பேச்சாளர்கள், அரசாங்கத்தின் செயற்பாடுகளையே விமர்சித்தார்கள். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என்று, தமிழ் மக்கள் பேரவை குற்றம் சாட்டுவதாக இருந்தால், அது யாருக்கு எதிரான குற்றச்சாட்டு? தமிழ்ப் பிரதேசங்களில் விகாரைகள் அமைப்பதைத் தடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டுவதாக இருந்தால், அது யாருக்கு எதிரான குற்றச்சாட்டு?

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைப் போலன்றி, தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை, தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம், அதனை உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சபையாகவும் செயற்படுகிறது. அதன் மூலம் அரசியலமைப்போடு சம்பந்தப்பட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரை செய்வதற்காக, நாடாளுமன்றக் குழுக்கள் சிலவும் நியமிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, திரை மறைவில் அரசாங்கத்தின் செயற்பாடுகளோடு இணைந்து இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், நாட்டுக்கு சமஷ்டி அரசியலமைப்பே வேண்டும் என அண்மையில் பகிரங்கமாகவே கூறியிருந்தார். அந்த நிலையில், தமிழ்த் தலைவர்கள், அதனையே கோரிக்கையாக வைத்து ஏன் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்ற கேள்வியும், சிங்கள மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.

அந்தக் கேள்வி நியாயமாக இருந்த போதிலும், தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கான அவசியமும் இருக்கிறது. ஏனெனில், அரசாங்கங்களினதும் அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடுகள் மாறலாம். குறிப்பாகத் தென் பகுதியில் இனவாதிகளின் கூச்சல்களினால், சிலவேளை அரசாங்கத்தின் நிலைப்பாடும் மாறலாம். ஏற்கெனவே, சமய சார்பற்ற அரசாங்கம் என்ற கருத்தை, லால் விஜேநாயக்க குழு முன்வைத்ததை அடுத்து, அதற்கு எதிராக தென் பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமஷ்டி பற்றிய கருத்தை சந்திரிகா முன்வைத்த போது, அதற்கு எதிராகவும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அரசாங்கம், தமது இருப்பைப் பாதுகாத்துக் கொண்டுதான் எதனையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே, நிலைப்பாடுகள் மாறலாம். அதனால் தமிழ்த் தலைவர்கள், தொடர்ச்சியாகத் தமது நிலைப்பாடுகளை வலியுறுத்துவதும் முக்கியமாகும். ஆனால், அது தென் பகுதி இனவாதிகளின் கையை ஓங்கச் செய்து, அரசாங்கம் ஏற்கெனவே கொண்டுள்ள நிலைப்பாடுகளில் இருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. அது தமிழ்த் தலைவர்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதன் மீது தங்கியுள்ளது.

அரசியல் தீர்வு என்று வரும் போது, ஆரம்ப காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய ஆயுதக் குழுக்களுக்கும் (அவர்கள் ஆயுதம் தாங்கியிருந்த காலத்தில்) மட்டுமே, திட்டவட்டமான இலக்கொன்று இருந்தது. அவர்கள் தமிழீழத்தைக் கோரினார்கள், அதன் பின்னர் தமிழ்த் தலைவர்கள், அரசியல் தீர்வென்று தாம் எதனைக் கோருகிறோம் என்பதைத் திட்டவட்டமாக முன்வைப்பதில்லை.

வட பகுதியிலிருந்து இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை, ஒரு போதும் நிறைவேறும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனைத்தான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவும், எழுக தமிழ் பேரணியின் பின்னர் கூறியிருந்தார். தென்பகுதித் தலைவர்களிடம் அதற்கு பலமானதோர் வாதம் இருக்கிறது. நாடெங்கிலும் இராணுவ முகாம்கள் இருக்க முடியுமாக இருந்தால், வட பகுதியில், குறிப்பாக பிரிவினைவாத ஆயுதப் போரொன்று இடம்பெற்ற ஒரு பகுதியில், இராணுவ முகாம்கள் ஏன் இருக்கக்கூடாது என, தென்பகுதி அரசியல்வாதிகள் பல முறை கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், சன நடமாட்டமுள்ள பகுதிகளில் இருந்து இராணுவப் பிரசன்னத்தை நீக்கி, இராணுவத்தை முகாம்களுக்குள் அரசாங்கத்தால் முடக்க முடியும்.

தமிழ் மக்கள் பேரவையின் இந்தப் பேரணியானது, வெறுமனே தமிழ் மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்துவதற்கான வழிமுறை மட்டுமல்ல, இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியினதும் வெளிப்பாடாகும். அதனால்தான், இந்தப் பேரணியின் செய்தி அரசாங்கத்தைச் சென்றடையும்முன் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சென்றடைய வேண்டும் எனப் பேரணியில் உரையாற்றிய ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார்.

சில விடயங்களில் தமிழ்த் தலைவர்களின் அவசரம், நியாயமற்றதாகத் தெரிந்தாலும், சில விடயங்களில் அந்த அவசரம் முற்றிலும் நியாயமானதும் சரியானதுமாகும். உதாரணமாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விடயத்தில், அவர்கள் அத்தனை பேரையும் பிணையில் விடுதலை செய்யலாம் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு முறை கூறியிருந்தார். புலிகள் அமைப்பின் தலைவர்களும் தளபதிகளாக இருந்தவர்களும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். புலிகளின் சிறப்பு அணியான சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவின் தளபதியாக இருந்த நகுலனும், அண்மையில் கைது செய்யப்படும் வரை, பல வருடங்களாக சுதந்திரமாகவே நடமாடினார். எனவே, அவ்வாறான தலைவர்களின் கட்டளையின் படி செயற்பட்டவர்களை பிணையிலாவது விடுதலை செய்ய முடியாது என்று கூற முடியாது.
(எம்.எஸ்.எம்.ஐயூப்)