இதன் எதிர்விளைவாக, அந்தப் பேரினவாதத் தேசியத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே, அதே ‘தமிழர்’ என்ற தேசிய அடையாளத்தின் கீழ், தமிழ் மக்கள் ஒன்றிணையத் தொடங்கியமையே இலங்கைத் தமிழ்த் தேசியத்தின் ஆரம்பம் எனப் பலரும் எடுத்துரைக்கிறார்கள்.
இதனால்தான், ஏ.ஜே. வில்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், இதைத் ‘தற்காப்புத் தேசியம்’ என்கிறார்கள். “தேசியப் பற்றின் எழுச்சித் தீக்கு, அந்தத் தேசத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்புச் செய்பவரை விட, வேறு யாரும் அதிகம் பங்களிப்பதில்லை” என்கிறார் ராம்சே மயர்.
ஆகவே, தமிழர்கள் என்ற அடையாளத்துக்கு எதிரான பேரினவாதத் தேசியத்தின் அடக்குமுறையே, தமிழர்கள் அந்த அடையாளத்தை மேலும் பலமாகச் சுவீகரித்துக் கொள்ள வழிவகுத்தது என்ற வாதத்திலும், உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால், ‘தற்காப்புத் தேசியமாக’ பிறப்பெடுத்த தமிழ்த் தேசியம், கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களாக, இலங்கைத் தமிழர்களை, அவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களையேனும், தம்மைத் தனித்ததொரு தேசமாக உணரச் செய்திருக்கிறது. இந்தத் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைப்பதில், தமிழ் அரசியலது பங்களிப்பு மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டத்தின் பங்களிப்பும் கணிசமானது.
ஆனால், சித்தாந்த ரீதியாகத் தமிழ்த் தேசியம், ‘தற்காப்புத் தேசியம்’ என்ற எல்லையை, இன்னும் முழுமையாக உடைத்தெறியவில்லை. உணர்வு ரீதியாகத் ‘தமிழ்த் தேசியம்’ பலமாக வேறூன்றியிருந்தாலும், ஒரு தேசம் பலமாகக் கட்டமைவதற்குத் தேசிய உணர்வு மட்டுமே போதாது. அதைத்தாண்டி, தொட்டுணரக்கூடிய அம்சங்கள் சார்ந்த விடயங்களும் பலமாகக் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த இடத்தில், ‘தமிழ்த் தேசியம்’ மிகவும் பின்னடைவைச் சந்தித்துவிட்டது என்ற உண்மையைத் தமிழ்த் தேசியவாதிகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
‘சிங்கள-பௌத்த’ தேசியம், இந்த இடத்தில் மிகத் தௌிவாக இருக்கிறது. இது ‘சிங்கள-பௌத்த’ நாடு என்ற கற்பிதத்துக்கான நியாயம், புனைகதை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே கட்டியெழுப்பப்படுகிறது.
ஏறத்தாழ 2,000 வருடங்களுக்கு மேற்பட்ட, ‘சிங்கள-பௌத்த’ நாடு இது என்ற கற்பிதம், இந்தப் புனைகதை வரலாற்றிலிருந்தே பிறக்கிறது. ஆனால், இந்த இணைந்த ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்துக்கு, 2,000 வருடத்துக்கு மேற்பட்ட கால வரலாறு கிடையாது என்பதுதான், கே.எம். டி சில்வா போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
இன்றுள்ள ‘சிங்கள-பௌத்த’ அடையாளம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அநகாரிக தர்மபாலவுடன் எழுந்த ‘புரட்டஸ்தாந்து – பௌத்த’ எழுச்சியோடு உருவாக்கப்பட்ட அடையாளம் என்பதுதான், கணநாத் ஒபேசேகர, ரிச்சட் கொம்ப்றிச், ஸ்ரான்லி ஜே தம்பையா உள்ளிட்ட மானுடவியலாளர்களின் கருத்து.
ஆகவே, வரலாற்றுக் காலத்தில் இருந்த மக்கள் கூட்டங்களின் அடையாளங்களுக்கும் இன்றிருக்கும் ‘சிங்கள-பௌத்த’ அடையாளங்களுக்கும் நேரடித் தொடர்புகள் இல்லை. மேலும், அநகாரிக தர்மபாலவின் காலத்துக்கு முன்பிருந்த மக்கள் கூட்ட அடையாளங்கள், ஐரோப்பியப் பாணியிலான இனம், தேசம் ஆகிய அடையாளங்களுக்கு ஒப்பான அடையாளங்களாக அமையவில்லை என்று, ஆய்வுக் கட்டுரையொன்றில் ஜோன் டி றொஜேர்ஸ், தௌிவாகக் குறிப்பிடுகிறார்.
ஆகவே, இன்றுள்ள ‘சிங்கள-பௌத்த’ தேசிய அடையாளமானது, அநகாரிக தர்மபாலவின் காலத்துக்குப் பின்னர் உருவான, ஐரோப்பிய பாணியிலான ‘இன-மத தேசிய’ அடையாளமாகும். ஆகவே, இன்றுள்ள ‘சிங்கள-பௌத்த’ தேசத்துக்கு அதிகபட்சமாக ஒன்றேகால் நூற்றாண்டுதான் வயதாகிறது.
அதிலும், 1950களின் பின்னரே, குறிப்பாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதயத்தோடுதான், ‘சிங்கள-பௌத்த’ தேசியம் பயணிப்பதற்கான அரசியல் வாகனமும் அரசியல் முன்னரங்கும் கிடைக்கிறது. ஆகவே, இந்த அடிப்படையில் நோக்கும் போது, இலங்கையிலுள்ள ‘சிங்கள-பௌத்த’ தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் ஏறத்தாழ ஒரேயளவு வயதுதான் ஆகின்றது.
ஆனால், இந்தச் சமகாலப் பகுதியில், ‘சிங்கள-பௌத்த’ தேசியம், தன்னை அரசியல், வரலாறு, மானுடவியல், சமூகவியல், புவியியல், மொழியியல், மதம், சட்டம், பொருளாதாரம், அறிவுத்தளம், உணர்வுத்தளம் என அனைத்து அடிப்படைகளிலும் பலப்படுத்திக்கொண்டது. ‘சிங்கள-பௌத்த’ தேசியம், தன்னை மிகப்பலமாகக் கட்டமைத்துக்கொண்டு விட்டது.
ஆனால், மறுபுறத்தில் தமிழ்த் தேசியம் உணர்வுரீதியில் பலம் பெற்றிருந்தாலும், அதனைத்தாண்டிய முன்னகர்வுகள் மிக அரிதாகும். ஆனால், பல இடங்களிலும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
குறிப்பாக, அறிவுத்தளத்தில் தமிழ்த் தேசியமானது, ‘சிங்கள-பௌத்த’ தேசியத்தோடு ஒப்பிடுகையில், மிகவும் பின்தங்கி நிற்கிறது. ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதமானது, மிக அடிப்படையான விடயங்களில் கூட, தன்னைத் தக்கவைத்துக் கொள்வதில் அக்கறையுடன் செயற்படுவதை நாம் அவதானிக்கலாம்.
மிக எளிமையாகப் பார்த்தால், இலங்கையின் பாடசாலைக் கல்வியின் வரலாற்று நூல்களை புரட்டிப் பார்த்தால், அதில் ‘சிங்கள-பௌத்த’ தேசியத்தின் அடிப்படையாகக் கருதப்படும் அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி இராச்சியங்களைப் பற்றி, விரிவான பகுதிகளில் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், யாழ்ப்பாண இராச்சியம் பற்றியோ, வன்னி இராச்சியம் பற்றியோ அவ்வாறு கற்பிக்கப்படுவதில்லை.
துட்டகைமுனுவைப் பற்றிச் சொல்லுமளவுக்கு எல்லாளனைப் பற்றி, அவன் செய்த நற்பணிகளைப் பற்றி கற்பிப்பதில்லை. குறிப்பாக, எல்லாளன்-துட்டகைமுனு போர் பற்றிச் சொல்லும் போது, எல்லாளனின் படையில் 30க்கும் மேற்பட்ட சிங்கள மன்னர்கள் இடம்பெற்றிருந்தார்கள் என்பதை, இங்கு யாரும் குறிப்பிடுவதே இல்லை. எல்லாளன்-துட்டகைமுனு போர் என்பது, தமிழ் – சிங்கள- பௌத்த போராக உணரச்செய்யப்படுவதே இதன் நோக்கம் என்றே புரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது.
மேலும், பிரித்தானியருக்குப் பிற்பட்ட இலங்கை என்ற ஒரு நாட்டுக்கும் அதற்கு முன்பிருந்த இலங்கைக்கும் பாரிய வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. இது கூட, வரலாற்றுப் பாடத்தில் சுட்டிக்காட்டப்படுவதில்லை.
அந்நியரை எதிர்த்துப் போரிட்ட பலரையும் பற்றிக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம், பண்டாரவன்னியனைப் பற்றி, அவனது போர்களைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் சொல்வதில்லை.
விஜயனின் வருகைக்குப் பின்பு வழங்கப்படும் முக்கியத்துவம், அவன் வருகைக்கு முன்னரான நிலையை, இயக்கர், நாகர் பற்றிக் குறிப்பிடுவதுடன் நிறுத்திக்கொள்கிறது.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, இலங்கையின் முன்னணி பாடசாலைகளில் வரலாற்றுப் பாடம் கற்பித்து வரும் ஆசிரியர் ஒருவர், தான் கற்பிக்கத் தொடங்கிய காலத்தில், யாழ்ப்பாண இராச்சியம் ஒரு தனி அத்தியாயமாக இருந்தது என்றும், ஆனால் காலவோட்டத்தில், பாடத்திட்டம் மாறமாற, யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய முக்கியத்துவம் குறைந்து, தற்போது ஒரு பந்தியில் குறிப்பிடும் விடயமாகிவிட்டது என்ற தனது கவலையை, அந்த ஆசிரியர் வௌிப்படுத்தியிருந்தார்.
இந்த இடத்தில், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இதையும் பேரினவாதத் தேசியத்தின் அடக்குமுறையின் ஒரு வடிவமாக வியாக்கியானம் உரைப்பர். அதில் உண்மை இருக்கலாம்.
ஆனால், இங்கு மிக முக்கியமான கேள்வி, அது தொடர்பில் தமிழ்த் தேசியவாதிகள் என்ன செய்யப்போகிறார்கள்? இந்த வரலாற்றுத் திரிபை, மறைப்பை அதற்கான எதிர்ப்புக்குரல் என்பதைத்தாண்டி ‘தமிழ்த் தேசியம்’ எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது? ஒரு புனைகதை வரலாற்றை, இலங்கையின் வரலாறாக்கி, அதை இன்றுவரை தொடர்ந்து எழுதச் செய்யும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை, வெறும் எதிர்ப்புக் குரலால் மட்டும் எதிர்கொள்வதுதான் தமிழ்த் தேசியத்தின் நிகழ்ச்சிநிரலா?
அப்படியானால், தமிழ்த் தேசியம் என்பது, வெறும் ‘தற்காப்புத் தேசியம்’ என்ற எல்லைக்குள் சுருங்கிவிடும். அது, ஒருபோதும் பலமானதொரு தேசமாகக் கட்டமைக்கப்படாது. ஆகவே, தமிழ்த் தேசியம் எந்தப் பாதையில் பயணிக்க விரும்புகின்றது என்பதைத் தமிழ்த் தேசியவாதிகள் தீர்மானித்து, அதற்குரிய முறையான நிகழ்ச்சிநிரலை வகுத்துக்கொள்வது அவசியம்.
பொட்ஸ்வானாவின் முதலாவது ஜனாதிபதி செரடீஸ் காஹ்மா, “கடந்தகாலமொன்று இல்லாத தேசம், தொலைந்துபோன தேசமாகும். கடந்தகாலமொன்று இல்லாத மக்கள் கூட்டமானது, ஆன்மாவற்ற மக்கள் கூட்டமாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதனால்தான், ‘தேசம்’ ஒன்று கட்டமைக்கப்படுவதில், அந்தத் தேசமாகத் தம்மை உணரும் மக்களின் வரலாறு என்பது, மிக முக்கியமானதாக மட்டுமல்லாது, அந்தத் தேசத்தின் அடிப்படையாகவும் அஸ்திவாரமாகவும் அமைகிறது.
ஆனால், நாளை இந்த மண்ணில் வளரும் தமிழ்க் குழந்தைக்கு அதனுடைய வரலாறு சரியாகப் புகட்டப்படாவிட்டால், அந்தக் குழந்தை, தன் ஆன்மாவை இழந்த குழந்தையாகவே வளரும் என்பதோடு, தன்னுடைய ஆன்மாவை வேறோர் இடத்தில் தேடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அது ஆளாகும்.
இந்த இடத்தில்தான், ‘எழுக தமிழ்’ என்பது வெறும் ஒருநாள் கூத்தாக அமைவது அர்த்தமற்றது என்ற வாதம் பலம்பெறுகிறது. ஒரு குறித்த நாளில், ஆயிரக்கணக்கானவர் ஓர் இடத்தில் ஒன்றிணைந்து, உணர்வு பொங்கக் கத்திவிட்டு, மறுநாள் வழமையான வாழ்க்கைச் சுழலுக்குள் சென்றுவிடுவது, எந்தவொரு தொட்டுணரக் கூடிய பலனையும் தராது.
ஆகவே, அர்த்தபூர்வமானதோர் ‘எழுக தமிழ்’ அமையவேண்டுமானால், அதன் முதற்படியானது, தமிழ் மக்களின் வரலாற்று மீட்சியிலிருந்து ஆரம்பமாக வேண்டும். அந்த வரலாறு, மிகச்சரியானதாக எழுதப்படவும் எடுத்துச் சொல்லப்படவும் கற்பிக்கப்படவும் தொடர்ந்து ஆய்வுகள் முன்னெடுக்கப்படவும் அந்த வரலாறு பற்றிய பிரக்ஞையும் அறிவும் அந்த மக்களிடமும் தேசத்திடமும் ஆழமாக ஏற்படுத்தப்படவும் வேண்டும்.
இந்த இடத்தில், சேர் வின்ஸ்டன் சேர்ச்சிலின் ஒரு கருத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். “தன்னுடைய கடந்தகாலத்தை மறந்துபோகும் தேசத்துக்கு எதிர்காலமென்பது கிடையாது” என்று அவர் கூறியிருந்தார்.
இதனால்தான், ‘சிங்கள-பௌத்த’ தேசம் தன்னுடைய வரலாற்றை, அது புனைகதையை அடிப்படையாகக் கொண்டிருப்பினும் கூட, மிகுந்த புனிதத்துவத்துடனும் கடும் சிரத்தையுடனும் கட்டமைத்து வந்திருக்கிறது.
தமிழ்த் தேசம் தன்னுடைய வரலாற்றை மீட்கும் வரை, அதைத் தன்னுடைய அடுத்த தலைமுறைகளுக்குத் தௌிவாகக் கடத்தும் வரை, ‘எழுக தமிழ்’ என்பது அர்த்தம் பெறாது. ஆகவே, தமிழ்த் தேசம் தன்னுடைய வரலாறு பற்றி, அக்கறை கொள்ளாது இருப்பது மிகப்பெரிய வரலாற்றுத் தோல்வியாகும்.
மறுபுறத்தில், வெறுமனே வரலாற்றுப் பிரக்ஞை மட்டுமே தமிழ்த் தேசத்தின் எழுச்சிக்குப் போதுமானதா என்ற கேள்வியும் முக்கியமானது. அதற்கான பதில், எதிர்மறையானதாகும். வெறுமனே பழங்கதையை மட்டும் பேசிப் பயனில்லை; சமூக, கல்வி, பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடையாததொரு தேசம், ஒரு போதும் பலமானதொரு தேசமாகக் கட்டமையாது.
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)