எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 10)

இலங்கை அரசின் கல்வி நிறுவனங்களிலுள்ள ஆசிரியர் தொகை 2017ம் ஆண்டின் கணக்குப்படி 241000 ( இரண்டு லட்சத்து நாற்பத்தோராயிரம் பேர்). இன்றைய கணக்கில் 250000 பேரை தாண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வளவு ஆசிரியர்கள் கற்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 4460000 (நாற்பத்தி நான்கு லட்சத்து அறுபதினாயிரம்). அதாவது, இலங்கை தேசியரீதியில் சரசரியாக ஓர் ஆசிரியருக்கு கிட்டத்தட்ட 18 மாணவர்கள்.

இவ்விடயத்தில் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்களில் பார்த்தால், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஓர் ஆசிரியருக்கு 15 மாணவர்கள் மட்டுமே எனும் நிலையே காணப்படுகிறது. மேலும் கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களைப் பார்த்தால் ஓர் ஆசிரியருக்கு 14 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் இந்த மாவட்டங்களே இலங்கையில் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன எனும் புதினமான நிலைமை காணப்படுகிறது. இதேவேளை மட்டக்களப்ப மாவட்டத்தில் இலங்கையின் சராசரியை விடக் கூடுதலாக அதாவது ஓர் ஆசிரியருக்கு 19 மாணவர்கள் உள்ளனர். எனவே வட மாகாணத்தில் ஓர் ஆசிரியருக்கான சராசரி மாணவர் தொகையானது ஒப்பீட்டு ரீதியில் குறைவாகவே உள்ளமை கவனிக்கத்தக்கது.

இலங்கையின் கல்வி அமைப்பில் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்கு இதுவரை மிக மிகக் குறைவானதாகும். இந்தத் தனியார் துறைக் கல்வி நிறுவனங்களில் ஓர் ஆசிரியருக்கு இருபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். இலங்கையின் தலைநகரமும் அதிகூடிய சனத்தொகையைக் கொண்ட மாவட்டமாகவும் கல்விதரத்தில் முன்னணி வகிக்கும் மாவட்டமாகவும் உள்ள கொழும்பில் ஓர் ஆசிரியர் சராசரியாக 22 மாணவர்களுக்கு படிப்பறிவை வழங்குகிறார். கொழும்புக்கு அடுத்ததாக சனத்தொகையை அதிகமாகக் கொண்ட கம்பஹாவிலும் அதுவே நிலை.

படிப்பிக்கும் வேலை பெற்றோர் நிறைய உண்டு தேவைக்கான தகைமை உடையோரே போதவில்லை

இலங்கையில் ஆசிரியர்கள் எண்ணிக்கை எந்தளவு அதிகமானது என்பதனை ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டாலே இதன் உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவின் பள்ளிக் கூடங்களில் 6ம் வகுப்புக்குக் குறைவான வகுப்புகளில் 33 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர். இதுவே முழுத் தென்னாசியாவின் நிலைமை. ஆனால் இந்த விடயத்தில் இலங்கையின் நிலைமை ஓர் ஆசிரியருக்கு 22 மாணவர்கள் என உள்ளது. இலங்கையை விட இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு அதிகமான தலாநபர் வருமானம் கொண்ட நாடுகளிலேயே 6ம் வகுப்புக்கு குறைந்த நிலையில் கற்கும் பள்ளிக்கூட மாணவர்களுக்கான ஆசிரியர் விகிதத்தை இலங்கை கொண்டிருக்கின்றது. இலங்கையின் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மொத்தமாக உள்ள மாணவர்கள் – ஆசிரியர் விகிதத்தைப் பார்த்தால் ஏறத்தாழ உயர்ந்த பணக்கார நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா ஜேர்மனி போன்ற நாடுகளிலே காணப்படுகின்ற நிலைமைக்கு சமமான அளவைக் கொண்டுள்ளது.

இலங்கை கொண்டிருந்கும் அதே அளவு மாணவர்கள் – ஆசிரியர் விகிதத்தை இந்தியாவின் மாநிலங்களில் கல்வி நிலையில் மிகவும் முன்னணியில் இருக்கும் கேரளாவும் கொண்டிருக்கிறது. எனினும் கேரள அரசாங்கம் தனது பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக உள்ளது எனக் கருதுகிறது. அதனால் ஆசிரியர் எண்ணிக்கையை சுமார் 20 சதவீதத்தால் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால் இலங்கையிலோ ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் என்ற குரல்களே வலிமையாக உள்ளன. இலங்கையில்1990 க்கு முன்னர் 6ம் வருப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான மாணவர்கள் விகிதமானது 30 பேரளவில் இருந்தமையை இங்கு கவனத்திற் கொள்வது அவசியமாகும் 1990க்கு முந்திய காலகட்டத்தில் இலங்கையில் பள்ளிக்கூடக் கல்வியின் தராதரம் குறைவாக இருக்கவில்லை என்பதையும், அப்போது ஆசிரியர்கள் பற்றாக்குறையென குறிப்பிடத்தக்க அளவுக்கு வலுவான கோரிக்கைகள் எதுவும் சமூக அரசியல் மட்டத்தில் இருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

பணக்கார நாடுகளைப் போல எங்களுடைய நாட்டிலும் மாணவர்கள் – ஆசிரியர்கள் விகிதம் இருக்கக் கூடாதா? என யாராவது வினோதமாக கேள்வி எழுப்பினாலோ, அல்லது அவ்வாறு இருப்பது நல்லதுதானே என உணர்ச்சி வசமாக அபிப்பிராயப்பட்டாலோ அதற்கு உரிய பதிலை ஒரு சில வசனங்களில் கூறுவது சிரமமாகும். எனினும் இக்கட்டுரையின் சாராம்சத்திலிருந்து வாசகர்கள் அதற்கான பதிலை புரிந்து கொள்ள முடியும். இலங்கை கொண்டிருக்கும் பள்ளிக்கூட மாணவர்கள் – ஆசிரியர் விகிதமானது இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நிலைக்கு எவ்வகையிலும் பொருந்தாத வகையிலேயே வீங்கிப் பெருக்க வைக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டியுள்ளது. உண்மையில் இங்கு பள்ளிக்கூட ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது ஆசிரியர் தொகையின் பற்றாக்குறையல்ல. மேலும் வருடாவருடம் பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

இங்கு காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை என்பது பெருந்தொகையான பள்ளிக்கூடங்களில் தேவையான தகுதியுடைய ஆசிரியர்களின் பற்றாக்குறையாகவே உள்ளது. அதேவேளை பெருந்தொகையான பள்ளிக்கூடங்களில் தேவையற்ற தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்கள் பெருகிப் போயுள்ளனர். அத்துடன் ஆசிரியர்களின் தகுதிக்கும் பள்ளிக்கூடங்களின் தேவைகளுக்குமிடையேயுள்ள பிரச்சினைகளை – இடைவெளிகளை நீக்கும் வகையில் ஆசிரியர்களைப் பகிர்வு செய்வதில் நிர்வாகரீதியில் பெரும் குறைபாடுகள் உள்ளமை அடிக்கடி பலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இங்கு ஆசிரியர்கள் தொகை எண்ணிக்கைரீதியில் பெருகிக் கிடக்கின்றமைக்கும் தேவையான தகுதிகளையுடைய ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதற்கும் இடையே ஒரு விசேடமான முரண்பாடு நிலவுகின்றது.

இந்த முரண்பாட்டை நீக்குவதற்கு உரிய வகையான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து கல்வி நிறுவன நிர்வாக கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் ஆசிரியர்கள் படையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முறையையே கடைப்பிடிக்கின்றன. இது அரசின் நிதி நிர்வாகத்தின் மீது கணிசமான சுமையை தொடர்ந்து ஏற்றுவதாகவே அமைகின்றது.

அறிவு பூர்வமான அபிப்பிராயங்களுக்கு இடமின்றி தேவைக்கு மீறிய அளவில் பொது நிர்வாகத்தில் ஆளணிகள்

இலங்கை மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட செயலகங்களிலுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பிரதேச செயலகங்களிலுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் உத்தயோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், தேர்தற் செயலகங்களைச் சேர்ந்தோர், காணி மற்றும் காணி அபிவிருத்தி இலாக்காவைச் சேர்ந்தோர், விவசாயம், மீன்பிடி, வனத்துறை, நீர்வளத்துறை, மின்சார விநியோகம், தொலைத் தொடர்புத் துறை, தபால் சேவைகள் என மேலும் பல வகையான அரச அமைப்புக்களில் அதிகாரிகளாகவும்; பணியாளர்களாகவும் பல லட்சம் பேர் உள்ளனர்.

25 மாவட்டச் செயலகங்கள் மற்றும் 330 பிரதேச செயலகங்கள் உள்ளன. இவையொவ்வொன்றிலும் நிறைந்திருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை விட 14000 பேர் கிராம சேவகர்களாக உள்ளனர். 50000 பேர் பல்வேறு வகையான புள்ளிவிபரங்கள் திரட்டல் கடமையிலும் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்னும் பெயரிலும் உள்ளனர். இவற்றை விட தனித்தனியாக விவசாய அபிவிருத்தி, மீன்பிடி அபிவிருத்தி, கைத் தொழில் அபிவிருத்தி, என எத்தனை அபிவிருத்தி விடயங்கள் உள்ளனவோ, அவற்றின் ஒவ்வொரு அபிவிருத்தி தொடர்பாகவும் பல வகையான அலுவலகங்கள் செயற்படுகின்றன.

24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் ஆகியனவும் பெருந்தொகையான ஊழியர்களைக் கொண்டிருக்கின்றன. 2018ம் ஆண்டின் கணக்குப்படி இந்த மாநகர சபைகளில் மொத்தமாக சுமார் 20000 நிரந்தர ஊழியர்கள் உள்ளனர்: 41 நகர சபைகளில் மொத்தமாக 6500 நிரந்தர ஊழியர் உள்ளனர்: 276 பிரதேச சபைகளிலும் மொத்தமாக சுமார் 22500 நிரந்தர ஊழியர்கள் உள்ளனர். ஆக மொத்தத்தில் உள்ளுராட்சி அமைப்புகள் மட்டும் சுமார் 50000 ஊழியர்களை நிரந்தரமானவர்களாகக் கொண்டிருக்கின்றன. இதைவிட தற்காலிகமான ஊழியர்களாக வேலைக்கு அவ்வப்போது அமர்த்தப்படுவோர் என ஒரு பெரும் தொகையினர்.

இலங்கையில் மத்திய அரசின் கட்டமைப்பில் 51 அமைச்சுகளும், 905 நிறுவனங்களும் 18270 அலுவலகங்களும் உள்ளன. இதில் உள்ள இராணுவத்தினர், பொலிசார், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையைச் சேர்ந்தோர், வெளிநாட்டமைச்சைச் சேர்ந்தோர், நீதித்துறையைச் சேர்ந்தோர் ஆகிய வகையினரை நீக்கி விட்டுப் பார்த்தாலும் சுமார் மூன்றரை லட்சம் பேர் நிரந்தர ஊழியர்களாக உள்ளனர். அதேபோல் 9 மாகாண சபைகளுக்கும் உட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரை நீக்கி விட்டுப்பார்த்தால் மாகாண சபைகளின் அமைப்புகளில் சுமார் ஒரு லட்சம் பேர் நிரந்தர ஊழியர்களாக உள்ளனர். எனவே இலங்கையின் உழைப்பு சக்தியில் எவ்வளவு சதவீதம் எந்த வகையான நேரடி உற்பத்தியையும் மேற்கொள்ளாமல் அரசாங்க அலுவலகங்களை நிறைத்திருக்கிறது என்பதை இந்த எண்கணக்கு சித்திரத்தில் இருந்து எவரும் தெளிவாகக் கண்டு கொள்ளலாம்.

இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க வகையில் சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென பல்வேறு கட்டங்களில் அனுபவம் மிக்க நிர்வாக நிபுணர்கள் தெரிவித்திருத்திருக்கிறார்கள். 1980களின் இறுதிப் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்திருத்த கமிட்டியானது யு.என்.டி.பி. யின் ஆதரவுடன் ஆய்வை மேற்கொண்டது. அந்த கமிட்டியின் அறிக்கையானது அரசாங்கம் குறைந்த பட்சம் 20 சதவீதத்தால் அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென சிபார்சு செய்தது. அவ்வாறான சிபார்சுகளை அடிப்படையாகக் கொண்டு 1990களின் நடுப்பகுதியில் கருத்துத் தெரிவித்த உலக வங்கியானது இலங்கையின் அரச ஊழியர்களின் எண்ணிக்கையானது ஆசிய நாடுகளின் சராசரி நிலைமையோடு ஒப்பிடும் பொழுது மூன்று மடங்காக உள்ளதென தெரிவித்தது. ஆனால் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அரச நிர்வாகம் தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது பற்றிய பகுத்தறிவு பூர்வமான கருத்துக்கள் – சிபார்சுகள் எதனையும் கணக்கிலெடுக்காது ஆண்டு தோறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை அரசின் நிதி ஆற்றலுக்கு மித மிஞ்சிய வகையில் அதிகரித்தே வந்துள்ளன.

பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்

சம்பள உயர்வு கேட்டு ஆசிரியர்கள் போராடுகிறார்கள். பல ஆண்டுகளாக தமது சம்பளம் விலைவாசிகளின் ஏற்றங்களுக்கு ஏற்ப உயர்த்தப்படவில்லை என்பது அவர்களின் பிரதானமான குற்றச்சாட்டாக உள்ளது. இங்கு ஆசிரியர்கள் சராசரியாகப் பெறும் சம்பளம் 70000 ரூபா எனக் கணக்கிடப்பட்டாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் 50000 ரூபாவுக்கும் குறைவான சம்பளத்தையே பெறுகின்றனர். இதேவேளை இராணுவத்தில் உள்ளவர்களின் சராசரிச் சம்பளம் 90000 ரூபாவுக்கு மேலாக உள்ளது. ஆயுதப்படைகளில் கடை நிலையில் உள்ள உறுப்பினர் சுமார் 50000 ரூபாவை சம்பளமாக பெறுவதிலிருந்து ஆரம்பித்து உயர் நிலை இராணுவ அதிகாரி 160000 ரூபா வரை சம்பளம் பெறுகின்ற அளவுக்கு இராணுவத்தில் சம்பள நிலைமை உள்ளது. ஆனால் ஏனைய அரச அலவலகங்களில் அதிகாரிகளாக அல்லாத ஊழியர்களில் மிகப் பெரும்பாலானவர்களின் மாதாந்த சம்பளம் 50000 ரூபாவுக்கும் குறைவாகவே உள்ளது.

இலங்கையோடு ஒப்பிடுகையில் அரைவாசி அளவான தலாநபர் வருமானம் கொண்ட இந்தியாவில் அரச பள்ளிக்கூடங்களின் ஆசிரியர்களுக்கான சம்பளத்தின் தேசிய சராசரி அளவானது இந்திய ரூபாயில் 46000 ஆகும். அதனை இலங்கை ரூபாயில் கணக்குப் பார்த்தால் சுமார் 115000 ரூபாக்கள். இராணுவத்தினரின் சம்பளத்தையும் இலங்கையோடு ஒப்பிட்டால் ஒரு இந்திய இராணுவ உறுப்பினருக்கான சராசரி சம்பளம் அதிகமாகவே உள்ளது. அதுவும் இராணுவ அமைப்பில் அதிகாரிகள் மட்டத்தில் இருப்பவர்களின் சம்பளத்தை ஒப்பிட்டால் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கான சம்பளம் இலங்கையின் இராணுவ அதிகாரிகளை விடவும் மிக அதிகமாகவே உள்ளது. சந்தையில் பண்டங்களின் விலை நிலைமைகளை இங்கு தொடர்பு படுத்துவது மற்றொரு விடயம்.

இந்தியாவை விட இரண்டு மடங்கு அதிகமான தலாநபர் வருமானத்தைக் கொண்ட இலங்கையில் அரசானது தனது ஊழியர்களுக்கான சம்பளத்தையும் அதற்கு ஒப்ப வழங்குவதே நியாயமானது. ஆனால் அதற்கான பொருளாதார சக்தியை இலங்கையின் திறைசேரி கிஞ்சிற்றும் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மையாகும். அரச வருமானத்தை இப்போதிருக்கும் நிலையிருந்து இரண்டு மடங்காக அதிகரித்து அதற்கு சமாந்திரமாக அரச ஊழியர்களின் தொகையை அரைவாசியாகக் குறைத்தாலே இலங்கையின் தலாநபர வருமான தராதரத்துக்கு உரிய வகையில் அரச ஊழியர்களுக்கான நியாயமான சம்பளத்தை வழங்க முடியும். அவ்வாறான ஒரு நிலையை நடைமுறையாக்க முடியுமா? என்றால், சாத்தியமாக்க முடியாத ஒன்றை கற்பனை செய்வது போலவே உள்ளது.

இலங்கையின் அரச ஊழியர்களின் இந்த பரிதாபகரமான சம்பள நிலையானது. தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கூலி விடயத்திலும் பாதகமான நிலைகளையே பராமரிக்கும். அரசு தனது ஊழியர்களுக்கான சம்பளத்தை ஒரு நியாயமற்ற மட்டத்தில் வைத்துக் கொண்டு தனியார் துறையில் சம்பளத்தை – கூலியை அதைவிட அதிகமாக வழங்கும்படி கோருவதற்கு எந்தவித தார்மீக உரிமையையோ சட்டரீதியான அதிகாரத்தையோ கொள்ள முடியாது. இலங்கை அரசு தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கீழ் நிலையில் வைத்திருக்கும் சூனியத்தைத் தானே கொண்டிருக்கின்றது என்பதே இங்கு யதார்த்தமாகும்..

சர்வதேச தராதர அளவில் ஒரு மத்தியதர வருமான நிலை கொண்ட ஒரு நாடாக இலங்கை காலடி எடுத்து வைத்துள்ளதாக ஆளுபவர்கள் பிரகடனப்படுத்திக் கொள்கின்ற போதிலும் இலங்கை மக்களின் வாழ்க்கைத்தரம் உண்மையில் ஒரு வறிய நாட்டின் நிலையிலேயே உள்ளது என்பதை இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பப் பகுதிகளிற் குறிப்பிட்டதை இங்கு வாசகர்கள் நினைவிற் கொள்ளலாம். அதன் சாராம்சமான அர்த்தத்தையே இக்கட்டுரைப் பகுதி மேலும் வலியுறுத்தி உரைக்கின்றது.

(கட்டுரை தொடர் பகுதி 11 தொடரும்)