இலங்கையின் பொருளாதாரம் எதிர்நோக்கியிருக்கும் சிக்கல்கள் சிரமங்கள் பற்றி இக்கட்டுரைத் தொடரின் முன்னைய பாகங்களில் குறிப்பிட்ட பல விடயங்களை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சாவும் தனது வரவு செலவுத் திட்ட அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதேவேளை அவற்றையெல்லாம் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் தமது வரவு செலவுத் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலமாக வெற்றி கொண்டு நாட்டை முன்னேற்றகரமான பாதையில் இட்டுச் செல்ல முடியும் என நம்பிக்கைகளை வெளியிட்டுள்ளதுடன் அதற்கான தமது இலக்குகளையும் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 7 (ஏழா)ம் திகதி பாராளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மசோதா முன்வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் 12 (பன்னிரெண்டா)ம் திகதி இலங்கையின் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் என்ற பெயரில் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்திருக்கிறார். உண்மையில் இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையானது முன்னைய நிதி ஒதுக்கீட்டு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரேரிக்கப்பட்டுள்ள மேலதிக ஒதுக்கீட்டு அறிக்கை என்றே கொள்ள வேண்டும். எனவே பொருளாதார ஆய்வாளர்கள் அரசாங்கத்தின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எனப் பார்க்கையில் மேற்குறிப்பிட்ட இரண்டு நிதி அறிக்கைகளையும் சேர்த்தே வாசித்தல் வேண்டும்.
எதிர்க்கட்சி விமர்சனப் பார்வை ஒரு புறமிருக்கட்டும் இந்த நிதித் திட்ட அறிக்கையை நிதானமாக நோக்குக!
இலங்கையில் அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்ட வரலாற்றை நோக்கினால் ஒவ்வொரு அரசாங்கமும் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் முன் வைக்கின்ற வரவு செலவுத் திட்ட அறிக்கையில் தமது இலட்சியங்களையும் கவர்ச்சிகரமான இலக்குகளையும் பெரும் நம்பிக்கைகளையும் தவறாமல் வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இப்போது பஸில் அவர்கள் தமது நிதி திட்ட அறிக்கையில் முன்வைத்துள்ள இலக்குகளும் வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கைகளும் இலங்கைக்கு புதிதானதோ அல்லது புதினமானதோ அல்ல. ஆனால் இலங்கையின் பொருளாதாரம் எழுந்து முன்னேற முடியாமல் மேலும் மேலும் சிக்கல்களுக்குள்ளும் சிரமங்களுக்குள்ளும் அகப்பட்டுப் போனதே வரலாறாக உள்ளது. இப்போது பஸில் ராஜபக்சா அவர்களும் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் இலங்கையின் பொருளாதாரம் நிமிர்ந்து எழுந்து முன்னோக்கி பறக்கத் தொடங்கி விடும் என்கிறார்.
பஸில் அவர்களே தமது நிதித் திட்ட அறிக்கையை முன்மொழிகிற போது பின் வருமாறு கூறுகிறார் –
‘சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒவ்வொரு அரசாங்கமும் பற்றாக்குறை வரவு செலவுத் திட்ட கொள்கையொன்றினை நோக்கியே சார்ந்திருந்தன. 1960களில் மொத்த தேசிய வருமானத்தில் சுமார் 6 (ஆறு) சதவீதமாக இருந்த இந்த பற்றாக்குறை 1978ம் ஆண்டு தொடக்கம் அவ்வப்போது 10 சதவீதத்தினை எஞ்சியதாக அமைந்தது. 2010 தொடக்கம் 2018 வரையான காலப்பகுதியில் 7 (ஏழு) மற்றும் 8 (எட்டு) சதவீதத்துக்கு இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தது. தற்போது இது மீண்டும் 10 (பத்து) சதவீதத்தையும் விஞ்சி விட்டது. கிட்டத்தட்ட, 70 ஆண்டுகளாக செயற்பாட்டிலிருக்கிற இக் கொள்கையின் விளைவுகளையே நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்’
எனவே, இன்று இலங்கை எதிர் நோக்கும் பொருளாதாரக் குறைபாடுகள் இன்று நேற்றுத் தொடங்கியதல்ல, சுதந்திர இலங்கையை இது வரை ஆண்டு வந்துள்ள அனைத்து ஆட்சியாளர்களுமே இன்றைய பரிதாபகரமான நிலைக்கு பொறுப்பானவர்கள் என்பதை இக்கட்டுரைத் தொடரின் முன்னைய பகுதிகளில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறோம். அதனை இப்போது நிதி அமைச்சர் பஸில் அவர்கள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதில் அவரது அண்ணன் மஹிந்த ராஜபக்சாவின் 2005 தொடக்கம் 2014ம் ஆண்டு முடியும் வரையான 10 ஆண்டு காலமும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். அப்போது இவர்தான் நாடு முழுவதுக்குமான பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தார் என்பதுவும் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்
நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பெரும் நெருக்கடிகளாலும் அத்துடன் அவற்றை கொரோணாத் தொற்று தீவிரப்படுத்தியிருப்பதனாலும், அதனால் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள கோபத்தாலும் ஆட்சியாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் திக்குத் திசை தெரியாது திணறிப் போயினர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சா அவர்கள் நிலைமைகளைச் சமாளிக்கவும் நெருக்கடிகளைத் தணிக்கவும் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் அவை பூமராங்கைப் போல திருப்பி அடிப்பதாகவே அமைகிறது என ஆட்சியில் உள்ள பங்காளர்களாலேயே கருதப்பட்டது. இந்த நிலையில்த்தான் பஸில் ராஜபக்சா நிதி அமைச்சரானதும் அவரின் திட்டங்களால் தங்களுக்கு நிம்மதிப் பெரு மூச்சு விடும் நிலைமைகள் ஏற்படும் என ராஜபக்சாக்களை சார்ந்திருப்பவர்கள் நம்பியிருக்கிறார்கள். ஆனால் எதிர்க் கட்சியினரோ ‘பஸில் ராஜபக்சா அற்புத விளக்கை வைத்திருக்கும் அலாவுதீனா’? என கிண்டல் பண்ணுகின்றனர்.
இந்தப் பின்னணிகளிலேயே இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட அறிக்கையை நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது. அதாவது, இந்த நிதித் திட்ட அறிக்கை குறிக்கும் இலக்குகள் என்ன? அதற்காக எவ்வகையான செயற்திட்டங்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன? குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகள் அடையப்படக் கூடியவையா? அதற்கான நிதி வல்லமைகளை அரசு கொண்டிருக்கிறதா அல்லது அந்த அளவுக்கு அதனால் திரட்டிக் கொள்ள முடியுமா? அதற்காகக் குறிக்கப்படும் கால எல்லையில் அவை அடையப்பட முடியாதவையா? அல்லது அதனது இலக்குகள் அடிப்படையிலேயே யதார்த்தத்துக்குப் பொருத்தமற்றவையா? அறிக்கை குறிக்கும் இலக்குகளை அடையா முடியாதென்பதற்கான காரணிகள் எவையெவை? இவ்வாறாக தொடராக பல கேள்விகளை இந்த நிதித் திட்ட அறிக்கை குறித்து எழுப்ப வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் இந்த அறிக்கை தொடர்பான ஆய்வு நோக்கின் போது எதிர்க்கட்சி அரசியற் பிரச்சாரங்களின் கோணத்தில் இருந்து அணுகாமல் நிதானமாக, பொருளாதார விடயதானங்களின் அடிப்படைகளில் இருந்தும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய அரசியல் ரீதியான அகப்புறச் சூழல்கள் பற்றிய விடயங்களைக் கணக்கில் எடுத்தும் தெளிவான கண்ணோட்டத்தைப் பெறுதலே சரியானதாகும்.
எதிர்காலம் பற்றிய அமைச்சரின் இலக்குகள் அழகான காட்சிகளைக் காட்டும் சித்திரங்கள்
நிதி அமைச்சர் பஸில் அவர்கள் தமது நிதித் திட்ட அறிக்கையினூடாக தமது ஒரு நீண்ட கால கனவுகளை – தொலை நோக்கு இலக்குகளை அறிவித்துள்ளார். அவற்றிற் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.
- துறை முகங்களை அபிவிருத்தி செய்தல்:-
• கொழும்புத் துறைமுகத்தை சர்வதேச கடற்பயணங்களின் கேந்திரமாக்குதல்
• திருகோணமலைத் துறைமுகத்தை ஆக்க உற்பத்திக் கைத்தொழில்களின் வலயமாக்குதல்,
• காலித் துறைமுகத்தை சுற்றுலாத் துறைக்கான தளமாக்குதல், மேலும்
• அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சர்வதேச கப்பல்களுக்கு அவசியமான சேவைகளை வழங்கும் மையமாக்குதல்
என அறிவித்துள்ளார்
- தொழிற்நுட்பப் பூங்காக்களை விருத்தி செய்தல்:-
ஏற்கனவே குருநாகல் மாவட்டத்திலுள்ள ரத்கல்ல என்னும் இடத்திலும் மற்றும் காலி மாவட்டத்தில் உள்ள அக்மீமன எனும் இடத்திலும் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பூங்காக்களோடு மேலும் ஹபரணவிலும், நுவரெலியாவில் மஹாகஸ்தோட்ட எனும் இடத்திலும், கண்டியில் திகணயிலும் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
- உற்பத்தி முதலீட்டு வலயங்கள்:-
(1) அனைத்து மாவட்டங்களிலும் சேதன பசளை உற்பத்தி நிலயங்களை அமைத்தல்
(2) ஓயா மடுவ, மில்லேனிய மற்றும் அரும்பொக்க பிரதேசங்களில் மருந்து உற்பத்தி வலயங்களை ஆக்குதல்
(3) ஏறாவூர், மொனராகல, புத்தளம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை புடவை மற்றும் ஆடைத் தயாரிப்பு தொழில் வலயங்களாக ஆக்குதல்
(4) மாத்தளை, எல்பிட்டி, அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை ஏற்றுமதிக்கான விவசாய பண்டங்களைப் பதனிடும் உற்பத்தி வலயங்கள் கொண்டதாக ஆக்குதல்
(5) நாவலப்பிட்டி, வாரியபொல, பொலநறுவை ஆகிய மாவட்டங்களை கால்நடை விருத்தி வலயங்களை கொண்ட மாவட்டங்களாக ஆக்குதல்
(6) புத்தளம், மன்னார், அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் கொக்கட்டிச் சோலை ஆகிய இடங்களில் உள்ளுர் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரினங்களை வளர்க்கும் மையங்களை விருத்தி செய்தல்
மேலும்
(7) பரந்தன், புல்மோட்டை, எப்பாவல, ஆகிய பிரதேசங்களை ரசாயன உற்பத்திகளை மேற்கொள்ளும் வலயங்களாக ஆக்குதல்.
- இலங்கையிலுள்ள 10155 பாடசாலைகளுக்கு உயர் தொழில் நுட்ப இணைப்புகளை வழங்கி இணையத்தள வசதிகளை ஏற்படுத்துதல்
- 5 லட்சம் எக்கர் நில அளவு கொண்ட நன்னீர் நிலைகளில் மீன்பிடி வளர்ப்புகளை விருத்தி செய்தல்
- பற்றிக் ஆடைகளை 100 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யும் வகையாக அவற்றின் உற்பத்திகளை அதிகரித்தல்;
- உடனடியாக 33 லட்சத்து 15 ஆயிரம் குடி நீர் இணைப்புகளை மக்களுக்கு வழங்குதல் (இலங்கையில் மொத்தம் 50 இலட்சம் வீடுகள் தான் உள்ளன).
- 100000 கீலோ மீட்டர் நீளத்துக்கு கிராமப் புற வீதிகளை அமைத்தல்.
- 2000 மெஹாவட் மின்சாரத்தை மீள்புதுப்பிக்கத்தக்க மூலங்களைக் கொண்டு உற்பத்தி செய்தல்.
- 1000 பள்ளிக்கூடங்ளை தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்தல்
- அனைத்து வயது முதிர்ந்தவர்களுக்கும் ஓய்வ ஊதியம் வழங்குதல்
- அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் 24 மாதங்களுக்கு போசாக்கான உணவுப் பார்சல்கள் வழங்குதல்
- விவசாயத்தை முற்றாக ரசாயனப் பாவனைகளிலிருந்து விடுவித்து ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்யும் நாடாக ஆக்குதல்
- நாடு முழுவதிலுமுள்ள சமுர்த்தி வங்கிகளை கிராமங்கள் தோறும் ஆக்கத் தொழிற் துறையை விருத்தி செய்கின்ற வகையில் கிராம மக்களுக்கு குறு மற்றும் சிறு கைத்தொழில்களை மேற்கொள்வதற்கான நிதியுதவி வழங்கும் மையங்களாக செயற்படுத்துதல்
இவ்வாறான பல்வேறு இலட்சிய திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இவற்றின் மூலமாக,
- தற்போது மொத்த தேசிய வருமானத்தில்10 (பத்து) சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை 2027ம் ஆண்டு 1.5 (ஒன்றரை) சதவீதத்துக்கு குறைத்து 2028ம் ஆண்டு நிதித் திட்ட அறிக்கையில் அரசின் வரவுக்கு உட்பட்டதாக அரசின் செலவீனங்களை அடக்கிட முனைவதாகவும்,
- தற்போது மொத்த தேசிய வருமானத்தில் 9 (ஒன்பது) சதவீதம் என்னும் அளவுக்கு உள்ள அரச வருமானத்தை 2027ல் 18 (பதினெட்டு) சதவீதமாக உயர்த்திட முடியும் என்றும்,
- தற்போது மொத்த தேசிய வருமானத்தில்16 (பதினாறு) சதவீதமெனும் அளவுக்கு உள்ள அரசின் மீண்டெழும் செலவீனத்தை 13 (பதின்மூன்று) சதவீதமெனும் நிலைக்கு குறைத்து விட முனைவதாகவும்,
- தற்போது 3.5 (மூன்றரை) சதவீதமாக இருக்கும் தேசிய பொருளாதார வளர்ச்சியை 2024ல் 6 (ஆறு) சதவீதமாக்கி; 2027ல் 7 (ஏழு) சதவீதமாக ஆக்கிட முயற்சிப்பதாகவும்,
- தற்போது அரசின் மொத்த கடன் அளவானது மொத்த தேசிய வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகவும் அதனை இன்னும் சில ஆண்டுகளுக்குள் 74 (எழுபத்தி நான்கு) சத வீதமெனும் அளவுக்கு குறைத்து விட முனைவதாகவும், அதேவேளை மொத்த தேசிய வருமானத்தோடு ஒப்பிடுகையில் 36.5 (முப்பத்தி ஆறரை) சதவீதமாக இருக்கும் வெளிநாடுகளுக்கான கடனை 13.5 (பதின் மூன்றரை) சதவீதமாக ஆக்கிட முனைவதாகவும்,
நிதி அமைச்சர் தமது இலட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.
எல்லோரும் ஏறி சறுக்கி விழுந்த குதிரையில் இப்போது சக்கடத்தார்?
அமைச்சர் பஸில் அவர்கள் வெளியிட்டுள்ள திட்டங்களையும் இலக்குகளையம் அவதானிக்கையில் பாராட்டுவதா அல்லது மீண்டும் ஒருவர் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஏமாற்றுவதற்கு வந்து விட்டார் என்று கூறுவதா? ஏனெனில் சுதந்திர இலங்கையின் முதாவது நிதி அமைச்சரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தொடக்கம் போன ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீரா வரை இதே மாதிரியாக புல்லரிக்க வைக்கும் வகையான திட்டங்களையும் இலக்குகளையும் கொண்ட புழுகு மூட்டைகள் ஏற்கனவே பாராளுமன்றத்தின் ஹன்சாட்டுகளில் ஏராளமாகவே நிறைந்து கிடக்கின்றன. இப்போது இவரின் திட்டங்களும் இலக்குகளும் இலங்கையின் கூரையைப் பிய்த்துக்கொண்டு பொருளாதார முன்னேற்றங்களைக் கொட்டோ கொட்டென கொட்டப் போகிறது என்பதை நம்புவதற்கு என்ன ஆதாரங்கள் என்பதுதான் இங்குள்ள பிரதானமான கேள்வியாகும்.
நம்பிக்கைதானே வாழ்க்கை! ராஜபக்சாக்களின் கொண்ட முதலா நட்டமாகப் போகும்?. சொன்னவை நடந்தால் லாபம் இல்லையென்றால் அடுத்த மூன்று வருடம் முடிய மறுபடியும் பாராளுமன்றத் தேர்தல் – மற்றுமொரு நிதி அமைச்சர். இந்த நிதி அமைச்சர் சுதந்திரமடைந்து 73 (எழுபத்தி மூன்று) வருடங்களாக செய்த பாவங்களை இப்போது சுமக்கிறோம் என்கிறார் அடுத்து வரும் நிதி அமைச்சர் குறிப்பிட்ட 73 (எழுபத்தி மூன்று) உடன் மேலும் 3 (மூன்றை)க் கூட்டி 76 (எழுபத்தாறு) வருடங்களாக செய்த பாவங்களைச் சுமக்கிறோம் என்று அதே ராகத்தில் சொல்லப் போகிறார்… அவ்வளவுதானே! நாட்டின் பரந்துபட்ட பொதுமக்கள்தான் பாவப்பட்ட ஜீவன்கள்!
நிதி அமைச்சரின் பொருளாதார இலட்சிய தொலை நோக்குத் தரிசனங்கள், வார்த்தை வித்தைகள் ஒரு புறம் இருக்க, அவர் துறைகள்ரீதியாக முன்வைத்துள்ள வரவுக் கணக்குகளையும் செலவு ஒதுக்கீடுகளையும் சற்று உன்னிப்பாக நோக்குவது அவசியமாகும்.
அதனை இக்கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதியான 19ல் பார்க்கலாம்.