எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 22)

அந்த வகையில் இலங்கையானது கிராமங்கள் நிறைந்த நாடு என்ற வகையையும் கொண்டது. இங்குள்ள கிராமங்களிற் பெரும்பாலானவை பொருளாதார நிலையில் மிகப் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இலங்கையிலுள்ள பதிவு செய்யப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை சுமார் 14000 மற்றும் அதேயளவு எண்ணிக்கையில் கிராம சேவக உத்தியோகத்தர்கள் பிரிவுகளும் உள்ளன. இதில் இலங்கையிலுள்ள மாநகர சபைகள் மற்றும் நகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களினதும், மலையக தேயிலை மற்றும் றப்பர் தோட்ட பகுதிகளிலுள்ள கிராமங்களினதும் எண்ணிக்கையை நீக்கிவிட்டுப்பார்த்தால், ஏனைய அனைத்து கிராமங்களும் மிகப் பின்தங்கிய சமூக பொருளாதார நிலையிலேயே உள்ளன. இந்தக் கிராமங்கள் பெரும்பாலும் உதிரித் தனமாக சிதறுண்டவைகளாக பரந்து கிடப்பது இலங்கையிலுள்ள கிராமங்களின் அமைவிடப் பண்பாக உள்ளது.   

மலையகத்து தேயிலைப் பெருந் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களும் மற்றும் றப்பர் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் குடும்பங்களும் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களாக உள்ளனவென்பதோடு அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளும் சுகாதார மற்றும் வைத்திய வாய்ப்புகளும் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ளன என்பதுவும் பொதுவாக அறியப்பட்ட விடயமே. ஆயினும் தேயிலை மற்றும் றப்பர் தோட்டங்கள் பரவியுள்ள பிரதேசங்கள் தாராளமாகவே சமூக பொருளாதாரக் கட்டுமானங்களை கொண்டுள்ளன, அப்பிரதேசங்களிலுள்ள உற்பத்தி அமைப்புக்கள் நிறுவனரீதியில் ஒருங்கிணைக்கப்பட்டும் உள்ளன.  

மேல்மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் பின்தங்கிய கிராமங்கள் என்று சொல்லக்கூடியவற்றின் எண்ணிக்கை மிகக் குறைந்த வீதாசாரமே உள்ளனவெனலாம்.  யாழ்ப்பாண மாவட்டத்தை அவதானிப்பினும் இங்குள்ள கிராம குடியிருப்புகளும் பெரும்பாலும் ஒன்றோடொன்று இணைந்த வகையாக அமைந்துள்ள தொடர் கிராமங்களாகவே உள்ளன. இங்கும் ஒப்பீட்டு ரீதியில் மிகப் பின்தங்கியவையாகவும், சிறியவைகளாகவும், சிதறுதறுண்டவைகளாகவும் இருக்கும் கிராமங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த வீதாசாரமே.

எனவே மேல்மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், தேயிலை மற்றும் றப்பர் தோட்ட பிரதேசங்கள் ஆகியன தவிர்ந்த ஏனைய மாவட்டங்களை – அதாவது வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த மாவட்டங்களையும், வட மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், கிழக்கு மாகாணம், மற்றும் தென் மாகாணம் ஆகியவற்றிலுள்ள மாவட்டங்களையும், ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட்டத்தையும் – அவதானிப்பின் அவற்றிலுள்ள நிலைமைகள் பெரிதும் வேறுபட்டவையாகும். இவ்வாறான மாவட்டங்களிலுள்ள மாநகர சபைகள் மற்றும் நகர சபைகளைக் கொண்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள கிராமங்கள் பெரும்பாலும் சிறியவைகளாகவும், சிதறிக் கிடப்பவையாகவும், பொருளாதாரரீதியில் மிகப் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களைக் கொண்டவைகளாகவும், சமூக பொருளாதாரக் கட்டுமானங்களைப் பொறுத்த வரையில் விருத்தி குறைந்த நிலையில் இருப்பவைகளாகவுமே உள்ளன.  

கிராமங்களும் அவற்றின் பொருளாதாரப் பங்களிப்பும் இலங்கையினுடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன என கிராமங்கள் மீது கவர்ச்சி கொண்டவர்களிடையே ஓர் அபிப்பிராயம் உள்ளது. ஆனால் அது கிராமங்களின் யதார்த்தம் பற்றி தெளிவாக உற்று நோக்காத, கண்மூடித் தனமான கருத்தென்றே கூற வேண்டும். இலங்கையின் கிராமங்கள் அமைதியானவை – பசுமையானவை –அழகானவை என்பது உண்மையே.

ஆனால் அவை வறுமையும் பசியும் கடன் சிக்கல்களும் கொண்ட மக்களால் நிறைந்தவை,இலங்கையிலுள்ள கிராமங்களினது சமூக பொருளாதார உட்கட்டமைப்பின் நிலைமைகளையும்,அவற்றின் பொருளாதார நடவடிக்கைகளின் தராதரங்களையும் இன்றைய சர்வதேச நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் ஒரு பின்தங்கிய வறிய நாட்டிலுள்ள நிலைமைகளைக் கொண்டவையாகவே உள்ளன. மேலும் நகரப் புறங்களுக்கும் கிராமப் புறங்களுக்குமிடையே பல்வேறு வகையிலும் இங்கு பெரும் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன. அத்துடன் இங்குள்ள கிராம பொருளாதாரத்தின் கட்டமைப்பின் குறைவிருத்தி நிலைமைகள் கிராமப்புற மக்களை தாழ்ந்த நிலையில் வைத்திருப்பதுடன், இலங்கையின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் முன்னேற்றத்துக்கும் பெரும் தடையாக உள்ளன என்னும் உண்மைகள் இங்கே மறைந்து கிடப்பதை தெளிவாக அடையாளம் காணுதல் அவசியமாகும்.  

அன்றாட காய்ச்சிகளாக வாழும் ஏழைகளின் சீவனோபாய பயிர்செய்கைகளே இலங்கையின் விவசாயம்

மேற்கூறிய வகையில் அடையாளம் காணில், இலங்கையிலுள்ள 14000 கிராமங்களில் சுமார் 10000 கிராமங்களை இங்கு அனைத்து வகையிலும் மிகப் பின்தங்கிய கிராமங்கள் என வரையறுக்கலாம். இக்கிராமங்கள் கொண்டிருக்கும் சனத்தொகையும் கொஞ்சநஞ்சமல்ல. சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்களைக் கொண்டிருக்கின்றன எனலாம். இக்கிராமங்கள் பெரும்பாலும் அடிப்படை உணவுப் பண்டங்களான நெல் உற்பத்தி,மரக்கறிகள் உற்பத்திகள், கால்நடை வளர்ப்புகள் போன்றவற்றையே தமது பண வருமானத்துக்கான பிரதானமான பொருளாதார நடவடிக்கைகளாகக் கொண்டுள்ளன.  

இக்கிராமங்களில் ஆக்கப்படும்கைத்தொழில் துறை உற்பத்திகளைப் பொறுத்த வரையில் சில பழைய பாரம்பரிய உற்பத்திகள் மீதான ஈடுபாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றையும் பழைய பாரம்பரிய முறைகளிலேயே மேற்கொள்கின்றனர். நவீன யந்திரங்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழிற் துறைகளுக்கும் இந்த வகை கிராமங்களுக்கும் சம்பந்தமே இல்லை அல்லது அரிதாகவே உள்ளதெனலாம். தனியார் சேவைத் தொழில்கள் எனும் வகையான நடவடிக்கைகள் இந்தக் கிராமங்களில் பெரும்பாலும் அவற்றினது விவசாய உற்பத்திகளோடு தொடர்பானவைகளாக மட்டுமே உள்ளன.

கல்வி வசதிகள் மற்றும் வைத்திய வசதிகள் விடயத்திலும் இக்கிராமங்கள் மிகப் பின்தங்கியவைகளாகவே காணப்படுகின்றன. இக்கிராமத்து மக்கள் தத்தமது கிராமங்களில் உற்பத்தியாகும் உணவுப்பண்டங்களைத் தவிர ஏனைய தமது அன்றாட தேவைகளுக்கு தத்தமது ஊர்களுக்கு உள்ளேயே அமைந்துள்ள சிறிய கடைகளையே நம்பியுள்ளனர். ஆனால் அவ்வாறான கடைகளும் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளிற் சிலவற்றை மட்டுமே வழங்கக் கூடியவையாக உள்ளன.  

கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் தமது உடனடி அவசர வைத்திய தேவைகளுக்கு உள்ளுர்களிலுள்ள பாரம்பரிய வைத்தியர்களையோ அல்லது மூத்தோரின் கைநாட்டு வைத்தியங்களையோதான் நாட வேண்டியுள்ளனர். அரச நிறுவனங்களும் கிராமத்து மக்களுக்கு மிகத் தூரத்து உறவுகளாகவே உள்ளன. இதனால் பெரும்பாலும் கிராமத்து மக்கள் தமது தேவைகளுக்கு அடிக்கடி நகரங்களுக்கான பயணங்களில் காலத்தையும் பணத்தையும் செலவளிக்க நேரிடுகிறது.

இவர்கள் தமது வாழ்க்கையில் வருடாந்தம் எவ்வளவு கால நேரத்தையும் பணத்தையும் போக்குவரத்திலும் நகரங்களிலும் செலவளிக்கிறார்கள் என்பதை முறையாக ஆய்வு செய்து கணக்கிட்டால் கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் உழைப்பு சக்தி எவ்வளவுக்கு வீணடிக்கப்படுகிறது என்பது நிச்சயம் ஆச்சரியமூட்டுவதாகவே இருக்கும்.  

இலங்கையின் உழைப்பாளர் தொகையில் சுமார் 30 (முப்பது) சதவீதமான தொழிலாளர்கள் விவசாயத் துறையில் உள்ளனர் எனக் கணக்கிடப்பட்டாலும் அவர்கள் இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தில் கொண்டிருக்கும் பங்கு வெறுமனே 8 (எட்டு) சதவீதம் மட்டுமே. இந்த 8 (எட்டு) சதவீதம் என்பது நெல் உற்பத்திகள், தேயிலை மற்றும் றப்பர் தோட்டத்துறைகள், வாசனைத் திரவிய பயிர்; உற்பத்திகள், மரக்கறி மற்றும் பழ வகை உற்பத்திகள், மீன்பிடிகள்,கால்நடை வளர்ப்புகள் ஆகிய பலவற்றை உள்ளடக்கியதாகும்.

அந்த வகையில் பார்த்தால்  பின்தங்கிய கிராமத்து விவசாயிகள் தேசிய வருமானத்தில் கொண்டிருக்கும் பங்கு மிக மிகக் குறைவானதாகும். ஏனெனில் நெல் வயல்கள், மரக்கறி தோட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை மூலமான உற்பத்திகளுக்கு சந்தைகளில் கிடைக்கும் விலைகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே அவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. கிராமப் புறங்களில் உள்ள கைத் தொழில்களும் சரி, அங்கு மையம் கொண்டு மேற்கொள்ளப்படும் சேவைத் துறை நடவடிக்கைகளும் சரி மொத்தத்தில் உருவாக்கும் வருமானமானது மொத்தத் தேசிய வருமானத்தில் மிகவும் கவலை கொள்ளக்கூடிய அளவு பங்கையே கொண்டிருக்கின்றன.  

கிராமங்கள் ஆற்றும் பொருளாதார செயற்பாடுகளை ஒருங்கிணைத்து நோக்கி, அவை பற்றி தீர்க்கமாகச் சொல்வதானால், இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50சதவீதத்துக்கும் மேற்பட்ட தொகையைக் கொண்ட இந்தக் கிராமத்து மக்களுக்கு இலங்கையின் தேசிய வருமானத்தில் உள்ள பங்கு 10 சதவீதத்தைக் கூட தாண்டும் என்று சொல்ல முடியாது. அதனை வேறொரு வகையில் கூறுவதானால் இலங்கையின் 50 சதவீமான உழைப்பு சக்தியானது மிகக் குறைந்த பொருளாதாரப் பயன்பாட்டைக் கொண்டதாக இருக்கும் வகையிலேயே இலங்கையின் கிராமப் புற பொருளாதார கட்டமைப்பு அமைந்துள்ளது.               

இலங்கையின் கிராமப்புற மக்கள் நெல் உற்பத்திகளாலும், மரக்கறி உற்பத்திகளாலும் மற்றும் இறைச்சி, பால், முட்டை போன்றனவற்றிற்கான கால் நடை வளர்ப்பினாலும் பெறுகின்ற குறைந்த வருமானத்தைக் கொண்ட அவர்களது வாழ்க்கையானது மொத்தத்தில் அவர்களின் அடிப்படையான உயிர் வாழ்வுக்கான தேவைகளை மிகக் குறைந்த பட்சமாகவாயினும் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அன்றாடம் நடத்தும் பொருளாதார போராட்டமாகவே அமைகின்றது.  

கிராமங்களில் பெரும்பாலும் பருவகால வேலைவாய்ப்புகளே உள்ளன. அவர்களது பொருளாதார செயற்பாடுகளுக்காகவும், தமது அன்றாட வாழ்வுத் தேவைகளு;காவும் அவர்கள் பயிர் செய்யும் காலத்திலும் சரி, பயிர் செய்ய முடியாத பருவ காலங்களிலும் சரி அவர்கள் அரச நிதி நிறுவனங்கள், பண வசதி படைத்தவர்கள் மற்றும் கிராமப்புற உற்பத்திகளை நேரடியாகக் கொள்வனவு செய்யும் வர்த்தகர்களிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாய நிலையிலேயே உள்ளனர்.

இவ்வாறு கடன்கள் வாங்குவதுவும், பின்னர் தமது பயிர்களின் அறுவடை காலங்களில் அந்தக் கடன்களை திருப்பி அடைக்க முற்படுவதுமாகவே கிராமப்புற மக்களின் வாழ்க்கை அமைகிறது. இவர்கள் நிலம் பார்த்து நடப்பதை விட வானம் பார்த்து வாழ வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளனர். மாறி மாறி வரும் மழை வெள்ளமும் வரட்சியும் இவர்களது உழைப்பின் பயன்களை அவ்வப்போது சூன்யமாக்கி விடுகின்றன. இவ்வாறான நிலைமைகளால் பெரும்பாலும் விவசாயிகள் ஒரு பொருளாதார நச்சுச் சுழற்சிக்குள் நிரந்தரமாக சிறைப்படுத்தப்படுகின்றனர்.  

1950களில் ‘சமூக முன்னேற்றத் திட்டம்’, 1960களில் ‘பசுமைப் புரட்சித் திட்டம்’, 1970களில் ‘ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டம்’, அதற்குப் பின்னர் 1980களில் ‘வறுமை ஒழிப்புத் திட்டம்’, 1990களில் தொடங்கப்பட்ட சமுர்த்தித் திட்டம் என அடுத்தடுத்து ஆட்சியாளர்களால் பல திட்டங்கள் சுதந்திரமடைந்த காலம் தொட்டு கிராமப்புற மக்களை நோக்கி மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் எவற்றினாலும் கிராமங்களை பின்தங்கிய நிலையிலிருந்தும் வறுமை நிலையிலிருந்தும் விடுவித்து ஒரு முன்னேற்றப் பாதையில் செலுத்தி விட முடியவில்லை.

இலங்கையின் கிராமங்களினுடைய பொருளாதார அம்சங்கள் கொண்டிருக்கும் தராதரத்தையும் பண்புகளையும் ஆழ்ந்து நோக்கினால் அவை இன்றைய காலத்து பொருளாதார உலக மயமாக்கலோடு பொருந்திய வகையில் முன்னோக்கி செயற்படுவதற்கான தகுதிகளையோ – ஆற்றல்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை நிச்சயமாக அடையாளம் காண முடியும். இதனது அர்த்தம் இலங்கையின் கிராமங்கள் உலக முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் இணைக்கப்படாது சுயாதீனமாக செயற்படுகின்றன என்பதல்ல.

மாறாக உலக மயமாகியுள்ள முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்போடு பின்னிப் பிணைக்கப்பட்டு தொடர்ச்சியாக அடிநிலை வரை சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்ற கடைநிலை அலகுகளாகவே உள்ளன. கிராமத்து மக்கள் நகரங்களிலும் ஊடகங்களின் ஊடாகவும் உலக முன்னேற்றங்களால் ஏற்பட்டுள்ள நவீனங்களைப் பார்க்கிறார்கள் – ஆனால் அவற்றை அனுபவிப்பதற்கோ அல்லது அவற்றோடு இணைந்து பயணிப்பதற்கோ உரிய தகுதியைப் பெற முடியாதவர்களாகவே ஆக்கப்பட்டுள்ளனர்.   

கிராமத்து மக்களுக்கோ காலுக்கு செருப்பில்லை என்ற கவலை!

அரசாங்கமோ அவர்களை பல்லக்கில் போகச் சொல்கிறது

இங்கு கிராமப்புற மக்களிற் பெரும்பான்மையினர் பயிர்செய் பருவகாலங்கள் தவிர்ந்த ஏனைய காலங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அற்றவர்களாக உள்ளனர். அவ்வாறான காலகட்டங்களில் சந்தைப் படுத்தக் கூடிய பண்டங்களை உற்பத்தி செய்யும் தொழில்களை மேற்கொள்வதற்கான மூலதனத்தையோ, தொழில் நுட்ப ஆற்றல்களையோ கொண்டவர்களாக அவர்கள் இல்லை. அந்த வகையில் கிராமப்புற மக்கள் மத்தியில் உள்ள கணிசமான தொகை உழைப்பாளர்களின் பொருளாதார சக்தியானது வருடத்தில் கணிசமான அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்துக்கு போதிய பயன் தராது வீணாகின்ற வகையிலேயே கிராமங்களின் பொருளாதாரம் காணப்படுகின்றது.    

இலங்கையின் கிராமப்புற மக்கள் பெரும்பாலும் தமது விவசாய நிலங்களோடும், கிராமப் பறங்களில் மேற்கொள்ளக் கூடிய தொழில்களோடுமே பின்னிப் பிணைந்தவர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வேண்டிய பலத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆட்சியாளர்களிடம் நடைமுறைக்குப் பொருத்தமான உருப்படியான செயற் திட்டங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் அரசியல்வாதிகள் கிராமப்புற மக்களுக்கு ‘வீடு தருவோம்’, ‘வீதி தருவோம்’ என்று ஆசை காட்டி மோசம் பண்ண முயற்சிக்கிறார்களே தவிர, கிராமங்களின் பொருளாதாரங்களை ஆற்றல் மிக்கவைகளாக ஆக்கும் திட்டங்கள் எதனையும் கொண்டவர்களாக இல்லை.

அரசாங்கங்களின் அரைகுறையான நடைமுறைகளினால் இங்கு கிராமப்புற மக்களிற் பெரும்பான்மையானவர்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்துக்கு ஒரு சுமையானவர்களாகவே ஆக்கப்பட்டிருக்கின்றனர். கிராமப்புறங்களின் பொருளாதாரக் கட்டமைப்புகள் குறைவிருத்தி கொண்டவையாகவும், இங்குள்ள சமூக பொருளாதார உட்கட்டுமானங்கள் மிகப் பின்தங்கியவையாகவும் இருப்பதனால் இலங்கையின் கைத்தொழிற்துறைகளுக்கான உள்நாட்டு சந்தை வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுகின்றன.  மேலும்,நகரங்களில் தொடரச்சியாக நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. அத்துடன் கிராமப்புறங்களில் நிலவும் வேலையின்மையும் குறைந்த கூலி மட்டங்களும் அனைத்து பொருளாதாரத் துறைகளிலும் சம்பளம் மற்றும் கூலியின் உயர்ச்சியை கட்டுப்படுத்தும் காரணிகளாக அமைகின்றன. இந்நிலையில் இலங்கையின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியானது, கிராமப்புற பொருளாதார நிலைகளிலிருந்து  வேறுபட்ட வகையில் எவ்வாறு தனியாக மேல் நோக்கி முன்னேற முடியும்? 

இலங்கையில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிக்கூட படிப்பறிவு பெற்ற, நன்கு எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவர்கள்தான். ஆனால் படிப்புக்கும் விவசாயத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை – வுpவசாய நடவடிக்கைகளுக்கு பாரம்பரியமாக மூதாதையரிடமிருந்து நடைமுறைகளினூடாக கற்றுக் கொண்டதே போதும்! இதற்கென விஞ்ஞான பூர்வமான படிப்பறிவோ பயிற்சியோ தேவையில்லை! – நிலத்தை உழுவதற்கும், களை பிடுங்குவதற்கும், கிருமி நாசினி தெளிப்பதற்கும், மாடு மேய்ப்பதற்கும், விளைந்ததை அறுப்பதற்கும, பால் கறப்பதற்கும் படிப்பெதற்கு! அனுபவமே அவசியம்! என்பது இங்குள்ள விவசாயிகளிடையே மட்டுமல்ல, பரந்துபட்ட  பொது மக்கள் மத்தியிலும் உள்ள பொதுவான அபிப்பிராயம்.

இந்த நிலையில். நஞ்சற்ற உணவு உற்பத்திகளை மேற் கொள்ள வேண்டுமென்றால் இராசயன உரங்களை மற்றும் கிருமி நாசினிகளை கைவிட்டு, இயற்கையான முறைகளில் பசளைகளையும் கிருமி ஓட்டிகளையும் தயாரித்து பயிர் செய்கைகளில் பாவிக்க வேண்டும் என்றும் நீர்ப்பாசனம் மற்றும் பசளைகளைப் பாவிக்கும் விடயங்களில் பொருத்தமானதும் துல்லியமானதுமான முறைகளை விவசாயிகள் பிரயோகிக்க வேண்டும் என்றும் அரசாங்கமும் படித்த பெரிய மனிதர்களும் கூறுவது இங்கு நடைமுறைக்குப் பொருத்தமானதாக இல்லை.  

இங்கு நாடு முழுவதுவும் உள்ள பல்கலைக் கழகங்களில் பெரும்பாலானவை விவசாய பீடங்களைக் கொண்டிருக்கின்றன. அவை ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கான விவசாய பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால் அதில் எவ்வளவ சதவீதத்தினர் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர் என்று கேள்வி எழுப்பினால் கவலைக்குரிய பதிலே கிடைக்கும். நாடு முழுவதுவும் விவசாய அபிவிருத்தி திணைக்கள அலுவலகங்களும் மற்றும் விவசாய விரிவாக்க நிலையங்களும் பரந்து கிடக்கின்றன. ஆனால் இவை எந்தளவு தூரம் கிராமங்களில் உள்ள விவசாயிகளோடு இணைந்து செயலாற்றுகின்றன என்று கேள்வி எழுப்பினால் அவை தொடர்பாக அனுபவப்பட்ட விவசாயிகள் தமது ஆத்திரங்களையும் விரக்திகளையுமே வெளிப்படுத்துகின்றனர்.  

இயற்கைப் பசளைகளைப் பாவித்து நஞ்சற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டுமென அரசாங்கம் விவசாயிகள் மீது கட்டாயங்களை விதிக்கிறது. ஆனால் பயிர் செய் நிலங்கள் அதற்குத் தயாரானவைகளாக இல்லை, அத்துடன் கிடைக்கும் பயிர் விதைகள் அதற்குப் பொருத்தமானவைகளாக இல்லை. போதிய அளவு இயற்கை பசளைகளை தயாரிப்பதற்கு நாடு முழுவதிலும் மாடுகள், ஆடுகள் என வேண்டிய அளவு எண்ணிக்கையில் வீட்டு மிருகங்கள் இருக்க வேண்டும்! விவசாய நிலங்கள் இயற்கைப் பசளைகளிலிருந்து விலகி பல தசாப்தங்கள் ஆகிவிட்டது. இராணுவம் மற்றும் பொலிசை வைத்து மக்களைக் கடட்டாயப்படுத்தலாம் ஆனால் மண்ணை நோக்கி பணிக்க முடியாது.  

இலங்கையின் விவசாயம் இயற்கை முறையிலான விவசாயத்தைக் கொண்டதாகத் தான் இருந்தது. நஞ்சற்ற உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்யும் நாடாகத்தான் இருந்தது. ஆனால் 1960களின் ஆரம்பத்திலிருந்து, பசுமைப் புரட்சி செய்வோம், உணவு உற்பத்தியைப் பெருக்குவோம் என்ற பெயரில் வயல்கள் முழுவதிலும் டிரக்டர்கள் பாவனைக்கு வந்து மாடுகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டன. இயற்கைப் பசளைகளோடு இசைந்து பயன் தந்து கொண்டிருந்த விவசாய நிலங்களெல்லாம் ரசாயனப் பொருட்களுக்கு பழக்கப்படுத்தப் பட்டுவிட்டன. இப்போது திடீரென இயற்கை விவசாயத்தை திணிக்க முற்படுவது ஏற்கனவே பின்தங்கிய நிலையில் இருக்கும் விவசாய பொருளாதாரத்தையும் அதை நம்பி உழைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளினது வாழ்க்கையையும் மேலும் பின்னோக்கித் தள்ளுவதாகவே அமையும்.         

கிராம பொருளாதாரத்தின் ஏற்றங்களுக்கு வேண்டிய முழுமையான கிராம மறுசீரமைப்பு திட்டம் வேண்டும்.

இலங்கையின் விவசாயிகள் மிகப் பெரும்பாலும் சிறிய விவசாயிகளாகவோ, ஏழை விவசாயிகளாகவோ இருப்பது மட்டுமல்ல இங்கு மேற்கொள்ளப்படும் அனைத்து விவசாய நடவடிக்கைகளும் அவற்றிற்கான தேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டவைகளாகவோ அல்லது ஓர் ஒழுங்கு முறைக்குள் உட்பட்டவைகளாகவோ இல்லை. இங்கு தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள பெரும் விவசாயப் பண்ணை முறையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் கணிசமான சனத்தொகை மக்கள் விவசாயத்திலேயே தங்கியிருந்தாலும் அந்த நாடுகளில் அனைத்து விவசாயிகளும் விவசாய நடவடிக்கைகளும் நன்கு ஒழுங்கு முறைக்கு உட்படுத்தப்பட்டவைகளாகவும் ஒருங்கிணைக்கப்பட்டவையாகவும் உள்ளன. அந்த நிலைமைகளை கொப்பியடிப்பது பற்றியும் இலங்கை கற்பனை பண்ணக் கூடாது. 

இங்கு இலங்கைக்கே உரிய வகையில் பொருத்தமானதோர் முழுமையான கிராம மறு சீரமைப்புத் திட்டத்தின் அடிப்படையிலான விரைந்த நடவடிக்கைகள் அவசியமாகின்றன. 

கிராமங்களின் உற்பத்திகளை அபிவிருத்தி செய்தலை அடிப்படையாகக் கொண்டும் அவற்றிற்கு அவசியமான சமூக பொருளாதார கட்டமைப்புகளை விருத்தி செய்தலை கருத்திற் கொண்டும் கிராமங்களை அரச நிர்வாக ரீதியல் ஒருங்கிணைக்கும் மீள் ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளல் வேண்டும். 

பயிர் செய்கைகளிலும் மற்றும் கால்நடை வளர்ப்புகளிலும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையான நிலப்பயன்பாட்டை உறுதி செய்யும் வகையாகவும், நீரப்பாசன பயன்பாட்டை உச்சப்படுத்தும் வகையாகவும் அவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். 

பயிர் செய்கை விடயங்களில் ஒருங்கிணைந்ததோர் தீர்மானங்களின் அடிப்படையில் உற்பத்திகள் மேற்கொள்ளப்படுவதை அரச நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.  

விவசாயிகளின் நிலப்பயன்பாடு,நீரப்பாசன மேலாண்மை, உற்பத்திகளை சந்தைப் படுத்துதல், உற்பத்திகளுக்கான உள்ளீடுகளை உரிய நேரங்களில் வழங்குதல், விவசாயிகளுக்கு வேண்டிய நிதி உதவிகளுக்கு ஏற்பாடுகள் செய்தல் போன்ற விடயங்களுக்கு பொருத்தமான கூட்டுறவு அமைப்புகளை விவசாயிகளும் அரச நிர்வாகமும் ஒருங்கிணைத்து செயற்படுத்துதல் வேண்டும்.  

சிறு சிறு துண்டுகளாக இருக்கும் சிறிய விவசாயிகளின் நிலங்களை பயிர் செய்கைகளில் கூட்டுறவு அடிப்படையிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  

ஒருங்கிணைந்த சுயசார்பு பண்ணை முறை, சிக்கனமான நீரப்பாசன முறைகள், பசுமைக் குடில் விவசாயம், தொழில் முறையில் தரமான இயற்கைப் பசளைகள் தயாரிக்கும் சிறு தொழில்கள், உள்ளீடுகளின் பயன்பாட்டிலும் பயிர்கள் பராமரிப்பிலும் நேர்த்தியான மற்றும் துல்லியமான நடைமுறைகளைக் கடைப்பிடித்தல் போன்ற விடயங்களை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிப்பதோடு அதற்கான போதிய பயிற்சிகளையும் அவற்றிற்குத் தேவையான நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளையும் அரச நிர்வாகம் முழுமையாக மேற்கொள்ளுதல் வேண்டும். 

கிராமங்கள் தோறும் பெண்களின் தலைமையில் கூட்டுறவின் அடிப்படையில் சந்தை வாய்ப்புகள் கொண்ட பல்வேறு வகைப்பட்ட கைத்தொழில் உற்பத்திகளுக்கான முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். அவ்வகையான தொழில்களை ஏற்கனவே செய்வோரை ஊக்குவிக்க மூலதன மற்றும் தொழில நுட்ப உதவிகளை வழங்குதல் வேண்டும். மேலும் புதிய பல தொழில்கள் பெருகும் வகைக்கு உரியதான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

ஒட்டு மொத்தத்தில் நோக்கினால்,இலங்கையின் பொருளாதாரம் நிமிர வேண்டுமானால் இலங்கையின் கிராமிய பொருளாதார நடவடிக்கைகள் நேர்த்தியாக்கப்பட்டு நிமிர்த்தப்பட வேண்டும். இல்லையாயின், இலங்கையின் தேசிய பொருளாதார முன்னேற்றத்துக்கு இங்குள்ள கிராமங்களின் பின்தங்கிய பொருளாதார நிலையே பிரதானமானதொரு தடையாக தொடரும்.  

(இக்கட்டுரைத் தொடர் அடுத்த பகுதி 23ல் தொடரும்)