தேசிய வருமானத்தின் உண்மையான பெறுமானம்
மரபுரீதியான பொருளாதார கணிப்பீட்டு முறைகளில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையை மதிப்பிடுவதற்கு தேசிய மொத்த உற்பத்தியின் வருடாந்த வளர்ச்சி வீதம், தலாநபர் வருமானம் போன்றவற்றை பிரதானமானதாகக் கொண்டே மதிப்பீடுகளும் ஒப்பீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னர் சர்வதேசரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாணயத்தின் பெறுமதியில் தேசிய உற்பத்திகளின் பெறுமானம் கணிப்பிடப்பட்டது. ஆனால், கடந்த மூன்று தசாப்தங்களாக நாடுகள் ஒவ்வொன்றிலும் பண்டங்களின் சந்தைவிலைகளில் நிலவும் வேறுபாடுகள் கருத்திலெடுக்கப்பட்டு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வை ஒப்பிடுவதற்கான கணிப்பினை பண்டங்களைக் ‘கொள்வனவு திறன் சமநிலை முறை’ பிரயோகிக்கப்படுகிறது. இதற்கு அமெரிக்க நாட்டின் சந்தைகளில் நிலவும் பண்டங்களின் விலைகளே பொது அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. இவ்வாறான அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டினதும் தேசியரீதியான மொத்த உற்பத்திப் பெறுமானம் அல்லது மொத்த வருமானத்தின் சர்வதேச பெறுமானம் கணக்கிடப்பட்டு, நாடுகளுக்கிடையே காணப்படுகின்ற உண்மையான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் – வேறுபாடுகள் அளவிடப்படுகின்றன.
2019ம் ஆண்டில் அமெரிக்காவின் ஒரு பிரஜைக்குரிய, அதாவது தலாநபருக்குரிய வருமானம் 66000 அமெரிக்க டொலர்களாகும். அதேவேளை சிறிலங்காவின் தலாநபர் வருமானம் இலங்கை ரூபாயில் சுமார் 6 லட்சத்து 88 ஆயிரமாகும். இது அன்றைய அந்நிய செலாவணி கணக்குப்படி 3850 அமெரிக்க டொலருக்கு சமனாகும். தலாநபர் வருமானம் என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரிய அல்லது ஒவ்வொரு பிரஜையினாலும் உருவாக்கப்படுகிற சராசரி வருமானம் என பொதுவாகக் கூறலாம். இதனுடைய அர்த்தம் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் தனிப்பட்டரீதியில் குறிப்பிட்ட வருடத்தில் கிடைத்த வருமானம் எனக் கொள்ளக் கூடாது.
நாட்டு மக்கள் பெறும் வருமானம் என்பது வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. உழைப்பைக் கொடுத்து கூலியை அல்லது சம்பளத்தை பெறுவோர், தொழில்களில் பணத்தை முதலிட்டு லாபம் பெறுவோர், பணத்தைக் கொடுத்து வட்டி பெறுவோர் மற்றும் தமக்கு உரிமையான காணியை, கட்டிடத்தை அல்லது ஒரு பண்டத்தை மற்றொருவருக்கு குறிப்பிட்ட காலத்துக்கு கொடுத்து வாடகை பெறுவோர் என மக்கள் வருமானம் பெறுகின்றனர் என எளிமையாகக் கூறலாம்.
இவ்வாறாக வருமானம் பெறும் பொதுமக்கள் அதில் கணிசமான பகுதியை செலவு செய்கின்றனர் – அதில் ஒரு பகுதியை சேமிக்கின்றனர். தேச மக்கள் தனிப்பட்ட ரீதியில் பெறுகின்ற வருமானங்களையும் அவர்களின் செலவுகளையும் ஆய்வு செய்யும் பொருளியலானது குடும்பப் பொருளியல் அல்லது மனைப் பொருளியல் எனப்படுகிறது. ஒரு மனை என்பது ஒரு தனியாளை மட்டும் கொண்டதாகவோ, தாய் தந்தை பிள்ளைகள் என கொண்டதாகவோ அல்லது கூட்டுக் குடும்பமாகவோ இருக்கலாம். இலங்கையைப் பொறுத்த வகையில் கூட்டுக் குடும்பம் என்பது நடைமுறையில் இல்லையென்றே கூறலாம். இலங்கையில் ஒரு குடும்பத்தின் எண்ணிக்கை சராசரி 4 பேர் என ஆய்வுகள் கூறுகின்றன. மனைப் பொருளியல் என்றால் என்ன? அதன் தன்மைகள் என்ன? அதன் உள்ளடக்கங்கள் என்ன? என்பன பற்றிய விளக்கமான விபரிப்புக்குள் செல்வது இங்கு அவசியமற்றது. இலங்கை வாழ் மக்களின் மனைப் பொருளியல் நிலைமை பற்றிய பருமட்டான ஒரு சித்திரத்தை மட்டும் இங்கே காண்போம்.
தேசிய பொருளாதாரமும் தேச மக்களின் பொருளாதாரமும்
இலங்கையின் சராசரி தலாநபருக்கான வருமானமாகிய 3850 டொலர் என்பது இலங்கையின் சந்தைகளில் காணப்படுகிற பண்டங்களின் விலைகளை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது. இதன்படி பார்த்தால் இலங்கை மக்களின் பொருளாதாரத்தை விட அமெரிக்க மக்களின் பொருளாதாரம் சுமார் 17 மடங்கு அதிகமென கொள்ள வேண்டும். இது மெய்யான பொருளாதார ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கவில்லை. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட பண்டத்துக்கு இலங்கையின் சந்தைகளில் நிலவுகின்ற விலைக்கும், அதே பண்டத்துக்கு அமெரிக்காவின் சந்தையில் நிலவும் விலைக்கும் இடையே கணிசமான அளவு வேறுபாடு உள்ளது. இதனை கணக்கில் எடுக்காததால் ஏற்படுகின்ற தவறை சரி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘கொள்வனவு திறன் சமநிலை‘ முறையை இங்கு பிரயோகிப்பது அவசியம். அதாவது, இலங்கையில் உற்பத்தி செய்யும் பண்டங்களை அமெரிக்காவின் சந்தை விலைகளின்படி கணக்கிட்டால் இலங்கையின் சந்தைகளில் 3850 டொலர்கள் பெறுமதியான இலங்கை நாணயத்துக்கு கொள்வனவு செய்யக் கூடிய பண்டங்களை (வெறுமனெ தொட்டுணரக் கூடிய பண்டங்களை மட்டுமல்ல சேவைப் பண்டங்களும் உள்ளடங்கலாக) அமெரிக்க சந்தைகளில் நிலவும் விலைகளின்படி பார்த்தால் சுமார் 13200 டொலர் பெறுமதிக்கு சமனாகும் என சரவதேச கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதன்படி பார்க்கையில் அமெரிக்க மக்களின் சராசரி தேசிய வருமானத்தை கொள்வனவு சக்தி அடிப்படையில் இலங்கை மக்களின் சராசரி தேசிய வருமானத்தோடு ஒப்பிடுகையில் 5 மடங்கே அதிகமாகும்.
எவ்வாறாயினும் இவ்வாறான தலாநபர் வருமானக் கணிப்பீடுகள் மட்டும் இலங்கை மக்களினுடைய பொருளாதார வாழ்க்கையின் கூறுகள் ஒவ்வொன்றினதும் உண்மையான நிலைமைகளினை அறிவதற்கும் – தெளிவாக அடையாளம் காண்பதற்கும் போதியதல்ல. நாடுகளினுடைய பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் தலாநபர் வருமானம் எவ்வாறு பகிரப்படுகிறது – தேசிய வருமானம் மக்களிடையே எவ்வாறு பகிரப் படுகிறது: நாட்டின் ஒவ்வொரு பிரதானமான துறைகளும் மொத்த தேசிய வருமான ஆக்கத்தில் எவ்வாறு பங்களிக்கின்றன: நாட்டு மக்களினதும் அரசினதும் நுகர்வுச் செலவுகள் மற்றும் முதலீடுகள் எனனென்ன விகிதாசாரங்களில் மேற்கொள்ளப்படுகின்றன: நாட்டு மக்கள் தமது பல்வேறு தேவைகளுக்கு எவ்வாறான விகிதாசாரங்களில் தமது வருமானத்தை செலவு செய்கிறார்கள் என்பன போன்ற பல விடயங்களையும் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகும்.
மக்களினுடைய மனைகளின் கூட்டே தேசம்
நாட்டு மக்கள் பெறும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே ஏற்றத்தாழ்வான பல தரப்புகள் உள்ளன. வேலையின்மையால் வறியவர்களாக இருப்போர் ஒருபுறம், மறுபுறமாக நீண்ட நேரம் கடுமையாக உழைத்தும் அடிப்படையான தேவைகளில் குறைந்தபட்சமாகவேனும் திருப்தி பெற முடியா நிலையில் வாழுவோர் என கணிசமான சதவீத மக்கள் தொகை, மேலும் அவ்வாறு உழைத்தும் வறியவர்களாகவும் போசாக்கற்றவர்களாவும் நோயாளிகளாகவும் வாழும் பெரும் தொகையான மக்கள் கூட்டத்தினர். இவ்வாறான நிலைமைகள் பற்றிய ஆழமான அறிவின்றி, நாட்டினுடைய பொருளாதார நிலையின் தராதரத்தையும் – பொருளாதாரம் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் பற்றிய தெளிவான புரிதலைப் பெற முடியாது.
நாட்டில் பல்வேறு நிலைகளிலுள்ள மக்களின் பொருளாதார நிலை அதாவது, ஒவ்வொரு குடும்பங்களினதும் மொத்த வருமானம், செலவுகள், அந்த வருமானம் பல்வேறுபட்ட தேவைகளிலும் செலவு செய்யப்படும் வீதாசாரங்கள், நகரங்களில் வாழும் குடும்பங்களும் கிராமங்களில் வாழும் குடும்பங்களும் பெறும் வருமானங்களுக்கும் மேற்கொள்ளப்படும் செலவுகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள், அதேபோல வெவ்வேறு உற்பத்தித்துறைகளில் ஈடுபடுவோரின் குடும்பங்களின் வருமானங்கள் மற்றும் செலவுகளில் உள்ள வேறுபாடுகள் போன்றனவற்றை ஆய்வு செய்வது தேசிய ரீதியான பொருளாதாரத்தின் முழுமையான பண்புகளைக் கண்டறிவதற்கு துணை புரிகின்றன. இதற்கான தேடலில் குடும்ப அல்லது மனைப் பொருளியல் (Household Economics) ஒரு பிரதான இடத்தை வகிக்கின்றது. மனைப் பொருளியல் ஆய்வில் புள்ளிவிபரவியல்ரீதியான அவதானிப்புகளை மேற்கொள்ளுகின்ற அதேவேளை சமூக பொருளாதார கோட்பாடுகள் – கண்ணோட்டங்களில் அணுகி ஆய்வு செய்தல் மூலமே தேச மக்களின் சமூக பொருளாதார பரிமாணங்களுக்கும் தேசிய பொருளாதாரத்துக்கும் இடையேயுள்ள பொருத்தங்களை – இடைவெளிகளை –முரண்பாடுகளை புரிந்து கொள்ள முடியும்.
இந்த நாட்டில் வாழும் உற்பத்தித் தொழிற்துறையில் ஈடுபடும் தொழிலாளர்களையும், விவசாயத் துறையில் ஈடுபடும் ஏழை விவசாயிகள், சிறுநில உடைமை கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களையும், மேலும் அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்களையும் உள்ளடக்கிய சனத்தொகையினரே நாட்டில் மிகப் பெரும்பான்மையினராக உள்ளனர்.
பொதுமக்களின் பொருளாதார வாழ்வுநிலை அசைவுகளே தேசிய அபிவிருத்திச் சக்கரங்களை நகர்த்துகின்றன
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 80 சதவீதமானவர்கள் கிராமங்களிலேயே வாழ்கின்றனர். தென்னாசியாவில் உள்ள நாடுகளில் இலங்கையின் நகரமயமாக்கம் ஒப்பீட்டுரீதியல் குறைவான சதவீத மக்கள் தொகையினரையே நிரந்தர குடியிருப்பாளர்களாக உள்வாங்கியுள்ளது. நகரங்களில் தொழில்புரிவோரில் கணிசமானோர் கிராமங்களின் குடியிருப்பாளர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமங்களில் தமது நிரந்தர வீடுகளைக் கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையானோர் தத்தமது வீட்டைச் சுற்றி பயன்தரும் மரங்களை, செடிகளை மற்றும் கொடிகளைக் கொண்டிருப்பதுவும், அங்கு தமது சொந்தத் தேவைகளுக்கான கால்நடைகளையும் சிறிய அளவில் வளர்த்துக் கொள்வதுவும் அவர்களது மனைப் பொருளியல் முகாமைத்துவத்தில் கணிசமான பாகத்தை வகிக்கின்றது.
இலங்கையின் மிகப் பெரும்பான்மையான மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சம்பளம் மற்றும் கூலியையே தமது மிகப் பிரதானமான பணவருமானமாகக் பெறுகின்றனர். அடுத்தபடியாக, கணிசமான தொகையினர் தமது நிலங்களில் விவசாயம் செய்தோ, தமது குடும்ப அளவில் அல்லது சிறிய அளவில் உற்பத்தி, வர்த்தக மற்றும் சேவைகளை வழங்கும் தொழில்களை மேற்கொண்டோ தமது வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். வெறுமனே ஒரு குறிப்பிட்ட தொழிலில் தமது உழைப்பை முழுமையாக வழங்குவதன் மூலமாக அல்லது ஒரு குறிப்பிட்ட உற்பத்தி, வர்த்தக அல்லது சேவைத் தொழிலில் மட்டும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதன் மூலமாக வருமானம் பெறுவோர் எனும் வகையினர் இங்கு ஒப்பீட்டளவில் சிறுபான்மையினரே. இங்கு மிகப் பெரும்பான்மையான குடும்பங்களின் வருமானங்கள் வெவ்வேறு வகைப்பட்ட வருமானங்களின் கலப்பாகவே அமைகின்றது. இந்தக் கலப்பில் உள்ள விகிதாசாரங்கள் வேறுபடலாம். இது நவீன பொருளாதார கட்டமைப்பில் உள்ள இயல்பானதே. அதுவும் குறைந்த மற்றும் மத்தியதர வருமான தரம் கொண்ட நாடுகளில் இது பொதுவானதே. இதில் இலங்கை விதிவிலக்கல்ல.
இலங்கையில் தற்போது சுமார் 86 லட்சம் பேர் பொருளாதாரரீதியாக வருமானம் பெறுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் சுமார் 13 லட்சம் பேர் அரச சேவை ஊழியர்களாக உள்ளனர். 22 லட்சம் பேர் விவசாயிகளாகவோ அல்லது விவசாயக் கூலிகளாகவோ உள்ளனர். உற்பத்தித் தொழிற் துறைகளில் 19 லட்சம் பேரும் அரச சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைத்துறைகளில் 32 லட்சம் பேரும் உள்ளனர். இலங்கையில் எந்த அளவுக்கு குடும்பங்களின் வருமானம் சம்பளமாக அல்லது கூலியாக பெறப்படும் வருமானத்தில் உள்ளதென இங்கு தரப்பட்டுள்ள புள்ளிவிபரங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேலும் குறைந்த வருமானம் பெறும் சிறு விவசாயிகள் மற்றும் சிறு தொழில்களை சுயமாக மேற்கொள்வோரின எண்ணிக்கையைக் கணக்கிட்டால் அது மிகக் கணிசமான விகிசாரத்தினரை உள்ளடக்குவதாக இருக்கும். அவ்வாறானவர்களின் வருமானத்தில் அவர்களின் உடல் உழைப்புக்கான கூலியை நீக்கி விட்டுப் பார்த்தால், இலாபமாக அல்லது வேறு வகையாக கிடைக்கும் லாபம் மிக மிகக் குறைவானதே.
முதலாளித்துவக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாடு பொருளாதாரரீதியாக வளர்ந்து செல்லும் போது. நாட்டிலுள்ள மிகப் பெரும்பான்மையோரின் வாழ்க்கையில் அவர்கள் தமது உழைப்பு சக்தியைக் கொடுத்து அதற்கு ஈடாகப் பெறுகின்ற சம்பளம் அல்லது கூலிதான் அவர்களின் வருமானத்தில் பெரும் பங்காக அமைகின்றது.
(பகுதி 4 இல் தொடரும்)