நாட்டில் கணிசமான தொகை உழைப்பாளர்களுக்கு போதிய அளவு நாட்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்பதன் காரணமாக அவர்கள் தமது வாழ்வின் அடிப்படைத் தேவைகளை குறைந்தபட்ச மட்டத்துக்காயினும் போதிய அளவுக்கு பெற முடியாமல் இருக்கிறார்கள் என்பது வேறு விடயம். இங்கு போதிய அளவு நாட்களுக்கு, எட்டு மணி நேரமென்ன அதற்கு மேலும் கடுமையாக உழைத்தாலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற கூலி அல்லது சம்பளம் அவர்களது குடும்பத்தின் அடிப்படையான தேவைகளைப் பெறுவதற்கே போதாததாக உள்ளது. இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்களும் நகரங்களில் உதிரிகளாக கூலிக்கு அல்லது குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வோரின் குடும்பங்களும் இதற்கு நல்ல உதாரணங்கள். எட்டு மணி நேரத்துக்கு மேல் உழைத்தும் வறியவர்களாக இருக்கின்ற புதினமான நிலைமையில் இலங்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்ட உழைப்பாளர்களின் குடும்பங்கள் உள்ளன என்பதை இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமாகும்.
சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரிப்பதை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப அதீத வளர்ச்சியின் காரணமாக அடுத்தடுத்து சந்தைக்கு வரும் நுகர்வுப் பொருட்கள் பல இன்றைய கால வாழ்க்கையில் கீழ் மட்ட நிலையில் வாழும் மக்களுக்குக் கூட அத்தியாவசியமான பண்டங்களாகியுள்ளன. வாழ்க்கைச் செலவின் மொத்த அதிகரிப்பில் அவை தவிர்க்கப்பட முடியா வகையில் ஒரு முக்கியமான பாகத்தை வகிக்கின்றன. நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட பண்டங்களை ஒரு புறம் ஒதுக்கி விட்டுப் பாரத்தாலும், நாட்டு மக்கள் சுகதேகிகளாக வாழ்வதற்கும், உழைப்புக்குத் தேவையான உடற்சக்தியை தக்க வைப்பதற்கும், வாழ்க்கையில் குறைந்தபட்ச மகிழ்ச்சியை அநுபவிப்பதற்கும் அவசியமான பண்டங்களினது விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றன.
வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு பற்றிய விடயங்களில் அரசியற் கட்சிகள் அக்கறை செலுத்துவது போல் தமது பிரச்சாரங்களில் காட்டிக் கொண்டாலும் அந்த அக்கறைகளை அரசியல் உள் நோக்கங்கள் கொண்ட பாசாங்குகளாகவே கருதவேண்டியுள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் அடிப்படைப் பண்டங்களின் விலைவாசி ஏற்றத்துக்கும் மக்களின் வாழ்க்கைத்தர வீழ்ச்சிக்கும் அவ்வப்போது காரணங்களைக் கண்டுபிடித்துக் கூறி மக்களைச் சமாளிக்கும் அரசியலை மேற்கொள்கிறார்கள்.
அதிகாரத்தில் இல்லாத அரசியற் பிரதிநிதிகள் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது பொது மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பாக உரத்துப் பேசினாலும், அவர்களே ஆட்சிக்கு வந்து அமர்ந்திருக்கும் போது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை நியாயப்படுத்துவதற்கான காரணங்களைக் கூறுவதில் மட்டுமே தமது திறமைகளைக் காட்டுகின்றனர்.
நாட்டில் உழைப்பாளர்களின் வருமானம் வருடா வருடம் உயர்கிறது என்று கூறுவதில் உண்மையான அர்த்தத்தை எவ்வகையிலும் கொள்ள முடியவில்லை. ஏனெனில் பண்டங்களின் தொடர்ச்சியான விலை உயர்ச்சி காரணமாக மக்களின் கொள்வனவு பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதாவது மக்கள் இங்கு தமது வருமானத்தில் அத்தியாவசியமான உணவுப் பண்டங்களுக்காக செலவு செய்யும் விகிதாசாரம் எந்த வகையிலும் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்ததாக இல்லை. இந்த நாட்டின் மிகப் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் இந்த நாடு வறியநாடு என்ற நிலையில் இருந்தபோது அச்செலவுகள் கொண்டிருந்த அதே விகிதாசாரத்தையே ஏறத்தாழ இன்னமும் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன என்பது கவனத்துக்குரியதாகும்.
வறுமையின் அநுபவம் அறியா அதிகாரிகள்
வரைகின்ற வறுமையின் எல்லைக் கோடு
இலங்கையின் உத்தியோகபூர்வமான அறிக்கைகளின்படி 2000ம் ஆண்டு இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்த சனத்தொகையின் அளவு 25 சதவீதமாக இருந்ததாகவும், இது 2016ம் ஆண்டில் 3 சதவீதமாக குறைந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த அறிக்கைகள் உண்மையான பொருளாதார நிலைமையைப் பிரதிபலிக்கவில்லை என்பதோடு, வறுமைக் கோட்டின் எல்லையை நிர்ணயிப்பதில் அரசாங்கம் பிரயோகிக்கும் அளவுகோல்களும் மிகக் குறைபாடானவை என்பதே சரியானதாகும்..
இலங்கை அரசு இறுதியாக மேற்கொண்ட வரையறையின்படி 2016ம் ஆண்டுக்கான வறுமைக் கோட்டு எல்லையாக உள்ள மாதாந்த வருமானம் தலாநபருக்கு ரூபா 4500 ஆகும். அதாவது 4 பேரைக் கொண்ட ஒரு குடும்பத்துக்கு இந்த எல்லை 18000 ரூபாவாக அமைகிறது. இதேவேளை, இலங்கையின் ஒவ்வொரு வீட்டினதும் வருமானங்கள் செலவுகள் தொடர்பான களஆய்வை அடிப்படையாகக் கொண்டு 2016ம் ஆண்டுக்கானதென தயாரிக்கப்பட்ட அரச அறிக்கையின்படி கிராமப் புறங்கள் மற்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலுள்ள குடும்பங்கள் சராசரியாக அவற்றின் அடிப்படை உணவுப் பண்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மாதாந்த செலவு 18000 ரூபாவை விடவும் சற்று அதிகமாகும். பணவீக்கம் அல்லது அத்தியாவசியப் பண்டங்களில் ஏற்பட்ட விலையேற்றம் என்பவற்றைக் கணக்கிலெடுத்து 2019ம் ஆண்டு இறுதி நிலவரப்படி அரசு தான் நிர்ணயித்த வறுமைக் கோட்டை மீள்மதிப்பீடு செய்திருந்தால், 18000 ரூபா எனும் ஒரு குடும்பத்துக்கான வறுமைக் கோட்டு எல்லை சற்று உயர்த்தப்பட்டு ரூபா 20000 என வரையறுக்கப்பட்டிருக்கும் எனக் கொள்வோம். 2020ம் ஆண்டு கொரோணாக் காலம் என்பதனால் அது இங்கு தவிர்க்கப்படுகிறது.
மக்களுடைய செலவு முறைகளைப் பற்றிய ஆய்வுகளின்படி இலங்கையில் மிகக் கீழ் மட்ட நிலையில் இருக்கின்ற மக்கள் தமது வீட்டு வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலாக அடிப்படை உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதிலேயே செலவிடுகின்றனர். இலங்கையின் சராசரி உணவுப்பண்ட நுகர்வுகள் தொடர்பான ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் நோக்குவோமாயின், 4 பேரை சராசரியாகக் கொண்ட ஒரு குடும்பம் உயிர்வாழ்வதற்கும் தமது நாளாந்த வருமானத்துக்காக உழைப்பதற்கும் தேவையான உடற்சக்தியை தக்க வைத்துக் கொள்வதற்கும் ஆகக் குறைந்த பட்சமான சத்துக்களையாயினும் உடல் பெறுவதற்கும் தேவையான உணவுப் பொருட்களை நுகர்வதற்கான மாதாந்த செலவை 2019 ஆண்டில் காணப்பட்ட விலைகளின் அடிப்படையில் கணக்குப் பார்த்தால் அச்செலவை 20000 ரூபாவுக்குள் சமாளிப்பது பெரும் சவாலான ஒன்று என்பதை மிகச் சாதாரணமாக கண்டு கொள்ள முடியும்.
அரச ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி பார்த்தால் கூட இந்த ரூபா 20000 என்பது இலங்கையின் கிராமப்புற மற்றும் பெருந்தோட்டங்களிலுள்ள குடும்பங்கள் வெறுமனே சராசரியாக தமது அடிப்படை உணவுக்கான பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கு மட்டும் செலவளித்த தொகையாக உள்ளது. அந்தச் செலவில் அவர்கள் உட்கொண்ட உணவு வகைகளின் அளவுகள் மற்றும் போசாக்குகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலே இல்லை. அவ்வாறாயின், அடிப்படையான சுகாதார தேவைகள் மற்றும் மருத்துவச் செலவுகள், கல்விக்கான செலவுகள், ஆடைகளுக்கான செலவுகள், போக்குவரத்துச் செலவுகள், எரிபொருட் செலவுகள், மின்சாரச் செலவுகள், தொடர்புசாதன செலவுகள் போன்றவற்றிற்கான பணத்தேவைக்கு இந்த மக்கள் என்ன செய்வார்கள் – எங்கே போவார்கள் என்ற கேள்விக்களுக்கு அரசிடம் பதிலில்லை –அரசு அது பற்றி கவனத்திற் கொள்ளவுமில்லை. இந்தத் தேவைகளுக்கான பண அளவை வறுமைக் கோட்டுக்குள் அடக்குவது அவசியமில்லையா? அவையென்ன ஆடம்பரச் செலவு வகைகளைச் சேர்ந்தவைகளா? என்ற கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.
அரசு வரையறுத்துள்ளது
வறுமைக் கோடல்ல. அது பட்டினிக் கோடு
இலங்கையின் குடும்பங்களிற்கான வறுமைக் கோட்டு எல்லையை அரசு 2016ம் ஆண்டுக்கு 18000 என மதிப்பிடுவதையோ, அதனை 2019ம் ஆண்டுக்கு ரூபா 20000 எனக் கொள்வதையோ ஒரு நியாயமான கணிப்பு – வரையறை என ஏற்க முடியாது. இவ்வாறான ஒரு கணிப்பு இலங்கையில் வறுமை இல்லை என்று பிரச்சாரம் பண்ணுவதற்கான ஒரு போலித்தனமான கணக்கு எனலாமே ஒழிய உண்மையைக் கூறுவதாக கொள்ள முடியாது.
2019ம் ஆண்டின் விலைகளில் – அரசி, வெள்ளை மாவு, சீனி என்பன கிலோ 100 ரூபாவுக்கு மேல், கிலோ ரூபா 150க்கு அதிகமாகவே பெரும்பாலான மரக்கறி வகைகள், லீட்டர் 600 ரூபாவுக்கு குறைவாக எந்த வகையான சமையல் எண்ணையும் கிடையாது, தேங்காய் ரூபா 50க்கு மேல், சிறிய மீனாயினும் கிலோ 500 ரூபாவுக்கு மேல், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம், ஏலக்காய், கராம்பு, கறுவாப்பட்டை என்பவையெல்லாம் பணக்காரர்களுக்கு மட்டுமே உரியவை. இந்நிலையில் ரூபா 20000ஐ ஏனைய கட்டாயத் தேவைகளையும் உள்ளடக்கிய வகையிலான வறுமைக் கோட்டு எல்லையாகக் கொள்வதென்பது பொருத்தமற்றதாகும். இவ்வாறான நிலையில் நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் தொகை சனத்தொகையில் வெறுமனே 3 சதவீதம் மட்டுமே என அரச அறிக்கைகள் கூறுவது நகைப்புக்கே உரியன.
மக்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு வேண்டிய குறைந்தபட்ச உணவைப் பெறுவதற்கான வருமானமே வறுமைக் கோட்டு எல்லையென்றால் அது ஒரு மிக மோசமான கணிப்பாகும். உடல் ஆரோக்கியம், குறைந்த பட்சமாயினும் விரும்பும் உணவுப் பண்டங்களை நுகர்வதற்கான வாய்ப்பு, சுத்தமான உடைகள், சுகாதாரமான இருப்பிடம், தரமான கல்வி, வைத்திய மற்றும் சுகாதார தேவைகள், உள ஆரோக்கியத்துக்கான தேவைகள், போக்குவரத்து, குறைந்தபட்ச கௌரவத்துடனாவது சமூக மனிதனாக வாழுவற்கான தேவைகள் எனப்பல கட்டாயமான – அத்தியாவசியமான தேவைகளும் வறுமைக் கோட்டு எல்லைக்குள் உள்ளடக்கப்பட்டு வருமானம் கணிப்பிடப்படாவிட்டால், நாட்டின் குடிமக்கள் விரும்பி வளர்க்கப்படும் ஒரு வீட்டு மிருகமாக அல்லது ஒரு சிறைக்கூடக் கைதியாகக் கூட அரசினால் கருதப்படவில்லை என்றே அர்த்தமாகும்.
(தொடரும் பகுதி 5 )