நாட்டு மக்களின் சராசரி வருமானத்தில் உண்மையான பண வருமான அதிகரிப்பு ஏற்படினும் கூட, நாட்டு மக்களுக்கிடையேயான தேசிய வருமானப் பகிர்வில் தொடர்ச்சியாக இடைவெளிகள் விரிவடையுமிடத்து நாட்டு மக்கள் அனைவரினதும் வாழ்க்கைத் தரத்தில் ஒரே போக்கான ஏற்றம் நிகழாது என்பதுவும் கணக்கில் கொள்ளப்படுதல் வேண்டும்.
மேலும், பொருளாதார வளர்ச்சி மூலதன திரட்சிக்கு வழி வகுக்கின்றது. மூலதனத் திரட்சியின் அதிகரிப்பு தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கு வழி வகுக்கின்றது. அதன் காரணமாக, புதிய புதிய பொருட்கள் மக்களின் வாழ்க்கையோடு யதார்த்தமாக இணைகின்றன. காலப் போக்கில் அவை மக்களின் வாழ்வில் அத்தியாவசியமான தேவைகளாகி விடுகின்றன. மனித வாழ்வில் அத்தியாவசிய தேவைகள் என்பது எப்போதுமே ஒரு குறிப்பிட்ட பண்டங்களின் பட்டியலைக் கொண்டதாக இருப்பதில்லை. சமூக பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப அப்பட்டியலில் உள்ளடங்கும் பண்டங்களின் வகைகளும் மாறுகின்றன – அதிகரிக்கின்றன. எனவே மக்களின் வருமானமானது குறிப்பிட்ட சமூக பொருளாதார காலம் மற்றும் சூழலுக்குத் தேவையான பண்டங்களின் பட்டியலில் எதையெதை எந்தெந்த அளவில் கொள்வனவு செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றது என்பதைப் பொறுத்தே வாழ்க்கைத் தராதர மதிப்பீடும் அமைகிறது.
இலங்கையின் தலாநபர் தேசிய வருமானம் 2005ம் ஆண்டு அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தின்படி 2000 அமெரிக்க டொலர் பெறுமதி கொண்டதாக இருந்தது. இது 2017ம் ஆண்டு 4000 டொலராகிவிட்டதாக கணக்கிடப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தராதரம் ஏழு ஆண்டுகளில் இரண்டு மடங்காகி விட்டதாகக் கூற முடியாது – கூறவும் கூடாது. அதேபோல நாட்டில் சம்பளம் பெறுவோர் 2014ம் ஆண்டு பெற்றதை விட 2019ம் ஆண்டு இரண்டு மடங்காக சம்பளம் பெறுகின்றனர் என்று நிதி அமைச்சர் கூறினார். இதை வைத்துக் கொண்டு இந்த நாட்டில் சம்பளம் பெறுவோரின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது எனக் கூற முடியாது – கூறவும் கூடாது.
2017ம் ஆண்டு 4000 அமெரிக்க டொலருக்கு சமன் என கூறப்பட்ட இலங்கையின் தலாநபர் வருமானம். 2019ம் ஆண்டு 3850 டொலருக்கு குறைந்து விட்டது. கொரோணாவின் தாக்கமும் சேர்ந்து கொள்ள சர்வதேச பெறுமதிகளின் படி இலங்கையின் தலாநபர் வருமானம் இன்னமும் கீழே தள்ளிவிடப்பட்டுள்ளது. 2020ன் ஆரம்பத்தில் ஓர் அமெரிக்க டொலருக்கு இலங்கை நாணயம் 180 ரூபா என்ற நிலையிலிருந்தது. கொரோணாவின் காலத்தில் ஓர் அமெரிக்க டொலருக்கு 200 ரூபாவுக்கு மேல் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு அதிகரிப்பு 11 சதவிதமே. ஆனால் வெளிச் சந்தைகளில் ஓர் அமெரிக்க டொலரைப் பெறுவதற்கு 240 அல்லது 250 ரூபாவைக் கொடுக்க வேண்டியுள்ளது. இதேவேளையில் சந்தைகளில் பண்டங்களின் விலைகளோ 25 அல்லது 30 சதவீதங்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனை இன்னொரு வகையில் கூறினால் இலங்கை நாணயத்தின் பெறுமானம் 25 சதவீதத்துக்கு மேல் இறங்கி விட்டது என்பதே. இவ்வாறான நிலையில் ஒரு கணிப்பினை மேற்கொண்டால் தலாநபர் வருமானம் 3000 டொலர் எனும் அளவுக்கு இறங்கி விட்டதென்றே கொள்ள வேண்டும்.
வீதிகளை வெளிச்சமாக்கிய திறந்த பொருளாதாரம்
வீடுகளில் மக்கள் வாழ்க்கையை இருட்டாக்கிவிட்டது
1977ம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் உலக முதலாளித்துவத்துக்குத் திறந்து விடப்பட்டது. பொருளாதார நெறிப்படுத்தல்களும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. நாட்டு மக்கள் நலன்களை இலக்காகக் கொண்ட அரச துறைகள் இலாப நோக்கம் கொண்ட தனியார் முயற்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டன. அரச துறைகளாக இருந்த பல உற்பத்தித் தொழிற்துறை நிறுவனங்கள் தனியார் முதலீடுகளுக்கு கைமாற்றப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, ஏற்றுமதிகளிலும் இறக்குமதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அந்நியச் செலாவணி மாற்று விகிதம் மற்றும் வங்கிகளின் வட்டி வீதங்களும் சந்தைகளின் நிர்ணயிக்கப்படும் தலைவிதிக்கு கட்டவிழ்த்து விடப்பட்டன.
இவ்வாறான கொள்கை நடைமுறை மூலம் இலங்கையின் பொருளாதாரத்தில் அதிசயங்கள் ஏற்படும் என அரச சார்பு பொருளியல் நிபுணர்களெல்லாம் அன்று ஆரூடம் கூறினர். அன்றைய அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனது பொருளாதாரக் கொள்கையால் சிங்கப்பூரில் ஏற்பட்ட வளர்ச்சியைப் போன்ற முன்னேற்றம் இலங்கையிலும் ஏற்படும் எனப் பிரகடனம் செய்தார். ஆனால் 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இலங்கையின் பொருளாதாரம் சிங்கப்பூரின் தரத்தை கொஞ்சமாவது அண்மிக்கும் என கனவு கூடக் காண முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. ஆனால் அரச தலைவர்கள் ‘சிங்கப்பூரைப் போல இலங்கையை மாற்றுவோம்‘ என போலிப்பிரகடனம் செய்வதை இன்னமும் கைவிடுவதாக இல்லை.
இந்த 40 ஆண்டுகளில் பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் இலங்கை 1970க்கும் 1977க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கடைப்பிடித்த சுயசார்புப் பொருளாதாரக் கொள்கைக்கு யாராலும் எவ்வகையிலும் மீளக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு ஜெயவர்த்தனா அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கை இலங்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆழப்பதிந்து விட்டமையைப் புரிந்து கொள்வது எவருக்கும் சிரமமான ஒன்று அல்ல. திறந்த – தாராளமய பொருளாதாரக் கொள்கை இலங்கையின் சமூக பொருளாதாரக் கட்டமைப்பின் மேலோட்டங்களில் நன்மைகள் போலவும் அடித்தளத்தில் தீமைகளாகவும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. முன்னர்
இலங்கையின் 60 சதவீத உழைப்பாளர்கள் விவசாயத் துறையிலே தங்கியிருந்தனர். அதேவேளை 25 சதவீதமானோரே சேவைத் துறையில் இருந்தனர். இப்போது விவசாயத்துறையில் 25 சதவீதத்தினரும், சேவைத் துறையில் 55 சதவீதத்தினரும் உள்ள வகையாக ஏற்பட்டிருக்கும் மாற்றம் கவனத்துக்குரியது.
திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது பெருந் தொகையில் வெளிநாடுகளிலிருந்து மூலதனமும், நவீன தொழில்நுட்பங்களும் நாட்டுக்குள்ளே வரும் என்றும் அதனால் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் நாட்டின் பொருளாதாரம் அதீத வளர்ச்சியை அடையும் என்றும் கூறப்பட்டது. ஆனால், நாட்டில் இருந்த பல உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டது. அதற்கு மாற்றாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்திகளே இலங்கையின் சந்தைகளை நிறைத்தன. ஆனால் அதேவேளை அந்த அளவுக்கு இலங்கையின் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்படவில்லை. 1980களில் ஊக்குவிக்கப்பட்ட ஆடை உற்பத்தித் தொழில்களைத் தவிர வெறெந்தவொரு பொருள் உற்பத்தித் துறையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கவில்லை. நாட்டை விட்டு வெளியேறி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுதான் பல லட்சம் பேர் வேலை வாய்ப்புப் பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
1972ம் ஆண்டு மற்றும் 1975ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக வெளிநாட்டவர்களின் கைகளிலிருந்த மலையக பெருந் தோட்ட நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்டு அரசே அவற்றை நிர்வகிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் புதிய உற்பத்தித் துறைகள் உருவாகும், பெருந்தொகையில் வேலைவாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சிறிய அளவில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் அது தொடரவில்லை. திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் தேயிலைத் தோட்டங்களில் ஒரு பகுதி சிறு தேயிலைத் தோட்டங்களுக்கு வழங்கப்பட்டன, ஏனையவை தனியார் தொழில் நிறுவனங்களின் உடைமைகளாக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்துடனேயே இன்றும் இருக்கும் தேயிலைத் தோட்டங்கள் வேலைவாய்ப்புகளைக் குறைத்தனவே தவிர கூட்டவில்லை
திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் பல்வேறு காரணங்களினால் மக்களின் வாழ்க்கைச் செலவில் பெரும் ஏற்றங்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் விவசாயத் துறை வருமானத்தில் தங்கியிருந்த மக்களிற் பெருந் தொகையினர் ஏதோ ஒரு வகையில் வேறு துறைகள் மூலமாக வருமானம் தேட வேண்டியவர்களானார்கள். ஆக்க உற்பத்தித் தொழில் துறைகளை நோக்கி செல்வதற்கான வாய்ப்புக்கள் பெரிதளவில் ஏற்படவில்லை. இதனால் சேவைத்துறையை நோக்கி வெவ்வேறு வழிமுறைகளினூடாக வேலைவாய்ப்புத் தேட முயற்சிப்பது கட்டாயமானது. இது மறுபக்கமாக, பெருந்தொகையானோரை குறைந்த கூலியில் – சம்பளத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயங்களுக்கு உள்ளாக்கியது.
திறந்த பொருளாதாரம் உள்நாட்டுப் போரைத் திறந்து
வேலைவாய்ப்புப் பிரச்சினையைத் திசை திருப்பிய தந்திரம்
வடக்கு கிழக்கில் நடந்த போரில் ஆயுதந் தாங்கிய இளைஞர்கள் 50,000க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கணக்கிடப்படுகிறது. இங்கு நடந்த 30ஆண்டுகால போரில் 2 லட்சத்திற்கு மேல் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். எனவே இங்கு ஆயுதங்கள் தாங்காமலே போரின் மத்தியில் அகப்பட்டு கொல்லப்பட்டு மேலும் சுமார் 100,000 உழைப்பாற்றல் கொண்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.இதைவிட அரச படைகளில் இறந்தோரின் எண்ணிக்கை சுமார் 30,000பேர். மேலும் 1988 – 89 காலகட்டத்தில் தென்னிலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 60,000 க்கு மேல்.
இவ்வாறாக 1979க்கும் 2009க்கும் இடைப்பட்ட 30 ஆண்டுகாலத்தின் திறந்த பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பற்றோர் அல்லது வேலைவாய்ப்புத் தேடுவோர் என்ற அணியில் நின்றிருக்க வேண்டிய சுமார் இரண்டரை லட்சம் இளைஞர்கள் பலியாக்கப்பட்டார்கள். திறந்த பொருளாதாரத்துக்கான பாதையை சுலபமாக்குவதற்கும் இந்த இளைஞர் பட்டாளம் பலி எடுக்கப்பட்டமை அல்லது பலி கொடுக்கப்பட்டமைக்கும் இடையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புகள் இருப்பதை காணமுடிகிறது.
அது மட்டுமல்ல, யுத்தத்தின் தாக்கங்களின் விளைவாக தமிழர்களில் பல லட்சம் பேர் மேலைத் தேய நாடுகளை நோக்கி நிரந்தரமாக குடியேறி விட்டனர். இதே காலகட்டத்தில் சில லட்சம் சிங்களவர்களும் மேலைத் தேச நாடுகளுக்கு சென்று குடியேறிவிட்டனர். அவ்வாறு சென்ற தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி மிகப் பெரும்பாலும் இளைஞர்களே. 1983க்குப்பின்னர் மலையகத்திலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாகப் போன பல்லாயிரம் பேர் இந்தியர்களாக கலந்து போய்விட்டனர். ஆனால் வடக்கு கிழக்கிலிருந்து அகதிகளாக இந்தியா சென்றவர்கள் இலங்கை அகதிகள் என்ற பெயரிலேயே தொடர்ந்தும் வாழ்ந்தாலும் அவர்கள் பெரும்பாலும் இலங்கைக்குத் திரும்பி வரத் தயாராக இல்லை என்பதே உண்மை. அவர்களுக்குரிய உத்தரவாதங்களை வழங்கி இலங்கைக்கு மீண்டும் அவர்களை அழைத்துக் கொள்வதில் இலங்கை அரசு சிறிய அளவிலும் கூட அக்கறை காட்டுவதாக இல்லை.
இவ்வாறாக 26 ஆண்டுகால போர் பதினைந்து லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கையர்களை இலங்கையை விட்டு துரத்தியதன் மூலம் இலங்கையில் வேலையற்றோர் என்னும் இளைஞர் தொகையைக் குறைத்துள்ளது என்ற ஒரு பார்வை இங்கு தவிர்க்க முடியாததாக உள்ளது.
ஆனால், சிங்கள இளைஞர்களின் வேலையின்மைப் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசுக்கு மற்றுமொரு ஏற்பாடும் சாத்தியமானதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். அதாவது, 1980க்கு முதல் 20,000 பேருக்கும் குறைவானவர்களைக் கொண்டிருந்த இலங்கை இராணுவம் கடந்த 40ஆண்டுகளில் 3 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக ஆக்கப்பட்டுள்ளமை கவனத்துக்குரியதாகும்.
உள்நாட்டு யுத்தம் முடிந்து 12ஆண்டுகள்.
இளைஞர்களின் வேலையின்மை மீண்டும் சீறுகிறது!
யுத்தம் முடிந்தால் பொருளாதாரம் செழிக்கும், நாடு முன்னேறும்,இளைஞர்களுக்கு வேலையில்லை என்பது இல்லாது போகும் என்றார்கள். ஆனால், வீதிகளில் நிற்கும் வேலையில்லா இளைஞர்கள் பட்டாளம் ஆண்டுக்கு ஆண்டு கூடிச் செல்கிறது. 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, உடனடியாக60,000 பட்டதாரிகளுக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 100,000இளைஞர்களுக்கும் வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஒரு சிறிய பகுதியினருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதற்கு அப்பால் எந்த வித நகர்வும் இல்லை. இதற்கு கொரோணாவே காரணமென அரசாங்க சார்பானவர்கள் கூறலாம். ஆனால்,கொரோணாவுக்கு முன்னரே அரசாங்கம் அதற்கு வக்கற்ற நிலையில் இருந்தது என்பதே உண்மையாகும்.
100,000 மேற்பட்ட 10ம் வகுப்பு வரை படித்தவர்களும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேரளவில் 12ம் வகுப்பு வரை படித்த இளைஞர்களும் வேலைவாய்ப்பத் தேடுவோர் பட்டியலில் வருடா வருடம் புதிதாக சேர்ந்து கொள்கிறார்கள். ஆனால் புதிதாக வேலைவாய்ப்புக்களை அந்த அளவுக்கு உருவாக்குவதற்கு உரிய வகையில் தனியார் துறையில் பொருளாதார வளர்ச்சி இல்லை. மேலதிகமாக அரச துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு அரசிடம் பணமில்லை.
இலங்கையின் பொருளாதார நிலைக்குப் பொருத்தமான முறையில் இங்கு கல்வியமைப்பு இல்லை. அதனோடு தேசிய வருமானத்தில் அரச வருமானத்தின் பங்குக்கும் நாட்டின் மொத்த உழைப்பாளர்களில் அரச துறைகளில் உள்ளோரின் விகிதாசாரத்துக்கும் இடையே ஏற்கனவே பெருத்த முரண்பாடு நிலவுகிறது. அதேவேளை வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வெளிநாடுகளை நோக்கி இளைஞர்களை தள்ளி விடுவதற்கான வாய்ப்புகளும் இதற்கு மேல் செல்ல முடியாது என்னும் எல்லைகளை எட்டிவிட்டன. இந்த நிலைமைகளால் அரசியல் சமூக அமைப்பில் அடுத்த கட்டமாக ஏற்படப் போகும் விளைவுகளை நாடு எதிர்பார்த்து காத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
(தொடரும் பகுதி 7ல்)