ஒரு ஆட்சி என்பது அதன் அதிகாரக் கட்டிலில் மகாராஜா, மந்திரிகள் மற்றும் பிரதானிகள் என இருந்து, ஆயுதங்கள் தாங்கிய படைகளையும் சிறைச்சாலைகளையும் வைத்துக் கொண்டு, ராஜாவின் கட்டளைகளே சட்டங்கள் எனக் கொண்டு, நாட்டு மக்கள் மீது அதிகாரம் செலுத்துவது முடியாட்சி. மகாராஜாக்களின் ஆட்சி முறை காலப்போக்கில் நடைபெற்ற கிளர்ச்சிகளாலும் புரட்சிகளாலும் பல நாடுகளில் இல்லாது போயின. ஆயினும் அரச கட்டமைப்புகள் அப்படியேதான் தொடர்கின்றன. ஆட்சி மன்றத்தை நிரப்பியிருப்பவர்கள் மக்களால் நேரடியாகவோ அல்லது அல்லது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களைக் கொண்டதே அரசாங்கம் என ஆனது. மன்னராட்சிகளைப் போலவே இவர்களும் தாங்கள் ஆக்கிய சட்டங்களையும், ஆயுதப் படைகளையும், சிறைச்சாலைகளையும் வைத்துத்தான் பரந்துபட்ட மக்கள் மீதும் நாட்டின் வளங்கள் மீதும் தமது அதிகாரங்களை செலுத்துகிறார்கள். ஆனால் இன்று இவ்வாறான ஆட்சி முறையை ஜனநாயகம் என்கிறோம்.
இதேவேளை, இந்த 21ம் நூற்றாண்டிலும் முடியாட்சிகள் இன்னமும் பல நாடுகளில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. முடியாட்சிகளை நீக்கிவிட்டு இராணுவத் தளபதிகளாய் இருந்தவர்கள் அரச ஆட்சி பீடத்தைக் கைப்பற்றி சர்வாதிகாரங்கள் கொண்டு ஆட்சி செய்வதையும் உலகில் பல நாடுகளில் காண்கிறோம். அதற்குச் சமனாகவே மக்களாற் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்களை நீக்கி விட்டு இராணுவ ஆட்சியை நிறுவியுள்ள அரசுகளையும் இன்றைய உலகில் பல நாடுகளில் பார்க்கிறோம். இதேவேளை, ஆட்சிக் கதிரைகளில் உட்கார்ந்து இருப்பவர்கள் மக்களின் வாக்குகளால் தேர்தல் முறை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களாயிருப்பினும் அவர்களின் பின்னணியில் அந்த நாட்டின் ராணுவ கட்டமைப்பு அரசாட்சியை நடத்துவதில் மிகுந்த செல்வாக்கு உடையதாக இருக்கும் ஆட்சி முறையையும் இன்று நாம் காண முடிகின்றது. இதுதான் பாகிஸ்தானில். இப்போது இலங்கையிலும்.
அதிகாரங்களும் பொறுப்புக்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே
ஒரு நாட்டின் ஆட்சி அமைப்பு எவ்வாறாக அமைந்துள்ளது – அதன் அதிகார உயர் பீடத்தில் யார் அமர்ந்திருக்கிறார்கள் – அவர்களின் பின்னணியில் யார் செல்வாக்கு உடையவர்களா இருக்கிறார்கள் என்பவையெல்லாம் ஒரு புறமிருக்க, இங்கு பிரதானமான விடயம் என்னவெனில், அரசானது தேசிய பாதுகாப்பு, நாட்டின் அனைத்து பாகங்களிலும் நீதியை மற்றும் சட்டம் ஒழுங்குகளை நிலை நாட்டுதல், மக்களின் அடிப்படையான வாழ்வுரிமைகள், சமூக உரிமைகள் மற்றும் தனிமனித உரிமைகள் உட்பட குடியியல் தொடர்பான அனைத்து விடயங்களினதும் பொது நிர்வாகங்கள், தேசிய நிதி முகாமைத்துவம், தேசிய இயற்கை வளங்களின் பராமரிப்பு, வெளிநாடுகளுடனான வர்த்தகங்கள் மற்றும் வெளிநாடுகளுடனான அரசியல்,ராஜரீக மற்றும் இராணுவ உறவுகள் என பல்வேறு விடயங்கள் மீதான கடமைகளையும் பொறுப்புக்களையும் கொண்டதாகும். அத்தோடு 20ம் நூற்றாண்டின் அரசியல் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் பொதுமக்களுக்கும் மற்றும் தேசிய சமூக பொருளாதார நலன்களின் பராமரிப்புக்கும் வளர்ச்சிக்கும் அவசியமான அடிப்படைப் பொருளாதாரத் துறைகளை நிர்வகித்தலும் அரசின் பொறுப்பாகிவிட்டது.
இவ்வாறான பொறுப்புக்களையும் கடமைகளையும் நிர்வகிப்பதற்கான நிதியைப் பெறுவதற்கான அதிகாரமும் அரசுக்கு உரியதாகிறது. பொறுப்புக்களும் கடமைகளும் சுமத்தப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு அதிகாரங்களும் உரிமைகளும் உடையதாகுவது ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் போன்றதாகும். இந்த வகையிலேயே அரசுகளுக்கும் – அதன் எல்லைகளுக்கு உட்பட்ட பிரஜைகளுக்கும் இடையில் எழுதப்படாத ஒரு சமூக ஒப்பந்தம் வரலாற்று ரீதியில் செயற்பட்டு வருகின்றது. இவ்வகையான பொது விதிகள் மற்றும் பொதுப் போக்குகள் மத்தியில் இலங்கை பற்றிய எமது நோக்கினை உன்னிப்பாக்குவதே இங்கு நோக்கமாகும்.
இலங்கை அரசின் வரிகள் மூலமான மற்றும் வழிகளிலான வருமானங்கள்
அரச செலவுகளுக்காக அரசாங்கம் திரட்டும் வருமானங்கள் பல்வேறு வரி முறைகள் மூலமாகவும் வரிகளல்லாத மூலங்கள் வழியாகவும் பெறப்படுகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் வரிகளல்லாத மூலங்களிலிருந்து திரட்டப்படும் தொகையானது மொத்தத்தில் 10 சதவீதத்தையும் தாண்டாத ஒன்றாகவே உள்ளது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் அவ்வாறான வருமானம் கணிசமான பங்குடையதாக உள்ளது. உதாரணமாக இலங்கையை விட பொருளாதார தரம் குறைந்ததாக கருதப்படுகிற இந்தியாவில் வரிகளல்லாத வருமானங்கள் அதன் வருமானத்தில் 25 சதவீதத்துக்கும் அதிகமான இடத்தைப் பெறுகின்றன.
அரசின் வரவு செலவுத் திட்டத்தில் காட்டப்படுகின்ற செலவுகள் பிரதானமாக இரண்டு வகையாக வகைப்படுகின்றது. அதில் ஒன்று மீண்டெழும் செலவு (Revenue or Recurrent Expenditure) என்பது மற்றது மூலதனச் செலவு (Capital Expenditure) என்பது. அதேபோல அந்த செலவுகளை மேற்கொள்வதற்கான அரசின் வரவுகளும் பிரதானமாக இரண்டு வகையாக உள்ளன. ஒன்று அரசினால் திரட்டப்படும் வருமானம் (Revenue Receipts), மற்றது கடன்கள் (Borrowings). உண்மையில் அரசாங்கம் கடன்களைப் பெறுவது பொருளாதார அபிவிருத்திகளுக்கான முதலீகளை மேற்கொள்வதற்குத் தேவையான மூலதனத் திரட்டலாகவே அமைய வேண்டும். ஏனெனில் கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியவை. மேலும் அவற்றுக்கான வட்டிகளையும் காலக்கிரமத்தில் செலுத்த வேண்டும்.
மீண்டெழும் செலவுகள் என்பது (1) அரச ஊழியர்களுக்கான சம்பளங்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள், (2) வறிய மக்களென அடையாளம் காணப்பட்டிருப்போரின் வாழ்வாதாரங்களுக்கு வழங்கும் உதவிகள் மற்றும் மான்யங்கள், மேலும் பொருளாதார அபிவிருத்திகளுக்காக வழங்கும் மான்யங்கள் – உதாரணமாக சமுர்த்திக் கொடுப்பனவுகள், உர மான்யங்கள் போன்றவை (3) பெற்ற கடன்களுக்கு வழங்கும் வட்டிகள், (4) அரச நிறுவனங்களின் பராமரிப்பு மற்றும் நடைமுறைச் செலவுகள் ஆகியவற்றை பிரதானமாக உள்ளடக்கியதாகும்.
அரச நிதியை திறனுடன் முகாமைத்துவம் செய்வதென்பது, அரசாங்கம் இங்கு மேற்பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மீண்டெழும் செலவுகளை அரசாங்கத்தினால் வரிகள் மற்றும் அரசுக்குரிய ஏனைய வருமான மூலங்களினால் திரட்டப்பட்ட வருமானத்துக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். ஆனால், இலங்கை அரசாங்கத்தின் நிதி நிர்வாகமானது மீண்டெழும் செலவுகளுக்கே பெரும் தொகையில் கடன் வாங்கிச் செலவு செய்யும் வகையாக உள்ளமை கவனத்திற்குரியதாகும். இது ‘வரவு எட்டணா செலவு பத்தணா‘ எனும் நிலையாகும்.
தரமான பொருளாதார நிர்வாகத்துக்கு தகவான வருமானம் வேண்டும்.
இலங்கையின் ஆட்சியாளர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!
இலங்கை அரசாங்கம் வரிகளற்ற வகைகளில் திரட்டும் வருமானம் மிகக் குறைந்த அளவாக உள்ளமைக்குக் காரணம் இங்கு அரசின் முதலீடுகள் மற்றும் முகாமைத்துவத்துவத்துக்கு உட்பட்ட லாபகரமான பொருளாதாரத் துறைகள் மிக மிகக் குறைவாக உள்ளமையே. இது தாராளமயமான திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவுகளில் பிரதான ஒன்று. இந்நிலையில், அரசின் மீண்டெழும் செலவுகளை வரிகள் மூலமான வருமானத்தைக் கொண்டே சமாளிக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் மொத்த அரச வருமானங்கள் 2019ம் ஆண்டு மொத்த தேசிய வருமானத்தில் 12.5 சதவீதம் மட்டுமே. கொரோணாவின் காரணமாக 2020ல் இது 9.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. 1990ம் ஆண்டு அரசாங்கம் திரட்டிய வருமானம் மொத்தத் தேசிய வருமானத்தில் 21 சதவீதமாக இருந்தது என்பது கவனத்துக்குரியது. அதில் வரிகள் மூலமான வருமானம் 19 சதவீதமாகும். ஆனால், சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சி ஆரம்பித்த ஆண்டு அரசாங்கம் வரிகள் மூலம் திரட்டிய வருமானம் தேசிய வருமானத்தில் 17.7 சதவீதம். அவரது ஆட்சி முடிவடைந்த 2015ல் அது 13.7 சதவீதமாக இறங்கியது. இது மஹிந்த ராஜபக்சாவின் ஆட்சி முடிவடைந்த 2014ம் ஆண்டு மேலும் குறைந்து 10.1 சதவீதமானது.
2015ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மைத்திரி – ரணில் கூட்டாட்சி தங்களது ஆட்சி சரியான அரச வரிக் கொள்கைகள் மூலமாகவும் திறமையாக வரிகளைத் திரட்டுவதன் மூலமாகவும் அரச வரி வருமானத்தை மொத்த தேசிய வருமானத்தில் 15 சதவீதமாகும் நிலைக்கு முன்னேற்றும் இலக்குடன் செயற்படுவதாகக் கூறினார்கள். ஆனால் அவர்களது ஆட்சிக் காலம் முடிவடைகிற போது 11.5 சதவீதத்துக்கு மேலாக அதனை உயர்த்தவில்லை. 2019 இறுதியில் ஜனாதிபதியான கோத்தபாயா அவர்கள் மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி பெறுமதி கூட்டல் (VAT) வரியை அரைவாசியாக்கியதன் மூலம் மேலும் அரசின் வருமானத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தினார். அத்துடன் கொரோணா தொற்றின் பேயாட்டம் இப்போது இலங்கை அரசின் வருமானத்தை அதலபாதாளத்துக்கு கொண்டு போயுள்ளது.
2300 வருடங்களுக்கு முந்திய கௌட்டில்யரின் அரத்தசாஸ்த்திரம் உட்பட இந்திய வரலாற்றுக் குறிப்புகளின்படி ஒரு நீதியான அரசன் வர்த்தகர்களிடமிருந்து 20 சதவீத வரியையும், விவசாயிகளிடமிருந்து அவர்களின் உற்பத்தி அளவின் நிலைமைக்கு ஏற்ப 10 சதவீதம் தொடக்கம் 16.5 சதவீதம் வரை அறவிட வேண்டும் எனக் குறிப்பிடுகின்றன. அன்றைய கால கட்டத்தில் விவசாய பொருளாதாரமே பிரதானமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. வர்த்தகம் மற்றும் விவசாயம் மூலமான வரிகளை விட நீதியான முறையில் திரட்டப்படக் கூடிய – திரட்டப்பட வேண்டிய வேறு பல வரிகள் பற்றியும் வரலாற்றுக் குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதுவும் கவனத்திற்கு உரியவையாகும்.
வண்டி உருண்டோட சக்கரமும் அச்சாணியும் தேவை
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் வறுமை ஒழிப்பு மற்றும் அடிப்படையான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசின் மொத்த வரிகள் மூலமான வருமானம் குறைந்தபட்சம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 15 சதவீதமாகவாவது அமைதல் வேண்டும். என்பது பொருளாதார அறிஞர்களின் பொதுக் குறிப்பாகும்.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் வரிகள் மூலமான வருமானம் 20 சதவீதத்துக்கு அதிகமாகவே உள்ளது. பல அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அது அவர்களது தேசிய உற்பத்தியில் 30 சதவீதங்களுக்கும் அதிகமாகவே காணப்படுகின்றது. மேலைத் தேச நாடுகளை ஒரு புறம் விட்டு விடுவோம், வறிய நாடு எனக் கருதப்படுகின்ற அண்மை நாடான இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசுகளுமாக மொத்தத்தில் திரட்டும் வருமானம் அதன் மொத்தத் தேசிய வருமானத்தில் 22 சதவீதமாக உள்ளது. அதில் சுமார் 75 சதவீதமானவை வரிகள் மூலமான வருமானங்களாக இருக்கின்றமையை அவதானத்திற் கொள்வது அவசியமாகும்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி இலங்கை அரச வரி வருமானம் தேசிய வருமானத்தில் 20 சதவீதமளவுக்கு 1990ல் இருந்தது. பின்னர்தான் அது படிப்படியாகக் குறைந்து 2019ல் 11.5 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்து விட்டது. அரச வரி வருமானத்தின் வீழ்ச்சி இவ்வாறான நிலையை அடைந்திருப்பதைக் கொண்டு இந்த ஆட்சியாளர்கள் பரந்து பட்ட பொது மக்களுக்கு நன்மை செய்திருக்கிறார்கள் – பொது மக்கள் மீதான வரிச் சுமைகளை குறைத்நிருக்கிறார்கள் எனக் கூறவோ –கருதவோ கூடாது. உண்மையில் இந்த வீழ்ச்சியால் நன்மையடைந்திருப்பவர்கள் நிச்சயமாக பெரும் உற்பத்தி மற்றும் வர்த்தக நிறுவன முதலாளிகளும் வசதி படைத்த பணக்காரர்களுமே.
1990ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையை ஆண்டவர்கள் ரணசிங்க பிரேமதாசா, சந்திரிகா பண்டார நாயக்கா, மஹிந்த ராஜபக்சா, ரணில் விக்கிரம சிங்கா ஆகியோர். கடைசியாக இப்போது கோத்தபாயா ராஜபக்சா. இவர்கள் அனைவருமே அரச நிதி நிர்வாக முகாமைத்துவ விடயத்தில் மிக மோசமான கோட்பாடுகளையும் நடைமுறைகளையுமே கடைப்பிடித்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஆட்சி பீடத்தில் ஏறும் போது அரச நிதி தொடர்பில் வாய்ச்சவடால்கள் அடித்ததைத் தவிர முன்னேற்றங்களென எதனையும் சாதிக்கவில்லை.
தனிநபர்களிடமிருந்து திரட்டப்படும் வருமான வரி மற்றும் தொழில் நிறுவனங்கள் லாப வரிகள் உட்பட அரசாங்கம் திரட்டும் நேர்வரிகளின் தொகையானது மொத்தமாக திரட்டப்பட்ட வரிகள் வருமானத்தில் மிகக் குறைவாகவே உள்ளது. இலங்கை மக்களில் 10 சதவீமானவர்கள் நாட்டின் அனைத்து மக்களினதும் மொத்த வருமானத்தில் 40 சதவீதத்துக்கு உரியவர்களாக உள்ளனர். ஆனால் அரசின் மொத்த வருமானத்தில் 15 சதவீதம் மட்டுமே இவர்களின் பங்கு. எஞ்சிய 85 சதவீதத்தையும் அரசாங்கம் ஜி.எஸ்.டி (GST) என்றும் பெறுமதி கூட்டு (VAT) என்றும் மறைமுக வரிகள் மூலமாக பரந்துபட்ட பொது மக்களிடமிருந்தே திரட்டுகிறது. எண்ணிக்கைக் கணக்குப்படி, இலங்கையில் வருமானம் பெறும் 80 லட்சம் பேரில் 4 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். அதிலும் ஓன்றரை இலட்சம் பேர் செலுத்தும் வருமானவரிகளே அரசின் மொத்த வருமான வரிகள் வரவில் 90 சதவீமாக உள்ளது.
உண்மையில் அரசாங்கம் தனது வரிக் கொள்கைகளை மாற்றியமைத்து வருமான வரிகள், தொழில் இலாப வரிகள், மூலதன பெறுமதி அதிகரிப்பு வரிகள் ஆகியவற்றின் மூலம் திரட்டும் மொத்த வருமானமானது அரசின் மொத்த வரி வருமானத்தில் 40 சதவீதம் தொடக்கம் 50 சதவீதமாக அமைவதற்கான அணுகுமுறைகளையும் நடைமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொருளாதார வல்லமை மிக்க நாடுகளிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டுமென்றில்லை. பக்கத்து நாடான இந்தியாவின் அனுபவத்தை இவ்விடயத்தில் பெற்றுக் கொண்டாலே போதுமானது. மாறாக, பெரும் முதலாளிகளும் பணக்காரர்களும் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்களெனக் கருதி அரசாங்கம் தொடர்ந்தும் தற்போதைய நிலையிலேயே அரசின் நேர் வரிகள் மூலமான வருமானக் கொள்கையை கடைப்பிடிக்குமாக இருந்தால் இப்போது ஆட்சியில் இருப்போரை மட்டுமல்ல மொத்த அரச அமைப்பையுமே பரந்துபட்ட மக்கள் பகைக்க நேரிடம்.
(அரச வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பாக மேலும் தொடரும். பகுதி 9ல்)