எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 1)

எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை

சுதத்திரத்திற்கு முன்பு சிறப்பாக பிரிதானியர்கள் இலங்கை வாழ் மக்களிடமும் ஏற்படுத்திய பிரித்தாளும் தந்திரோபாயத்தை சுதந்திரத்திற்கு பின்னரும் ஆளும் வர்க்கம் தொடர்ந்த வரலாறே இலங்கையின் அரசியல் வரலாறு.

மகாவம்சத்தை துணைக்கு அழைத்து இலங்கையின் பூர்வீகக் குடிகள் சிங்களவர் என்றும் இந்திய வரலாற்றுடன் ஒப்பிட்டு கல் தோன்றா காலத்து மூத்த குடி நாங்கள் தான் இலங்கையின் முதல் குடி என்ற பஞ்சாயத்துகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன…. இருக்கின்றன….

இவை மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு ஏதுவாக அமைந்தன. இதற்குள் பௌத்த மதத்தையும் துணைக்கு அழைத்து சமாதான முகங்களையும் காட்ட முற்பட்டனர் பேரினவாதிகள்.
உலகில் இலங்கையில் மட்டுமே சிங்கள மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். அதிகாரப் பரவலாக்கம் என்பதுவும் இந்தியாவிற்கு அருகில் சிறப்பாக தமிழ் நாட்டின் தென் கோடியில் செறிந்து வாழும் தமிழ் உறவுகள் தொப்புள் கொடி உறவு என்று சொந்தம் கொண்டாடி வெளிப்படுத்தும் உணர்வுகள் இலங்கையை தாம் இழந்து விடுவோமோ என்ற ஐயத்தை சாதாரன சிங்கள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்கு போதுமானதாக இருந்து வருகின்றது

இதனை பேரினவாதம் வெளிப்படையாக கூறாவிட்டாலும் அக மனத்தில் இதனைக் கருத்தில் கொண்டும் அதிகாரப் பரவலாக்கம் என்ற வகையிலான தமிழருக்கான சமஷ்டி, மகாணசபை முறமை போன்ற பலதையும் பார்க்கும் நிலமை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு தேவையற்ற பயம் என்றாலும் சமான்ய சிங்கள மக்களின் மனத்தில் ஊட்டப்பட்ட கருத்து ஆழமாக ஊன்றி இருக்கின்றது என்பதை நான் இங்கு எடுத்துரைக்க விரும்புகின்றேன். இதனை பேரினவாதிகள் திட்டமிட்டு செயற்படுத்தினார்கள் அதற்கு ஆதாரமாக தமிழர்கள் கூறும் தொப்புள் கொடி உறவை ஆயுதமாக கை கொண்டனர். இந்தப் பயம் புரியப்பட்டு இதனை அகற்றி இலங்கையிற்குள் சகல இனங்களும் சம உரிமையுடன் இணைந்து வாழ்வதற்கான நிலமை உருவாக்கப்பட வேண்டும்.

சமான்ய சிங்கள மக்கள் மனத்தில் இருந்தும் இந்த அர்த்தமற்ற பய உணர்வுகளை நீக்குவதில் தமிழர் தரப்பு செயற்பட்டே ஆக வேண்டும்.
இதில் நாம் கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்குரிய உரையாடல்களை சமான்ய சிங்கள மக்கள் மத்தியில் செய்யப்படாத இடைவெளி இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் இதற்காக செயற்படுவது அவசியம் ஆகின்றது.

இப்படி செயற்பாடுகள் பாரிய அளவில் செயற்படுதப்படாதததும் இலங்கை வாழ் அனைத்து மக்களையும் இலங்கையர்களாக ஒருமித்து நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குரிய வாய்ப்புகளை இல்லாமல் தொடரச் செய்திருக்கின்றது.

மக்களிடையே புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும் அரசியல் தலமைகள் இடதுசாரிகளிடம் இருப்பதாக ஒரு காலத்தில் நம்பப்பட்டாலும் அது காலப் போக்கில் பெரும்தேசியவாதத்திற்குள்ளும் பாராளுமன்றக் கதிரைகளை இலக்காகவும் கொண்டு அமிழ்ந்து போனதே வரலாறு.

இதிலிருந்து அவ்வப் போது எழுந்து வர முற்பட்ட போது அது சம்மட்டியால் அடிக்கப்பட்ட வரலாறுகளே இலங்கையில் அதிகம்.

அதுதான் இன்று பெருமபான்மை சமூகத்தில் இருக்கும் இடதுசாரிகளைக் கூட நம்ப முடியாது அதே போல் சிறுபான்மை மக்களிடையே உள்ள இடதுசாரிகள் ஜனநாயக சக்திகள் என்று ஒருவரையும் நம்ப முடியாது என்று பிரிந்து கிடக்கும் கள நிலமைகள். இதற்குள் விதிவிலக்காக நபர்களாக சிலர் இருந்தாலும் கட்சி அடிப்படையில் யாரும் இல்லை என்ற உணர்வு பொதுவாக உள்ளது.

இவை தொடர்ந்ததன் விளைவாக ஈழவிடுதலை போராட்டம் என்ற யுத்தமும் அதற்கு முன்னரான ஜேவிபின் இலங்கை தழுவிய யுத்தமும் எதிர்பார்த்த திசை வழியே பயணிக்காமல் பாசிச முகம் காட்டி தோற்றுப் போயின.

இதன் தொடர்ச்சியாக இடதுசாரிக் கருத்தியலும் ஜனநாயக செயற்பாடுகளும் இலங்கையில் பலவீனம் அடைந்து இரு கூறுகளாக நாடு பிரிந்து பிளவுண்டு திவாலாகும் நிலமையிற்கு இன்று வந்துள்ளது.
உண்மையில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை ஒரு பொருளாதார நலிவுப் பிரச்சனையா என்றால் அதற்குள் மட்டும் அதனை அடக்கிவிட முடியாது. இது இலங்கையில் நிலவிவரும் ஆட்சி அதிகாரம் அரசியல் அமைப்பு இனங்களுக்கிடையோன சமத்துவம் இன்மையின் வெளிப்பாடுகள் ஆகும்.

நாம் எல்லோரும் இலங்கையராக ஏன் உணர முடியாதுள்ளது என்பதற்கான அடிப்படையாக பேரினவாதமும் குறும் தேசியவாதமும் தமது வெளிப்பாடுகளை இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் வெளிப்படுத்தி வந்தன.

இது இலங்கையில் பன்முகத் தன்மையுடைய அரசை நிறுவதில் தோல்வி கண்டதாக பயணப்பட வைத்தது.

இதற்கான அடித்தளங்களை உருவாக்கியவர்கள் பிரித்தானியர்கள்தான். அது சுதந்திரத்தின் பின்னர் முன்பு எப்போதையும் விட அதிகமாக உருவாக்கப்பட்டு அதனால் நாடு மனதளவில் பிளவுண்டதினால் ஏற்பட்ட அரசியல் பிரச்சனை ஆகும்.

கூடவே இதில் பூகோள ரீதியில் அருகிலும், தூரத்திலும் இருக்கும் நாடுகள் தமது ஆடுகளமாக இலங்கையை பாவிக்க முற்படும் சதுராட்டத்தில் இலங்கை அரசு தாம் எந்த நிலைப்பாட்டில் பயணிக்க வேண்டும் என்ற கொள்கை அற்ற செய்றபாடுகளினால் பயணப்பட்ட கடந்த அரை நூற்றாட்டிற்கு மேலான பயணத்தில் வெளிப்பாடாகவும் காணப்படுகின்றது
எல்லோரும் இணைந்த வளர்ச்சி…. பொருளாதார வளர்ச்சி…. அந்த வளர்ச்சி எல்லோருக்குமானது என்பதை தவிர்த்த ஒரு சிலருக்கான வளர்ச்சி என்று அதிகம் குவியப்படும் பொருளாதாரச் சிக்கலுக்கான போராட்டமாகவும் வளர்ச்சயிடைந்து வந்திருக்கின்றது.

வளர்ச்சியை வாய்ப்புகளை மிகச் சிலரே தமதாக்கிக் கொள்வதும் வறுமையை மட்டும் பலருக்குமானதுதான ஏற்றத் தாழ்வுகள் ஒரு நாட்டை முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்லாது

வறுமையை பங்கெடுக்கத் தயார் இல்லை வளத்தை செல்வத்தை மட்டும் பங்கெடுக்கத் தயார் என்பதாக நகரும் நிலமைகள்.

இதனைக் கேள்வி கேட்கும் உரிமையை தடைசெய்யும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் எந்த நாட்டு அது வழங்க மறுக்கும் ஜனநாயகமும் ஒரு நாட்டில் சமச்சீரான வளர்ச்சியை எற்படுத்தாது

நாட்டின் GDP(Gross Domestic Product) மொத்த உள்நாட்டு உற்பத்தி யை உருவாக்குது உழைப்பாளிகளா இருக்கும் இடத்து அந்த ஜிடிபியும் அந்த மக்களின் வாழ்க்கையிற்கு சமமாக பகிரப்படும் சிந்தனையே சரியானதாகும். அதுவே ஒரு நாட்டை மக்களை நிறைவான வாழ்வை நோக்கி நகர்த்தும்.

இதற்கு நாடு செல்வந்த நாடாக இருக்க வேண்டும் என்பதல்ல… மாறாக இருக்கும் வளங்களில் நிறைவான வாழ்க்கையை மக்கள் கொண்டவர்களாக காணப்படுவர். இதற்கு உதாரணமா கியூ போன்ற நாடுகளை சொல்ல முடியும்

(தொடரும்….)