(மாதவன் சஞ்சயன்)
கார்த்திகை மாதம் எம் மண் மழை நீரால் மட்டுமல்ல தமிழ் மக்களின் கண்ணீராலும் நனையும் மாதம். எனவே கார்த்திகை மாதம் 1ம் திகதி தொடங்கி 30ம் திகதி வரையான மழைக் காலத்தில் வடக்கின் சகல மாவட்டங்களிலும் ஐந்துலட்சம் மரங்கள் நடுவதற்கு தான் திட்டமிட்டிருப்பதாக, வட மாகாண சுற்றாடல் அமைச்சர் அறிவித்துள்ளார். வடக்கில் மர நடுகையைப் பெருமளவில் மேற்கொள்ள பொருத்தமான மாதம் மட்டுமல்ல, தமிழர் தம் வாழ்வில் புனித மாதமாக கருதி கார்த்திகை தீபம் ஏற்றுவதோடு எம் மாவீரரையும் நினைவு கூரும் புனித மாதம் கார்த்திகை மாதம் எனவும் கூறினார்.
அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் இருந்த என் நினைவுகள் 2013 ம் ஆண்டை ரீவைண்ட் செய்தது. வெட்டிப் புடுங்குவோம் என வட மாகாண சபை தேர்தலில் பேசிய பேச்சை நம்பி வீட்டு சின்னத்துக்கு வாக்கு போட்டு வெல்ல வைத்து மறுநாள் உதயன் பதிரிகையில் அமைந்தது தமிழ் அரசு என்ற தலைப்பு செய்தி பார்த்து புளகாங்கிதம் அடைந்தோம். ஆனால் அமைச்சுப் பதவி முதல், யார் முன்னால் பதவி ஏற்பது என்ற குழப்பம் என்னை தலை சுற்ற வைத்தது. குழப்பத்தின் நாயகனே வடக்கின் முதல்வர் தான்
வாக்குக்காக பிரபாகரனை மாவீரன் என சொல்லியவர் வென்றபின் வாசுதேவ நாணயக்கார சம்மந்தியுடன், குடும்ப சமேதரராய் சத்திய பிரமாணம் எடுக்க மகிந்தர் மாளிகை ஏகினார். தவறில்லை அது நல்லிணக்க சமிக்ஜை. தேர்தலில் எதிர்த் தரப்பை வெல்ல என எதுவும் கூறலாம். பின்பு எம் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் எடுக்கும் மாற்று முடிவுகள் எதுவும் தவறில்லை. நொந்து கெட்ட மக்களின் துயர் துடைக்க எடுக்கும் எந்த நல்ல முடிவும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதே. வாய்ப்புளிப்பா மாங்காய்ப்புளிப்பா என வித்தியாசம் தெரியாதவர் விமர்சனம், கல்லுண்டாய் வெளி கழிவுகள் தான்.
ஆனால் அதன் பின் நடந்தவை தான் அவரை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. மாவீரரை நினைவுகூர செல்வா சதுக்கத்தில் மரம் நடுவதாக வட மாகாண முதல்வர் அறிவிக்க, அந்த நிகழ்வுக்கு பாதுகாப்பு தர முடியாதென பொலிசார் மேலிடத்து உத்தரவுப்படி மறுத்துவிட்டனர். மறுநாள் தினக்குரலில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தன் மனக்குறையை கொட்டிய முதல்வர் மரம் நடும் முடிவை கைவிட்டார். சாமி விட்டாலும் பூசாரி தட்சனை கேட்பது போல எந்த கட்சியிலும் இல்லாத அமைச்சர் ஐங்கரநேசன் போட்டார் ஒரு திட்டம். முக்கியமான மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்புவிட்டார்.
நாம் மாவீரர் மாதத்தில் மர நடுகையை கைவிட்டால் புலம்பெயர் தமிழர் எம்மை கைவிட்டு விடுவர். அது முதல்வருக்கு இழுக்கு என நாயனம் வாசிக்க மெல்ல மெல்ல புகழ் போதை தலைக்கேற தலையாட்டினார் முதல்வர். சுறு சுறுப்பான சூழலியலாள அமைச்சர் அதற்கு என தேர்ந்தெடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம், கல்வி அமைச்சர் அவர்களின் உத்தியோக வாசஸ்தலத்தில் உள்ள மலசல கூட பின் புறம். சுப நேரத்தில் முதல்வர் மரம் நட அமைச்சர்கள், சில உறுப்பினர்கள் அகமகிழ அதை படம்பிடித்து, மறுநாள் மாவீரை நினைத்து முதல்வர் மரம் நாட்டினார் என்ற செய்தி பார்த்தேன்.
தேர்தல் மேடையில் பிரபாகரனை மாவீரர் என்றவரால் மாவீரர் நாளில் பொலிஸ் பாதுகாப்பு இல்லை என்பதால், தந்தை செல்வா சதுக்கத்தில் மரம் நட முடியாது மலசல கூட மறைவில் நடும் நிலை முதல்வருக்கே என்றால், ராணுவத்தை வெளியேற்றுவேன் என அவர் கூறியதால் வாக்குகளை போட்டு அவரை முதல்வர் ஆக்கிய வாக்காளர் மன நிலை எவ்வாறு இருந்திருக்கும் என எண்ணிப் பார்த்தேன். அடைந்தால் தமிழ் நாடு இல்லையேல் சுடுகாடு என முழங்கிய அண்ணாத்துரை முதல் தமிழ் ஈழத்துக்கு ஆணை பெற்ற அமிர்தலிங்கம் வரை சாதிக்காததையா முதல்வர் சாதித்துவிடப் போகிறார்?.
எந்த பஸ்ஸில் ஏறியாவது தன் அரசியல் இச்சையை அடைய அலைந்த ஐங்கரநேசன், சுரேஸ் அரவணைப்பில் அரங்கேறி அமைச்சர் ஆனதும் அவருக்கு ஆப்பு வைத்தார் சுரேஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் மாவையிடம் தன்னை தமிழ் அரசு கட்சி உறுப்பினராக ஏற்குமாறு விண்ணப்பிக்க மாவையோ கூட்டுக் கட்சி தலைவர் கோவிப்பார் கொஞ்சநாள் பொறும் என்றார். சூழ்நிலை அறிந்தவர் என்பதானால் புகழ் விரும்பி முதல்வரின் மன நிலை அறிந்து அவரது காது குளிரும் செய்தி கூறுபவராய் தன்னை மாற்றி இன்ப தேன் வந்து பாயும் செய்திகளை சொல்லி, முதல்வரை தூண்டி அவரை விளம்பரப் பிரியராக மாற்றியவர் இன்று 5லட்சம் மரங்கள் நடும் நிகழ்வை புகழ் விரும்பி முதல்வர் தலைமையில் நடத்தப் போகிறாராம்.
எத்தனையோ பிரேரணைகள் நிறைவேறிய வட மாகாண சபையில் மாவீரர் தினத்துக்கு மரம் நடப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏன் நிறைவேற்றப் படவில்லை என விசாரித்த போது, முதல்வரின் கழுவிய மீனில் நழுவிய மீன் செயல் தெரியவந்தது. மலசல கூட பின்புற மர நடுகைக்கு பின் முதல்வர் மாவீரர் மாதத்தில் நோய் வாய்ப்பட்டதால் 2014 ல் அவர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம். மாணவ பருவத்தில் வீட்டுப் பாடம் செய்யாத எனக்கு வாத்தியாரின் பிரம்படி பயத்தில் வயிற்று வலி வந்து, அன்று பாடசாலை போகாமல் வீட்டில் நின்று, கள்ள மாங்காய் தின்ற ஞாபகம் வந்தது.
சிறு வயதில் விளையாடிய ஒளித்து பிடித்து விளையாட்டை முதல்வர் விளையாட, ஐந்கரநேசனோ கும்பலில் கோவிந்தா போட அனைவரையும் வரும்படி அழைக்கிறார். தடைகள் வருவதை தவிர்க்க அவரவர் வளவுகளில் மரங்களை நட விரும்புவோருக்கு அமைச்சின் ஊடாக மரங்கள் வழங்கப்படுமாம். புத்திசாலி அமைச்சரும் புகழ் விரும்பி முதல்வரும் கச்சிதமாய் திட்டமிட்டு மக்கள் தலையில் செத்தல் மிளகாய் அரைக்கவே, இந்த செயலை செய்வதாக என் சிறு மதிக்கு படுகிறது. புலம் பெயர் தமிழர் பணத்தை மக்களுக்கா அல்லது உங்கள் சுய விளம்பரத்துக்கா பாவிக்கின்றீகள் என்ற கேள்வி எழுகிறது.
அதிகளவு மரம் நட்டு பராமரிக்கும் பொது அமைப்புகளுக்கு பிரமாணஅடிப்படையில் வழங்கும் உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளமை தேரை இழுத்து தெருவில் விடும் செயல் போலவே தெரிகிறது. மாவீரர் நாள் கொண்டாட்டம் நடத்தும் சூழ்நிலை நல்லாட்சியிலும் இல்லை என்பதே அண்மைய பாதுகாப்பு செயலாளர் அறிக்கை மூலம் தெரிய வருகிறது. ஏதாவது ரூபத்தில் தடைகள் ஏற்படலாம். அதை மீறி செயல்பட முதல்வர் முற்பட மாட்டார் என்பதற்கு முன்னுதாரணம் உண்டு. ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவார் அல்லது அவரது செயலாளரிடம் கடிதம் கிடைத்ததா என விசாரிப்பார். மறுநாள் தலைப்பு செய்தியாக அடுத்த மாவீரர் தின மர நடுகைக்கு ஜனாதிபதி சம்மதித்தார். முதல்வர் முயற்சி வெற்றி என வரும்.
மாவீரன் பிரபாகரன் புகழ்பாடி மாகாண சபை ஏறிய இவர்கள் வீதியில் இறங்கி போராட இயலாமையால், மக்களின் பின் மறைந்து நின்று கார்த்திகை மாதம் வடக்கில் மரம் நடும் மாதம் என வடக்கு மக்கள் வேற்றுக் கிரக வாசிகள்போல், அவர்களுக்கு எப்போ உழுவது எப்போ விதைப்பது எப்போ மரம் நடுவது என்ற பருவகால பாடம் நடத்துகிறார் சூழலியலாள அமைச்சர். அன்று பழம் பழுத்தால் வௌவால் வரும் என இளைஞரை தூண்டியவர் பறந்து போனார் ஜெர்மனிக்கு. இன்று சிறை வாடும் எம்மவர் விடுதலைக்கு இடையூறு செய்ய முயல்கிறார் மர நடுகையின் பின் மறைந்து நின்று அம்பை எய்யும் நவீன இராமன் ஐங்கரநேசன்.
இத்தனை செயலும் இவரின் கடிவாளத்தை வைத்திருக்கும் சில புலம் பெயர் பிரகிரிதிகளை திருப்பதி படுத்தி தன் இருப்பை தக்கவைக்கவே. முன்னைய கட்சி கழட்டிவிட்டதால் தன்னை ஏற்கும் கட்சியின் கடைக்கண் பார்வை படவே இந்த செயல் பாடுகளே அன்றி உண்மையில் இவர் மாவீரரை மதிப்பவர் என்றால் விடுதலை போராட்டத்தில் இணைந்து தம் இன் உயிரை தந்த அனைத்து போராளிகளின் உறவுகளின் இன்றைய நிலையை, அவயங்களை இழந்து நடைப் பிணமாக வாழும் போராளிகள் பொதுமக்கள் நிலையை தேடிச்சென்று அறிந்து, அவர்கள் நன்கு வாழும் சூழ்நிலையை ஏன் இதுவரை ஏற்படுத்தவில்லை?.
உயிரோடு இருக்கும் வரை தமிழினி உடல் நிலை அறியாதவர், முதல்வர் காதில் குசுகுசுத்து எழுதி வாங்கிவந்த அறிக்கையை மரண வீட்டில் வாசித்து அனுதாபம் தேடியவர் எத்தனையோ யாழினிகள் ஆதரவின்றி அல்லல்ப் படுவதை அறிவாரா ? அவர்களின் நல்வாழ்வுக்காக களமாடித்தான் மாவீரர் உருவானார் என்பதால் இவர் செய்யவேண்டியது, அந்த அபலைகளின் துயர் துடைக்கும் திட்டங்களை செயல்ப் படுதுவது. அதை விடுத்து கார்த்திகை மாத மர நடுகை ஏற்ப் பாட்டால் 5 வருடங்களில் அவை வளர்ந்து நன்மை தரலாம் ஆனால் அதுவரை அதன் பலா பலன்களை அனுபவிக்க பாதிக்கப்பட்ட போராளிகளும் பொதுமக்களும் மரணிக்காமல் இருக்க வேண்டும் அல்லவா.
பொதுநலத்தின் அடிப்படை சுயநலம் தான். ஆனால் அதில் அமைச்சரின் அரசியல் நலம் கலப்பதைத் தான் நான் விமர்சிக்கிறேன். மலசல கூட மறைவில் மரம் நடுவது தொடங்கி இரணைமடு குளநீர் விடயம், சுண்ணாகம் நீர் மாசடைதல் வரை முதல்வரை வழிநடத்திய அமைச்சர் ஐங்கரநேசன் சுற்று சூழல் விடயம் வாருங்கள் மரம் நட என மாணவர்களை, மக்களை, பொது நிறுவனங்களை கார்த்திகை மாதத்தில் அழைக்கிறார். மார்கழி மாதம் முதல் வாரம் முதல்வரின் செய்தியை சங்கூதி வெளியிடும் பத்திரிகை முன் பக்கத்தில் இவ்வாறு தான் வெளியிடும் என என் அனுபவ அறிவு கொண்டு கீழே பதிவு செய்கிறேன்.
அமைச்சர் அழைப்பை ஏற்று மக்கள் 5 லட்சம் மரங்களை நட முயற்சித்தமைக்கு முதல்வர் அமைச்சரை வாழ்த்தினார். இப்படிப்பட்ட துடிப்பான செயல் திறன் மிக்கவரை அமைச்சராக பெற்ற எம் இனம் மென்மேலும் தழைத்தோங்கும். 5 லட்சம் மரங்களை நட முடியாவிட்டாலும் அடுத்த வருடங்களில் வரும் கார்த்திகை மாதங்களில் அமைச்சர் இந்த செயலை முன்னெடுத்து செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அரசியலில் அவர் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. அவருக்கு பக்க பலமாக நானும் என் பயணத்தை தொடர்வேன் என உறுதி கூறுகிறேன். எமது இளைஞர்களும் அமைச்சரை முன் உதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் என முதல்வர் மேலும் கூறினார். என்ற செய்தி வரும் அதுவரை வாக்களித் மக்களாகிய நீவீர் பொறுத்திருமின்.