இலங்கையில் முஸ்லிம்கள் என்றும் தனித்துவமான ஓர் இனக் குழுமம், சமூகம் வாழ்கிறது என்பதை உலகின் செவிகளில் உரத்துச் சொன்னவர் அஷ்ரப்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன், எதற்காக, எத்தகைய சூழலில் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை இக்கால இளைஞர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அதனை அறிந்தால்தான் இன்றுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது ? அஷ்ரப் ஸ்தாபித்த அதே முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதானா இன்றும் உள்ளது ? இன்றைய சூழலில் இந்த முஸ்லிம் காங்கிரஸ் தேவையா ? என்பதையெல்லாம் சிந்தித்துப் பரிசீலித்துப் பார்க்கலாம்.
1980 களைத் தொடர்ந்து தமிழ்ச் சமூகத்தில் அரசியல் மிகவும் முனைப்புறத் தொடங்கிற்று. தமிழ் ஆயுதக் குழுக்கள் உருவாகி இயங்கத் தொடங்கிற்று. தமிழ் இளைஞர்கள் மத்தியில் இந்த ஆயுதக் குழுக்கள் வேகமாகச் செல்வாக்குப் பெற்று வரலாயிற்று. இதன் விளைவாக முஸ்லிம் இளைஞர்களும் அத்தகைய ஆர்வத்தால் ஈர்க்கப் படலாயினர்.
கணிசமான முஸ்லிம் இளைஞர்களும் தமிழ் ஆயுதக் குழுக்களுடன் இணையத் தொடங்கினர். கிழக்கில் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் இந்த விவகாரம் மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியது.
மறுபுறம் 1987 இல் தமிழர் விவகாரத்தில் இந்தியா தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கியது. புலிகளுக்கும் ஜே.ஆர். அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை இந்தியா முன்னெடுக்கத் தொடங்கியது.
தமிழரின் அரசியல் பிரச்சினைகள் வெறுமனே தமிழர்களுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, முஸ்லிம்களுடனும் தொடர்புபட்டதென்பதை அரசாங்கமும் தமிழ் அரசியல் தலைவர்களும் இந்தியாவும் உணர்வதாக இல்லை.
பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம்கள் துளியளவும் பொருட்படுத்தபடவில்லை, பேச்சுவார்த்தைகளில் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொள்ளப் படவும் இல்லை. முஸ்லிம்களின் பங்கேற்பு இல்லாமலேயே இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகிறது. அதுகால வரை தந்தை செல்வாவின் அரசியல் பாசறையில் வளர்ந்துவந்த, செல்வாவின் அரசியல் பாதையில் இருந்து செயற்பட்டுவந்த அஷ்ரபை இந்தச் சூழ்நிலைகள் பெரிதும் கோபமூட்டிற்று.
தமிழர்களுடன் இணைந்து அரசியல் செய்துவந்த அஷ்ரப் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டார். முஸ்லிம்களின் அரசியல் தலைவிதியை முஸ்லிம்களே எழுத வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் அஷ்ரப். அதுதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவானதன் உண்மையான பின்னணி.
தமிழ் ஆயுதக் குழுக்களுக்குப் பின்னால் அள்ளிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் குறித்தே அஷ்ரப் அதிகமாகக் கவலைப்பட்டார். முஸ்லிம் கிராமங்களுக்கு உள்ளேயும் தமிழ் ஆயுதக் குழுக்களின் பணிமனைகள் திறக்கப்பட்டன. ஓட்டமாவடியிலேயே விடுதலைப் புலிகள் நூறு பணிமனைகளைத் திறந்தார்கள்.
இதன் விளைவாக ஓட்டமாவடி முஸ்லிம் இளைஞர்கள் ஆபத்தானதோர் உத்வேகத்தைப் பெறத் தொடங்கினர். ஏழு அல்லது எட்டு வயது கொண்ட ஒரு முஸ்லிம் சிறுவனை உடல் முழுவதும் ஆயுதங்களால் அலங்கரித்து அதைப் பார்த்துக் களிகொட்டிக் கொண்டாடினர். எவ்வளவு ஆபத்தானதோர் ஆர்வமும் ஆரம்பமும் இது ! அந்த நிகழ்வில் முன்னின்று செயற்பட்டவர் என்னுடைய மைத்துனன் ஒருவர். அது என்னைப் பெரிதும் கலங்கச் செய்தது.
புலிகள் நூறு பணிமனைகளை ஓட்டமாவடிக்குள் திறக்கும்போது முஸ்லிம் இளைஞர்களும் நூறு முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகங்களைத் திறக்கின்றனர் ஏட்டிக்குப் போட்டியாக ! முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களுடன் இணைந்து தங்கள் எதிர்காலத்தையும் சமூகத்தின் பாதுகாப்பையும் அதல பாதாளத்தில் தள்ளிவிடக் கூடாது எனும் பரந்த, தூரதிருஷ்டியான பார்வையோடுதான் முஸ்லிம் காங்கிரஸ் கட்டியெழுப்பப்பட்டது.
ஒருவகையில் பார்த்தால் அஷ்ரப் அன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நிறுவி, முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதங்களைக் கையில் ஏந்திவிடாமல் தடுத்து, அவர்களை அரசியல் ரீதியாக வழிநடாத்தியதன் மூலம் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பாரியதொரு பங்களிப்பைச் செய்திருந்தார்.
இப்படியெல்லாம் தெளிவான நோக்கங்களோடு உருவாக்கப்பட்ட தனது கட்சியை தலைவர் அஷ்ரப் அவர்களே பின்வந்த காலங்களில் சீரழித்துச் சின்னாபின்னமாக்கினார். அது தனிக்கதை.
சோதனைகள் கடந்து சாதனைகள் பல புரிந்த அஷ்ரபின் நோக்கமும் போக்கும் பிற்பட்ட காலங்களில் மாற்றமுறத் தொடங்கின. அவரிடமிருந்த எல்லை கடந்த அதிகாரப் பசி அவரை அலங்கோலப் படுத்தியது.
தென்னிந்தியாவிலிருந்து வந்த யாரோ ஒரு மவ்லானா (இஸ்லாமிய மதப் பெரியார் – உண்மையில் அப்படி ஒரு கட்டமைப்பு அடிப்படை இஸ்லாத்தில் இல்லை) அஷ்ரபிடம், ‘நீங்கள் மிக விரைவில் இந்த நாட்டின் ஜனாதிபதிப் பதவியைப் பெறப் போகறீர்கள். அதற்காக நீங்கள் உங்கள் கட்சியைச் சீரமைக்க வேண்டும்’ என்று சொன்னாராம்.
அதைக் கேட்ட அஷ்ரப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெரும் விருட்சத்தை வெட்டித் தறித்துவிட்டு தேசிய ஐக்கிய முன்னணி National Unity Alliance (NUA) எனும் பெயரில் ஒரு கட்சியைப் புதிதாக உருவாக்கப் போவதாகவும் அதற்கு இரண்டு துணைத் தலைவர்களை நியமிக்கப் போவதாகவும் அதில் ஒருவர் ஒரு பெளத்த பிக்கு என்றும் இன்னொருவர் ஒரு தமிழர் என்றும் நான் கேள்விப்பட்டேன். அப்போது நான் சுகவீனமுற்று இருந்தேன்.
கட்சி அங்குரார்ப்பணக் கூட்டம் விகாரமாதேவி பூங்காவில் ஏற்பாடாகி இருந்தது. நூறு நூற்றைம்பது பேரளவில் தொண்டர்கள் கூடியிருந்தனர். கட்சியின் செயலாளர் ஹஸன் அலி ஒரு பைல் கட்டைச் சுமந்துகொண்டு வருகிறார்.
‘என்ன ஹஸன் அலி இதெல்லாம் ?’ என்று அவரிடம் கேட்டேன்.
‘நாங்கள் இன்று ஒரு புதுக் கட்சி ஆரம்பிக்கப் போகிறோம்’ என்கிறார் அவர்.
‘அல்லாஹ் நம்மளை ஹரபாக்கிப் (அழித்து) போட்றுவான், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்க, எஸ்ஸெல்லெம் இப்படிச் சொல்லிட்டுப் போறார்னு அஷ்ரபிடம் சொல்லி விடுங்க’ன்னு சொல்லிவிட்டு நான் அந்த இடத்திலிருந்து கிளம்பி விடுகிறேன்.
நமக்கு அன்று ஒரு கட்சி தேவையாக இருந்தது. ஆனால் பின்னர் திடீரென்று அதை மாற்றியது ஏன் ? அதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் எனும் அந்தக் குழந்தை தெருவில் தூக்கி வீசப் படுகிறது. அஷ்ரப் மரணித்ததன் பிறகு இப்ப இருக்கிறவங்க அந்தக் குழந்தையைத் தூக்கியெடுத்துக் குளிப்பாட்டித் துப்புரவாக்கி, துடைத்தெடுத்து, பவுடர் பூசி ஒடிக்குலோன் அடித்து மேக்கப் பண்ணி எடுத்துக்கொண்டு வந்து இன்று அரசியல் யாவாரம் பண்ணுகிறார்கள் !
எனவே இப்போதுள்ள முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப் ஆரம்பித்த, அஷ்ரபின் காங்கிரஸ் கட்சியே அல்ல, இப்ப உள்ளது ஹக்கீமுடைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி.
அஷ்ரப் பெற்றெடுத்த முஸ்லிம் காங்கிரஸ் எனும் குழந்தையை அஷ்ரப் தன் கைகளாலேயே கழுத்தை நெரித்துத் தூக்கித் தெருவில் வீசிவிட்டார் !
இத்தனைக்கும் அப்பால் அஷ்ரப் என்பவர் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளமாக ஜொலித்தார்.
நாடாளுமன்றத்தில் முதன் முதலாகத் தனது கன்னியுரையை நிகழ்த்த இருந்தபோது தலையில் அணிந்துகொள்ள அவரிடம் ஒரு தொப்பி இருக்கவில்லை, என்னுடைய தொப்பியைத்தான் நான் எடுத்துக் கொடுத்து அவரை நாடாளுமன்றத்திற்கு உள்ளே அனுப்பி வைத்துவிட்டு நாம் நாடாளுமன்றத்தில் மேல்மாடி பார்வையாளர்கள் அரங்கில் காத்திருந்தோம் எங்கள் சிங்கம் நாடாளுமன்றத்தில் முதன்முதலாகச் சிம்மக் குரலில் கர்ச்சிக்கப் போகும் அற்புதமான அந்தத் தருணத்தைக் காண்பதற்காக !
உரையை ஆங்கிலத்தில் ஆரம்பித்த அஷ்ரப் “இந்த நாடாளுமன்றத்தில் சபாநாயகராக ஒரு முஸ்லிம் வீற்றிருக்க, ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் முதல்முறையாக விழித்துப் பேசி வாழ்த்துத் தெரிவிப்பது இந்த நாட்டில் முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வு…” என்று சொல்லி முடித்ததும் மொத்த நாடாளுமன்றமும் ஏளனமாகக் கூச்சலிட்டு இடையூறு செய்கின்றது…
இதைச் சற்றும் எதிர்பார்த்திருக்காத அஷ்ரப் ஒரு கணம் அப்படியே ஆடிப் போகிறார்… சற்று நேரத்திற்குள்ளேயே தன்னைச் சுதாரித்துக் கொண்டு தொடர்ந்து உரையாற்றி முடிக்கிறார்.
அதன் பின்னர்தான் அமிர்தலிங்கம் உரை நிகழ்த்தும்போது அஷ்ரபைப் பாராட்டிப் பேசுகிறார்…
மிகப் பெரும் அறிவும் ஆளுமையும் நிரம்பப் பெற்றிருந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் தன்னுடைய அரசியல் வாழ்வு நெடுகிலும் பாரிய சறுக்கல்களில் வீழ்ந்தார் ஓரிரு தடவைகள் அல்ல, ஏராளமான தருணங்களில் சறுக்கினார் ! அவை என்ன ? அடுத்த பகுதியில் தொடர்வோம்…
அதெல்லாம் சரி, இந்த எஸ்ஸெல்லெம் மாகாணசபை உறுப்பினர் பதவிக்கு அரசாங்கம் கொடுத்த பெஜிரோ ஜீப்பை விற்றுக் காசாக்கிய கதை தெரியுமாடா மக்காள் ஒங்களுக்கு 😊..?
ஒண்டையும் மறைச்சாம எல்லாத்தையும் சொல்லத்தான் போறன் !
கிழக்கில் எந்த மூவரும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று அஷ்ரப் பிரேமதாஸாவிடம் கோரிக்கை விடுத்தார் ? அவர்களது பெயர்கள் யாவை ?
எதிர் பாருங்கள்..,