அத்தகைய இதிகாச நட்பை விஞ்சும் நண்பர்களில் ஒருவரான ஏங்கெல்சின் நினைவு தினம் ஆகஸ்ட் 5 ஆகும். 1820ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் நாள் பிறந்த ஏங்கெல்ஸ் 1895ஆம் ஆண்டு உயிர் நீத்தார். தனது குடும்பத்தில் மூத்த மகனாக ஏங்கெல்ஸ் இருந்தாலும் முரண்பாடுகளுக்கு காரணமாகவும் இருந்தார். அவரது குடும்பம் வசதியான ஒன்று. அவர் தந்தை ஒரு ஆலைக்கு அதிபராக இருந்தார்.
ஏங்கெல்ஸ் இளம் வயதிலேயே கடவுள் மறுப்பாளராகவும் அரசியலில் தீவிர கொள்கை உடையவராகவும் இருந்தார். இது அவரது தந்தையிடம் கவலையையும் கோபத்தையும் விளைவித்தது. எனவே 1838ஆம் ஆண்டு தனது 18ஆவது வயதில் ஒரு நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்ற அனுப்பப்பட்டார். 1841ஆம் ஆண்டு பிரஷ்ய இராணுவத்தில் ஒரு ஆண்டு பணிபுரிந்தார். 1842ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் தனது தந்தையின் ஆலையில் பணியாற்ற அனுப்பப்பட்டார். தனது 22வது வயதில் இங்கிலாந்துக்கு வரும்பொழுதே இடதுசாரிக் கருத்துகளை கொண்டவராக ஏங்கெல்ஸ் விளங்கினார்.
இதிகாச நட்பின் தொடக்கம்முதலாளித்துவ உற்பத்திமுறையின் நேரடி விளைவுகளை ஏங்கெல்ஸ் அனுபவப்பூர்வமாக கண்டார். இயந்திரங்கள் மற்றும் முதலாளிகளின் அபரிமித வளர்ச்சி ஒரு புறமும் அதனை இயக்குகின்ற தொழிலாளி வர்க்கத்தின் கொடூரமான வறுமையும் அவரது மனதில் ஆழமாக பதிந்தது. 1844ம் ஆண்டு தனது 24ம் வயதில் ‘‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் துன்பநிலை’’ எனும் ஒரு அற்புதமான நூலை எழுதினார். அவரது நூல் மார்க்ஸ் உட்பட பலருக்கும் ஒரு கையேடாக திகழ்ந்தது. அன்று தொழிலாளி வர்க்கத்துடன் உருவான நேச உறவு இறுதி வரை நீடித்தது.
1844ஆம் ஆண்டு ஆகஸ்டு 28ஆம் தேதி ஏங்கெல்சும் மார்க்சும் பாரீசில் சந்தித்தனர். அன்று தொடங்கிய நட்பு 1883ஆம் ஆண்டு மார்க்ஸ் இறக்கும் வரை ‘‘இதிகாசத்தை’’ விஞ்சிய நட்பாக தொடர்ந்தது. 1845ஆம் ஆண்டு முதல் 1848ஆம் ஆண்டு வரை ஏங்கெல்சும் மார்க்சும் பிரஸ்ஸல்ஸ் நகரில் வாழ்ந்தனர். 1844ஆம் ஆண்டு ‘‘புனித குடும்பம்’’ எனும் நூலையும் 1845ஆம் ஆண்டு ‘‘ஜெர்மானிய சித்தாந்தம்’’ எனும் நூலையும் இருவரும் எழுதினர். இந்த இரண்டு நூல்களில்தான் தமது ‘‘வரலாற்றியல் பொருள்முதல்வாதம்’’ பற்றிய கோட்பாடுகளை இருவரும் முன்வைத்தனர்.
பிரஸ்ஸல்சில் ஜெர்மானிய தொழிலாளர்களின் இயக்கங்களை உருவாக்கினர். ஏற்கெனவே செயல்பட்டு வந்த அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். இந்த காலகட்டத்தில்தான் ‘கம்யூனிஸ்ட் லீக்’ எனும் அமைப்பின் வேண்டுகொளுக்கு இணங்க உலகப்புகழ் பெற்ற ‘‘கம்யூனிஸ்ட் அறிக்கை’’ 1848ம் ஆண்டு தயாரித்தனர். அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியாக ஏங்கெல்ஸ் ‘‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’’ எனும் ஆவணத்தை கேள்வி பதில் வடிவத்தில் தயாரித்தார். பின்னர் மார்க்சின் கூட்டு முயற்சியில் கம்யூனிஸ்ட் அறிக்கை உருவானது.
தியாக வாழ்வு1849ம் ஆண்டு ஜெர்மனியில் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி முதலாளித்துவப் புரட்சி உருவாகும் வாய்ப்பு இருந்த நேரத்தில் ஏங்கெல்சும் மார்க்சும் ஜெர்மனி திரும்பினர். அங்கு புரட்சி பணிகளில் ஈடுபட்டனர். எனினும் இந்த புரட்சி நசுக்கப்பட்டது. மார்க்ஸ், பிரஷ்யா நாட்டில் தங்க தடை விதிக்கப்பட்டது. எனவே பாரீசுக்கும் பின்னர் லண்டனுக்கும் சென்றார். ஏங்கெல்ஸ், சுவிட்சர்லாந்து வழியாக தப்பித்து லண்டன் வந்தார். இங்கிலாந்து வந்த ஏங்கெல்ஸ் மான்செஸ்டர் நகரில் உள்ள தனது தந்தையின் ஆலையில் மீண்டும் பணியில் சேந்தார்.
இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு ஆகும். மார்க்ஸ் தனது புரட்சிகரப் பணிகளை தொடர வேண்டுமானால் அவருக்கு நிதி உதவி தேவை. அதற்காக தான் பணியில் சேர்வது என ஏங்கெல்ஸ் முடிவு எடுத்தார். இந்த மகத்தான தியாகம் ஈடு இணையற்றது.தனது வருமானத்தில் கணிசமான பகுதியை மார்க்ஸ் குடும்பத்திற்கு ஏங்கெல்ஸ் அளித்தார்.
ஏங்கெல்ஸ் மான்செஸ்டரிலும் மார்க்ஸ் லண்டனிலும் வாழ்ந்தனர். எனினும் தினமும் அவர்கள் கடிதங்கள் வாயிலாக கருத்து பரிமாறி கொண்டனர். அக்கடிதங்கள் பல அபூர்வமான அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகளை கொண்ட ஆவணங்கள் ஆகும். 1870ஆம் ஆண்டு தனது பணியிலிருந்து ஏங்கெல்ஸ் விடுபட்டார்.
பணியின் அந்த இறுதி நாள் குறித்து மார்க்சின் இளைய மகள் எலினோர் மார்க்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:‘‘கடைசி தடவையாக என்று கூறிக்கொண்டே ஏங்கெல்ஸ் தனது பூட்ஸ் காலணிகளை அணிந்தார். அன்று மாலை வாயிலில் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். அவர் தனது கையில் இருந்த குச்சியை காற்றில் வீசிக்கொண்டே பாட்டு பாடிக்கொண்டு வந்தார். அவரது முகத்தில் அதற்கு முன்பு அத்தகைய மகிழ்ச்சியை நான் பார்த்தது இல்லை. வீட்டிற்கு வந்தவுடன் பெரிய விழா நடைபெற்றது. இனி நான் முழு நேரத்தையும் இயக்கப் பணிகளுக்கு செலவிட முடியும் என்று பூரிப்பு பொங்க ஏங்கெல்ஸ் கூறினார்.’’
1870ஆம் ஆண்டு ஏங்கெல்ஸ் லண்டன் நகரில் குடியேறினார். அன்றிலிருந்து 1883ஆம் ஆண்டு மார்க்ஸ் மரணம் அடையும் வரை இருவரும் சேர்ந்து பணியாற்றினர். தமக்கிடையே இருவரும் ஒரு வேலைப் பிரிவினையை உருவாக்கினர். மார்க்ஸ் மூலதனம் படைப்பில் கவனம் செலுத்துவது; ஏங்கெல்ஸ் ஏனைய இயக்க பணிகளை கவனிப்பது.
அதன்படி இந்த காலத்தில் கம்யூனிஸ்ட் எதிரிகளின் கருத்துகளை முறியடிக்க பல நூல்களை ஏங்கெல்ஸ் எழுதினார். அவற்றில் முக்கியமானவை டூரிங்கிற்கு மறுப்பு, இயற்கையின் இயக்கவியல், கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் ஆகியவை ஆகும். இதே கால கட்டத்தில்தான் சர்வதேச தொழிலாளார் சங்கம் எனும் அமைப்பும் உருவானது. இந்த அமைப்பை உருவாக்கியதிலும் பின்னர் வழி நடத்துவதிலும் மார்க்சும் ஏங்கெல்சும் பெரும் பங்காற்றினர்.
மார்க்சுக்கு பின்பு 1883ஆம் ஆண்டு மார்ச் மாதம் மார்க்ஸ் மறைந்தார். இந்த இழப்பு ஏங்கெல்சை பாதித்தது. ஆனால் அவர் அசாத்திய மன வலிமை கொண்டவர். இந்த இழப்பையும் மீறி உலக தொழிலாளர் இயக்கங்களுக்காக உழைத்தார். 1884ஆம் ஆண்டு தனது புகழ்பெற்ற ‘குடும்பம், தனிசொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் நூலை எழுதினார்.
மார்க்ஸ் தனது வாழ்நாளில் மூலதனத்தின் முதல் தொகுதி மட்டுமே வெளியிட முடிந்தது. மார்க்சின் கையெழுத்துப் பிரதிகளை சரிபார்த்து இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை ஏங்கெல்ஸ் வெளியிட்டார். இதில் ஏங்கெல்சுக்கு எலினோர் மார்க்ஸ் பெரும் உதவியாக இருந்தார்.
உலகம் முழுவதிலும் இருந்த கம்யூனிஸ்டுகளும் சோசலிஸ்டுகளும் ஏங்கெல்சை தேடி வந்தனர். அவரது வழிகாட்டுதல்களும் அறிவுரைகளும் அவர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தன. உலகம் எங்கும் இருந்த போராளிகளுக்கு குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் கம்யூனிஸ்டுகளுக்கு ஏங்கெல்ஸ் சிறந்த ஆசானாக திகழ்ந்தார்.
இந்தியாவைப் பற்றி ஏங்கெல்ஸ்…இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என வர்ணிக்கப்படுகிற 1857 உள்நாட்டு யுத்தம் குறித்து ஏங்கெல்ஸ் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். குறிப்பாக ஆங்கிலேயப் படைகள் இறுதியில் தில்லியை முற்றுகையிட்ட பொழுது நடந்த சம்பவங்களை மிகத் துல்லியமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார் ஏங்கெல்ஸ். தில்லி வீழ்ந்ததை பெரிய வெற்றியாக இங்கிலாந்தில் கொண்டாடியதை ஏங்கெல்ஸ் எள்ளி நகையாடுகிறார். நவீன ஆயுதங்கள் இருந்தும் இந்திய வீரர்களிடம் பெற்ற தாக்குதல்கள் குறித்து இங்கிலாந்து படை மறைப்பதை அம்பலப்படுத்தினார்.
இந்திய சிப்பாய்கள் மிகவும் தைரியத்துடனும் தீரத்துடனும் போரிட்டனர் என புகழ் மாலை சூட்டுகிறார். மையப்படுத்தப்பட்ட தலைமை இல்லாததுதான் அவர்களது தோல்விக்கு காரணம் என்பதையும் விளக்குகிறார்.
தனது 75வது வயதில் ஏங்கெல்ஸ் தொண்டை புற்று நோய் காரணமாக உயிர் நீத்தார். அவர் விரும்பியது போல அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. எலினோர் மார்க்ஸ் அவரது அஸ்தியை அவர் மிகவும் நேசித்த கடல் பகுதியில் கரைத்தார். தன் வாழ்நாளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சுடன் இணைந்தும் பின்னர் தனியாகவும் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மாபெரும் வழிகாட்டியாக ஏங்கெல்ஸ் மகத்தான போராட்ட வாழ்வை வாழ்ந்துள்ளார் என்றென்றும் புரட்சியின் மகத்தான வழிகாட்டியாக அவர் திகழ்கிறார்.
(தீக்கதிர்)