(விருட்சமுனி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரில் ஒரே மேடையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப், ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி பரீத் மீராலெப்பை ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு முஸ்லிம்களின் இன்றைய அரசியலை பொறுத்த வரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வைபவம் ஆகும். தூய தலைவர்கள் இருவரை நினைவு கூருவோம் என்கிற மகுடத்தில் அஷ்ரப்பின் 17 வருட நினைவும், பரீத் மீராலெப்பையின் 32 ஆவது வருட நினைவும் அனுட்டிக்கப்பட்டன.
முஸ்லிம்களுக்கு தனியான அரசியல் கட்சி ஒன்று வேண்டும் என்று முதன்முதல் குரல் கொடுத்தவராக பாராளுமன்ற உறுப்பினராகவும், கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தில் பதவிகள் வகித்த ஏறாவூரை சேர்ந்த கனவான் அரசியல்வாதி பரீத் மீராலெப்பை அறியப்படுகின்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அமைத்து முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் பெருந்தலைவர் அஷ்ரப் ஆவார். எனவே அஷ்ரப் நற்பணி மன்றத்தில் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு அம்பாறை மாவட்டத்துக்கும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் இடையிலான அரசியல் உறவு பாலத்தை சித்திரித்து நின்றது. அத்துடன் முஸ்லிம்களின் அரசியலில் ஏறாவூர் தலைமைத்துவத்துக்கு கனதியான பங்கு உள்ளது என்பதையும் பறை சாற்றியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் பிரதம ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின் ஆசியுடன் நடந்த இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும், தூய காங்கிரஸ் அணியின் நடத்துனருமான சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியும், தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் சக முக்கியஸ்தர்களான தொழிலதிபர் நஸார் ஹாஜியார், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹிர் ஆகியோரும் நிந்தவூரில் இருந்து புறப்பட்டு பேராளர்களாக வருகை தந்து இருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களிலும் தூய முஸ்லிம் காங்கிரஸ் அணி அதன் பலத்தை ஏற்கனவே சோதித்து பார்த்து உள்ளது. இவ்வகையில் இவ்வணி அதன் பலத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் சோதித்து பார்த்த முதலாவது சந்தர்ப்பம் இதுவே ஆகும். அதே நேரம் சொந்த ஊரில் பஷீர் சேகுதாவூத்தின் செல்வாக்கையும் நாடி பிடித்து பார்த்தார்கள். மேலும் அஷ்ரப்பின் இடத்துக்கு ஹசன் அலியையும், பரீத் மீராலெப்பையின் இடத்துக்கு பஷீர் சேகுதாவூத்தையும் ஏற்பாட்டாளர்கள் உரு கொடுத்து இருந்தனர் என்பது உட்கிடையாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் ஆகும்.
தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அதாவுல்லா குறித்து மக்களுக்கு ஒரு பரவலான அபிப்பிராயம் உள்ளது. என்னவென்றால் எப்போதெல்லாம் ரவூப் ஹக்கீமை திட்ட வேண்டும் என்று அதாவுல்லா விரும்புகின்றாரோ அப்போதெல்லாம் பொது கூட்டம் போட்டு திட்டி தீர்க்கின்றார் என்று நினைக்கின்றார்கள். இதனால் தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியினர் இவ்விடயத்தில் மிக அவதானமாகவும், கவனமாகவும் உள்ளனர். இதனால்தான் தூய தலைவர்கள் இருவரின் நினைவு பேருரையை ஆற்றுதல் என்கிற முலாமை பூசி கொண்டு வந்து ரவூப் ஹக்கீமை தீய தலைவர் என்று உரையாற்றுவதில் இக்கூட்டத்தில் வெற்றி கண்டனர். கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கை உயர்த்தியதன் மூலம் துரோகம் இழைத்து காட்டி கொடுத்து விட்டனர் என்று ஒரு பரவலான அபிப்பிராயம் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் நிலவுகின்றது. உயர்நீதிமன்றம் இச்சட்டமூலத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அபிப்பிராயம் அனுப்பி 04 நாட்களில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டை அவரின் சொந்த ஊரில் வைத்து இக்கூட்டத்தில் சூட்டோடு சூடாக இவர்கள் கிழித்ததும் சால பொருத்தமான உத்தியாகவே பார்க்கப்படுகின்றது. பஷீர் சேகுதாவூத்தும், நஸீர் அஹமட்டும் அரசியலில் பரம எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தூய முஸ்லிம் காங்கிரஸ் அணிக்கு மட்டக்களப்பில் செயற்பாட்டாளர்களை சேர்க்கின்ற செயல் திட்டத்தின் முதல் அம்சமாகவும், அங்கமாகவும்கூட இக்கூட்டம் அமைந்து நின்றது கண்கூடு. கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாஹிர் சாலி. வாழைச்சேனையை சேர்ந்தவர் இவர். அண்மைய வருடங்களில் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய் இருப்பவர். இவருடைய பாஷையில் சொன்னால் அரசியல் அநாதை ஆக்கப்பட்டு உள்ளார். இவரை இந்நிகழ்வுக்கு அதிதிகளில் ஒருவராக அழைத்து, அரவணைத்து நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தி உள்ளார்கள். இவர் பஷீர் சேகுதாவூத்தின் வகுப்பறை தோழன் ஆவார்.
பேராளர்களாக கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்கள் ஆற்றிய உரைகளை பார்ப்போம். ஹசன் அலி இங்கு உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:-
” இலங்கையின் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரத்தின் உச்சத்தை தொட்ட ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன என்றால் அது மிகை ஆகாது. ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர அவரால் எதையும் செய்ய முடியும் என்று கர்ச்சித்தவர். ஐக்கிய தேசிய கட்சியின் எம். பிகளாக தெரிவானவர்கள் அவருடைய கட்டளைக்கு பணிந்து வெற்று கடதாசியில் கையொப்பம் இட்டு கொடுத்தனர். ஆனால் ஒரே ஒருவர் மாத்திரம் வெற்று கடதாசியில் கையொப்பம் இட்டு கொடுக்க மறுத்து விட்டார். மாத்திரம் அல்லாமல் அவருக்கு வாக்களித்த மக்களிடம் கேட்டு விட்டு வந்துதான் வெற்று கடதாசியில் கையொப்பம் வைப்பார் என்று துடுக்காக ஜே. ஆருக்கு சொன்னார். இவர் வேறு யாரும் அல்லர் ஏறாவூர் மண்ணின் மைந்தன் வைத்திய கலாநிதி பரீத் மீராலெப்பையே ஆவார்.
தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் அன்றைய யுத்த சூழலில் முஸ்லிம் மாணவர்கள் வெளி மாகாணங்களுக்கு சென்று படிக்க முடியாத குழப்ப சூழல் காணப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் மாணவர்களுக்கு கிழக்கு மண்ணில் பல்கலைக்கழகம் ஒன்றை கட்டி தாருங்கள் என்று அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தலைவர் அஷ்ரப் கோரினார். ஜனாதிபதி வேறு சில அழுத்தங்களால் கையறு நிலையில் காணப்பட்டபோதிலும்கூட அஷ்ரப்புக்கு ஒரு பல்கலைக்கழகத்தை கொடுங்கள் என்று கண்டிப்பாக உத்தரவிட்டார். இவ்விதம் ஜனாதிபதியை சொல்ல வைத்ததுதான் தலைவர் அஷ்ரப்பின் ஆளுமை. இவ்விதமாகவே கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்துக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகம் தலைவர் அஷ்ரப்பால் உருவாக்கி தரப்பட்டது.
பரீத் மீராலெப்பை, அஷ்ரப் சேர் ஆகியோரை இன்றைய முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் முன்மாதிரியாக கொள்தல் வேண்டும். அப்போதுதான் சமூகத்தை சரியான பாதையில் வழி நடத்தி செல்ல முடியும். ஆனால் இன்றைய முஸ்லிம் தலைவர்கள் கை கட்டி, வாய் பொத்தி அரச தலைவர்களுக்கு சேவகம் செய்து மலினப்பட்டு கிடக்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதற்கெல்லாம் பாராளுமன்றத்தில் கை உயர்த்த வேண்டும் என்கிற கட்டளை வெளியிடத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது என்கிற உண்மையை நான் உங்களுக்கு உரத்து சொல்கின்றேன். முஸ்லிம்கள் அடங்கலாக சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பாக அமைந்து இருந்த திவிநெகும சட்டமூலம் பிழையானது என்று தீர்ப்பு வழங்கிய அன்றைய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் எனது ஆலோசனையையும் மீறி சிறுபான்மை மக்களின் தலைவராக இருந்தும் வாக்களித்து விட்டு, தினேஸ் குணவர்த்தன அழைத்து வந்து விட்டார் என்று சிறுபிள்ளைத்தனமாக எனக்கு சொன்ன ரவூப் ஹக்கீமை நினைத்து பார்க்கின்றேன். அஷ்ரப் என்கிற மிக பெரிய ஆளுமை உட்கார்ந்து இருந்த அரியாசனத்தில் ஒரு வெறுமைதான் கடந்த 17 வருடங்களாக உட்கார்ந்து உள்ளது. தூய்மையான, துணிச்சலான, திறமையான தலைமைத்துவம் மூலமாகவே எதையும் சாதிக்க முடியும்.
சமஷ்டி, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு ஆகியவற்றுக்காகவே கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கை உயர்த்தினர். ஆனால் நீ ஏன் உயர்த்தினாய்? என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் நான் வினவுகின்றேன். முஸ்லிம்களுக்கான தனியான மாகாணம், கரையோர மாவட்டம், தென்கிழக்கு அலகு இவற்றில் எதற்காக கை உயர்த்தினாய்? என்று கேட்கின்றேன்.
இதுதானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாணக்கிய அரசியல்? மூடிய அறைக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையுடன் என்ன இரகசியம் பேசினாய்? ஒரு மயிரை பெற்று தரகூட முடியாத அளவுக்கு மழுங்கி போன அரசியலை செய்கின்றார்கள்.
நாம் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்கிற கட்டமைப்பை உருவாக்கி வருகின்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அத்தேர்தல் எதுவாக இருப்பினும் அதை பாழாய் போன ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேவையா? இல்லையா? என்கிற மக்கள் தீர்ப்பை வழங்குகின்ற சர்வசன வாக்கெடுப்பாக கொண்டு கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன். “
நஸார் ஹாஜியார் பேசியவை வருமாறு:
” உண்மையில் இன்றைய அரசியல் நிலைவரத்தில், பெருந்தலைவர் அஷ்ரப் சேர் குறித்து ஒவ்வொரு நாளும் மேடை போட்டு பேச வேண்டி உள்ளது. தலைமைத்துவத்தின் சிகரத்தை தொட்ட மாமனிதர் அவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சியின் தலைவராக மாத்திரம் அன்றி, முஸ்லிம் சமூகத்தின் தலைவராகவும் விளங்கினார். அவர் முஸ்லிம் சமூகத்தின் தலைவராக மாத்திரம் அன்றி தந்தையாகவும் திகழ்ந்தார். எமது சமூகத்தின் வழிகாட்டியாகவும், விழிகாட்டியாகவும் திகழ்ந்து அரசியலில் விழிப்புணர்வையும், விடியலையும் ஏற்படுத்தி தந்தார். ஆனால் அவரால் உருவாக்கி வழி நடத்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று பிழையான பாதையில் பயணிக்கின்றது. அரசியல் ஞானியும், சட்ட வல்லுனருமான அவர் கட்சியில் தலைவருக்கு ஈடான தவிசாளர் பதவி, அதிகாரம் பொருந்திய செயலாளர் நாயகம் பதவி ஆகியவற்றை தூர நோக்கு, தீர்க்கதரிசனம் ஆகியவற்றோடுதான் உருவாக்கி கொடுத்து இருந்தார். மசூரா சபை அமைக்கப்பட்டு மசூரா அடிப்படையில்தான் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சூரா சபை இயங்கியது. குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கட்சி செயற்பட்டது. ஆனால் தலைவர் அஷ்ரப் உருவாக்கி கொடுத்த யாப்பை மாற்றி விட்டார்கள். குறிப்பாக அதிகாரம் பொருந்திய செயலாளர் நாயகம் பதவியை இல்லாமல் செய்து விட்டார்கள். கட்சியில் தலைவரின் சர்வாதிகாரம் நடக்கின்றது. கட்சி அதியுயர்பீட உறுப்பினர்கள் 94 பேரில் 54 பேரை நியமிக்கின்ற அதிகாரத்தை தலைவர் பிடித்து வைத்திருக்கின்றார் என்றால் வேறு எப்படி கூற முடியும்? இந்த அநியாயங்களைத்தான் கட்சிக்குள் இருந்து தட்டி கேட்டோமே ஒழிய ஒருபோதும் தேசிய பட்டியல் கேட்டு சண்டை பிடித்து இருக்கவே இல்லை. செயலாளர் நாயகம் ஹசன் அலியும் சரி, தவிசாளர் பஷீர் சேகு தாவூத்தும் சரி கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டுத்தான் கடந்த பொது தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கவில்லை.
பஷீர் சேகுதாவூத்தை பொறுத்த வரை கட்சியை காப்பாற்றி கொடுத்தவர் அவர். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இன்று தலைவராக இருப்பவரை தனிப்பட்ட பிரச்சினைகளில் இருந்தும் காப்பாற்றியவர். கட்சியையும், கட்சி தலைமையையும் காப்பாற்றினால்தான் சமூகத்தை காப்பாற்ற முடியும் என்று உணர்ந்தவராக கடமையாக அவற்றை செய்து இருந்தார். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் மர சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட வியூகம் அமைத்து கொடுத்தவர் ஹசன் அலி. ஆனால் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில்தான் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு ஆக வேண்டும் என்று முரண்டு பிடித்து கொண்டிருந்தார் ரவூப் ஹக்கீம். இருப்பினும் அதிகாரம் மிக்க செயலாளர் நாயகம் பதவியின் மூலமாக தலைவருக்கு மூக்கணான் கயிறு போட்டு தலைவரை நிர்ப்பந்தித்து வழிக்கு கொண்டு வந்தார். இதன் பலனாகத்தான் கிழக்கு மாகாணத்துக்கு குறிப்பாக ஏறாவூர் மண்ணுக்கு ஒரு முஸ்லிம் முதலமைச்சர் கிடைத்தார். ஆனால் தவிசாளர் பஷீர் சேகு தாவூத்தையும், செயலாளர் நாயகம் ஹசன் அலியையும் ரவூப் ஹக்கீம் வெளியே போட்டு விட்டார். பெருந்தலைவர் அஷ்ரப்பின் தலைமைத்துவத்துக்கும், இன்று தலைவராக உள்ள ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்துக்கும் உள்ள முக்கியமான வேறுபாடுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று தலைவர் அஷ்ரப் திறமைசாலிகளை, ஆளுமை உடையவர்களை, ஆற்றல் மிக்கவர்களை எங்கிருந்தாலும் அடையாளம் கண்டு கட்சிக்குள் உள்ளீர்த்தார். தலைவர் அஷ்ரப்பால் இவ்விதம் அடையாளம் காணப்பட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் மிக கௌரவமான முறையில் கொண்டு வரப்பட்டவர்தான் பஷீர் சேகுதாவூத். ஆனால் ரவூப் ஹக்கீம் திறமைசாலிகளையும், ஆளுமை உடையவர்களையும், ஆற்றல் மிக்கவர்களையும் கட்சிக்குள் இருந்து வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார். ஏனென்றால் அவருக்கு பயம். இன்று கட்சிக்குள் ஞான சூனியங்கள்தான் மிஞ்சி உள்ளனர். அவிவேக பூரண குருவும், முட்டாள் சீடர்களும் என்கிற கதைதான் எனக்கு நினைவுக்கு வருகின்றது. கள்வர்கள், கயவர்கள், சமூக விரோதிகள், சுயநலவாதிகள் ஆகியோரின் குகையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாற்றப்பட்டு உள்ளது. மோசடிகாரர்களுக்கும், ஏமாற்று பேர்வழிகளுக்கும்தான் ரவூப் ஹக்கீம் பதவிகளை கொடுத்து வைத்திருக்கின்றார்
எனவே முஸ்லிம் அரசியலில் எமக்கு இன்று ஒரு மாற்றம் நிச்சயம் தேவைப்படுகின்றது. தலைமை பதவி அவருக்கு தேவை இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து இருப்பவர் ஹசன் அலி. பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து விலகி உள்ளார் என்று பகிரங்கமாக அறிக்கை விட்டவர் பஷீர் சேகு தாவூத்.எனவே உண்மையில் மாற்றம் ஒன்றை உருவாக்கவே நாம் போராடுகின்றோம் என்பது வெளிப்படையான நிதர்சனம். இந்த மாற்றத்தை உருவாக்க கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.
இந்த மாற்றத்தை உருவாக்க கூடிய திறவுகோலாக முஸ்லிம் கூட்டமைப்பு என்கிற கட்டமைப்பை உருவாக்குகின்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைப்பை போலவே முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். முஸ்லிம் அரசியல் ஆளுமைகள் அனைவரையும் உள்வாங்கி இக்கூட்டமைப்பு அமைக்கப்பட்டு ஒரு தலைவரை உடையதாக அன்றி தலைமைத்துவ சபையை கொண்டதாக இயங்க வேண்டும் என்பதே எமது பார்வையாக உள்ளது. ஆகவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியில் வீசப்பட்ட அனைத்து ஆளுமைகளும் எம்முடன் இணைதல் வேண்டும். முஸ்லிம் மக்களை சரியாக வழி நடத்த கூடிய தலைவர்கள் எம்முடன் கை கோர்த்து இப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும். பொய்யனும், எத்தனும், ஏமாற்று பேர்வழியுமான ஒருவன் முஸ்லிம்களின் தலைவராக இனியும் இருக்க முடியாது. எனவே எல்லோரும் சேர்ந்து ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் கரங்களை பலப்படுத்துங்கள் என்று கேட்டு கொள்கின்றேன். ”
Attachments area
Click here to Reply or Forward
5.09 GB (33%) of 15 GB used
Manage
Terms – Privacy
Last account activity: 15 minutes ago
Details