(ஜனகன் முத்துக்குமார்)
ஐ.அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின், பெய்ஜிங்குக்கான அண்மைய (ஒக்டோபர் 8) விஜயம், குறைநிரப்பு விடயமாகவே பார்க்கப்படுகின்றது. ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ், ஐ.அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையீடு செய்ய முற்படுகின்றது என வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியமையைத் தொடர்ந்து, சீனா அதன் அதிகாரபூர்வமான நிகழ்ச்சிநிரல்களில், ஐ.அமெரிக்காவை, சர்வதேச நிரல்களில் ஐ.அமெரிக்காவின் தலைமைத்துவத்தை கேள்விக்குட்படுத்த தொடங்கிய நிலையிலேயே, குறித்த விஜயம் முக்கியம் பெற்றிருந்தது.
உதாரணமாக, ஐ.அமெரிக்காவும் சீனாவும் முன்னதாக உடன்பட்டிருந்த வடகொரியாவின் அணுவாயுத உற்பத்தியைக் கைவிடுதல், கொரியத் தீபகற்பத்தில் சமாதானத்தை ஏற்படுத்துதல் ஆகிய விடயங்களில், இரு நாடுகளும் இணங்கிச் செயற்படுதலில் இருந்து, அண்மையில் சீனா தனது நகர்வுகளைக் குறைத்துக்கொண்டதும், ஐ.அமெரிக்காவுடன் நேரடியான உறவுகளை மேம்படுத்திக்கொள்வதில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வதில் ஈடுபாடு காட்டாமையுமே, ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், அண்மையில் சீனாவுக்கு நேரடியாக விஜயம் செய்ய ஏதுவான காரணிகளாக அமைந்தன எனலாம்.
இவ்விஜயம் மூலம், இருதரப்பு உறவுகளை முன்னேற்றுவது, உலகளாவிய ஆதிக்கம், மூலோபாய – இராணுவ ஒத்துழைப்பு, இராஜதந்திர – தகவல் பரிமாற்றம், இரு நாடுகளும் ஒருவரையொருவர் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளாகத் தொடர்ந்து பேணுதலுக்கு உதவும் எனக் கருதப்படும் அதேவேளை, சர்வதேச அரசியல் விமர்சகர்கள், குறித்த முறுகல் நிலைமை உடனடியான தீர்வுக்கு வரும் எனக் கருதவில்லை. மாறாக, இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போட்டி நிலைமை, அது காரணமாக ஏற்படும் அதிகப்படியான முறுகல் நிலைமையையே தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்குக் காரணம், தொடர்ச்சியாகவே சீனா துணிச்சலான வர்த்தகக் காய் நகர்த்தல்களே ஆகும். சீனாவுக்கு எதிராக ஐ.அமெரிக்கா கொண்டுவந்த வர்த்தக வரிக்கு எதிராக, சீனா, ஐ.அமெரிக்க உற்பத்திகளுக்கு அதிகரித்த வரியைச் சுமத்தியமை, தாய்வானுக்கு ஐ.அமெரிக்கர்கள் நேரடியாகவே பயணிக்கக்கூடிய பயண அனுமதி தொடர்பில், ஜனாதிபதி ட்ரம்பால் கையெழுத்திட்ட பின்னர், ஐ.அமெரிக்க அதிகாரிகளின் வருகைக்கு எதிர்ப்புச் செயற்பாடாக தென்சீனக் கடலில் சீனா தொடர்ச்சியாக அத்துமீறிய இராணுவ நிலைமைகளை பேணுதல் – அதற்கு எதிராக இராணுவத் தோற்றத்தை ஐ.அமெரிக்கா தென்சீனக்கக்கடலில் கொண்டிருப்பதுடன், சீனாவின் எச்சரிக்கையைப் புறக்கணித்து ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து, ஐ.அமெரிக்கா போர்கப்பல்களை தென்சீனக் கடற்பரப்பில் நிலைகொண்டு இருக்கச் செய்தமை, மேலும், சீனா தனது ஆதிக்கத்தை சர்வதேச வர்த்தகத்தில் ஐ.அமெரிக்காவுக்கு மாற்றீடாக முனைப்புச் செய்வதற்கு 110 பில்லியன் டொலர்கள், ஐ.அமெரிக்க வங்கிகளில் சீனா முதலீடு செய்தமை – அதன் காரணமாக, ஐ.அமெரிக்க வாங்கிப் பரிவர்த்தனையில் சீனா ஒரு தவிர்க்கமுடியாத நிலைப்பாட்டாளராக மாற்றம் பெற்றமை என்பதும், ஐ.அமெரிக்க – சீன முறுகல் நிலைமையின் அண்மைக்கால நகர்வுகள் ஆகும்.
மறுபுறத்தில் ஐ.அமெரிக்கா, சீனாவுடன் கொண்டுள்ள வர்த்தக போட்டிநிலைமையை ஒரு போதும் தனக்கு சாதகமானது என கொண்டாட முடியாது. இதற்குக் காரணம், அரசியல் ரீதியான சர்வதே நகர்வுகளில் சீனாவுடன் பகைப்பது, நீண்டகாலத்துக்கு நன்மை பயக்கும் செயலன்று. உதாரணமாக, வடகொரிய சமாதானப் பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரை, கிம், சிங்கப்பூர் உடன்படிக்கைக்கு பின்னராக ஐ.அமெரிக்க ஜனாதிபதியை மீண்டும் சந்திக்க ஒரு முனைப்பை வெற்றிகரமாக மேற்கொண்டமை, கிம்- சீன உறவின் வெளிப்பாடே ஆகும். இது ஒரு புறத்தில், கிம் தனது உள்நாட்டில் தனது தலைமைத்துவம், எவ்வாறாக மேற்கத்தேய நாடுகள் தன்னுடன் கூட்டுச்சேர ஆவலாக உள்ளார் என்பதைப் பிரதிபலித்தாலும், அதனையும் தாண்டி, வடகொரியா இன்னுமே சர்வதேச அரங்கில் தடைகளை எதிர்நோக்கியிருந்தாலும், சீனா போன்ற நட்பு நாடுகள் வடகொரியா மீதான தடைகளை ஏற்கெனவே தளர்த்தியமை, ஒரு புறத்தில் தனது பொருளாதார நன்மைகளைப் பெறுவதற்கு வடகொரியாவுக்கு உதவுவதுடன், மறுபுறத்தில் இன்னுமே அணுவாயுத உற்பத்தி, ஏவுகணை உற்பத்தியை முழுமையாகக் கைவிடாத வடகொரியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியாகும். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், இது ஐ.அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு, அண்மையில் சீனாவுடனான முரண்பாட்டை அடுத்து கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகும். மேலும் குறித்த விவகாரத்தில் ஐ.அமெரிக்கா தனது நீண்டகால நட்பு நாடுகளான ஜப்பானையும் தென்கொரியாவையும் தாண்டி வடகொரியாவுடன் நேரடியான உறவை மேற்கொள்ள எத்தனித்தமை, ஒரு புறத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தாண்டி, தனது சர்வதேசத் தலைமைத்துவத்தை தக்கவைக்கும் ஒரு முயற்சி என, ஐ.அமெரிக்கா கருத்தியபோதிலும், அது சீனா, ஐ.அமெரிக்காவை தனது மூலோபாய உறவு நாடுகளின் உறவில் இருந்து விரிசல் அடையச்செய்யும் ஒரு நீண்டகால சர்வதேச அரசியல் நகர்வு என்பதை, ஐ.அமெரிக்கா உணர்வதற்குக் காலம் தேவையாகவே இருந்தது. இதன் இடையிலேயே ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தென்கொரியா, ஜப்பான் ஆகியன, தமது இரு நாடுகளுக்கும் ஐ.அமெரிக்கா தொடர்ச்சியாக வழங்கும் பாதுகாப்புக்கான செலவை வழங்க வேண்டும் எனக் கேட்டமை, அது தொடர்பில் உள்ளக முரண்பாடுகள் ஏற்பட்டமை என்பதும் கருத்தில் எடுக்கும் பட்சத்தில், இதுவும் ஐ.அமெரிக்கா, ஆசிய பசுபிக் பிராந்திய விவகாரங்களில் அண்மையில் சந்தித்த மிகப்பெரிய தோல்வி எனலாம்.
இவ்வாறான ஒரு குழப்பமான நிலையில், ஐ.அமெரிக்காவின் இராஜதந்திர நகர்வுகள் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே பரந்துள்ள முரண்பாட்டைத் தீர்க்கும் ஒரு நிகழ்வாகவே ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயணம் பார்க்கப்பட்டாலும், இது உண்மையில் உடைந்துள்ள இரு தரப்பு உறவுகளை முற்றிலும் புதுப்பிக்குமா என்பதையே இப்போதைய கேள்வியாகும்.