தங்கள் ஏழ்மையை ஓரளவுக்கு இது துடைக்கும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்
(யது பாஸ்கரன்)
இலங்கையின் மிகவும் வறுமை மிகுந்த மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. இவ்வாறு இந்த மாவட்டத்தின் வறுமைக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் பதினேழாயிரத்துக்கும் அதிகளவான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதே காரணமாக அறிய முடிகின்றது. அதுபோல மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்மை காரணமாக வறிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் அல்லப்படுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓரளவு வருமானத்தை ஈட்டித்தரக்கூடியதும் கணிசமான குடும்பங்களுக்கான தொழில் வாய்பினையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஒட்டுசுட்டான் பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலை இன்னும் செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.
கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக செயலிழந்து போன இந்த ஓட்டுத்தொழிற்சாலை இதுவரை மீள ஆரம்பிக்கப்படாத நிலையில் இக் கட்டடம் பற்றைக்காடுகள் மண்டிக்காணப்படுகின்றது.
குறித்த தொழிற்சாலையானது முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கூழாமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. குறித்த ஒட்டுத்தொழிற்சாலை மிக நீண்டகாலமாக இயங்கி வந்த ஓர் தொழிற்சாலையாகவும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வருமானத்தை பெற்றுக்கொடுக்கக் கூடிய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருந்த நிலையில் கடந்த 1990ம் ஆண்டுகளில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இதன் கட்டுமானங்கள் சேதமடைந்து குறித்த தொழிற்சாலையும் செயலிழந்துபோனது.
பின்னர் குறித்த ஓட்டுத்தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்பட்டு ஓடுகள் உற்பத்தி செய்யப்பட்டன.
ஆரம்பத்திலிருந்து இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொண்டு தமது வாழ்வாதாரத்தையும் அதிகூடிய வருமானத்தையும் பெற்றுககொண்டதுடன் மாவட்டத்திற்கு வெளியேயும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய தரமான ஓடுகளும் கிடைத்திருந்தன.
கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக ஓடு உற்பத்தி கைவிடப்பட்டதுடன் அதற்கான சகல கட்டுமானங்களும் அப்படியே விடப்பட்டிருந்தன. 2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வைத் தொடர்ந்து கடந்த எட்டு ஆண்டுகளின் சில பின்னரும் இந்த ஓட்டுத்தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படுவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ச்சியாக இப்பகுதி மக்களும் மாவட்டத்தின் பொது அமைப்புக்களும் விடுத்த கோரிக்கைகளையடுத்து முல்லைத்தீவு மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் கீழ் இத் தொழிலகம் கொண்டு வரப்பட்டு வீடமைப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டாலும் பின்னர் முயற்சிகள் கைவிடப்பட்டன. அதன் பொறுப்பில் இருந்து ஓட்டுத்தொழிற்சாலை மீளப்பெறப்பட்டது. அப்படியே கைவிடப்பட்ட நிலையில் தற்போது காவலாளி ஒருவர் மட்டுமே கடமையில் உள்ளார்.
அரம்பத்தில் இந்த ஓட்டுத்தொழிற்சாலை கைத்தொழில் வணிகத்துறை அமைச்சின் கீழ் இருந்த போதும் அந்த அமைச்சில் இருந்து மீளப்பெறப்பட்டு வேறு அமைச்சின் கீழ்கொண்டு வரப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்த தொழிற்சாலை மீளவும் இயங்குமானால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியான தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும் இதனை விட மேலும் பல வர்த்தகர்கள் பொதுமக்கள் நன்மையடையக்கூடிய வாய்ப்புக்கள், ஏராளமாகவே உள்ளன.
மேற்படி ஓட்டுத்தொழிற்சாலை அமைந்துள்ள சூழலை அண்டிய பகுதிகளில் வாழும் அதிகளவான குடும்பங்கள் இத்தொழிற்சாலையில் மிக நீண்டகாலமாக தொழில் வாய்ப்பினை பெற்றிருந்ததாகவும் தற்போது இத்தொழிற்சாலை செயலிழந்து காணப்படுவதனால் தங்களது தொழில் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதுடன் அன்றாட உணவிற்கே பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த பகுதியில் வாழும் அநேகமான குடும்பங்கள் இந்த ஓட்டுத்தொழிற்சாலை நம்பியே வாழ்ந்து வருவதாகவும் இதனை மீள இயங்க வைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு வருடமும் மக்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
எங்களையும் எங்கள் குடும்பங்களையும் உயிர் வாழவைத்த இந்த தொழிற்சாலை இன்று இப்படிக்கிடப்பது தான் எங்கள் கஷ்டத்திற்கு அடிப்படையான காரணம் என்றும் இந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் வறுமை மிகுந்த மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வறுமை நிலைக்கு ஓர் காரணமாக ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படாமையும் ஒரு காரணம். எனவே கடந்த முற்பது ஆண்டுகளுக்கு மேலான யுத்தம் காரணமாக செயலிழந்து போன அனைத்து தொழிற்சாலைகளையும் மீள இயங்க வைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.