கற்றல் திறனில் நம்முடைய தொடக்கப் பள்ளி மாணவர்கள் நிறையப் பேர் மோசமாக இருக்கிறார்கள் என்பது உண்மைதானே?
உண்மைதான். எழுத்துக்கூட்டி தமிழைப் படிக்கத் தெரியாமலே, ஏபிசிடி தெரியாமலே, அடிப்படைக் கணக்கு தெரியாமலே எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் அவர்கள் வந்துவிடுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இவர்களுக்கு வகுப்பு எடுப்பது என்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. ஆனால், இதற்கு ஒட்டுமொத்தச் சமூகமும்தான் காரணம்.
எப்படி?
எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அரசாங்கம் ஒரு திட்டத்தைக் கொண்டுவருகிறது. எட்டாம் வகுப்பு வரைக்கும் அனைவரையும் தேர்ச்சிபெற வைக்க வேண்டும் என்று அதற்கு அர்த்தம் அல்ல. அந்த வகுப்புகளுக்குரிய அறிவை அவர்களுக்குக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதுதான். அதை ஆசிரியர்களும் எளிமையாகப் புரிந்துகொண்டார்கள். இன்றைக்குமே வாலில் தீப்பிடித்த மாதிரி வேலைபார்ப்பவர்கள் யார் என்றால் 10, 12-ம் வகுப்பு ஆசிரியர்கள்தான். ஆனால், இந்தச் சூழல் தொடக்கப் பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் இல்லை.
அரசுப் பள்ளிகளை நோக்கியே அதிகம் குற்றம் சாட்டப்படுகிறது?
பிரபல தனியார் பள்ளியின் ஆண்டு மலர் ஒன்றைச் சமீபத்தில் பார்த்தேன். அதில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் குழுப் புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் வகுப்பெடுப்பதற்காக மட்டும் 30 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர, குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்கான ஊழியர்கள் ஐந்தாறு பேர் இருக்கிறார்கள். ஆனால், ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே மொத்தம் 20 ஆசிரியர்கள்தான் இருக்கிறார்கள். இந்த ஒப்பீட்டை எல்லாம் இன்று யாருமே எண்ணிப் பார்ப்பது இல்லை. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனி ஆசிரியர்கள் இருக்கக்கூடிய ஒரு பள்ளிக்கும் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் ஒரே ஆசிரியர் பாடம் எடுக்கிற பள்ளியையும் எப்படி ஒப்பிட முடியும்? அந்த ஆசிரியர்களும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் போக வேண்டும், அடிக்கடி உயர் அதிகாரிகள் நடத்தும் கூட்டத்துக்குப் போக வேண்டும். போதுமான ஆசிரியர்களைப் பணியில் நியமிக்காமல் மாணவர்களின் தரம் குறைந்துவிட்டது என்று ஆசிரியர்களைக் குற்றஞ்சாட்ட முடியாது.
பெற்றோர்களுக்கும் சமூகத்துக்கும் இதில் உள்ள பொறுப்பு என்ன?
தனியார் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியர்களைக் கேள்வி கேட்பார்கள். படிக்கத் தெரியாதவர்களாக இருந்தாலும்கூட இவ்வளவு பணம் கட்டுகிறோம் என்ற அடிப்படையில் அவர்கள் கேள்வி கேட்பார்கள். அரசுப் பள்ளிகளில் அந்த நிலை இல்லை. அன்றாடம் பிழைப்பே சவால் என்கிற நிலையில் இருக்கும் அவர்கள், கேள்வி கேட்கவில்லை என்றாலும் சமூகத்துக்கு அந்தப் பொறுப்பு உண்டு.