கனடிய அரசியோலில் முதன் முதலாக கால் பதித்தவர் சந்திரன் மயில்வாகனம் என்பவர்.கொழும்பைச் சேர்ந்த இவர் புதிய ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கினார்.அன்று ஒரு தளம் அரசியல் களத்தில் இறங்கியபோதும் புலி ஆதரவு அலை தமிழ் பேசும் மக்களை இவரின் பக்கம் திரும்பவிட வில்லை.
அதன் பின் ஜானகி பாலகிருஷ்ணன் புதிய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் குதித்தார்.இவர் இலங்கையின் பிரபலமான கம்யூனிஸ்ட் கார்த்திகேயன் ஆசிரியர் மகள்.அவரின் பெயரால் அவர் விளம்பரப்படுத்த பட்டபோதும் அவருக்காக தேர்தலில் உதவ தமிழர்கள் முன்வரவில்லை.இவரை புலி ஆதரவாளர்கள் பயன்படுத்தி தங்கள் காரியங்களை வெல்ல இவரது கொள்கையும் கட்சியும் இடம்கொடுக்கவில்லை.இதன் காரணமாக தமிழ் பேசும் மக்களால் புறக்கணிக்கப்பட்டார்.இவரை தமிழர்கள் கண்டுகொள்ளாதபோதும் அன்றைய புதிய ஜனநாயக கட்சியூடாக முடிந்த உதவிகளை தமிழ்சமூகத்துக்கு பெற்றுக்கொடுத்தார்.அன்றைய தமிழீழசங்கத்துக்கு கட்டிடம் வாங்க இவரே உதவினார்.அப்படி இருந்தும் புலி ஆதரவாளர்கள் இவரை ஓரம் கட்டினார்கள்.
ஜானகி ஒரு ஆரோக்கியமான அரசியல்வாதி.இவர் தேர்தலில் நிற்கிறார் என அறிந்து தொடர்புகொண்டேன்.அப்போது கார்த்திகேயன் ஆசிரியர் மகள் என்பதாலா ஆதரிக்கிறீர்கள்.அப்போது என்னில் நம்பிக்கை இல்லையா என கேள்வியைக் கேட்டார்.அதுவே அவரது தனித்துவத்தை ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் வாரிசு என்ற அடையாளத்தை காட்டியது.
கனடிய தமிழர்கள் தமது அரசியலை 1988 இல் பல தில்லு முல்லுகளுடன் தொடங்கினார்கள்.ஒருகட்சி வேட்பாளரை தெரிவு செய்ய பணத்தை வாங்கிக்கொண்டு வந்தவன் கண்டவன் எல்லோரையும் சேர்த்து வாக்களிக்க வைத்த கதை செய்திகளாக வந்தன.அந்த குப்பைகளே இன்றும் தொடர்கின்றன.
அரசியல் பதவி என்பதை தமது கௌரவமாக நினைக்கும் தமிழர்களிடம் அதற்குரிய கண்ணியம் இல்லை.அதன் காரணமாகவே அன்று ஜானகி பாலகிருஷ்ணனுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.சிலர் அரசியலுக்கு கல்வித் தகுதி மட்டும்போதும் என நினைக்கிறார்கள்.சிலர் பணம் ஆளணி மட்டும்போதும் என நினைக்கிறார்கள்.பலர் பின் கதவால் நுழைகிறார்கள் .நுழையப் பார்க்கிறார்கள்.கனடிய அரசியலில் தமிழர் நிலைமை இது.
இன்று அரசியலில் ஆர்வம் காட்டும் சந்தர்பவாதிகள் அடிக்கடி கட்சி மாறுவது தமிழர்களை கோமாளிகளாக்கி கனடிய அரசியலில் கேவலப்படுத்துகிறது.நீதன் சண்முகராசா,ராதிகா சிற்சபேசன் போன்றவர்கள் கட்சி மாறிஆசனத்துக்கு போட்டி போட்டார்கள்.கொள்கை என்றால் என்னவென்று தெரியாது.அரசியல் தலைவர்களோடு படம் எடுப்பது,பிறந்தநாள் விழாவுக்குஅழைப்பது இதுவே கனடிய தமிழர்களின் அரசியல்.
அதைவிட அரைவேக்காட்டு ஊடகங்கள் ஒரே நேரத்தில் நடுநிலைமை என்ற பெயரால் எல்லாக் கட்சிகளுக்கும் கூப்பாடு போடுகிறார்கள்.
தமிழன் என்ற ஒரேகாரணத்துக்காக ஆதரவு.அது எந்தக் கட்சி என்றாலும் பரவாயில்லை.அவன் எவ்வளவு பொறுக்கி,திருடன் என்றாலும் பரவாயில்லை .பத்திரிகைகளும் தமிழர்களும் இதே மனநிலைதான்.
கனடா அரசியலுக்கு தகுதியான சமூகமாக தமிழர்கள் மாறவில்லை.நாடும் மொழியும் மாறினாலும் குணங்கள் மாறவில்லை.இவர்கள் அரசியலில் வெற்றி பெறுவது கனடாவுக்கும் இங்கே வாழும் தமிழர்களுக்கும் பயன்தரப்போவதில்லை.ஆளுக்கு நாலு அடியாட்கள் இருப்பதுபோல தம்மைச் சுற்றி ஒரு கூட்டத்தை தாமே உருவாக்கி தமக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டி கனடிய மக்களை முட்டாள்களாக்கும் இவர்கள் பயன்ற்றவர்கள்.
(Vijaya Baskaran)