(மேனகா மூக்காண்டி)
இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இலங்கையைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கென்ற கலை, கலாசா, பண்பாடு, மற்றும் ஒழுக்கங்கள் போன்ற தனித்துவமாகக் காணப்படுகின்றன. அந்தத் தனித்துவத்தை, காலாகாலத்துக்கு பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. ஒருவரின் நடத்தை, ஒழுக்கம், செயற்பாடுகள், நடை – உடை – பாவனை அனைத்துமே, இவர் இந்த இனத்தைச் சேர்ந்தவர், இந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பறைசாற்றிவிடுகின்றது. எனவே, நாம் ஓரிடத்தில் ஏதேனும் தவறை இழைத்துவிட்டால், அது எமது சமூகத்தையே பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும் என்பதை எந்நேரமும் கருத்திற்கொண்டிருத்தல் வேண்டும்.
திருமணம், குடும்ப வாழ்க்கை என்பனவும், எமக்கான சமூகத்துக்குள்ளும் தனித்துவத்துக்குள்ளும் உள்ளடங்குகின்றன. அதனாலேயே, திருமண பந்தத்தில் இணையும் போது, உற்றார் உறவினர்கள், தெரிந்தவர்கள், அயலவர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து ஆசி பெறுகின்றோம். அந்த ஆசி, நாம் அந்த வாழ்க்கையில் நீண்டகாலம் நிலைத்திருப்பதற்கான ஆசிர்வாதமாகும். ஆனால், எம்மில் எத்தனை பேர், அந்த வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டுசெல்கிறார்கள் என்றால், அது கேள்விக்குறியே. வாழக்கையை ஆரம்பிக்கும் வேகத்திலேயே, அதனை முறித்துக்கொள்கிறார்கள். இதற்கு நல்லதோர் உதாரணம், கொழும்பு மேல் நீதிமன்றக் கட்டடத்தொகுதியில், பொதுவான வழக்குகளுடன் விசாரிக்கப்பட்டு வந்த விவாகரத்து வழக்குகள், தற்போது தனியான நீதிமன்றமொன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதற்குக் காரணம், அந்தளவுக்கு இந்த நாட்டில் விவாகரத்துகள் இடம்பெற்று வருகின்றமையாகும்.
எமது வாழ்க்கை குறிப்பிட்ட சில காலத்துக்கு மாத்திரமானதே. அந்தக் காலத்தை, முழுமையாகவும் ஒழுங்காகவும், சிறப்பாகவும் வாழ வேண்டிய பொறுப்பு எம்மிடமே உள்ளது. எப்படியும் வாழ முடியும் என்பது வாழ்க்கையல்ல. இப்படித்தான் வாழ வேண்டும், எம்மை உதாரணங்கொண்டு, எமது பிள்ளைகளோ அல்லது பிறரோ வாழக்குகூடிய வாழ்க்கையைத் தான் நாம் வாழ வேண்டும் என்பது எனது கருத்து. தப்பான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, எம்மை ஏனையவர்கள் தவறான முன்னுதாரணம் கொள்ளக்கூடாது. இந்த விடயங்கள், எமது தமிழ்ச் சமூகத்துக்கு மாத்திரமல்ல, அனைவருக்கும் பொருந்தும்.
அண்மையில், கொழும்பின் மிகப் பிரபலமான பிரதேசமொன்றில் குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றமை, அனைவருக்கும் நினைவிருக்கலாம். பத்தரமுல்ல, தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கடந்த வியாழக்கிழமை (09) நடைபெற்ற இந்தக் குண்டுவெப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த புத்திகா நீலநயனி (வயது 41) மற்றும் சிறிமதி வல்பொல (வயது 72) ஆகிய இரு பெண்கள் உயிரிழந்ததுடன், அதே குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியொருவரும் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழம்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில், இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்று கூறப்படும் 54 வயதுடைய பிரதீப் துஷார பெரேரா என்ற நபரொருவரும் உயிரிழந்துள்ளார்.
கள்ளக் காதலொன்றுக்கான முயற்சிகளை மேற்கொண்ட ஒருவரே, இந்த குண்டுத் தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இச்சம்பவத்துக்கான உண்மைக் காரணம், தற்போது வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த இராணுவ வீரர், மந்திரவாதியாகச் செயற்பட்டு வந்தவரென்று தெரியவருகிறது. இவராலேயே, குண்டு வீசப்பட்ட நிலையில், இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலைக்குப் பின்னால், ஏற்றுக்கொள்ள முடியாத காதல் கதையொன்று இருப்பதாகவும் அதனாலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குண்டுவீசி தாக்குதலை மேற்கொண்ட 54 வயதுடைய பிரதீப் துஷார பெரேரா என்ற மந்திரவாதி, குண்டுவீச்சில் உயிரிழந்த நீலநயனி என்ற பெண்ணுடன், கடந்த ஒன்றரை வருடங்களாகவே தொடர்புகளைப் பேணி வந்தவர் என்றும் அப்பெண்ணால், தனது குடும்ப வாழ்க்கையை இழந்தவர் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், நான்கு பிள்ளைகளின் தாயான மேற்படி பெண்ணுடன் பேணி வந்த தொடர்பு காரணமாக, அவரது 18 வயதுடைய மகன் தற்கொலை செய்துகொண்ட பின்னர், அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற பிரதீப், முல்லேரியா பிரதேசத்திலுள்ள ஜாதகம் பார்க்கும் இடமொன்றில் மந்திரவாதியாகச் செயற்பட்டு வந்துள்ளதுடன், காணிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள தோஷப் பரிகாரங்களைச் செய்பவராகவும் இருந்து வந்துள்ளார். இது தொடர்பில், அவரால் பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரமொன்றைப் பார்த்த மேற்படி பெண், தன்னுடைய காணியொன்றை விற்பனை செய்வதில் உள்ள பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்காக, அந்த மந்திரவாதியை நாடியுள்ளார். பாலத்துறை பிரதேசத்தில் பரம்பரைச் சொத்துக்களுக்கு சொந்தக்காரியாக உள்ள பணக்காரியான மேற்படி புத்திகா நீலநயனி வல்பொல என்ற பெண், சிங்களவர்களில் அதிசிறப்பம்சம் பெற்ற பங்களா பரம்பரையைச் சேர்ந்தவராவார். கொஸ்வத்தையில் அமைந்துள்ள வல்பொல பங்களா, இப்பெண்ணின் பாட்டனுடையதாகும். இவரது கணவர், மற்றுமொரு பெண்ணுடன் தொடர்புகளைப் பேணிக்கொண்டு, இப்பெண்ணை கைவிட்டுச் சென்றுள்ளார். தனது தோட்டங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, நான்கு பிள்ளைகளையும் வளர்த்து வந்த நீலநயனி, தேவையேற்படின், தனது காணிகளையும் அடிக்கடி விற்பனை செய்து வந்துள்ளார்.
முன்னர் நாம் கூறிய காணிப் பிரச்சினை காரணமாகவே, பிரதீப் என்ற மந்திரவாதியைச் சந்திப்பதற்காக அவர் முதன்முறையாகச் சென்றுள்ளார். பாரிய காணியொன்றான, மேற்படி பிரச்சினைக்குரிய காணி, 9 கோடி ரூபாய் பெறுமதியுடையதாகும். அக்காணியை விற்பனை செய்வதில் பல பிரச்சினைகள் இருப்பதால், தோஷப் பரிகாரம் செய்து, அக்காணியை விற்பனை செய்ய உதவுமாறே, அவர் அந்த மந்திரவாதியிடம் கோரியுள்ளார். அவரது கோரிக்கையை செவிசாய்த்து, மேற்படி காணி தொடர்பில் காணப்பட்ட தோஷங்களைப் போக்கி, அதனை விற்பனை செய்ய உதவிய மந்திரவாதிக்கு, ஒரு மில்லியன் ரூபாயைத் தருவதாக, அப்பெண் உறுதியளித்துள்ளார்.
காணிப் பிரச்சினையை சுமூகமாக முடித்துக்கொண்டப் போதிலும், உறுதியளித்தவாறான ஒரு மில்லியன் ரூபாயை, அந்த மந்திரவாதிக்கு வழங்காத நீலநயனி, தனது கணவரை தன்னிடம் மீண்டும் அழைத்துக்கொள்ளத் தேவையான தோஷப் பரிகாரங்களைச் செய்து உதவுமாறும் அவரிடம் கோரியுள்ளார். இதனையடுத்து, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்து விடயங்களைப் பற்றியும், அவர் அந்த மந்திரவாதியிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தன்னாலான பரிகாரங்களைச் செய்து, கணவரை மீண்டும் அவருடன் இணைத்துவிட நடவடிக்கை எடுப்பதாக அந்த மந்திரவாதியும் உறுதியளித்ததை அடுத்து, அவர்களுக்கிடையில் அடிக்கடி சந்திப்புகள் இடம்பெறத் தொடங்கின.
அதன் பின்னரே, மேற்படி பெண்ணுடன் நெருங்கிப்பழக மந்திரவாதியான பிரதீப், முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அப்பெண்ணிடம் உள்ள சொத்துக்களைப் பார்த்தோ அல்லது உண்மையாகவே அப்பெண்ணைக் காதலித்தோ, அவரை அடையும் முயற்சியில், பிரதீப் ஈடுபட்டுள்ளார். இதற்காக, அப்பெண் கொடுக்க வேண்டிய ஒரு மில்லியன் ரூபாயைக்கூட, சாகும் வரையில் அப்பெண்ணிடம் கேட்கவில்லை என்றே பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேற்படி பிரச்சினைக்குரிய காணியை விற்பனை செய்ததன் பின்னர், வேறு வீடோன்றில் குடியேறிய நீலநயனியைச் சந்திக்க, பிரதீப் என்ற மந்திரவாதி, அடிக்கடி சென்றுவந்துள்ளார். வீட்டில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகளை செய்து முடிக்கவும், அவரே ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அச்சந்தர்ப்பங்களில், அவ்விருவரும் மிக நெருக்கமாக பழகியதாக, அயலவர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், இரு பிள்ளைகளின் தந்தையான பிரதீப், தன்னுடைய குடும்பத்தையும் மறந்த நிலையிலேயே, அப்பெண்ணுடன் தொடர்ந்து பழகியுள்ளார். இவரது இந்த உறவு தொடர்பில், அங்கொடை, ஹிம்புட்டான பிரதேசத்தில் வசித்து வந்த அவரது மனைவியும் பிள்ளைகளும் அறிந்துகொண்டதற்குப் பின்னர், அவரது குடும்பத்தில் பிரச்சினைகளும் வலுத்திருந்தன.
இன்றைக்கு 8 மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில், பிரதீப்பின் 18 வயது மகன், கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். ‘தந்தையின் இந்த கேவலமான நடவடிக்கையை நான் வெறுக்கிறேன். அவரால் எனக்கு தலைகுணிவு ஏற்பட்டுவிட்டது. அவரை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்’ என்று அந்த 18 வயது மகன், கடிதமொன்றையும் எழுதிவைத்துவிட்டே தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
எவ்வாறாயினும், தனது மகனின் மரணத்திலிருந்தும் நல்ல பாடமொன்றைப் படித்துக்கொள்ளாத பிரதீப், தொடர்ந்தும் நீலநயனியுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார். இதனால், கோபமடைந்த அவரது மனைவி, அடிக்கடி சண்டையிட்டுள்ளதுடன், நீலநயனியையும் நேரில் சென்று சந்தித்து, அவரை கடுமையாக திட்டி, கேவலப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, பிரதீப்பை விட்டுவிட்டு, எஞ்சியுள்ள பிள்ளையையும் அழைத்துவிட்டு தனியாகச் சென்றுள்ளார்.
இந்நிலையில், குடும்பமொன்றை சீரழித்த பழி, பாவத்துக்கு ஆளாகிய நீலநயனி, சமூகத்துக்கு வேண்டப்படாதவராகவும் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவராகவுமே பின்னர் காணப்பட்டார். இதற்கு மேலும், பிரதீப்புடன் பழகுவது தவறென்று உணர்ந்த அவர், தன் வீடு தேடி வந்த பிரதீப்பை, ‘இனி இங்கு வர வேண்டாம்’ என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவங்களால் மனக்குழப்பமடைந்த பிரதீப், பித்துப்பிடித்தவர் போல செயற்படத் தொடங்கியுள்ளார். இருந்த தோணியும் இல்லை, கால் வைத்த தோணியும் இல்லாத நிலையில், நட்டாற்றில் தத்தளிக்கலானார். இதனாலேயே, நீலநயனியை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சிக்குச் சென்றுள்ளார். இது தொடர்பில், பிரதீப்பினால் எழுதிவைக்கப்பட்ட நீண்டி கடிதமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ‘நயனி’ என்று அன்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நீலநயனி தொடர்பில், தான் பல எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்ததாகவும், தங்கள் இருவருக்கும் இடையில் இருந்த உறவை, தாங்கள் மட்டுமே அறிவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பவத்தினத்தன்று காலை, பாரிய கத்தியொன்றை எடுத்துக்கொண்டு, நீலநயனியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ள பிரதீப் என்கிற மந்திரவாதி, அந்த நொடியிலேயே நீலநயனியைக் கொலை செய்துவிட்டு, தானும் கழுத்தறுத்துக்கொள்ளவே முயற்சித்துள்ளார். இருப்பினும், நீலநயனி சத்தமிட்டதை தொடர்ந்து, அவரது மாமியாரும் மாமனாரும் ஓடிவந்ததை அடுத்து, நீலநயனி காப்பாற்றப்பட்டுள்ளார். அத்துடன், பிரதீப்பையும், அவர்கள் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இது தொடர்பிலேயே, தனது மாமா, மாமியுடன் தலங்கம பொலிஸ் நிலையத்துக்கச் சென்ற நீலநயனி, தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரதீப்புக்கும் நீலநயனிக்கும் இடையில் உறவொன்று இருந்ததாகவோ, அவ்விருவரும் நீண்ட காலம் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தவர்கள் என்றோ, பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. தன்னைக் கைவிட்டுச் சென்ற கணவரை, தன்னிடம் அழைத்துக்கொள்ளும் முயற்சியில், தோஷப் பரிகாரம் செய்வதற்காகவே, தான் அந்த மந்திரவாதியை நாடியதாகவும், பின்னர், அவரால் தொந்தரவு ஏற்பட்டதை அடுத்து, அவரைச் சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டேன் என்றே, அவர் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு, பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் ஒருவரால், பிரதீப்புக்கு தொலைபேசி அழைப்பொன்று விடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட போது, ‘வருகிறேன், வருகிறேன், அந்தப் பெண்ணைப் பற்றிக் கூற என்னிடமும் பல விடயங்கள் இருக்கின்றன’ என்று கூறிய பிரதீப், அழைப்பை துண்டித்துள்ளார். இந்நிலையிலேயே, நீலநயனியும் அவரது மாமியாரும், பொலிஸ் நிலையத்துக்குச் செல்ல முற்பட்ட போது, அங்கு ஓடிவந்த பிரதீப் என்ற மந்திரவாதி, தான் கையில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டொன்றை, நீலநயனியின் சட்டைக்குள் போட முயற்சி செய்துள்ளார். அதன்போதே, நீலநயனியின் 9 வயது மகளும், அவ்விடத்துக்கு ஓடி வந்துள்ளார். இதனையடுத்து தன்னை சுதாரித்துக்கொண்ட பிரதீப், தன் கையிலிருந்த கைக்குண்டை, அவ்விடத்திலேயே வெடிக்கவைத்துள்ளார். இதனால், நீலநயனியும் அவரது மாமியாரும், பிரதீப்பும் உயிரிழந்ததுடன், 9 வயது சிறுமி காயமடைந்துள்ளார்.
திருமணம் முடித்த பெண்ணொருவர் மீது மோகங்கொண்டதால், தனது குடும்பத்தையும் இழந்து, தன்னையும் அழித்துக்கொள்ளும் நிலைமைக்கே பிரதீப், தள்ளப்பட்டுள்ளார் என்றே கூறவேண்டும். முன்னர் இவர், இராணுவத்தில் இருந்ததால், கைக்குண்டுகளைத் தேடிக்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருந்துள்ளார். இந்தச் சம்பவத்தால், இரு குடும்பங்களின் பிள்ளைகளே இக்கட்டான நிலைமைக்கும், சமூகத்தவர்களுக்கு முகங்கொடுக்க முடியாத நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று கூறிச்சென்ற எமது முன்னோர், ஆசை ஆளைக்கொல்லும், மோகம் குடும்பத்தையே கொல்லும் என்பதை மாத்திரம் சொல்லாமல் விட்டனர். ஒருவனுக்கு ஒருத்தி, என்ற கலாசார பண்புகளின் கீழ் வாழ்பவர்களே இலங்கையர். இதில், சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர்கள் என்ற பேதமில்லை. தொழில்நுட்ப ரீதியில் பல முன்னேற்றங்களைக் கண்ட நாம், எமது கலாசாரம், பண்பாடுகள், ஒழுக்கநெறிகளை, குழிதோண்டி புதைக்கலாகாது. நாம் பின்பற்றும் கலாசாரம், பண்பாடுகளின் நிலைத்திருப்பதாலேயே, இவ்வுலகமும் நீடித்து நிலைத்திருக்கிறது என்பது எமது முன்னோர்களின் கருத்து. அந்தக் கருத்தை நாம் ஏன் பொய்யாக்க வேண்டும். ஒழுக்கமாக வாழ்ந்து, பண்பாடு, கலாசாரத்தைக் காப்போம்.