வாழ்வில் எல்லோருக்கும் மறக்க முடியாத நாள் ஒன்றிருக்கும் ஆனால் ஒரு சிலருக்குத்தான் இப்படியான மறக்க முடியாத நாள் வரும். என் வாழ்வு திசை மாறிய நாள்.மரண பயம் என்பதை அறிந்த நாள். என் மகள் சுனாமியில் இறந்தபின் மகன் பிறப்பில் மகிழ்ச்சியயை சுவாசிக்க தொடங்கிய நாட்கள். மட்டக்களப்பில் நடந்த விழா ஒன்றில் பிரதம அதிதியாய் கலந்து சிறப்பித்து விட்டு வீட்டில் மகனோடு இரவு சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது.வீடு முழுவதும் விருந்தினர்களால் நிறைந்திருந்தது.மூதூரிலிருந்து அகதியாய் வந்த என் உறவினர்கள் நூறுக்கு மேல் தங்கியிருந்தனர்.
என் வீட்டு முன் வாசல் எப்போதுமே திறந்திருக்கும் வெளியில் ஒரு வாகனம் வந்து நிற்கிற சத்தம் .எங்கள் அறை கதவு தட்டப் படுகிறது.கதவைத் திறக்கிறேன் AK47ஏந்திய பலர் என் முன் முன்னணியில் நின்றவன் கையில் ரிவால்வர் .நான் என்ன வேணும் என்கிறேன் .
உங்களிடம் ஒரு விசாரணை
நான் என்ன விசாரணை என பல்கலைக் கழகம் தொடர்பானது என்கிறான் ஒருவன்.
மற்றவன் விசாரணை முடிந்ததும் நாளைக்கு வந்திரலாம் என்று சொல்ல நான் “இரவில் வர முடியாது நாளை காலை நீங்கள் எங்கு வரச் சொல்கிறீர்களோ அங்கு வருகிறேன்” என்று சொல்ல
முன்னின்றவனின் கைத் துப்பாக்கி என் தலையில் “சுட்டுத்தான் தூக்கி செல்வோம் ” என்கிறான்
அப்போதுதான் எனக்கு சூழ்நிலையின் தீவிரம் உறைத்தது.என் மூளை சட்டென பின் பக்கமாக ஓடிவிடலாமா என கேட்க சுதாகரித்துக் கொண்டேன் நான் ஓடுவதால் வீட்டிலிருக்கும் பல உறவினர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம்.அதனை நிராகரித்தது என் மனம்.கதைத்து பாப்பம் என மீண்டும் அவர்களுடன் நான் திரும்பிய போது துப்பாக்கி ரவைகள் என்னை பதம் பார்க்க காத்திருப்பதை உண்ர்ந்தேன்.எல்லா முடிவுகளும் ஒரிரு வினாடிகளுக்குள் நடை பெறக்கூடிய சூழல் அங்கு நிலவியது.
என் மனைவி அழத்தொடங்கினாள் அவளை அதட்டி அடக்கி அழுது கூப்பாடு போட்டால் எல்லோரயும் சுடுவம் என விரட்டினான் ஒருவன்.
வாழைத் தண்டு போல் துவண்டு கிடந்த என் மகனை வந்தவன் காலடியில் வளர்த்தினாள் என் மனைவி மகளின் கதையயை கூறி வேண்டாம் என தடுத்தாள். என்னால் எதுவும் பேச முடியவில்லை.
மீண்டும் கைத்துப்பாக்கி என் கன்னத்தில் முத்தமிடுகிறது வந்தவர்களின் தலைவன் அவனாகத்தான் இருக்க வேண்டும் குழந்தையயை தூக்கு என என் மனைவியயை அதட்டி விட்டு என் கையயை பிடித்து இழுத்தான் நான் இழுக்கவேண்டாம் வருகிறேன் என சொல்லி அவர்கள் பின்னே நான்
மாடிப்படி வழியே இறங்கினேன் வாசலில் வெள்ளை வான். வாகனத்திலும் பலர் AK47 துப்பாக்கிகளுடன.
கோபம் பயம் இயலாமை எல்லாம் கலந்ததாய் நான் வானில் ஏறினேன்.என் இருபக்கத்திலும்.துப்பாக்கி மனிதர்கள் என் கண்கள் கட்டப் பட்டன வீட்டு வாசலிலிருந்து வான் புறப்பட்டது.
என் வாழ்வின் திசை மாறிய நாள் இன்று.
(Balasingam Sugumar)