ஒரு தூரநோக்கு இல்லாத எமது நாட்டின் அரசியல் நிலைமை


அரசியல் பிரமிட்டின் உச்சத்தில் இருந்து வரும் ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் சம்பந்தப்பட்டமை, இலங்கை அரசின் சீர்குலைவுக்கு பங்களிப்புச் செய்துள்ள ஒரு முக்கியமான காரணியாக இருந்து வருவதாகக் கருத முடியும்.
அவர்கள் நாட்டின் பொதுச் சொத்துக்களின் தற்காலிக பொறுப்புதாரர்களாவே இருந்து வருகின்றார்கள். எவ்வாறிருப்பினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்து, போஷித்து வளர்க்க வேண்டிய தமது பொறுப்புணர்வை அலட்சியம் செய்து வருகின்றார்கள்; அதே வேளையில், தமது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொதுச் சொத்துக்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தனிப்பட்ட முறையில் செல்வத்தைச் சேர்த்துக் கொள்ளும் பல்வேறு வழிகளில் ஈடுபடும் சுரண்டல் இயல்பிலான ஒரு கொள்கையையே முன்னெடுத்து வருகின்றார்கள்.
இந்த நடைமுறை காரணமாகவே நாட்டில் பரவலாகவும், கட்டுப்படுத்த முடியாத அளவிலும் ஊழல் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், அரச நிர்வாகம் செயல் திறனற்று, தோல்வியடைந்திருப்பதுடன், சட்டத்தின் ஆட்சியும் வீழ்ச்சியடைந்துள்ளது. நாடு இப்பொழுது பெரும் குழப்ப நிலையிலும், துரதிர்ஷ்டத்திலும் மூழ்கியுள்ளது.
பொது மக்களின் வாக்குகளின் மூலம் நாட்டை ஆட்சி செய்வதற்கென தேர்தெடுக்கப்பட்டிருக்கும் அரசியல்வாதிகள், அரசிலிருந்து நியாயமற்ற விதத்தில் பொருளாதார சலுகைகளை பெற்றுக்கொள்வது சட்டத்திற்கு முரணானதாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அரசாங்கத்தின் சொத்துக்களை கொள்வனவு செய்வது அல்லது தமது சொத்துக்களை அரசாங்கத்திற்கு விற்பனை செய்வது என்பன முற்றிலும் சட்ட விரோதமான செயற்பாடுகளாகும்.
பொது மக்களின் வாக்குகளின் மூலம் தேர்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளின் நடத்தையை கட்டுப்படுத்துவதற்கென அநேகமாக அனைத்து ஜனநாயக நாடுகளிலும் கண்டிப்பான சட்டங்கள் இருந்து வருகின்றன. இலங்கையிலும் கூட 1977ஆம் ஆண்டு வரையில் அத்தகைய ஒரு முறைமை இருந்து வந்தது. இந்தச் சட்டங்கள் இரத்துச் செய்யப்படாது விட்டாலும் கூட, ஜே.ஆர். ஜயவர்தன தனது ஆட்சிக் காலத்தின் போது அத்தகைய சட்டங்கள் அமுல் செய்யப்படுவதனை தடுத்தார்.
1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது காலித் தொகுதியின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட அல்பெர்ட் சில்வா நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் 1979 இல் ஆசனமிழந்தார். அவர் தனது பெயரில் மண்ணெண்ணை விநியோகத்திற்கான அனுமதிப் பத்திரம் ஒன்றை வைத்திருந்த ஒரு காரணத்தினாலேயே தனது ஆசனத்தை இழக்க நேரிட்டது. அதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தனக்குச் சொந்தமான ஒரு கம்பனிக்கு ஊடாக அரசாங்கத்திற்கு மருந்துப் பொருட்களை விற்பனை செய்த காரணத்தினால் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தனது ஆசனத்தை இழந்தார். சட்டங்கள் பொருத்தமான விதத்தில் அமுல் செய்யப்படாது விட்டாலும் கூட, அவை இன்னமும் வலுவில் இருந்து வருகின்றன என்பதனையே இது காட்டுகின்றது.
பொதுமக்கள் மட்டுமன்றி, அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்து வரும் கோட்பாட்டுவாதிகளும் கூட, பொதுமக்களின் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியாது என்ற விடயத்தை தெரிந்து வைத்திருக்கவில்லை. இதற்கான சட்ட ஏற்பாடுகள், சமூக நீதிக்கான இயக்கத்தினால் முன்வைக்கப்பட்ட 19ஆவது திருத்தத்திலோ அல்லது ஜே.வீ.பியினால் உத்தேசிக்கப்பட்டிருக்கும் 20ஆவது திருத்தத்திலோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இதுவே இலங்கையில் ஊழல் இடம்பெறுவதற்கான மூல காரணமாக இருந்து வருகின்றது. பொதுச் சொத்துகளின் காவலர்களாக இருக்க வேண்டிய ஆட்களே பல்வேறு வழிகள் ஊடாக பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்க முன்வரும் சந்தர்ப்பத்தில், நாடு மிக மோசமான விதத்தில் ஊழல்மயமான ஒரு நாடாக மாற்றமடைவதைத் தவிர்க்க முடியாது. ஜனாதிபதி, பிரதமர் அல்லது அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தின் கேள்விப் பத்திரம் ஒன்றிற்கு விலை மனுக்களை முன்வைத்தால், அவர்களுக்கு அது தொடர்பாக என்ன தகைமைகள் இருந்து வந்தாலும் கூட, கேள்வி பத்திரத்தை முன்வைத்த வேறு ஒருவருக்கு அதனை பெறுவதற்கான வாய்ப்பு இருந்து வருதல் வேண்டும்.
அநேகமாக ஜனநாயக ஆட்சி முறை செயற்பட்டு வரும் எல்லா நாடுகளிலும் மக்கள் பிரதிநிதிகளை அத்தகைய கொடுக்கல் வாங்கல்களிலிருந்து விலக்கி வைப்பதற்கான கண்டிப்பான சட்டங்கள் இருந்து வருகின்றன. அரச நிர்வாகத்தின் செயல் திறன் மற்றும் வினைத்திறன் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அத்தியாவசியமான ஒரு நிபந்தனையாக அது கருதப்படுகின்றது.
ஜனநாயக முறையின் கீழ் அத்தகைய குற்றச் செயல்கள் மன்னிக்க முடியாத பாராதூரமான குற்றச் செயல்களாக கருதப்படுவதுடன், அவற்றுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. தவறு செய்தவர்களின் நாடாளுமன்ற ஆசனத்தை பறித்தல், சிவில் உரிமைகளைப் பறித்தல் மற்றும் நியாயமற்ற வழிமுறைகளுக்கு ஊடாக அவர்கள் ஈட்டிக்கொண்டிருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்தல் என்பவற்றையும் இது உள்ளடக்குகின்றது.
அரச காணிகளை கொள்ளையடித்தல்
இலங்கையின் காணிக் கொள்கையின் நீதி நியாயத்தன்மையை நிர்மூலமாக்கிய நபராக ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவை குறிப்பிட முடியும். அவர் ஆட்சி பீடம் ஏறும் வரையில் அந்தக் காணிக் கொள்கை முறையான ஒரு ஒழுங்கில் நாட்டில் பராமரிக்கப்பட்டு வந்தது. தனக்கென சொத்துக்களை சேர்த்துக் கொள்வதில் பேராசை கொண்டிருந்த ஓர் ஆளாக அவரை கருத முடியாது. எனினும், ஆளும் கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்களை குஷிப்படுத்தும் பொருட்டு நியாயமற்ற வழிமுறைகள் ஊடாக அவர்கள் சொத்துக்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அவர் இடமளித்தார். பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் கூச்ச உணர்வு இருந்திருந்தால், ஜே.ஆர். ஜெயவர்தன தானே அந்தப் பாவத்தை செய்ததன் மூலம் ஒரு முன்னுதாரணமாக இருந்து வந்தார்.
ஜனாதிபதி ஜெயவர்தன ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கும் விதத்தில் தனக்குச் சொந்தமான வளம் குன்றிய தென்னந் தோட்டமொன்றை காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிடம் கையளித்து விட்டு, அந்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நன்கு வளமான தென்னந் தோட்டம் ஒன்றை அதற்கு மாற்றீடாக பெற்றுக் கொண்டார். இது இலங்கை வரலாற்றின் மிகப் பெரும் காணிக் கொள்ளையின் ஆரம்பத்தைக் குறித்தது.
இந்தப் பின்னணியில், இந்த வழமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், அந்த நிலையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களுடைய அரசியல் அடிவருடிகளும் பெயரளவு விலைகளில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் வந்த வளமான காணிகளை மட்டுமன்றி, அவற்றில் இருந்த வீடுகள் மற்றும் கட்டடங்கள் என்பவற்றையும் கொள்வனவு செய்யக்கூடிய நிலை தோன்றியிருந்தது. முட்டாள் அரசியல்வாதிகள் தமது பெயர்களில் 50 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்வதுடன் நின்றுவிட, புத்திசாலிகள் அவசர அவசரமாக காளான்கள் போல உருவாக்கப்பட்ட கம்பனிகளின் பெயர்களில் பல நூற்றுக்கணக்கான காணிகளை கொள்வனவு செய்தார்கள். இறுதியில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வச்செழிப்பு மிக்க பெருந்தோட்டச் சொந்தக்காரர்களாகவும், காணி உரிமையாளர்களாகவும் மாறினார்கள்.
விதிமுறை மீறல்கள் இதற்கு மட்டும் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு பண்டங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை வழங்கல் செய்யும் ஒப்பந்தக்காரர்களாகச் செயற்படுவதற்கும் ஜே.ஆர். ஜயவர்தன இடமளித்தார். மரம், மணல் மற்றும் கற்கள் போன்ற பொருட்களின் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கென ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும் கொள்கையை அரசாங்கம் பின்பற்றியது.
ஜனாதிபதி ஜயவர்தன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தச் சட்ட விரோதமான நடைமுறை அவரை அடுத்து வந்த ஜனாதிபதிகளினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், அவர்கள் அந்த நடைமுறைக்கு மேலும் பல புதிய கூறுகளைச் சேர்த்துக் கொண்டார்கள். ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களின் ஆட்சிக்காலத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானக் கடைகளை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அவருடைய ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட இத்தகைய அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை 1000க்கும் மேற்பட்டதாக இருந்து வந்தது. இதனை அடுத்து ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறணைச் சொந்தக்காரர்கள் ஆனார்கள்.
இன்றுவரையில் நிலைத்து நிற்கும் சட்டவிரோதமான இந்த நடைமுறை, அரச ஆட்சியின் இயல்பை திரிபுபடுத்துவதிலும், அரசையே சீர்குலைப்பதிலும் தாக்கத்தை எடுத்து வந்த மிக முக்கியமான காரணியாக இருந்து வந்துள்ளது. இந்த நடைமுறை மக்கள் பிரதிநிதிகளின் ஒழுக்க நடத்தையை முற்றிலுமாக திரிபுபடுத்தியுள்ளது. அது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை சொத்துக்குவிப்புக்கான மிக முக்கியமான, மிக எளிதான ஒரு வழியாக ஆக்கியிருப்பதுடன், பொது மக்களுக்குச் சேவை செய்வதற்குப் பதிலாக, செல்வந்தர் ஆவதற்கான ஒரு வழியாக அதனை ஆக்கியுள்ளது. இதன் காரணமாக ஜனாதிபதிகளும் கூட தமது பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொதுச் சொத்துக்களை கொள்ளையிடுபவர்களாக மாறியிருக்கின்றார்கள். எனவே, இது சட்டத்தின் இறைமையை பலவீனப்படுத்தியிருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது. இது தேர்தல் முறையை ஊழல் மிக்கதாக மாற்றியமைத்திருப்பதுடன், அரசியல் கட்சிகளின் கட்டமைப்பையும் ஊழல் மிக்கதாக ஆக்கியுள்ளது.
இந்தச் சீரழிவை அநேகமாக அனைத்துத் துறைகளிலும் தெளிவாக பார்க்க முடிகின்றது. நாடாளுமன்றம், நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் நாடாளுமன்ற கமிட்டி முறை என்பவற்றில் நிலவி வரும் ஒழுக்கமின்மையும் இதில் அடங்குகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் நியாயமற்ற வழிமுறைகள் ஊடாக இவ்விதம் பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தமது உத்தியோகபூர்வமான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. இவர்களில் பெரும்பாலானவர்களின் முக்கிய நோக்கம் சொத்துச் சேர்ப்பதாகவே உள்ளது.
ஒப்பந்ததாரர்கள், பொருள் வழங்குநர்கள், மரம், மணல், மதுபானம் என்பவற்றுக்கான உரிமம் வைத்திருப்பவர்கள் போன்ற பல்வேறு வழிகளில் உண்மையில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்? அவர்களில் எத்தனை பேர் அரச காணிகளை கொள்வனவு செய்துள்ளார்கள்? இந்த எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்வாக இருந்து வரும் நிலை காணப்பட்டால், அது நாடாமன்றத்தை ஒரு சட்டவிரோதமான நிறுவனமாக ஆக்கமாட்டாதா? அதாவது, நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு சட்ட ரீதியான தகைமையை இழந்திருக்கும் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை நாடாளுமன்றம் கொண்டுள்ளது என்ற காரணமே இதற்குப் போதுமானதாகும்.
இந்த விடயம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்பொழுது அவ்விதம் வியாபார நடவடிக்கைகளில் ஈபடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவது சபாநாயகரின் பொறுப்பாக இருந்து வரவில்லையா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்விதம் அரசாங்கத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது நாட்டின் சட்டத்திற்கு முரணானதாக இருந்து வருவதுடன், அவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபடுவதனை சட்டம் தடை செய்கின்றது. அதாவது, நாடாளுமன்றத்தின் புனிதம் மற்றும் சட்ட ரீதியான இயல்பு என்பவற்றை பராமரிக்கும் பொருட்டு இதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, மக்களின் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் செயற்பாடு இலங்கையில் பரவலாக நிலவி வரும் ஊழலுக்கான மூல காரணமாக இருந்து வருகின்றது எனக் கருத முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் இயற்றும் சட்டங்களை தாமே பகிரங்கமாக மீறும் சந்தர்ப்பங்களில் நாடு இவ்விதம் அதள பாதாளத்தில் வீழ்ந்திருப்பது குறித்து நாங்கள் எவ்வாறு ஆச்சரியப்பட முடியும்? நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஊழல் மிக்கவர்களாக ஆகியிருப்பதுடன், அவர்களுடைய மீறல்களுக்கெதிராக சட்டம் அமுல் செய்யப்படவில்லை.
நாட்டின் சட்டம்?
இந்தத் தருணத்தில் இலங்கைக்கு ஒரு ஜனாதிபதித் தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ தேவைப்படவில்லை. மாறாக, மிகவும் கொடிய சுரண்டல் இயல்பிலான இந்த அமைப்பில் ஆழமான கட்டமைப்பு ரீதியான ஒரு மாற்றத்தை எடுத்து வருவதை நோக்கமாகக் கொண்ட விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்றே எமக்கு இப்பொழுது தேவைப்படுகின்றது. இந்தச் சுரண்டல் இயல்பிலான கட்டமைப்பே நாட்டின் சீரழிவுக்கு வழிகோலியுள்ளது.
இது தொடர்பாக நாங்கள் பின்பற்றக் கூடிய மிகச் சிறந்த அணுகுமுறை, பங்கேற்பு அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கு அல்லது அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையுடன் கூடிய மக்களின் அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கென கதவுகளை திறந்து விடுவதாகும். ஆழமான நிலைமாற்றம் ஒன்றிற்கும், நாட்டின் தற்போதைய கடுந்துயர நிலையிலிருந்து மீண்டு வருவதற்கும் எமக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு மாற்று வழியாக அதுவே இருந்து வருகின்றது. இந்த நோக்கத்தை சாதித்துக் கொள்ளும் பொருட்டு மக்களும், மக்கள் அமைப்புக்களும் வழுவான விதத்தில் குரல் எழுப்பவேண்டிய தருணம் இப்பொழுது வந்துள்ளது.

விக்டர் ஐவன் எழுதி Overcoming Wretchedness என்ற தலைப்பில் டெய்லி எவ்டியில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.மாற்றம் இணையதளத்தில் இருந்து…