நாங்கள் எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்’ என்ற எண்ணம் கொண்டவர்கள் மத்தியில், சுயவிமர்சனம் செய்துகொள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் தா.பாண்டியன். அவரது சமீபத்திய நூல்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அந்த விமர்சனம், இப்போது தனிநூலாகவே விரிந்திருக்கிறது. ‘பொதுவுடைமையரின் வருங்காலம்’ புத்தகத்தை இந்திய கம்யூனிஸ இயக்கம் பற்றிய, அதன் தவறுகளிலிருந்து கிடைத்த பாடங்கள் பற்றிய ஓர் ஆய்வு நூலாகவே கருதலாம். கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு மிகப் பெரிய விவாதத்தை முன்னெடுத்து, தவறுகளைச் சரிசெய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட நூல் இது.
‘கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வலுவிழந்தது ஏன்?’, ‘முதலாளித்துவமும் ஆன்மிகமும் புது பலம் பெற்றது எப்படி?’, ‘கம்யூனிஸ்ட் தலைவர்கள் தியாகிகளாகவும், எளிய வாழ்க்கை வாழ்பவர்களாக இருந்தும் வெற்றிபெறாததற்குக் காரணம் அவர்களா? முளைக்காத விதையாகிப்போன தத்துவமா?’, ‘நாட்டின் விடுதலைக்காக மிகத் தீவிரமாகப் போராடி தியாகம் செய்த கம்யூனிஸ்ட் கட்சி தேசபக்தியுள்ள கட்சியாகக் கருதப்படாமல், கடும் விமர்சனத்துக்கு ஆளாவது ஏன்?’, ‘இன்று பெரியாரையும் அம்பேத்கரையும் போற்றிப் புகழும் கம்யூனிஸ்ட்கள் அவர்கள் களத்தில் நின்ற காலத்தில் சேர்ந்து போராடாதது ஏன்?’, ‘கட்சி நிறுவப்பட்ட காலத்திலிருந்து அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பல தலைவர்களை அவர்களின் முதுமைக் காலங்களில் ஒதுக்கும் கசப்பான செய்திகள் தொடர்வதேன்?’
‘நவீன தொழிற்சாலைகளில் இயந்திர சாதன கருவிகளைக் கையாளுவதால், மூட நம்பிக்கை கள் மறையும், மத நம்பிக்கைகள் குறையும், சாதி வேறுபாடுகளும் இல்லாது போய்விடும் என்று கம்யூனிஸ்ட் கள் கூறியது ஏதாவது நடந்திருக்கிறதா?’, ‘இந்தியாவை ஆளுகிற பொறுப்பை கம்யூனிஸ்ட்களிடம் கொடுத்தால், மற்ற அரசியல் கட்சிகள் இயங்க அனுமதிப்பீர்களா?’, ‘ஆட்சிக்கு வரும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் புதிய ஆளும் வர்க்கமாக மாறாதிருக்க என்ன செய்யப் போகிறீர்கள்?’, ‘கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான நாடுகள் பிற நாடுகளை ஆக்கிரமிக்காது என்ற சூத்திரம் என்னானது?’ என்று நிறைய கேள்விகளுக்குப் பதில் தர முயன்றிருக்கிறார் தா.பாண்டியன்.
காரணம் என்ன?
“கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல்களில் சரிவைக் கண்டிருக்கின்றன. தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர் முதலீடு போடாத முதலாளிகளாகியுள்ளனர்” என்பதை ஒப்புக்கொள்ளும் அவர், கம்யூனிஸ்ட் இயக்கம் ஏன் போதிய அளவுக்கு வளரவில்லை என்பதற்குச் சொல்லியுள்ள காரணம் கவனிக்கத் தக்கது. “எந்த ஒரு அரசியல் கட்சி யும் தொடங்கப்பட்டவுடனேயே தடை செய்யப்பட்டது இல்லை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர. இந்திய அளவில் மும்முறையும், சில மாநிலங்களில் ஐந்து முறையும் தடை செய்யப்பட்டது இந்தக் கட்சி” என்கிறார்.
கம்யூனிஸ்ட் துறவி என்று வர்ணிக்கப்பட்ட, திரிபுரா முதல்வராக இருந்த நிருபன் சக்கரவர்த்தி “மேற்கு வங்க அரசு பற்றி மக்கள் குறை கூறுவதைக் கேட்டு வருத்தப்படுகிறேன்” என்று பகிரங்கமாகப் பேசிய குற்றத்துக்காகக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டது கொடுமை. இறப்பதற்கு முந்தைய நாள்தான், அந்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்துசெய்தார்கள். உறுப்பினர் அட்டையை அவர் உடல் மீது வைத்துவிட்டுத் திரும்பினார்கள் என்ற தா.பாண்டி யன் எழுத்துகள் கண்ணீரை வரவழைக்கிறது.
கூடிப் பேச வேண்டும்!
கட்சியின் அமைப்பு அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் எவ்வாறு திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனைகளையும் முன்வைக்கிறார். “வகுப்புவாதக் கும்பல் கோட்டையில் கொடிகட்டி ஆள வேண்டிய நிலை வந்த பின்னரும், உழைக்கும் மக்களின் கட்சி உடைபட்டு நிற்பது சரிதானா? தேசியக் கட்சி என்ற நிலை நீடிக்க வேண்டுமெனில், கூடிப் பேசி ஒன்றுபட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகக் கட்சியாக இயங்க வேண்டும். தலைமைக் குழுக்கள் மட்டும் தனியாகக் கூடி விவாதிக்கலாம். ஆனால், மாநாடுகள் மக்களும் பார்க்கும், கேட்கும் வகையில் பகிரங்கமாக நடத்தப்பட வேண்டும். எந்த நாடாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தால் பல கருத்துகளுடைய கட்சிகள், அமைப்புகள், கருத்தை வெளியிடும் பத்திரிகைகள் இயங்க அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்றும் சொல்கிறார்.
கட்சி குறித்த சுயவிமர்சனம் பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், தா.பாண்டியன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் அவர் பதில் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்தது, அப்படி ஒரு புத்தகத்தை எழுதுவார் என்று நம்புவோம்.
தா.பாண்டியன் முன்னுரையில் சொல்லியிருப்பதுபோல, இந்நூல் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டும். போகிற பாதையில் ஏற்படும் சறுக்கல்களை மூத்த தலைவர்கள் உரிய காலத்தில் சுட்டிக்காட்டியிருந்தால், சரிவு தடுக்கப்பட்டிருக்கலாம்