ஒரு மாதத்திற்குள் முழுமையான மாற்றம் சாத்தியமா?

ஆனால், அனுரவுக்கு எதிராக வாக்களித்த மக்களிடையேயும் அவர்  பற்றிய அபரிமிதமான எதிர்பார்ப்புகள் உள்ளன என்பது முக்கியமானது. 

ஒரு கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவானது இலங்கையின் மேட்டுக்குடி சார்ந்த அல்லது ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட நிலையிலிருந்த அரசியலில் முக்கியமான மாற்றம் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். 

அதுவும் கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் ஊழல், மோசடி, அநியாயமிழைப்பு, மனித உரிமை மீறல்கள், ஆளுகை முறைகேடுகள் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மிகத் தெளிவாக விமர்சித்து வந்தவர் அனுரகுமார திசாநாயக்க. 

அவரது உரைகளும் தலைமைத்துவமுமே ஜே.வி.பி. பற்றிய கடந்தகால பார்வையை மாற்றியமைக்க முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். 

எனவே, இப்பேர்ப்பட்ட ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவானதும் எல்லா மக்களிடையேயும் ‘அவர் இதனைச் செய்வார், இவர்களைக் கைது செய்வார், பொருட்களின் விலைகளைக் குறைப்பார், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவார், நல்லாட்சியை நிறுவுவார், இனவாதத்தைத் துடைத்தெறிவார்’ எனப் பலவிதமான எதிர்பார்ப்புக்கள் மக்களுக்கு ஏற்படுவது இயல்பானதே. 

அந்த வகையில், தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்குறுதியளித்த அந்த மாற்றத்தை ஏன் இன்னும் ஜனாதிபதி ஏற்படுத்தவில்லை? என்று எதிரணிகள் இப்போது கேள்வி கேட்கின்றன. ஏன் கள்வர்களைக் கைது செய்யவில்லை, கொள்ளையடித்த பணத்தைப் பறிமுதல் செய்யவில்லை என்று அப்படிப்பட்டவர்களும் கேட்கின்றார்கள். மக்களுக்கு ஏன் மேலும் நிவாரணங்களை அறிவிக்கவில்லை என்று மக்கள் அங்கலாய்ப்பதையும் காணமுடியாது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் சஜித்தையும், ரணிலையும் ஆதரித்தனர். தமிழ் கட்சிகள் பல கூறுகளாகப் பிரிந்தன. ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரும் நிறுத்தப்பட்டார். இப்போது, அதிகாரத்திற்கு வந்த உடனேயே அனுர அரசு இனப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் முஸ்லிம்களை அரவணைக்க வேண்டும் என்றும் சிறுபான்மை அரசியல்வாதிகள் கோருவதைக் காண முடிகின்றது. 

சிறுபான்மைக் கட்சிகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக அனுரகுமாரவை ஆதரிக்கவில்லை என்றாலும், கணிசமான முஸ்லிம்களும் தமிழர்களும் அனுரவுக்கு வாக்களித்திருந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. எனவே, எல்லோருக்குமான ஜனாதிபதி என்ற வகையில், சிறுபான்மை மக்களின் நலன்களையும் உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு அவருக்கு உள்ளது. 

ஆனால், எல்லோரும் சேர்ந்து நாட்டின் அன்றாட நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு முன்வராமல், அதற்கு ஒத்துழைப்பு வழங்காமல்…. வெளியில் நின்றுகொண்டு குறுகிய காலத்திற்குள் பெரிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

எது எவ்வாறிருப்பினும், ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்குப் பொறுப்புள்ளது. எதிரணி அரசியல்வாதிகளும் இந்த நாட்டை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றவர்களும் சொல்கின்ற கதைகளை, விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால், மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள், பெரிய அரசியல் தலைவர்களை எதிர்த்துக் கொண்டு, அனுரகுமார திசாநாயக்கவை வெற்றி பெறச் செய்வதற்கு மக்கள் எடுத்த முடிவு என்பது சாதாரணமானதல்ல. எனவே அதற்கான பிரதிபலனை அரசாங்கம் வழங்கியாக வேண்டியுள்ளது. 

ஒரே இரவிலோ அல்லது ஒரு மாதத்திலோ எல்லா விடயப் பரப்புக்களிலும் மக்கள் நினைக்கின்ற மாற்றத்தை அனுரவினால் கொண்டு வந்து விட முடியாது என்ற யதார்த்தம் இங்கு கவனிப்பிற்குரியது. 

‘சொல்வது இலகுவானது, ஆனால், அதனைச் செயலில் காட்டுவதே சிரமமானது என்று கூறுவார்கள். வெளியிலிருந்து கொண்டு என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆனால், அந்தப் பதவியில், அந்தக் கதிரையில் உட்கார்ந்தால்தான் அங்குள்ள உண்மையான சாதக, பாதக நிலைகள் தெரியும். இதற்கு ஜனாதிபதியோ அமைச்சரவையோ விதிவிலக்காக இருக்க முடியாது. 

நாட்டின் ‘சிஸ்டம்’ எல்லா மட்டங்களிலும் பழுதடைந்துள்ளது. கள்வர்கள் அரசியலில் மட்டுமன்றி, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் உலவுகின்றனர். எனவே, நல்ல மாற்றம் ஒன்று வருகின்ற போது, அவ்வாறானவர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள். ஆனால், நேர்மையாக பணியாற்றுவதற்கான வாய்ப்புக்காகக் காத்திருந்த அதிகாரிகள், அரசியல்வாதிகளால் இந்தளவுக்கேனும் நாட்டை இயக்க முடிந்துள்ளது என்றுதான் கூறலாம். 

இதற்கிடையில், பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் விதிமுறைகளின் படி, சில சலுகைகளை, மானியங்களை அரசாங்கம் அறிவிக்க முடியாது. நூறு ரூபாவினால் பெற்றோல் விலையைக் குறைக்க நினைத்தாலும், விலை சூத்திரத்திற்கு அப்பால் செல்ல தேர்தல்கள் ஆணைக்குழு விடாது.

உண்மையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று ஒரு மாதத்தின் பின்னர் பொதுத் தேர்தலை அறிவித்திருந்தால், அதற்கிடையில் சில மானியங்களை அறிவித்து மக்களது எதிர்பார்ப்பைக் கொஞ்சம் நிவர்த்தி செய்திருக்கலாம். ஆனால், உடனடியாக அடுத்த தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சில விடயங்கள் சாத்தியமற்றுப் போயுள்ளன. 

அனுரகுமாரவின் கையில் அலாவுதீனின் அற்புத விளக்கும் இல்லை, அவர் ஒரு மாயாஜாலக் காரனும் இல்லை. ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போதே, அவருக்கு இது தெட்டத் தெளிவாகப் புரிந்திருந்தது. தனது கன்னி உரையிலேயே தான் ஒரு சாதாரண மனிதனே என்றும் மாய வித்தை காட்டுபவனல்ல என்றும் கூறியிருந்தமை இவ்விடத்தில் நினைவு கொள்ளத்தக்கது. 

இத்தனைக்கும் நடுவில் மக்களுக்கு சில சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. சில வழக்குகள், பல கோப்புகள் மீளத் திறக்கப்பட்டுள்ளன.

சட்டப்படி செய்யக் கூடிய காரியங்களைச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை வெளிப்படையானது. எனவே, அனுர அரசிற்கு செய்து காட்டுவதற்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வழங்க வேண்டும். 

ஜே.வி.பியின் கடந்தகால சரித்திரங்களும், அது எவ்வாறு தன்னை முன்னிறுத்தியது என்பதும், அனுரகுமார திசாநாயக்க தலைவரான பிறகுதான் சிறுபான்மை மக்களும் அதனை நம்பத் தொடங்கினார்கள் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். 

இருப்பினும், அடிப்படை ஜே.வி.பி. சிந்தனையாளர்கள் சிலர் இன்னும் உள்ளுக்குள் இருந்து கொண்டு அரசின் மீதான நல்லபிப்பிராயத்தை குழப்பிக் கொண்டிருக்கின்றார்களா என்ற நியாயமான சந்தேகத்தை ரில்வின் சில்வாவின் கருத்து ஏற்படுத்தியுள்ளது.  அப்படியென்றால், ஜனாதிபதிக்கு அதுவும் ஒரு சவாலே. 

ஜனாதிபதித் தேர்தல் களமும். பொதுத் தேர்தலும் வேறு விதமானவை. ஜனாதிபதித் தேர்தலில் அனுரவா, சஜித்தா, ரணிலா என்றுதான் சிந்தித்தார்கள். ஆனால், பொதுத் தேர்தலில் நமது சமூகத்திற்கு, ஊருக்கு ஒரு நல்ல எம்.பி. வேண்டுமென்று மக்கள் சிந்திப்பார்களே தவிர அனுர ஜனாதிபதியாகிவிட்டார் என்பதற்கு அவரது கட்சியின் வேட்பாளர்களுக்கே வாக்களிப்பார்கள் என்று கருத முடியாது. 

எனவே, அரசாங்கம் மக்களுக்கு எதனையாவது செய்து காண்பிக்க வேண்டிய தேவை உள்ளது. தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக, அல்லது மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வதாக ஒரு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய இக்கட்டான நிலையில் அனுர அரசாங்கம் இருக்கின்றது. 

அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதி ஆவதும், அதனால் ஹரிணி அமரசூரிய பிரதமர் ஆவதும், விஜித்த ஹேரத் அமைச்சராவதும் வேறு விடயம். ஆனால், இந்த வெற்றி அலை ஓய்வதற்கிடையில் என்.பி.பியின் வேட்பாளர்களில் 113 பேரை வெல்ல வைத்து ஆட்சியமைப்பது என்பது அதைவிடச் சிரமமானது.

இதனை அரசாங்கம் நன்கறியும். மக்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றினால் மட்டுமே பொதுத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதையும் ஜனாதிபதி அனுர ஆழமாக அறிவார். ஆனால், எல்லாவற்றையும் உடனேயே குறுகிய காலத்திற்குள் செய்துவிட முடியாது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் சட்ட ரீதியான தடைகளும் உள்ளன 

எது எவ்வாறிருப்பினும், அனுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமை பல மாறுதல்களைக் கொண்டு வந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. மக்களது எதிர்பார்ப்புக்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லi என்றாலும், பல ஊழல்வாதிகளுக்குப் பயம் ஏற்பட்டுள்ளது. கணிசமான அரசியல்வாதிகள் தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளனர். சிலர் நாட்டிலேயே இல்லை. 

அதிகாரிகள் தொடக்கம் சாதாரண அரச ஊழியர்கள் வரை பலருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டல், நீதமான ஆட்சி பற்றிய நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. இதற்கிடையில் நடைமுறைச் சாத்தியமான சில சலுகைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. 

அனுரகுமார அரசாங்கம் சொன்னதை எல்லாம் செய்து காட்டும் என்று இந்தப் பத்தி கூற வரவில்லை. மாறாக, இவர்கள் உண்மையில் செயல் வீரர்களா? சொல் வீரர்களா? என்ற முடிவுக்கு வர மக்கள் இன்னும் கொஞ்சக் காலம் பொறுத்திருக்க வேண்டும் என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.  

Leave a Reply