பிரதான எதிர்க்கட்சியாக வர முடியாத காங்கிரஸ் கட்சி, அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வேறு சில மாநிலக் கட்சிகளும் பங்கேற்கவில்லை. தமிழகத்திலிருந்து பங்கேற்கச் சென்ற அ.தி.மு.க அமைச்சர் சி.வி. சண்முகத்துக்குக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. கட்சித் தலைவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டத்தில், மாநில அமைச்சர் பங்கேற்க, நாடாளுமன்ற விவகாரத்துறை அனுமதி மறுத்து விட்டது. ஆகவே, “ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை” என்று, அ.தி.மு.க தரப்பில், தங்கள் எதிர்ப்புக் கருத்து அடங்கிய கடிதத்தைக் கையளித்து விட்டுத் திரும்பி விட்டார்கள்.
தி.மு.கவோ, காங்கிரஸ் கட்சியோடு இணைந்து, இக்கூட்டத்தைப் புறக்கணித்து விட்டது. மொத்தமாக அழைக்கப்பட்ட 41 அரசியல் கட்சிகளில், 21 பங்கேற்றுத் தங்களது கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டியளித்தார். பிரதமர் நரேந்திர மோடியோ, “கட்சிகள் தெரிவித்த கருத்துக் குறித்து விவாதித்து, முடிவு எடுக்க ஒரு குழு அமைக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.
வெவ்வேறு காலகட்டங்களில், வருடம் முழுவதும் ஏதாவது ஒரு தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருவதால், நடத்தை விதிகள் அமுலில் இருக்கிறது. அதனால், அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது, ‘ஓரே நாடு; ஓரே தேர்தல்’ முழக்கத்தின் நோக்கம். இது பல கட்சிகளுக்கும் உடன்பாடான முழக்கம்தான்.
ஏனென்றால், இதற்கு முழு உருவம் கொடுத்தது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம்தான். அப்போது, ஒரு நாடாளுமன்ற நிலைக்குழு, சுதர்சனன் நாச்சியப்பன் என்ற காங்கிரஸ் எம்.பி தலைமையில் அமைக்கப்பட்டு, அதில் பல்வேறு கட்சி எம்.பிக்களும் இடம் பெற்றார்கள். அந்தக்குழு, பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, 17.12.2015இல் இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்தது.
நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ‘சுதர்சனன் நாச்சியப்பன் குழு’ அளித்த அந்த அறிக்கையில், “ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்; திறந்த மனதுடன் இது குறித்து விவாதித்து, அரசியல் கட்சிகள் மத்தியில் தேசிய அளவில் கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும்” என்று கூறி, “ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவது, 2016இல் நடைபெறாமல் போகலாம். ஏன், அடுத்த பத்தாண்டுகளில் கூட நடக்காமல் போகலாம். ஆனால், அடிக்கடி தேர்தல் நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டியது மிக முக்கியம்” என்ற அளவில் நிறுத்திக் கொண்டது.
அதாவது, ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும்” என்ற பூனைக்கு மணி கட்டியது ‘சுதர்சனன் நாச்சியப்பன் குழு’ அறிக்கைதான். அதற்கு முன்பு, சட்ட ஆணைக்குழுவின் 170ஆவது அறிக்கையில், இந்தப் பரிந்துரை இடம்பெற்றிருந்தாலும், நாடாளுமன்றக் குழு ஒன்று விரிவாக விவாதித்துக் கொடுத்த முதல் அறிக்கை இதுதான். ஆனால், அப்படித் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது.
இதைத்தொடர்ந்து, நிதி அயோக், தனியாக ஓர் அறிக்கையை அளித்து, “ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நடத்துவது சாத்தியமே” என்று குறிப்பிட்டது. “அந்தத் தேர்தலை முதற்கட்டமாகவும் அடுத்த கட்டமாகவும் எத்தனை எத்தனை மாநிலங்களில் நடத்த வேண்டும்” என்பதையும் விரிவாக விளக்கியது.
குறிப்பாக, 2019 நாடாளுமன்ற தேர்தலுடனேயே முதல் கட்டமாக 14 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களை சேர்த்து நடத்தி விடலாம் என்று பரிந்துரைத்தது. ஆனால், அந்த அறிக்கையும் “அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை வர வேண்டும். அப்போதுதான், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்த முடியும்” என்றும் முடிச்சுப் போட்டது.
இந்நிலையில், இந்த அரசியல் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள் குறித்து ஆலோசனை வழங்க, இந்திய சட்ட ஆணைக்குழு முன் வந்தது. பி.எஸ் சவுகான் தலைமையிலான சட்ட ஆணைக்குழு ஏப்ரல், ஓகஸ்ட் 2018இல் அரசியல் கட்சிகளுடன் பரந்து விரிந்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது; கருத்துகளைக் கேட்டது. இறுதியில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஒரு வரைவு அறிக்கையை, டிசெம்பர் 2018இல் வெளியிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மீண்டும் கருத்துக் கேட்டது. இந்த அறிக்கையிலும், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டும்; ஆனால், அரசமைப்பைத் திருத்தாமல் இதற்கு வழியில்லை” என்றே பரிந்துரை செய்திருந்தது. இந்த வரைவு அறிக்கைக்குப் பிறகு, தனது இறுதிப் பரிந்துரை கொண்ட அறிக்கையை, இந்திய சட்ட ஆணைக்குழு இன்னும் தாக்கல் செய்யவில்லை.
இந்தச் சூழலில் ஆட்சிக்கு இரண்டாவது முறையாக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “ஒரே நாடு; ஒரே தேர்தல்” என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளார். 20.6.2019 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “ஒரே நேரத்தில் தேர்தல், இந்த நேரத்தின் தேவை. அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரே நேரத்தில் தேர்தல் என்றால், முதலில் அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அதற்குத் தேவையான பெரும்பான்மை இராஜ்ய சபையில் பா.ஜ.கவுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆகவேதான், இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்தொற்றுமை அடிப்படையில் இந்த நோக்கத்தை அடைந்து விட வேண்டும் என்று பிரதமர் கருதுகிறார். குறிப்பாக, எதிர்க்கட்சிகள் நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வியடைந்து, பா.ஜ.கவுக்கு அமோக வெற்றியைக் கொடுத்திருக்கின்ற நேரத்தில், இந்த ஆலோசனையை முதலிலேயே தொடக்கியிருக்கிறார். “இப்போது எதிர்த்தால் கெட்ட பெயர் வரும்” என்று எதிர்க்கட்சிகள் நினைக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஆளும் கட்சி முயற்சி செய்துள்ளது.
“ஒரே நேரத்தில் தேர்தல்” என்ற முழக்கத்தை, இப்போது பா.ஜ.க “ஒரே நாடு; ஒரே தேர்தல்” என்று மாற்றி முழங்குவதால், காங்கிரஸும் மற்ற கட்சிகளும் எதிர்க்கின்றன. ஆனாலும், அரசாங்கம் இதில் முனைப்புடன் இருக்கிறது.
“இதுகுறித்து விவாதிக்க, ஒரு குழு அமைக்கப்படும்” என்று பிரதமரே அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் அறிவித்துள்ளார். ஒரு பக்கம் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய குழு, இன்னொரு பக்கம் இந்திய சட்ட ஆணைக்குழுவின் வரைவு அறிக்கை. இப்படி “ஒரே நேரத்தில் தேர்தல்” என்ற கோட்பாடு கொடிகட்டிப் பறக்கிறது.
மாநிலக் கட்சிகளைப் பொறுத்தமட்டில், இதுமாதிரி ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று கூச்சலிடுகின்றன. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இன்றைக்கு பா.ஜ.க பெற்றுள்ள வெற்றி, கடந்த ஐந்தாண்டுகளில் செய்த சாதனைகளுக்கான வெற்றியாக எந்தக் கட்சியும் பார்க்கவில்லை. இந்த வெற்றி, நரேந்திர மோடி மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றே எண்ணுகின்றன.
அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் நடப்பது போல், நரேந்திர மோடியை மட்டுமே முன்னிறுத்தி, 2019 நாடாளுமன்றத் தேர்தல், ‘ஜனாதிபதித் தேர்தல்’ பாணியில் நடைபெற்றது. அதில், வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளார் மோடி. ஆகவே, பா.ஜ.கவில் உள்ள தனியொரு தலைவரான மோடி, அகில இந்திய அளவில் இந்தியாவின் தலைவராக உருவாகியிருக்கிறார் என்று நினைக்கும் மாநிலக் கட்சிகள், அவருக்கு ஏற்ற மாற்றுத் தலைவர் கண்ணுக்கு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
ஆகவே, ஒரே நேரத்தில் தேர்தல் என்று நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் வந்தால், பிரதமராக இருக்கும் மோடியின் செல்வாக்கில் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றிக்கும், ஆட்சிக்கும் வித்திடுமோ என்று மாநிலக் கட்சிகள் அஞ்சுகின்றன.
ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் இருந்த போது, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. மோடி தலைமையிலான பா.ஜ.கவுக்கு அப்படியொரு வெற்றி, அனைத்து மாநிலங்களிலும் கிடைத்து விடுமோ என்ற கவலையின் வெளிப்பாடே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு.
ஆனால், விரைவில் இராஜ்ய சபையிலும் பெரும்பான்மைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் பா.ஜ.க, இந்த முழக்கத்தை நிறைவேற்றியே தீருவோம் என்பதில் உறுதியாக இருக்கிறது. “ஒரே நாடு; ஒரே தேர்தல்” இந்தியாவில் வர, வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.