ஈராக்கை 24 வருடங்கள் ஆண்ட சதாம் ஹுசைன் தூக்கிலிடப் பட்ட நேரத்திலும், லிபியாவை 42 வருடங்கள் கடாபி கொல்லப் பட்ட நேரத்திலும், இதே ஊடகங்கள் மூச்சுக்கு முன்னூறு தடவை சர்வாதிகாரி என்று கூறின. அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, இறந்த பின்னரும் இரக்கமில்லாது தூற்றப் பட்டனர். ஆனால் ஓமானில் 50 வருடங்கள் கொடுங்கோல் ஆட்சி நடத்திய கபூஸ் அவர்கள் கண்களுக்கு சர்வாதிகாரியாக தெரியாதது அதிசயமே.
எழுபதுகளின் தொடக்கத்தில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியிருந்த ஓமானை ஆண்ட சுல்த்தான் தைமூர், அரச மாளிகையில் நடந்த ஒரு திடீர் சதிப்புரட்சியின் மூலம் பதவியிறக்கப் பட்டார். அந்த சதிப்புரட்சிக்கு காரணம் வேறு யாரும் அல்ல. சுல்த்தானின் சொந்த மகன் கபூஸ், மற்றும் பிரிட்டிஷ் படையினர் தான். தனது தந்தையை தனயனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய அவசியம் என்ன? பொதுவாக சொல்லப் படும் காரணம் அவரது தந்தை ஒரு விடாப்பிடியான பழமைவாதியாக இருந்தார் என்பதே. ஆனால், உண்மையான காரணத்தை எந்த ஊடகமும் தெரிவிக்கப் போவதில்லை.
எழுபதுகளின் தொடக்கத்தில் ஓமான் ஒரு கம்யூனிசப் புரட்சியின் விளிம்பில் நின்றது. புரட்சி வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய தென்பட்டன. குறிப்பாக நாட்டின் தெற்குப் பிராந்தியத்தின் பெரும் பகுதி ஆயுதமேந்திய கம்யூனிசப் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களுக்கு அயல் நாடான சோஷலிச தெற்கு யேமனில் இருந்து உதவி கிடைத்துக் கொண்டிருந்தது.
முன்பிருந்த சுல்த்தான் ஆட்சிக் காலத்தில் நாடு அபிவிருத்தி அடையவில்லை. சாலைகள் இருக்கவில்லை. பாடசாலைகள் கட்டப் படவில்லை. காலஞ்சென்ற சுல்த்தான் கபூஸ் தான் அந்த நிலைமையை மாற்றியமைத்தார் என்று ஊடகங்கள் உங்களுக்கு சொல்லி இருக்கலாம். உண்மை தான். ஆனால் ஊடகங்கள் சொல்லாமல் மறைத்த இன்னொரு விடயம் உள்ளது.
உண்மையில் ஓமான் அபிவிருத்தி அடையாமல் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த படியால் தான் அந்நாட்டு மக்கள் கம்யூனிசப் புரட்சியாளர்களை ஆதரித்தார்கள். கபூஸ் சுல்த்தானாக பதவியேற்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, கம்யூனிஸ்டுகள் சமூக அபிவிருத்தியில் அக்கறை செலுத்தி வந்தனர். கம்யூனிச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பாடசாலைகளை அமைத்து பெண் பிள்ளைகளை படிக்க வைத்தனர். இயக்கத்தில் கணிசமான அளவு பெண் போராளிகள் இருந்தனர்.
சுருக்கமாக சொன்னால், ஓமான் தொடர்ந்தும் அபிவிருத்தியில் பின்தங்கி இருந்தால் அது விரைவில் கம்யூனிச நாடாக மாறி விடும் என்று பிரிட்டன் அஞ்சியது. அதன் விளைவு தான், மாளிகையில் நடந்த சதிப்புரட்சியும், கபூஸ் சுல்த்தானாக பதவியேற்றமையும். எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள விடயங்கள் தான்.
உண்மையிலேயே கபூஸ் பதவியேற்று அபிவிருத்தி திட்டங்களை தொடங்கியதும் கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. சில போராளிகள் சரணடைந்தனர். இருப்பினும் கம்யூனிச இயக்கம் அழிக்கப் படவில்லை. தென் பகுதிகளில் இன்னமும் செல்வாக்குடன் இருந்தனர். அதனை தனி நாடாக பிரிக்க விரும்பினர். சுல்த்தான் கபூஸ் உத்தரவின் பேரில் பிரிட்டிஷ் கூலிப்படையான SAS ஒரு “பயங்கரவாத எதிர்ப்புப் போர்” ஆரம்பித்தது. அப்போது ஈரானை ஆண்ட மேற்கத்திய சார்பான ஷா மன்னரும் படைகளை அனுப்பி உதவினார். சில வருடங்களில் ஓமானில் கம்யூனிச இயக்கம் முற்றாக அழிக்கப் பட்டது. எஞ்சியவர்கள் சரணடைந்து விட்டனர்.
ஓமானில் கம்யூனிச அபாயம் நீங்கி விட்டாலும், கபூஸ் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை நீடித்தது. இன்று வரை ஓமானில் அரசியல் கட்சிகள் தடைசெய்யப் பட்டுள்ளன. அங்கு ஊடக சுதந்திரம் கிடையாது. சுல்த்தானை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப் படுகின்றனர். அங்கு நடக்கும் மனித உரிமை மீறல் கொடுமைகள் பற்றி ஏற்கனவே பல மனித உரிமை அமைப்புகள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
இருப்பினும் என்ன? மேற்கத்திய நாடுகளின் “ஜனநாயக” அரசியல் தலைவர்கள் ஓமான் சர்வாதிகாரியின் இரத்தம் தோய்ந்த கையைப் பிடித்து குலுக்கத் தயங்கவில்லை. எண்ணை நிறுவன ஒப்பந்தம், ஆயுத விற்பனை வருமானம் என்று தமது நலனில் மட்டும் குறியாக இருந்தனர். அந்த நன்றிக்கடனுக்காக தமது அபிமானத்திற்குரிய சர்வாதிகாரி கபூஸ் இறந்தவுடன் கண்ணீர் வடித்தனர். நாம் யாரை விரும்ப வேண்டும், யாரை வெறுக்க வேண்டும் என்பதை மேற்கத்திய நாடுகளும் அவர்களது ஊதுகுழல் ஊடகங்களும் தீர்மானிக்கின்றன.