தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புகளும் நம்பியிருக்க, அதனைத் தவிடுபொடியாக்கிவிட்டு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கவனம் பெறும் வகையிலான கலகக்குரல்களை எழுப்பியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த வரிசையில், இறுதியாக இணைந்தவர் சி.வி.விக்னேஸ்வரன். 2015 ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் அவரின் கலகக்குரல் சற்று பலமாகவே ஒலித்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலகக்குரல் எழுப்பியதோடு நின்றுவிடாமல், கூட்டமைப்பிலிருந்து விலகிவந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அமைத்துக் கொண்டார்.
ஆனால், மற்ற மூவரினாலும் கூட்டமைப்பிலிருந்து விலகிச் செல்லும் தீர்மானத்தினை இந்தக் கணம் வரையில் எடுக்க முடியவில்லை. அதுபோல, புதிய தலைமை தொடர்பிலான ஆசையையும் ஆர்வத்தினையும் விட்டுத் தரவும் முடியவில்லை.
கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும், தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட பின்னரும், புதிய தலைமையை ஏற்க, வரவேண்டும் என்று சி.வி. விக்னேஸ்வரனை நோக்கி, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், அந்தக் கோரிக்கைகளுக்கு சி.வி.விக்னேஸ்வரன் சாதகமான பதில்களை வழங்கவில்லை. குறிப்பாக, பொதுத் தேர்தல் காலத்தில் தன்னுடைய கலகக்குரலினை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த பின்னணியில், சி.வி.விக்னேஸ்வரனின் நம்பிக்கை முற்றாகத் தளர்ந்தது. அவருக்கு ஏற்படுத்தப்பட்ட புதிய தலைமை பற்றிய கனவும் கலைந்தது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதலாவது எழுக தமிழ் பேரணியின் போதும், சி.வி. விக்னேஸ்வரனை நோக்கிப் புதிய தலைமையை ஏற்க வருமாறு கோரப்பட்டது.
அப்போதும் அதனை அவர் கருத்தில் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட நிராகரித்துவிட்டார். அதாவது, கூட்டமைப்பின் தலைமைக்குத் தான் என்றைக்கும் விசுவாசமாக இருப்பதாகவும் மாற்று அணியொன்றுக்கு தலைமையேற்கும் எண்ணம் தன்னிடத்தில் இல்லை என்றும் இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே அவர் வாக்குமூலமளித்தார்.
அந்தத் தருணத்திலிருந்து சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான தங்களின் விமர்சனங்களை இரா.சம்பந்தனுக்கு நெருக்கமான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களும் நிறுத்திக் கொண்டார்கள்.
இப்போது, சி.வி.விக்னேஸ்வரனை ஓர் அச்சுறுத்தலாக கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் தலைமைகள் (குறிப்பாக தமிழரசுக் கட்சி) கருதுவதில்லை. மாறாக, வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் முடிந்து சி.வி.விக்னேஸ்வரன் தன்னுடைய பதவியிலிருந்து விலகிச் செல்லும் வரையிலான கால அவகாசத்தினை வழங்கியிருக்கின்றார்கள். ஆக, அவர் கௌரவமாக ஓய்வுபெற்றுச் செல்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஒருவித விட்டுக்கொடுப்பினைச் செய்திருக்கின்றார்கள்.
இவையெல்லாம் முடிந்த பின்னரும், மட்டக்களப்பு, எழுக தமிழ் பேரணியின் போதும் புதிய தலைமையாக வர வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரனை நோக்கி கஜேந்திரகுமாரும் சுரேஷும் அழைத்திருக்கின்றார்கள்.
உண்மையிலேயே பலமான புதிய அரசியல் தலைமையொன்றை உருவாக்கும் நோக்கிலான கோரிக்கைகளா சி.வி. விக்னேஸ்வரனை நோக்கி விடுக்கப்படுகின்றது என்கிற கேள்வி எழுகின்றது.
அப்படியான நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சி.வி. விக்னேஸ்வரை நோக்கி மீண்டும் மீண்டும் விடுக்கும் அழைப்புகள் எவ்வகையானவை.
அவை, தாம் எதிர்காலத்தில் பெற நினைக்கும் சிறு தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்டவையா என்கிற சந்தேகமும் பலமாக எழுகின்றது.
“தமிழ் மக்கள் பேரவையின் கொள்கை, குறிக்கோள்களுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சில பேரவையில் அங்கம் வகிக்கின்றன. இந்த நிலையில், அந்தக் கட்சிகள் கூட்டமைப்பில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லை? என்கிற முடிவுக்கு வர வேண்டும். இல்லையென்றால், அது மக்களைக் குழப்பும் செயலாகவே இருக்கும்” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்று சரியான தருணத்தில் முடிவு எடுக்கப்படும்” என்றிருக்கின்றார்.
அத்தோடு, “கூட்டமைப்பின் சிதைவுக்கு இரா.சம்பந்தனே காரணமாக இருப்பார்” என்றும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
தமிழ் மக்கள் பேரவை, தேர்தல் அரசியலுக்கு அப்பாலானது என்கிற நிலையில், பேரவையை முன்வைத்து நிகழ்த்தப்படுகின்ற புதிய தலைமை என்கிற உரையாடல்களைப் பேரவைக்குள் இருக்கும் கட்சிசாரா முக்கியஸ்தர்களே விரும்புவதில்லை. அது தொடர்பில் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டும் வந்திருக்கின்றார்கள்.
ஆனால், பேரவையை தேர்தல் அரசியலின் தொடுப்பாக முன்னெடுத்துச் செல்வது அல்லது அதனை அத்திவாரமாகக் கொண்டு புதிய அணியொன்றை உருவாக்கிக் கொள்வது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களுக்கும், இன்னும் சில தரப்புகளுக்கும் பெரும் ஆர்வம் உண்டு. அதன்போக்கிலான எண்ணங்களை அவர்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றார்கள்.
அதன் ஒரு வடிவமே சி.வி. விக்னேஸ்வரனைத் தலைமையேற்கக் கோரும் அழைப்புகள் என்றும் கொள்ள வேண்டியிருக்கின்றது.
இந்த இடத்தில், தமிழரசுக் கட்சிக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றவர்களை ஒன்றிணைக்கும் திட்டமொன்றை தெளிவாகவும் திடமாகவும் முன்னெடுப்பதில் மாற்று அணிக்குத் தலைமையேற்க முயலும் தரப்புகள் கடந்த ஏழு வருடங்களில் தவறியிருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்கள், திட்டங்களை முன்னெடுக்க முனைந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அது தட்டுத்தடுமாறி கவிழ்ந்து போயிருக்கின்றது. அப்படியான நிலையில், மக்களைப் புதிய தலைமையொன்றின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதிலுள்ள சிக்கல் தொடர்ந்து வருகின்றது.
மாறாக, கன்னை பிரித்துக் கொண்டு சண்டையிடுவதனூடு எல்லாமும் கடந்து போய்க் கொண்டிருக்கின்றன.
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் எதிர்காலத்தில் தேர்தல் கூட்டணியொன்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் பலமாகவே இருக்கின்றன.
அது, யாழ்ப்பாணத்திலிருந்து குறைந்தது இரண்டு நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கைகளின் போக்கிலானது. அதாவது, கூட்டமைப்பின் மீது மக்களுக்கு உள்ள பலமான அதிருப்தியை மடைமாற்றித் தங்களது வெற்றிகளாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற அடிப்படையிலானது.
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் 15,000 வாக்குகளைப் பெற்றது. கூட்டமைப்பில் போட்டியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் சுமார் 30,000 விரும்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இந்த இரு வாக்குகளின் மொத்த எண்ணிக்கையையும் சேர்க்கும் போது 45,000 என்கிற கணிசமான தொகை கிடைக்கின்றது. இதனை ஒரு வகையில் நம்பிக்கையின் புள்ளியாகவும் அவர்கள் இருவரும் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆனால், முன்னணிக்குக் கிடைத்த 15,000 வாக்குகள் தனிக்கட்சிக்கான வாக்குகள். ஆனால், சுரேஷ் பிரேமச்சந்திரனுக்குக் கிடைத்த விரும்பு வாக்குகள் என்பது கூட்டமைப்பு என்கிற கட்சி அடையாளத்தினூடு பெறப்பட்டது. அதில், சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கான ஆதரவு வாக்குகள் காணப்பட்டாலும், அதில் குறிப்பிட்டளவானவை கூட்டமைப்பு அபிமானம் சார்ந்தவை.
ஆக, 45,000 என்கிற கணிசமான வாக்குகளின் நோக்கில் பிழையிருக்கின்றது. அதனை முன்வைத்து, புதிய நகர்தலுக்கான ஆரம்பங்களைக் கொண்டால் ஏமாற்றமாக முடியலாம். இந்த இடத்தில்தான் அவர்களுக்கு சி.வி. விக்னேஸ்வரனின் ஆதரவு அவசியமாகின்றது.
அது, 10,000- 20,000 வாக்குகளையாவது கொண்டு வந்து சேர்க்கும் என்கிற நம்பிக்கையின் போக்கிலானது. அத்தோடு, கூட்டமைப்பு மீதான மக்களின் அதிருப்திகளை எவ்வாறு வாக்குகளாக மாற்றுவது என்கிற போக்கிலும் ஆனது. அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தது 60,000 வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தால், புதிய அணியின் பக்கம் சுரேஷ் பிரேமச்சந்திரன் தைரியமாக நகருவார். அப்போது, அவர் கூட்டமைப்பினை விட்டுச் செல்வது தொடர்பில் எந்தவித யோசனையையும் கொள்ளமாட்டார்.
இன்னொரு புறத்தில் கூட்டமைப்புக்குள் இருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்ஐ வெளியேற்றுவது தொடர்பில் தமிழசுக் கட்சி பெரும் முனைப்போடு இருக்கின்றது. ஏனெனில், தங்களுடைய முடிவுகளுக்கு எதிர்வினையாற்றும் தரப்பு கூட்டமைப்புக்குள் இருப்பதை தமிழரசுக் கட்சி விருப்புவதில்லை.
அத்தோடு, கூட்டமைப்பு என்கிற அடையாளத்தை ஒட்டுமொத்தமாகத் தன்னுடைய அடையாளமாக வைத்துக் கொள்வதற்கான பாதையை தமிழரசுக் கட்சி வகுத்துக் கொண்டு செயற்படுகின்றது. அதற்கு அச்சுறுத்தலான அனைவரையும் அகற்றுவதில் குறியாக இருக்கின்றது.
இந்த இடத்தில் கூட்டமைப்புக்கு எதிரான மக்களின் அதிருப்தியைத் திரட்டிக் கொண்டு கஜேந்திரகுமாரும் சுரேஷும் ஓரணியில் செல்வதை தமிழரசுக் கட்சி விரும்பாது.
மாறாக, அவர்கள் இருவர் மீதான எஞ்சிய நம்பிக்கைகளையும் கலைத்துவிட்டு, அகற்றம் செய்ய எத்தனிப்பார்கள். அது, தமிழரசுக் கட்சிக்கு (கூட்டமைப்புக்கு) எதிரான, ஒரு பலமற்ற வாக்கு அரசியலில் தேறாத ஒரு குழுவொன்றை, எதிர்த்தரப்பாக வைத்துக் கொள்ளும் நோக்கிலானது.
அந்த நிலைகளைக் கடந்து வெற்றிகரமான தரப்பாக மாறுவதற்கான முனைப்புகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பெற வேண்டும் என்றால் அவர்கள் கடுமையான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அது, இலகுவாகக் கணிக்கும் வெற்றிகளுக்கு அப்பாலானது.
(புருஜோத்தமன் தங்கமயில்)