அதுபோல, அதேவாரத்தில் வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில், பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவரத் தீர்மானித்திருந்த முன்னணி, இந்திய தூதரக அதிகாரியின் தொலைபேசி அழைப்பை அடுத்து, அந்த ஒத்திவைப்புப் பிரேரணையைக் கைவிட்டது. இது, வடக்கு மீனவர் அமைப்புகளால் நம்பிக்கைத் துரோகமாக விமர்சிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நெருக்கடியான காலப்பகுதியில், (குறிப்பாக, 2010 பொதுத் தேர்தலுக்கு அண்மித்த நாள்களில்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்வதாகக் கூறிக்கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் உள்ளிட்டவர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்தார்கள்.
முன்னணி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், அதை அரசியல் கட்சியாக முன்னிறுத்திய கஜேந்திரகுமார், அதைக் கட்சியாகப் பதிவு செய்வதைத் தவிர்த்து வந்தார். அதன்மூலம், முன்னணியை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில், தேர்தல்களில் போட்டியிட வைக்க முடியும் என்பது அவரது நிலைப்பாடு. அத்தோடு, முன்னணியைக் கட்சியாகப் பதிவு செய்தால், ‘மாற்ற முடியாத ஒற்றைத் தலைமை’ எனும் தன்னுடைய இடம், கேள்விக்கு உள்ளாக்கப்படும் எனும் அச்சமும் அவரைச் சூழ்ந்து கொண்டது.
அதனால், முன்னணியை புறத் தோற்றமாகக் காட்டினாலும், காங்கிரஸ் எனும் குடும்பக் கட்சியில் தங்கியிருக்க விரும்பினார். இந்த விடயம், மெல்லமெல்ல விமர்சனங்களாக மேலெழுந்த போது, “முன்னணி, அரசியல் கட்சியல்ல; அது ஓர் அரசியல் இயக்கம். அதைப் பதிவு செய்தால், எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படும்” என்று, கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அறிவிப்பை கஜேந்திரகுமார் வெளியிட்டார்.
முன்னணியை ஒரு கட்சியாக முன்னிறுத்திய அதன் ஆதரவாளர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும், கஜேந்திரகுமாரின் இந்த அறிவிப்பால், மக்களுக்கு பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில், கடந்த காலங்களில் அவர்கள் முன்னணி, பதவி செய்யப்பட்ட கட்சியாக மாறும், காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்காது என்று பேசி வந்திருக்கிறார்கள்.
கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும், தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளையும் நோக்கி, துரோகப் பட்டத்தை சூட்டி வந்திருக்கிறார்கள். அதுபோல, முன்னணியின் செயற்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் ஆதரவாளர்கள், உறுப்பினர்களை ‘துரோகி’கள் என்று அடையாளப்படுத்துவதில் குறியாக இருந்திருக்கிறார்கள்.
என்றைக்குமே கேள்விக்கு அப்பாலான தரப்பாக, தங்களை வைத்துக் கொள்ளவே அவர்கள் விரும்பினார்கள். தாங்கள், யாரை நோக்கியும் எந்தவிதமான கேள்வியையோ, விமர்சனத்தையோ, துரோகப் பட்டங்களையோ வழங்கலாம். ஆனால், தங்களை நோக்கி, மற்றவர்கள் அவ்வாறான செயற்பாடுகளை செய்யக் கூடாது என்று எதிர்பார்ப்பது, ஒரு வகையில் பாசிச மனநிலை. அந்த மனநிலையை முன்னணியின் தொண்டர்களிடமும் மிக நுட்பமாக அவர்கள் வளர்த்திருக்கின்றார்கள். ஒரு வகையில் அது மூளைச்சலவைக்கு ஒப்பானது.
தங்களைக் கேள்விகள் இன்றி ஆதரித்தால், அவர்களின் பின்னணி, கடந்த கால வரலாறுகள் எல்லாவற்றுக்கும் புனித வட்டங்களை வரையத் தயாராக இருந்தார்கள். சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப், தர்மலிங்கம் சித்தார்த்தனின் புளொட் ஆகியவற்றுடன் தமிழ் மக்கள் பேரவையில் இயங்கியதும் ஒரே மேடையில் தமிழ்த் தேசியம் பற்றிய அறைகூவல்களை இணைந்து விடுத்ததும் வரலாறு.
ஈ.பி.ஆர்.எல்.எப்போடு இணைந்து தேர்தலில் போட்டியிடுவது வரையில் கஜன்கள் (கஜேந்திரகுமார், கஜேந்திரன்) தயாராக இருந்தார்கள். அப்போதெல்லாம், ஈ.பி.ஆர்.எல்.எப்பும் புளொட்டும் போராட்ட காலங்களில் புரிந்த படுகொலைகளும் குற்றங்களும் அவர்கள் கண்ணுக்கு தெரியாது. அதை மறந்து நின்று, ஒரே நிலைப்பாட்டில் பயணிப்பதாகக் கூறுமளவுக்கு இருந்திருக்கிறார்கள்.
ஆனால், தங்களின் எதிர்பார்ப்புகளை மற்றக் கட்சிகள் நிறைவேற்றவில்லை என்றால், அவர்களின் கடந்த கால வரலாறுகளை எல்லாம் தோண்டியெடுத்து, துரோக அரசியல் பற்றிப் பேசுவார்கள். இவ்வாறான நிலை, ஒரு கட்டத்தில் முன்னணியில் கஜன்களின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்து, கேள்வியெழுப்பிய மணிவண்ணன் தலைமையிலான குழுவை பிளவுபடவும் வைத்தது.
இன்றைக்கு, முன்னணியின் உரிமை கோரும் நடவடிக்கையில், மணி அணியும் ஈடுபட்டிருக்கின்றது. மணி அணியிலுள்ள பலரையும் நோக்கி, கஜன்கள் அணியினர், ‘ஆவா’ குழு உறுப்பினர்கள், கஞ்சா கடத்தல்காரர்கள் என்று பட்டம் சூட்டி விமர்சிக்கின்றார்கள். ‘ஆவா’ குழு உறுப்பினர்களாகவும் கஞ்சாக் கடத்தல்காரர்களாகவும் தற்போது கஜன்கள் அணியால் அடையாளப்படுத்தப்படும் இளைஞர்கள், கடந்த காலங்களில் கஜன்களின் ஆதரவாளர்களாக, ஒரு வகையில் பாதுகாப்பு படை போல அவர்களைச் சூழ இருந்தவர்கள்.
இப்படியான குறைபாட்டுச் சிந்தனையும் வறட்டுவாதமும் செய்யும் கஜன்கள் அணியினர்தான், கடந்த வாரம் தங்களின் இரு வேறு நிலைப்பாடுகளால் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.
கடந்த மாத இறுதியில், வத்திராயன் பகுதி மீனவர்கள் இருவர் தொழிலுக்குச் சென்ற நிலையில், நான்கு நாள்களின் பின்னர் சடலங்களாக கரை ஒதுங்கினர். அவர்களின் மரணம், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய இழுவைப் படகுகளால் நிகழ்த்தப்பட்டதாக மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன.
அந்த நிலையில், பாராளுமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள இழுவை மடி தடைச் சட்டத்தை, நடைமுறைப்படுத்தக் கோரும் சபை ஒத்திவைப்புப் பிரேரணையை கொண்டுவர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்தது. ஆனால், அவ்வாறான பிரேரணை ஒன்றைக் கொண்டுவர, முன்னணியின் கஜன்கள் முயன்ற போது, அதற்கான ஆதரவை வழங்கி, அதில் கலந்து கொண்டு பேசும் முடிவை கூட்டமைப்பு எடுத்தது.
ஆனால், அந்த ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்த நாளில், சபாநாயகருக்கு கடிதம் ஒன்றின் மூலம், குறித்த பிரேரணையை மீளப்பெறுவதாக கஜேந்திரன் அறிவித்தார். அதற்கான காரணமாக, வடக்கு மீனவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இந்திய தூதரக அதிகாரி, தொலைபேசியில் வாக்குறுதி அளித்திருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த காலங்களில், தென்னிலங்கையின் கட்சிகள், அமைப்புகளிடமோ இந்தியா, அமெரிக்கா, மேற்கு நாடுகள் உள்ளிட்ட தரப்புகளிடமோ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் கூட்டமைப்பு உள்ளிட்ட எந்தத் தரப்பை நோக்கியும், பேச்சுகளின் முடிவில் எழுத்து மூல உத்தரவாதத்தைக் கோரவில்லை என்று முன்னணி விமர்சித்து வந்திருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டமைப்பு ஆதரவளித்த தருணத்தில், எழுத்து மூலமான உத்தரவாதம் வாங்கப்படவில்லை என்கிற விடயம், கடந்த பொதுத் தேர்தலில், முன்னணியால் பெரும் பிரசாரமாகவே முன்னெடுக்கப்பட்டது.
அப்படியான முன்னணி, தூதரக அதிகாரி ஒருவரின் தொலைபேசி அழைப்பில், வடக்கு மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் என்ற நிலைப்பாட்டுக்கு எப்படி வந்தது என்ற கேள்வி எழுகின்றது? அதுவும், முன்னணியை இந்திய தூதர் அழைத்துப் பேசவில்லை; மாறாக, தூதரக அதிகாரி ஒருவரே பேசியிருக்கின்றார். அந்த அதிகாரி, இந்திய தூதரகத்தில் எந்தத் தரநிலையில் இருக்கின்றார் என்ற விடயம் கூறப்படவில்லை. இந்த விடயத்தை, கஜேந்திரகுமாரிடம் ஊடகங்கள் கேள்வியாக எழுப்பினால், “உத்தரவாதமளித்துவிட்டார்கள்; அதனால் நாங்கள் பிரேரணையை கைவிட்டோம். எழுத்துமூலம் எல்லாம் உத்தரவாதத்தை எப்படிக் கோர முடியும்” என்கிற தோரணையில் பதலளிக்கின்றார்.
இவ்வாறான நடவடிக்கையில் இன்னொரு தரப்பு ஈடுபட்டிருந்தால் துரோகி, கைக்கூலி ஆகிய பட்டங்களோடு, கஜன்கள் ஊடக சந்திப்புகளை நடத்தியிருப்பார்கள். அதுபோலவே, விடுதலைப் புலிகள் தனிநாடு கோரிப் போராடவில்லை என்கிற பொய்யை, இன்னொரு தரப்பினர் சொல்லியிருந்தால், “மாவீரர்களின் தியாயத்தைக் கொச்சைப்படுத்தி விட்டார்கள்” என்று கூறியிருப்பார்கள்.
புலிகள், தனி நாட்டுக்கான அர்ப்பணிப்போடு போராடினார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம் எனும் தேசக் கோட்பாட்டு அதிகாரப் பகிர்வு நிலை குறித்துப் பேசியிருக்கின்றார்கள். ஆனால், அவர்களின் இறுதி இலக்கு என்பது, சுயநிர்ணயம் சார்ந்தது. அது தமிழீழ தாயகம் என்றவாறாகவே இருந்தது. போராட்டத்தில் மக்களை இணையக் கோரிய போதெல்லாம் புலிகள், தனிநாட்டுக்காகவே அர்ப்பணிக்கக் கோரினார்கள்.
அப்படியான நிலையில், ஏட்டிக்குப் போட்டியாகப் பேச வேண்டும் என்பதற்காக கஜேந்திரன், “புலிகள் தனிநாடு கோரவில்லை” என்று கூறியவிடயம் சர்ச்சையானதும் ஊடக அறிக்கை என்கிற பெயரில், நிறைந்த எழுத்துப் பிழைகள், தகவல் பிழைகளுடன் மன்னிப்புக் கோரும் அறிக்கையை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடயத்தை சமாளிக்க முயன்றிருக்கிறார். மாறாக, திறந்த மனதோடு மன்னிப்புக் கோரும் முகமாக, அதைப் பார்க்க முடியவில்லை.
துரோகி அடையாளத்தை மற்றவர்களுக்கு சூட்டுவதற்கான அதிகாரத்தைக் கொண்டவர்கள் போல, எடுத்ததற்கெல்லாம் துரோகி பட்டத்தை சூட்டிய முன்னணியின் கஜன்கள்தான், இன்றைக்கு தங்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியலை கமுக்கமாகக் கடக்க நினைக்கிறார்கள்.